06242022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

“சந்திப்பு” தோழர் செல்வபெருமாள் மரணம் !!

நாங்கள் போலிக்கம்யூனிஸ்டு என்றைழைப்பவர்களில் முதன்மையானவர்கள் சி.பி.எம் கட்சியினர். கம்யூனிசத்தின் பெயரில் திரிபுவாதக் கொள்கைகளை தன்னகத்தே கொண்டிருந்த அந்தக் கட்சியிலிருந்துதான் மார்க்சிய லெனினிய கட்சி பிரிந்து வந்தது.

இன்றைக்கு வலது, இடது இரண்டு கம்யூ. கட்சிகளும் ஆளும் வர்க்கத்தின் கூட்டாளிகளாக மாறிவிட்டன. எது உண்மையான கம்யூனிசம் என்பதை மக்களிடையே பிரச்சாரம் செய்வதற்கு முன் எவரெல்லாம் போலிக் கம்யூனிஸ்டுகள் என்பதை அடையாளம் காட்ட வேண்டியிருக்கிறது.

அவர்களோ எங்களை தீவிரவாதிகளென்றும் சி.ஐ.ஏவின் கைக்கூலிகளென்றும் தனிமைப்படுத்த முனைந்தனர். இந்தப் பின்னணியில்தான் சந்திப்பு தோழர் செல்வப்பெருமாளுக்கும், எமது தோழர்களுக்கும் இடையே இணையத்தில் தீவிரமான  கருத்துப் போராட்டம் நடந்து வந்தது.

பொதுவில் சி.பி.எம் கட்சி தமது அணிகளுக்கு புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் முதலான இதழ்களை படிக்கக்கூடாது, ம.க.இ.கவினரோடு சகவாசம் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிவிக்காத விதிமுறைகளை கட்டளையிட்டிருக்கிறது. இதை ஊக்குவித்தால் தமது அணிகள் ம.க.இ.கவினரால் வென்றெடுக்கப்படுவார்கள் என தலைமை பயந்தது.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் இணையத்தில் எமது தோழர்கள் அசுரன், ஏகலைவன், கேடயம் உள்ளிட்டு பலர் தீவிரமாக இயங்கிவந்த நேரம். இப்படி கூட்டம் கூட்டமாக ம.க.இ.கவினர் இறங்குவதைக் கண்டு கதிகலங்கிய சி.பி.எம் தலைமையின் ஆசிர்வாதத்தோடு இதை எதிர் கொள்ள களமிறங்கினார் செல்வபெருமாள். அவர் சென்னை சி.பி.எம் அலுவலகத்தின் முக்கிய ஊழியராக பணியாற்றிக்கொண்டு இணையத்திலும் பங்கேற்றார்.

அவர் எழுதிய இடுகைகளில் பெரும்பாலானவை ம.க.இ.கவை அம்பலப்படுத்துவதற்காக எழுதப்பட்டதுதான். தோழர்கள் போலிக் கம்யூனிஸ்டுகளை விமரிசித்து எழுதும் ஒவ்வொரு பதிவுக்கும் எதிர்ப் பதிவு போடுவார் செல்வபெருமாள். பின்னூட்டமிட்டு விவாதிப்பார். இது கணிசமான காலம் நடந்து வந்தது.

தொடர்ந்து தோழர்கள் எழுப்பிய மையமான கேள்விகள், விமரிசனங்களுக்கு பதில் சொல்ல இயலாமல் பதட்டமடைந்த செல்வபெருமாள் பின்னர் அவதூறு செய்வதாக தனது எதிர் விமரிசனங்களை மாற்றிக் கொண்டார். ம.க.இ.க இரகசிய கட்சியென்றும், தீவிரவாதிகளென்றும், அமெரிக்க அடிவருடிகளென்றும் அவை நீண்டன. இறுதியில் இனவாதிகளின் பார்ப்பனத் தலைமை என்ற அவதூறையும் கடன் வாங்கிக் கொண்டார். இவ்வளவுக்கும் சி.பி.எம்மில்தான் தம்மை பார்ப்பனர்கள் என்ற அறிவித்துக் கொண்ட தலைவர்கள் இருக்கிறார்கள்.

ம.க.இ.கவின் அரசியல் சார்ந்த கட்சித் திட்டத்தை வாங்கி அவர்பாட்டுக்கு விமரிசனமென்று நிறைய எழுதினார். அந்த திட்டத்தை ஏதோ பயங்கரமாக கண்டுபிடித்தது போல பறைசாற்றிக் கொண்டார். சித்தாந்த விவாதத்தில் சோர்வுற்ற அவரது சிந்தனை இப்படி எளிதான விசமப் பிரச்சாரங்களில் நிலை கொண்டது.

முக்கியமாக இங்கே குறிப்பிட விரும்பியது பொதுவில் சி.பி.எம் கட்சியினர் அவர்களை விமரிசிக்காமல் மற்ற எதனையும் எவ்வளவு தீவிரமாக விமரிசித்தாலும் நட்பு கொள்ளவே விரும்புவார்கள். கம்யூனிசத்தையும், மார்க்சிய ஆசான்களையும் தீவிரமாக திட்டிக் கொண்டே சி.பி.எம்மை மட்டும் திட்டாமல் இருந்தால் கூட அவர்களுக்கு பிரச்சினை இல்லை. எமது தோழர்கள் தொடர்ந்து சி.பி.எம்மை தீவிரமாக அம்பலப்படுத்தியதுதான் அவருக்கும் பிரச்சினையாக இருந்தது.

வினவு ஆரம்பித்த போது ஆரம்பத்தில் சட்டக்கல்லூரி மாணவர் பிரச்சினை, டாக்டர் ருத்ரன் கட்டுரை போன்றவற்றுக்கு பாராட்டி பின்னூட்டமிட்ட செல்வபெருமாள், பின்னர் சி.பி.எம்மை விமரிசித்து புதிய ஜனநாயகம் இதழில் வந்த கட்டுரைகளை வெளியிட்ட போது ஆத்திரம் கொண்டார். அடுத்து வினவை வசைமாறி பொழிந்து கட்டுரைகளை வெளியிட ஆரம்பித்தார். கூடுதலாக வினவு பெருவாரியான வாசகர்களால் அங்கீகரிக்கப்பட்டது அவருக்கு துக்கத்தை கொடுத்திருக்கும்.

செல்வபெருமாளுடன் நடந்த இந்த விவாதத்தின் அனுபவம் என்ன? நடுத்தர வயது, கட்சியின் முழுநேர ஊழியர், பொருளாதார ரீதியாக கட்சியை சார்ந்திருப்பது, தனது இருப்புக்காக கட்சியை விட்டுக்கொடுக்காமல் இருப்பது முதலிய பிரச்சினைகளால் அவரை வென்றெடுப்பது என்பது நிச்சயம் சாத்தியமில்லை. ஆனால் ஒரு சி.பி.எம் தோழர் எமது விமரிசனங்களால் என்ன வகை அணுகுமுறையை கையாள்வார் என்பதை தோழர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.

காங்கிரசின் கூஜாவாக சென்ற ஆட்சியின் போது மாறிவிட்ட போலிக்கம்யூனிஸ்டுகள் தமிழகத்தில் போயஸ் தோட்டத்திற்கும், கோபாலபுரத்திற்கும் மாறி மாறி காவடி தூக்குவது என்ற சூழ்நிலையில் அந்தக் கட்சிகளில் இருக்கும் நேர்மையான அணிகளை புரட்சிகர கட்சிகள் வென்றெடுப்பது காலத்தின் கட்டாயாம். அந்த ஒன்றுக்காகவே நாங்கள் தொடர்ந்து சி.பி.எம்மின் சந்த்தர்ப்பவாதங்களை விமரிசிக்க விரும்புகிறோம். மேலும் நேர்மறையில் உண்மையான கம்யூனிஸ்டுகள் ஒரு சமகாலப் பிரச்சினையில் எத்தகைய நிலைபாட்டை எடுப்பார்கள் என்பதை விளக்குவதற்காகவும் போலிகளின் நிலைபாட்டை விமரிசிக்க வேண்டியிருக்கிறது.

சமரசங்களும், சரணடைதலும் வாழ்க்கையின் அங்கமாக மாறிவிட்ட சூழ்நிலையில் சி.பி.எம் கட்சியின் சந்தர்ப்பவாதம் அதன் அணிகளை ஊழல்படுத்துவதற்கு கூடுதல் பங்காற்றுகிறது. எமது தொடர்ந்த போராட்டத்தால் பல அருமையான தோழர்கள் சி.பி.எம் கட்சியிலிருந்து எம்மோடு இணைந்திருக்கின்றனர். ஒரு வேளை செல்வபெருமாள் இருந்திருந்தால் அது நடந்திருக்குமா, தெரியவில்லை.

எனினும் ம.க.இ.கவைக் கண்டால் தூரவிலகு என்பதை கடைபிடிக்கும் கட்சியில் எமது தோழர்களோடு இத்தனைகாலம் அது தவறென்றாலும் தொடர்ந்து விவாதித்த தோழர் செல்வபெருமாள் மறைவு அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. அவரை விடுத்து பதிவுலகில் இருக்கும் மற்ற சி.பி.எம் ஆதரவாளர்கள் எம்முடன் விவாதிப்பதை விரும்புவதில்லை. அந்த இடம் வெற்றிடமாகத்தான் இருக்குமோ என்பதும் தெரியவில்லை.

தோழர் செல்வபெருமாளை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு எமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

http://www.vinavu.com/2010/01/23/santhipu/


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்