Language Selection

ப.வி.ஸ்ரீரங்கன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

“சிறுபான்மைச் சமூகங்களின் ஜனாதிபதி பொன்சேகா மற்றும் பெரும்பான்மைச் சமுதாயத்தின் ஜனாதிபதி மகிந்தா இராஜபக்ஷ வழி,பிளவுபட்ட இன அடையாளங்கள் வெளிப்பட்டு நிற்கும் புள்ளியில் மேற்குலக-ஆசிய மூலதனத்தின்பின் அணிவகுக்கும் சிங்கள-தமிழ் ஆளும் வர்க்கம், இலங்கையில் ஜனநாயகத்தை மறுத்து நிற்கும் தெரிவில் இலங்கையின் அரசியல் எதிர்காலம் சிறுபான்மை இனங்களை வேட்டையிடப்போகிறது!”

 

நேற்று 26.01.2010 நடந்தேறிய இலங்கையின் ஆறாவது ஜனாதிபதிக்கான தேர்தலில், மகிந்தா இராஜபக்ஷ 58 வீத இலங்கைச் சிங்கள மக்களதும் சில சிறுபான்மை மக்களினங்களின் ஆதரவோடு மீளவும் ஜனாதிபதியாகின்றார்.பெரும்பாலும், மகிந்தா இன்றைய இலங்கைச் சூழலுள் அநேகமாகப் பெரும்பான்மை இனத்தின் ஜனாதிபதியாகவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவ்வண்ணம், மகிந்தா இராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்ட “மகிந்தா சிந்தனைக்கூட்டு” யுத்தக்கிரிமினல் சரத் பொன்சேகா 40 வீத இலங்கை மக்களினங்களின் ஆதரவு பெற்று, இத் தேர்தலில் தோற்றிருக்கிறார்.எனினும்,அவர் சிறுபான்மைச் சமூகங்களின் ஜனாதிபதியாகிறார்(இது,மேற்குலகத்துக்கு மிகச் சாத்தியமான அரசியலை இனி முன்னெடுக்கும்.அஃது,மகிந்தா தலைமையிற்கூட நிகழும்).


தோல்வி சரத் பொன்சேகாவுக்கு என்றபோதும்,அஃது,குறிப்பாக மேற்குலக மூலதனத்துக்கான தோல்வியாகவும்-வெற்றியாகவும் நீடித்திருக்கும்-இருக்கின்றது.

இந்த ஆறாவது ஜனாதிபதிக்கான தேர்தலில், மகிந்தா பெரும்பான்மை மக்களது ஜனாதிபதியாகவும்,சரத் பொன்சேகா தோற்றாலும் இலங்கைச் சிறுபான்மை இனங்களின் ஜனாதிபதியாகவே “இப்போது”பிளவுபட்ட சமூக உளவியலாக உருவாகியுள்ள அரசியல் போக்கில் புரிகிறது.இது,சிறுபான்மை மக்களது”ஜனாதிபதி”சரத் பொன்சேகாவென்றும்,பெரும்பான்மை இனத்தின் ஜனாதிபதியாக மகிந்தாவும் உள்ளதாக ஒரு வகைச் சமூக உளவியல் தோன்ற வாய்ப்பளித்திருக்கிறது.

இந்த உளவியலின் விருத்தியானது, எங்ஙனம் இனிவரும் இலங்கையில் அரசியல் நெருக்கடியாக எழும் என்பதே எனது அச்சம்!

இவ்வச்சம் வெறும் கருத்துக் குவியலோ அன்றிக் கற்பனையோ கிடையாது.

இது,சமூக அரசியல் பொருளாதாரத்தின் சில விதிகட்கமைய ஆயப்பட்ட-பரிசோதித்தறியத்தக்கதானவுண்மை என்பதை ஏற்றாலுஞ்சரி இல்லை நீங்கள் விட்டாலுஞ்சரி என்னை இது அச்சப்படுத்துகிறதென்பது உண்மை.

இலங்கையில் ஏலவே கட்டியெழுப்பப்பட்ட இனவாத அரசியல் நடாத்தையில், மேலும், வளர்வுந் தேய்வும் அத் தேசத்தின் பொருளாதார மற்றும் அந்நிய ஆர்வங்களால் நிகழ்ந்து வருபவை.இது,தற்போது இலங்கைச் சமுதாயத்தின் அரசியல்-சமூக உளவியலாகத் தோற்றம் பெறும் இன்னொரு வகையான இனத்துவ அடையாள அரசியலை இனிவரும் காலத்தில் வளர்த்தெடுக்கும்.இதற்கான தோற்று வாயில் இலங்கைச் சிறுபான்மை இனத்தின் இன்றைய அவல அரசியல் பாரிய பங்கை வகிக்கின்றது.இந்நிலையில் ஆசிய மூலதனத்தின் நோக்கம் வெற்றிபெற்றிருப்பினும் சிங்கள அடையாள அரசியலது வரலாற்றைத் தமதாக்க முனையும் ஆளும் வர்க்கத்தின் ஒருபகுதிக்கு இது அசாத்தியமானவொரு வியூகத்தை மெல்ல இராஜபக்ஷவினது வடிவில் தெரிவுகளாக்கும்.இலங்கைச் சிறுபான்மை இனங்களது எந்த ஆதரவையும் உதாசீனப்படுத்துவதற்கான பல தெரிவுகளை இனிவரும் இலங்கைச் சிங்கள மேலாதிக்கக்கனவுகளுக்கு இது, சட்ட ரீதியான யதார்த்த(அரசியல் யாப்பு) நிலைகளைத் தோற்றுவிக்கும்.இதன்வழி,இலங்கைச் சிறுபான்மைச் சமூகங்கள் பாரிய அரசியல்-பொருளியல் நெருக்கடியையும் அதுசார்ந்த அடக்கு முறைகளையும் எதிர்கொள்வது உறுதி.

இதைச் சற்றுக் கீழே(…)விரிவாகப்பார்க்கலாம்.

மகிந்தாவுக்கு எதிரான இலங்கைச் சிறுபான்மை இனங்களது பாரிய எதிர்ப்பு அரசியலது தெரிவில், பொன்சேகா சிறுபான்மை இனங்களது ஜனாதிபதியாக மாறியது சிங்களச் சமுதாயத்தின் அடையாள அரசியலை மேலும் வலப்படுத்தும் என்பதில்:

1: இலங்கைச் சிறுபான்மை இனங்கள் மேலும் பிளவுபட்ட-இணைக்கவே முடியாத, இலங்கைப் பெருந்தேசிய உருவாக்கத்துக்கு எதிரான முட்டுக்கட்டைகள்.

2: தமிழ்பேசும் இலங்கையர்கள்,சிங்களம் பேசும் இலங்கையர்களது தேச இறையாண்மைக்கு எதிரான இயங்குநிலைகளால் வழிநடாத்தப்படுபவர்கள் எனும் சமூக அச்சத்தைப் பெரும்பாண்மை மக்களிடம் விதைக்கமுனையும் இனவாதிகளுக்கு ஒத்த அரசியல்-சமூக உளவியற்றளத்தை மேலும் விரிவாக்கிக்கொள்ளும்.

3: இலங்கையில் இன்றுவரை சிறுபான்மைச் சமூகங்களைக் கண்காணித்துவரும் சிங்களப் பௌத்தமத மேலாதிக்கம்.மேலும், உறுதுணையாகவிருக்கும் சிங்கள அடையாளத்துடன் பிணையும் மூலதனத்துக்காக, சிறுபான்மை இனங்களை தொடர்ந்து கண்காணிப்பதற்கும் ,அவர்களது உரிமைகளைத் தட்டிக்கழிப்பதற்கும் இது உந்து சக்தியாகும்.

4: தமிழ்பேசும் மக்கள் தொடர்ந்தும் தமது அடையாள அரசியலில்”தமீழம்”சார் சமூக உளவிலோடு நெருங்கியே இருப்பதாகவும்,இதன் விளைவாகத் தமிழ்பேசும் மக்களை மேலும் கண்காணிப்பதும் அவர்களது சுயாதீனமான தெரிவுகளை மறுத்து நிற்பதற்கும், இலங்கையில் அவசரகாலச் சட்டம் மற்றும் பிரிவினைவாத அபாயமும் உள்ளதாகச் சுட்டி மேலும் ஒடுக்குமுறைகள் பல வடிவங்களில் நிலைக்க முடியும்.

5: இத் தேர்தலானது தமிழ் பேசும் மக்களது உளவியலைப் புரிவதற்கும்,அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து அரசியல் புரிவதற்குமான பல தெரிவுகளை ஆளும் மகிந்தா குடும்பத்துக்குப் “புதிய உத்வேகமாக” வழங்கியுள்ளது.

இத் தெரிவுகளது வலையில் வீழ்தப்பட்ட இலங்கைச் சிறுபான்மை இனங்கள், தமது எதிர்ப்பு அரசியலது தெரிவில் நியமான சக்திகளைத் தெரிந்துகொள்ளாதவரை மேலும் தொடரப்போகும் சில சதிகளைப் பார்த்தால்,அஃது, இலங்கையினது இறைமைக்கு அவசியமேயென ஆளும் வர்க்கம் கட்டமைக்கும் அரசியலுக்கு வலுச் சேர்ப்பதில் முடியும்.

இவைகளின்வழி,தமிழ்பேசும் மக்களைப் புலிகளது அழிவுக்குப்பின்பு சோதித்தறியும் ஆசிய மூலதனம் மேலும், தமது மூலதன நகர்வுக்கேற்றவொரு சூழலில் தவிர்க்கமுடியாத சில ஜனநாயக விழுமியத்தினாலான அரசில் முன்னெடுப்பை இனிமேலும் நகர்த்த வாய்ப்பில்லாது போகிறது.

நடந்துமுடிந்த தேர்தலில் சிறுபான்மை இனங்களது தெரிவுகொண்டு,இலங்கையினது “ஒரே” தேசவுருவாக்கத்துக்கு ஆபத்தான உளவியலைக் கொண்டிருக்கிறதென்ற முடிவில் சிங்கள ஆளும்வர்க்கம் தொடர்ந்த-தொடரும் முதன்மையான அடக்கு முறைகளை மேலும் வலுப்படுத்தும்.

இன்றும், தமிழ்பேசும் மக்கள் இணக்கமற்ற பிரிவினைவாத உளப்பாங்கோடு சமூகவாழ்வைக்கொள்வதென்ற உண்மை தெரியப்படுத்தப்பட்டு, இராஜபக்ஷ தமிழ்பேசும் மக்களது மாவட்டங்களில் தோல்வியாவது சட்டரீதியான இராணுவ ஒடுக்குமுறையை மேலும் இருப்புக்குள்ளாக்கி விடுகிறது.

ஆக,ராணுவம் மெல்ல முகாம்களுக்குச் செல்வதும்,பரந்தபட்ட தமிழ் மக்களது வரலாற்றுமண்ணில் சிவில்சமூக நிறுவனங்கள் மீளவும் தோன்றியொரு ஜனநாயகச் சூழல் அரும்பி, இயல்பு வாழ்வு வருவது இதன்வழி தடைப்பட முடியும்.

அ: தமிழ் பிரதேசங்களில் வலுவான பிரிவினைவாதப் போக்குச்சார்ந்த சமூகவுளவியற்றளம் இன்னமும் அழியவில்லை. எனவே,இராணுவம் இச் சமுதாயத்தை கண்காணித்துப் பிரிவினைவாதப் பயங்கரவாதத்தை இல்லாதாக்க அது மேலும் தமிழ்பேசும் மக்களது மண்ணில் நிலைகொண்டு, அச் சமுகத்தைச் சட்டரீதியாகக் கண்காணிக்கும்.

ஆ: தமிழ்பேசும் மக்களுக்குள் இல்லாதான சிவில் சமூக நிறுவனங்கள் மேலும் உருவாகாதிருப்பதற்கான ஜனநாயகவிரோதச் சட்டங்களின்வழி, அவசரகாலசட்டம் தொடரும் இக்கட்டு இதன் போக்கில் மேலெழும்.

இ: தொடர்ந்தும் இராணுவ விஸ்தரிப்பும், இராணுவத்துக்கான ஆட்சேர்ப்பும் சட்டரீதியான அங்கீகாரத்தோடு தமிழ்பேசும் மக்களது மண்ணில் இராணுவச் சர்வதிகாரதைத் தொடர்ந்து நிலைப்படுத்தும்.

இதுவே, இறுதியானதெரிவாகும் நிலையில், தமிழ்பேசும் மக்களது எதிர்காலம் இருள்மயமானது.

எத்தனை கருணா-டக்ளஸ் போன்றவர்கள்”என்ன அபிவிருத்தி-பொருளாதாரவுதவி”செய்து ஏமாற்றிடினும், இலங்கையில் சிறுபான்மை இனங்கள் அதிகமான தருணத்தில் பாதகமான தெரிவுகளோடு அரசியல் செய்கின்றனர் என்றும்,இதுள் முக்கியமாகத் தமிழர்களே செயற்படுவதாகவும் அடக்குமுறையாளர்களது நேரடியான அத்துமீறிய வொடுக்குமுறையால், இராணுவவாதம் மயப்பட்ட தமிழ்மக்களது வாழ்வு கருகிப் போகும்.

இஃது(இனஞ்சார்) அனுமதிக்கும் “மகா”பாதகங்கள்:

# தமிழ்ப் பிரேதேசம் தொடர்ந்து இராணுவக் கண்காணிப்புக்குள் இருத்தி வைக்கப்படும்.

# சிவில் சமூக உருவாக்கம் வருவதற்கான ஜனநாயகச் சூழல் மறுக்கப்படும்.

# தமிழ்பேசும் மக்கள் தென்னிலங்கையில் தொடர்ந்தும் அச்சத்துக்குரியவர்களாகவே பார்க்கப்படும்-பார்க்க வைக்கும் கருத்தியல் மேலாண்மை பெறும்.

# தமிழ் மக்கள் தொடர்ந்து இராணுவக் கெடுபிடிகளுக்குள் தமது பொருளாதார-அபிவிருத்திகளை இழந்து வருவதைத் தடுக்கும் அரசியல் பலம் இல்லாதாக்கப்படும்.

# பெரும்பான்மைச் சமுதாயத்தின் ஒத்துழைப்பை இவைகளுக்காகப் பெறுவதில், தமிழ் ஆளும் வர்க்கம் சிங்க ஆளும் வர்க்கத்தோடு மேலும் நெருங்கிக்கொள்ளும்.

#பரந்துபட்ட தமிழ் மக்கள் ஆட்சியிலுள்ள தமிழ் தலைமைகளாலேயே திட்டமிடப்பட்டு பழி வாங்கப்படுவர்.
இதன் வழியான அரசியல் நடாத்தையில், மகிந்தா தொடர்ந்தும் தேச பக்தனாகவும்,அதியுத்தமமான சிங்களத் தேசியத்தின் குறியீடாகவும் மாற்றப்பட்டு, தொடர்ந்தும் சிறுபான்மைச் சமூகங்கள் ஒடுக்கப்படும்.இதைச் செய்யவே மேற்குலகம் தமிழ் மக்களைப் பகடைக்காய்களாக்கிப் பொன்சேகாவுக்கு வெற்றியயைத் தமிழ் பிரதேசங்களில் குவிக்க வைத்தது.இதன்வழி இனவாதம் தொடர்ந்து இருத்திவைக்கப்பட்டு, இலங்கையின் சுயவளர்ச்சி முடக்கப்படும்.

மகிந்தா குடும்பம் இதையெல்லாம் தவிர்த்து நேர்மையான அரசியலைக் கைக்கொண்டு, இலங்கையில் இராணுவவாதம் ஒடுங்கிய ஜனநாயகச் சூழலை இனி ஏற்படுத்துமென எவரும் நம்பும் அரசியல் நடக்கமுடியாது.

இது, தமிழ் பேசும் மக்கள் மத்தியிலுள்ள இராணுவ ஒடுக்குமுறையை மேலும் விரிவாக்கும்.எனவே, சட்ரீதியான அரசியலாகவும் இதை மாற்றும்.இது,”தமிழ் தேசியம்”உயிர்த்திருப்பதற்கும் அதைக் கையிலெடுத்து அரசியல் பிழைப்பை முன்னெடுக்கும் தமிழ் மேட்டுக்குடிக்குமான அறுவடைகளையுஞ் செய்யும்.இதன்வழி ஏமாற்றப்பட்டவர்கள்-படப்போகின்றவர்கள் தமிழ்பேசும் இலங்கையர்களே.

இறுதியாக: மகிந்தாவின் வெற்றி யானது, தொடர்ந்தும் இலங்கையில் இனவாத அரசியலும்,ஒடுக்குமுறையும் சிறுபான்மை இனங்கள்மீது கட்டவிழ்த்து விடப்படும்போது தமிழ் பேசும் மக்களது அரசியல் இருப்புப் பலமற்றது என்று நிரூபித்திருக்கிறது.தமிழ்பேசும் மக்களது ஆதரவின்றியே ஆட்சியில் அமர விரும்பும் பெரும்பான்மை இனக் கட்சிகளுக்குச் சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தும் அரசியலும்-சிறுபான்மையின ஒதுக்குதலும் இருந்தாற்போதுமானதென மீளவும் நிரூபித்திருக்கிறது.

இனிவரும் காலத்தில் எந்தக் கருணாவும்-டக்ளசும் மகிந்தாவுக்கு அவசியமில்லை.சிங்கள மக்களைத் திருப்பதிப்படுத்தும் இனம்வாதம் ஒன்றே போதும்.இது,இலங்கைச் சிறுபான்மை இனங்களது தற்கொலையாக மாற்றப்பட்டுள்ளது.இந்த அபாயமான அரசியலைப் புரிந்தபோது அச்சம் மட்டுமே எஞ்சியுள்ள உணர்வாக…

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
27.01.2010

http://srirangan62.wordpress.com/2010/01/28/இலங்கையினது-ஆறாவது-ஜனாதி/