முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகளின் மரண ஓலங்கள் இன்னமும் ஒலித்து கொண்டேயிருக்கின்றது யுத்தத்தினால் அங்கவீனரானோர் மற்றும் காயமடைந்தோர்களின் ரணங்கள் இன்னமும் ஆறவில்லை மரணத்தின் வாயில் வரை சென்று மீண்டு வந்தவர்களது மரண பயம் இன்னமும் அடங்கவில்லை முட்கம்பி வேலிகளின் முகாம்களுக்குள் லட்சக்கணக்கானோர் இன்னமும் எதிர்காலம் பற்றிய பெரும் கேள்விக் குறியுடன்…
ஆனால் தமிழ் மக்களின் தலைவர்கள் என்று தம்மை கூறிக் கொள்பவர்களும் மற்றும் தமிழ் மக்களின் அரசியல் கட்சிகளும் இந்த மக்களிற்கு நடந்து முடிந்த 21ம் நூற்றாண்டின் மிகப் பாரிய இன அழிப்பினை பற்றிய எத்தகைய பிரக்ஞையும் இன்றி இனப் படுகொலையை முன்னின்று நடத்திய போhக்; குற்றவாளிகளுக்கு தமிழர்களின் ; பொன்னான வாக்குகளை வழங்கும்படி தமது எஜமான விசுவாசத்தினை காட்டி நிற்கின்றனர்
எமது தமிழ் தலைமைகள் அன்று மலையக மக்களின் வாக்குரிமை மற்றும் பிரஜா உரிமையினை சிங்கள ஆட்சியாளர்கள் பறித்த போது அதற்கு ஆதரவாக வாக்களித்து தமது மந்திரி பதவிகளை பாதுகாத்துக் கொண்டனர்
1977 இல் தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரசும் இணைந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழ பிரகடணம் செய்து தமிழீழ ஆதரவு வாக்கெடுப்பெனவும் பாராளுமன்றம் சென்று தமது ஆP பதவிகளை ராஜினாமா செய்து தமிழீழ பிரகடனம் செய்யப்போவதாக கூறி தேர்தலில் போட்டியிட்டனர் முழு உலகமும் வடகிழக்கு தேர்தலையே எதிர்பார்ப்பதாகவும் இரத்தத் திலகமிட்டும் வெளவால் கதைகள் கூறியும் 17 ஆசனங்களை வென்று எதிர்கட்சியினர் ஆனார்கள். பின்னர் எல்லா வாக்குறுதிகளையும் காற்றினிலே பறக்க விட்டுவிட்டு தமது சொந்த நலன்களை சிங்கள அரசிடமிருந்து பெற்றுக்கொள்ள தமிழ் மக்கள் அளித்த வாக்குப் பெரும்பான்மையினை பயன்படுத்தினர்
தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட இந்திய நலனையே முற்று முழுதாக கொண்டு உருவான இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை அங்கீகரித்தும் இருந்தனர் இறுதியில் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
இவர்களின் வழித்தோன்றலான TNAயினர் MP பதவிக்காக புலிகளின் பாட்டுக்கெல்லாம் கேள்வியின்றி தாளம் போட்டனர் இன்று புலிகள் அழிந்தவுடன் தமது வர்க்க குணாம்சத்தினை வெளிப்படுத்துகின்றனர்
இவர்களுக்கு மக்களின் இன்னல்களும் துன்பங்களும் ஒரு பொருட்டே கிடையாது அவர்களதும் அவர்களது எஜமானர்களதும் நலன்களுமே பிரதானமானதாகும்
நாட்டில் எஞ்சியுள்ள புலிகளும் மற்றும் சர்வதேச புலிகளும் ஆதரவாளர்களும் தமிழரின் தாயக கோட்பாடான தமிழ் ஈழத்தினையும் தலைவர் பிரபாகரனையும் முள்ளிவாய்க்காலில் போட்டு புதைத்து விட்டுள்ளனர் போல தெரிகின்றது எப்படித்தான் இவர்களால் இவர்களது தலைவனையும் பல்லாயிரக்கணக்கான எமது உறவுகளையும் கொன்று குவித்த இராணுவத்தின் தளபதிக்கு வாக்குபோடும்படி கூறமுடிகின்றது?
இங்கு தான் புலிகளின் உண்மையான அரசியல் அம்மணமாகியுள்ளது இவர்களது அரசியல் என்பது தமிழரசுக் கட்சி தமிழ் காங்கிரசு தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் இன்றைய TNA இனரின் அரசியலுக்கு அப்பால் ஒரு மயிர் தானும் மக்களை சார்ந்து கிடையாது
சிங்கள இனவாத கட்சிகளான UNP, SLFP, JVP (மார்க்சிய கோசங்களை முழங்கும் இனவாதிகள்) காலத்திற்கு காலம் இனப் பாகுபாட்டு கொள்கைகளை கடைபிடித்தும் தேவையான போதெல்லாம் இனகலவரங்களை நடத்தியும் சாதாரண சிங்கள மக்களை இனவெறியர்களாக ஆக்கி இனவாதத்தின் மீதும் மற்றும் பௌத்த மதத்தின் மீதும் ஏறி நின்றே காலத்திற்கு காலம் ஏகாதிபத்தியங்களின் ஆசியுடன் ஆட்சியமைத்து தேசத்தினை தாமும் கொள்ளையடிப்பதுடன் ஏகாதிபத்தியங்களும் கொள்ளையடிக்க நாட்டின் வளங்களை அனைத்தையும் திறந்து விட்டுள்ளார்கள்.
ஏல்லாம் கூட்டிக்கழித்து பார்ப்போமானால் அனைத்து சிங்கள தமிழ் அரசியல் கடசிகளும் பரந்துபட்ட மக்களின் நலன்களில் அக்கறையற்ற முதலாளி வர்க்கத்தினரின் நலன்களையே தூக்கிப்பிடிக்கின்ற தரகு முதலாளிகளின் கட்சிகளே.
இதற்கு வெளியினிலே சர்வதேச நிலைமையிலே பல மாறுதல்கள் நிகழ்ந்து வருகின்றன குறிப்பாக முதலாளித்துவம் மேற்குலக நாடுகளில் மரணத்தினை நோக்கி சேடமிழுக்க தொடங்கியுள்ளது இதன் விளைவாக இந்த நாடுகளின் அரசுகள் மக்களின் மருத்துவ கல்வி ஏனைய அத்தியாவசிய செலவீனங்களை குறைத்தும் நிறுத்தியும் மக்களிடமிருந்து மேலும் மேலும் வரியினை அறவிட்டு; அந்த பணத்தினை முதலாளிகளுக்கு வழங்கி அவர்களை தூக்கிவிடும் முயற்சியில் உள்ளன
மேலும் உலகமயமாதலில் அமெரிக்கா ஜரோப்பியா ஜப்பான் ரஸ்யா சீனா நாடுகளுக்கிடையே தமது சந்தையை விஸ்தரிக்கும் நோக்கிலும் மலிவான உழைப்பாளர்களை நோக்கியும் கனிவளங்கள் உள்ள மூன்றாம் உலக நாடுகளை தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதன் நோக்கிலும் ஒரு மறைமுகமான போட்டி இரு அணிகளாக பிரிந்து நடைபெற்று கொண்டிருக்கின்றது
இதன் வெளிப்பாடே Shanghai Cooperation Organisation (SCO) அமைப்பாகும் இதில் ரஸ்யா சீனா இந்தியா ஈரான் பாகிஸ்தான் இலங்கை பங்களாதேஸ் மற்றும் பல நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
இந்த அமைப்பானது அன்றைய அமெரிக்கா ரஸ்யா ஏகாதிபத்திய போட்டியில் எவ்வாறு வார்சோ (WARSO) நாடுகள் ரஸ்யா ஏகாதிபத்தியத்திற்கு சார்பாக இருந்தனவோ அது போன்று தான் இந்த சங்காய் உடன்படிக்கையானது ரஸ்யா சீனாவின் நலன்களை காக்கவென உருவாக்கப்பட்ட ஒன்றே.
மேலும் உலகம் பெரும் உணவு பற்றாக்குறையை அடைந்துள்ளது இதனால் பாரியளவில் பணம் பண்ணும் நோக்குடைய பயிர்களை விவசாயம் செய்ய வளமுள்ள நிலங்களின் பெரும் தேவையுள்ளது
இந்த உலகமயமாதலினது ஒரு முன் பரீட்சார்த்த வெளிப்பாடே இலங்கையில் இந்தியா மறறும் ரஸ்யா சீனாவின் ஆலோசனை ஒத்துழைப்பு வழிகாட்டலில் நடை பெற்றதே இந்த இனப் படுகொலையும் பெரும் அளவிலான விவசாய நிலப்பறிப்புமாகும்.
தெற்கே சீனா அபிவிருத்தி என்ற பெயரில் நிலங்களை தம் வயப்படுத்துவதும் பாதுகாப்பு மையங்களை துறைமுகங்கள் என்ற போர்வையில் கட்டுவதையும் தொழிற்சாலைகளை அமைப்பதனையும் காண்கின்றோம்
வடக்கு கிழக்கிலே இந்தியா அபிவிருத்தி என்ற பெயரில் அணுமின்னிலையம் அமைத்து மூதூர் பகுதியில.; ஒரு ஊரையே அபகரித்துள்ளது மேலும் சீமெந்து ஆலையை தம்வசப்படுத்தியுள்ளது பெரும் தெருக்கள் ரயில் பாதைகள் நிலையங்கள் புதிய நகரங்கள் என அனைத்து நிர்மாண வேலைகளும் இந்திய பெரு முதலாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன எல்லாவற்றிற்கும் மேலாக கணிசமான அளவு வன்னி விவசாய நிலப்பரப்பு இந்திய பெரு முதலாளிகளிடம் பண வருவாய் தரக் கூடிய பயிர்களை பயிரிட எம்மவரிடமிருந்து பறித்து கொண்டுள்ளனர்
ஆக மொத்தத்தில் பயங்கரவாத ஒழிப்பு உதவி என்ற போர்வையில் இலங்கைத் தீவை அந்நியர்கள கொள்ளையிட முன்னர் எப்போதும் இல்லாத அளவில்; சிங்கள அரசு வழி திறந்து விட்டுள்ளது
சிங்கள தரகு முதலாளித்துவ அரசுகள் சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமை போராட்டங்களை அடக்க சிங்கள தேசத்தினை ராணுவமயமாக்கினர் அது படிப்படியாக வளர்ந்து இன்று பாசிச ராணுவமாகியுள்ளது ஆளும் அரசிற்கு சார்பாக பத்திரிக்கையாளர்களையும் ஜனநாயக சக்திகளையும் எதிர்க்கட்சியினரையும் சிறுபான்மை மக்களை மிரட்டியும் கொன்றும் இனப்படுகொலை செய்தும் வருகின்றது
இந்த பாசிச ராணுவத்தின் உதவியுடன் தான் நாளை சீனாவும் இந்தியாவும் இலங்கையினை கொள்ளையிட போகின்றனர்
சிங்கள பிரதேசமெங்கும் போரின் காரணமாக உருவாகியுள்ள வாழ்க்கை செலவின் உயர்வினை பெரும்பான்மையான சாதாரண மக்கள் முகம் கொடுக்க முடியாது திண்டாடுகின்றனர் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பல சம்பள உயர்வுகள் இன்னமும் அவர்களை கிட்டியது கிடையாது வெறும் காகித அறிவிப்பாகவேயுள்ளன ஆனால் ஆட்சியில் இருப்பவர்கள் அதிகாரிகள் பெரும் முதலாளிகளிள் முன்னரை விட பல மடங்கு சொத்துக்கள் பணங்களை சேர்த்துக் கொண்டுள்ளனர்
எமது தேசத்தில் பரந்துபட்ட மக்களுக்கான எதிர்காலம் என்பது மிகவும் இருண்டதானதாகவே உள்ளது மக்கள் தமது அன்றாட வாழ்க்கைக்கும் ஜனநாயக உரிமைகட்கும் ஆட்சியில் இருக்கப் போகின்ற பாசிச ஆட்சியாளர்களையும் நாட்டை கொள்ளையிடும் அந்நிய ஏகாதிபத்தியங்களையும் எதிர்த்து மிக கடுமையான போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கும்
ஆம் நிச்சயமாக கிளர்தெழுவார்கள் பரந்து பட்ட மக்களின் அனைத்து ஜனநாயக நலன்களை உயர்த்தியும் சிறுபான்மை இனங்களின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரித்தும் போராடுகின்ற ஒரு தலைமையின் கீழ் நிச்சயமாக இந்த மக்கள் விரோத ஆட்சியாளர்களும் ஏகாதிபத்தியங்களும் ஓட ஓட விரட்டி அடிக்கப்படுவார்கள்
அனைத்து போலி ஜனநாயக தேர்தல்களையும் நிராகரிப்போம் !!
ஜனநாயக புரட்சியினை நோக்கி மக்களை அணிதிரட்டுவோம் !!