தோழர் நீங்கள்
இறந்து விட்டீர்களாம்
லட்சக்கணக்கானோர் கண்ணீர்
வடித்தனராம்
விடை கொடுத்தனராம்
நானும்
பார்த்தேன் டி.விப்பெட்டியில்
செங்கொடிகள் பட்டொளி
வீசிப்பறந்ததாக நண்பன்
சொன்னான் ஆனால்
எனக்கோ காவிக்கொடியாக
தெரிந்தது தோழர்
என்னுடைய பார்வையில்
எல்லாமே மங்கலாகத்தான் தெரிகிறது போலும்
ஆட்டோ ஊர்ந்து கொண்டு செல்லும்
கணீரென்று
“மேற்கு வங்கத்தில் தொடர்ந்து
மாசுமருவற்ற ஆட்சி நடத்துவது
மார்க்சிஸ்ட் கட்சி,
உழைக்கும் மக்களுக்கு
இலவச நிலம் வழங்கியவர் முதல்வர் ஜோதிபாசு”
அப்போது நூலகத்தில்
யாரும் படிக்காத
முரசொலியையும் தீக்கதிரையும்
தேடிப்படிப்பேன் – சொன்னால்
நம்ப மாட்டீர்கள் தோழர்
எனக்கப்போது 12 வயசு
காலங்கள் உருண்டோடின
முரசொலியின் முரசும்
தீக்கதிரின் சுள்ளியும்
மக்களின் தலைகளுக்கென்று
தாமதமாய்த்தான் புரிந்தது
அதுமட்டுமல்ல இன்னும் என்னனவோ
தெரிந்தது தோழர்
சொன்னால் உங்களுக்கு
கோபம் கூட வரலாம்
அங்கு வெடித்த நக்சல்பரியின்
இடியோசையில் செவிடான உங்கள்
காதுகள் எப்போதும் மக்களின்
கேள்விகளுக்கு பதில் சொல்லவேயில்லையாம்
நீங்கள் சொல்லாத பதிலை
சொன்னார்கள் லால்கரிலும், நந்திகிராமிலும்
உங்கள் வாரிசுகள்
நாங்கள் பாசிஸ்டுகள் என்று
நீங்கள் ரொம்ப நல்லவராம் தோழர்
உங்கள் சாவுக்கு பாஜக
காங்கிரஸ் திமுக அதிமுக ஆர்எஸ்எஸ்
இந்து முன்னணி எல்லாரும்
கலங்கினார்களாம் – கடைசியாய்
மாதவ்குமார் வந்த போதுதான்
எனக்கும் தெரிந்தது
நீங்கள் ரொம்ப ரொம்ப நல்லவராம் தோழர்
நீங்கள் செத்துப்போய்
விட்டீர்களாம்
நான் மனங்கலங்கவில்லை தோழர்
பாசிசத்தின்
இயக்கவியலும் வரலாறுமாய்
நீங்கள் இருக்கும் போது
எப்படி உங்களுக்கு சாவு வரும் தோழர்
நீங்கள்தான் எங்கேயும்
நிறைந்திருக்கிறீர்களே தோழர்
மே.வங்க ஊழல்களில், மார்ட்டினிடம்
வாங்கிய கோடிகளில், தமிழகத்தின்
காவடிகளில்
தூணிலும் துரும்பிலும் எங்கும் எங்கெங்கும்
பாவம் அழுது
கொண்டிருக்கிறார்கள் தொ(கு)ண்டர்கள்
இன்னொரு தலைவர் கிடைக்காமலா போய்விடும்?
எப்படி உங்களுக்கு சாவு வரும் தோழர்
அதன் அதிகாரபீடங்கள் தகர்க்கப்படாதவரை
சிலர் சொல்லலாம் இறந்தவர்களைப் பற்றி விமர்சனம் செய்வது மரபல்ல
ஆம் அது பாசிச, முதலாளித்துவ மரபு. அது மக்களைக்கொல்லும்.
அவர்களின் மரபில் மரத்துப்போன மரபு இது.
எழுதியவிதமோ அல்லது அணூகுமுறையோ தவறாகப்படலாம். ஜோதிபாசுவின் மரணம் என்னுள் என்னுள் எந்த உணர்வையும் ஏற்படுத்தவில்லை. பொய்யாய் நான் எப்படி அழ முடியும்.
மார்க்சிஸ்டு கட்சியின் நண்பர் சந்திப்பு அவர்கள் இறந்ததை கேள்விப்படபோது வருத்தத்திற்கு உள்ளானேன். ஆனால் அவ்வருத்தம் ஜோதிபாசு இறப்பின் போது ஏனோ வரவில்லை.
http://kalagam.wordpress.com/2010/01/28/தோழர்-செத்துட்டீங்களா/