திருடர்களின் திருவிழா நடக்கிறது

ஆனால் தேசம் முழுவதும்

மக்களை விற்று 

சூதாட்டம் நடக்கிறது

நாட்டு நிலமை நலமாய் மாறும்

நம்புக என்பார்கள்

நாட்கள் சென்றதும்

நீங்கள் யாரென்று

நம்மிடம் கேட்பார்கள்

 

ஊர்வலம் வந்து ஒவ்வொரு நாளும்

ஓட்டுக்கள் கேட்பார்கள்

ஆய்யோ

இவர்களுக்குப் போட்டால்

இன்னும் நம்மையும்

நாட்டினில் ஒழிப்பார்கள்

 

சவங்கள் எரிக்கும் சுடலை போல

இலங்கை இருக்கிறது

எங்கு பார்த்தாலும் ஊழலும் லஞ்சமும்

எழுந்து சிரிக்கிறது

 

யாருக்கும் இங்கே நடப்பது குறித்துக்

கவலையே கிடையாது

ஆனால் யாரோ வந்தார் யாரோ போனார்

என்றால் விடியாது

 

அறியாமை இருளில்

அடைந்து கிடப்பவர்

அதிகம் இருக்கின்றார்

அந்த அப்பாவிகள் எவருக்கும்

இவர்களின் தந்திரம்

பசியினில் புரியாது

 

ஆயுதப்பண்டிகை நடத்திய இடத்தில்

தேர்தல் நடக்கிறது

அது தேர்தல் அல்ல

சூது என்றே செவ்வனே தெரிகிறது

ஆனால் நம்மையே விற்கும் நாடகத்தில்தான்

நம் பயணம் தொடர்கிறது

 

தகுதியில்லாதவர்களைத்

தொகுதியில் அமர்த்தி

வாழ்வைத் தொலைக்காதீர்

அவர்களை ஆதிக்க விடாமல்

அடையாளம் காட்டி ஓடத் துரத்துங்கள்

 

கோடிக் கணக்கில்

கோள்ளைப் பணத்தில்

கொழுத்தார் பாருங்கள்

கொலையாயுதத்தாலே

கொன்று குவித்தோரிடம்

கணக்கைக் கேளுங்கள்

 

பேதம் செய்தவர்

பிரசங்கம் செய்கிறார்

புரிந்துகொள்ளுங்கள்

 

போனது போகட்டும்

அது போல ஆக்காதீர்

ஆனாலும் இனி

அத்தனைபேரையும் சமமாய் ஆளும்

ஆட்சியை அமையுங்கள்