06302022வி
Last updateபு, 02 மார் 2022 7pm

"ஜனநாயக" விரோத முறைகளில் வென்ற தேர்தலும், பாசிசமயமாக்கலும்

தேர்தலில் மகிந்தா வென்று விட்டார் என்பதும், தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததாக கூறுவதும், தேர்தல் என்றால் பலதும் பத்தும் இருக்கும் தான் என்று கூறி அதை நியாயப்படுத்துவதுமான போக்கு இன்று அதிகரிக்கின்றது. வென்றவர்களை ஆதரித்தும், அதைச் சார்ந்தும் நிற்கின்ற போக்கு, மக்களுக்கு எதிரான பாசிச மயமாக்கலை ஆதரிக்கின்ற ஒரு புதிய போக்கு தமிழ் சமூகத்தில் உருவாகி வருகின்றது.

கடந்தகாலத்தில் புலிகள் செய்ததை எல்லாம் நியாயப்படுத்தி, அதன் பாசிசமயமாக்கலை நிறுவனப்படுத்தியதும் இப்படித்தான். அன்று குதர்க்கமான நியாயப்படுத்தல் மூலம் தமிழ் சமூகத்தை பாசிச சமூகமாக மாற்றி, மனித இனத்தையே படுகுழியில் தள்ளினர். அதே பாணியில் இன்று மகிந்தாவுக்கு பின் பலர். புலியெதிர்ப்பு அணிகள் மட்டுமல்ல, நடுவில் நின்றவர்கள், அன்று புலியுடன் நின்றவர்கள் என்று மகிந்தா கட்டமைக்கும் பாசிசத்தை நியாயப்படுத்தும், ஒரு புதிய பாசிசக் கும்பல் உருவாகி வருகின்றது. காத்தடிக்கும் பக்கம் சாய்ந்து வாழும் சிந்தாந்தம், பாசிசத்தை நியாயப்படுத்துகின்றது. 

 

இது புலம்பெயர் சமூகத்தில், மிக வேகமாக புரையோடி வருகின்றது. அன்று புலி இணையங்கள் புலியை நியாயப்படுத்தி, புலிப் பாசிசப் பிரச்சாரத்தை கட்டமைத்ததுடன் தமிழ்மக்களின் தலைவிதியை படுகுழியில் தள்ளினார்கள். இதேபோல் இன்று புலியெதிர்ப்பு பேசிய இணையங்கள், அதே வேலையை மிக வேகமாக நடத்துகின்றது. மகிந்தா செய்வதை நியாயப்படுத்தி, பாசிசப் பிரச்சாரத்தை முன்தள்ளுகின்றது. அதை வாசிக்கும் பலர், உருவெடுத்து ஆடுகின்றனர்.

 

இன்று மற்றொரு பாசிசத்தை நியாயப்படுத்தி பேசும் பாசிச அரசியல், இலங்கை மக்கள் மேலான பாசிசமயமாக்கல் கொண்ட புதிய தலையீடாக, அது புலத்தில் இருந்து வேகம் பெற்றுள்ளது.

 

தேர்தல் என்பதை "ஜனநாயக" வழிமுறை என்று கூறுகின்றவர்கள், தங்களைத் தாங்கள் ஜனநாயகவாதிகள் என்று நம்புகிறவர்கள், மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள், அங்கு நடந்த ஜனநாயக விரோத பாசிசமயமாக்கல் செயல்களுக்கு எதிராக நேர்மையாக போராட வேண்டும். இது தானே அரசியல் நேர்மை. ஒரு மனிதன் தன்னைச் சுற்றி நடந்த அக்கிரமத்தை கேள்வி கேட்டு நிற்பதுதானே குறைந்தபட்சமான மனிதத்தன்மை.

 

இதை யார் செய்தாலும் தட்டிக்கேட்டு நிற்பவர்கள், போராடுபவர்கள், கருத்து உரைப்பவர்கள்  தான், உண்மையான நேர்மையான மனிதர்கள்.

 

மனச்சாட்சி உள்ளவர்களிடம் நாம் கேட்கின்றோம். இந்த அரசு தன் அரச அதிகாரத்தைக் கொண்டு தேர்தலை வெல்லவில்லையா!? ஊடகங்களை முறைகேடாகவும், மிகையாகவும் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி வெல்லவில்லையா!? பணத்தை முறைகேடான பல வழிகளில் பெற்றும், அதிகளவிலான பணத்தை செலவு செய்தும் வெல்லவில்லையா!? எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தி, அவர்களை அடிபணிய வைத்து வெல்லவில்லையா!? தமிழ்மக்கள் வாக்களிக்க விடாமல் குண்டு வீச்சுகளை நடத்தியும், போக்குவரத்துகளை முடக்கியும், இராணுவ கண்காணிப்புக்கு கீழ் மக்களை பலவழிகளில் முடக்கி வெல்லவில்லையா!? தேர்தல் முடிந்த அன்று எதிர்க் கட்சியினரை இராணுவத்தை கொண்டு முடக்கி, தமக்கு ஏற்ற தேர்தல் வெற்றிகளை அறிவிக்கவில்லையா!?  வாக்கு மோசடிகளை செய்யவும், வாக்கு எண்ணும் இடங்களில் மோசடிகளை செய்யவும், எதிர் கட்சியினரையும் தேர்தல் அதிகாரிகளையும் மிரட்டி அடிபணிய வைக்கவில்லையா?  தேர்தல் ஆணையாளர் தேர்தல் விதிகளின் கீழ் தேர்தலை நடத்த அனுமதிக்காமல் அவரை முடக்கி, அச்சுறுத்தி, நிர்ப்பந்தித்து தேர்தலை வெல்லவில்லையா!? தமக்கு சார்பாக இல்லாத ஊடகங்களை முடக்கி, தேர்தல் வெற்றி பற்றி தமக்கு சார்பாக மட்டும் தேர்தல் முடிவுகளை அறிவிக்கவில்லையா!? சரி இப்படி எல்லாம் செய்தும் மகிந்த தோற்று சரத்பொன்சேகா வென்று இருந்தால், ஆட்சி மாற்றம் நடந்துதான் இருக்குமா!? சொல்லுங்கள். 

 

நீங்கள் ஜனநாயகம் என்று நம்புகின்ற எல்லைக்குள் இப்படி பல கேள்விகள் உண்டு. இப்படிப்பட்ட கேள்விகள் உங்களுக்கு இல்லையென்றால், நீங்கள் இந்த பாசிசமயமாக்கலுக்குள் வாழத் தொடங்கிவிட்டீர்கள் என்று அர்த்தம். அதை நியாயப்படுத்த பழகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

 

புலிகளைச் சுற்றிய பாசிசமயமாக்கலில் இதே நிலை காணப்பட்டது. இன்று மகிந்தா குடும்ப சர்வாதிகாரம் கட்டமைக்கும் இராணுவ பாசிசமயமாக்லை ஆதரிக்கின்ற புதிய போக்கு, மேலோங்கி வருகின்றது.

 

இதை முறியடித்து போராடுவதே, மையமான ஒரு புதிய விடையமாக எம்முன் மாறி வருகின்றது. இதை அம்பலப்படுத்தி செயல்படுவதே மையமான விடையமாக உள்ளது. இதற்காக விழிப்புணர்வும், எதிர் செயல்பாடும் எம்மத்தியில் கிடையாது. பாசிச மயமாக்கல் தொடருகின்றது. புலியெதிர்ப்பு பேசிய மகிந்தா சார்பு இணையங்கள் தான், தமிழ்மக்கள் மத்தியில் இந்த ஜனநாயக விரோத பாசிச மயமாக்கலை நியாயப்படுத்தி அதற்கு கடிவாளம் கட்டுகின்றது. இதை இனம்கண்டு போராடுமாறு வேண்டுகின்றோம்.

 

பி.இரயாகரன்
29.01.2010


பி.இரயாகரன் - சமர்