கையசைத்து கணவனை
வழியனுப்பிய பிறகு
கதவுகள் தாழிட்டால்,
நீயும் நானும்
வண்ணத்துப்பூச்சிகளாய்
விளையாண்ட பொழுதுகள்
மனதுக்குள் வந்தமரும்.

குடைகள் நம்மிடம்
இருந்த போதும்
நனைந்து கொண்டே
வீட்டுக்கு சென்ற நாட்கள்,
ஜன்னல் வழியாக
மழை பார்க்கும் போதெல்லாம்,
கிழிந்த குடைக்குள்
இறங்கும் நீர்த்துளியாய்
நினைவுகளிள் வழிந்திடும்.

உன் பிறந்த நாளொன்றுக்கு
அழகிய தோடுகள் இரண்டு
அணிந்து வந்தாய்,
அதுபற்றி நான் கேட்க
அப்பா பட்ட கஷ்டம் பற்றி
அழுதே தீர்த்து விட்டாய்,
நிறைய நகையணிந்து,
மணக்கோலத்தில் ஒருநாள்
நான் நின்ற போது
நீ அழுத நிமிடங்கள்தான்
நினைவில் வந்தது.

நம் கனவு இல்லம் பற்றி
விளையாட்டாய்
நீ வரைந்த கோடுகள்தான்
நிஜத்தில் இப்பொழுது
என் வீடாய் நீண்டுகிடக்கிறது.
ஆனால்,
சமையலறை ஒன்றை தவிர
மற்ற அறைகளில்
அதிகம் எனக்கு வேலையில்லை.

உன் கண்ணில் ஒருநாள்
தூசு விழுந்த போது
உதடு குவித்து
ஊதி எடுத்த நிமிடங்கள்,
வீடு  முழுவதும்
படிந்திருக்கும் தூசியை – நான்
கூட்டிப் பெருக்கும் போது,
உடன் வந்து ஒரு
உண்மை சொல்லும்,
இவை எளிதில் அகற்ற கூடிய
தூசியல்ல என்று.

பிரிந்த
தோழியே..
பிறகு,
நீயொரு நாள்
வயதுக்கு வந்துவிட்டாய்
அதுபோலவே
நானும் ஒருநாள்.

அத்தோடு
நம் பள்ளிப் பயணங்களும்
பாதியில் நின்றன…
கழட்டி விடப்பட்ட
இரயில் பெட்டிகளாய்.

எல்லாம் இருக்கட்டும்,
நாம் இருவரும்
கைகோர்த்து நெடுந்தூரம்
நடந்த நாட்கள்
எவ்வளவு சுகமானவை
சுதந்திரம் கொண்டவை.

இப்பொழுது – நீ
எங்கே
எப்படி இருக்கிறாய் என்று
எனக்கு தெரியாது.
ஆனால்.
நானும் இருக்கிறேன்
என் குழந்தைகளுக்கு
நல்ல தாயாக…
என் மாமனார் – மாமியாருக்கு
நல்ல மருமகளாக…
என் கொளுந்தனாருக்கு
நல்ல அண்ணியாக…
என் கணவருக்கு
நல்ல மனைவியாக…
மொத்தத்தில்
என் சுயம் தொலைத்த
வாழ்க்கையொன்றில் ஒட்டியபடி.

என்ன விழிக்கிறாய்,
அதற்கான நிகழ்வுகள்
என்னிடம் நிறைய உண்டு.

இதோ
இன்று கூட,
தெலுங்கானா பிரச்சனை முதல்
ருச்சிகா வழக்கு வரை
சுடும் வார்த்தைகளால் விளக்கிய,
முகம் தெரியா
சகோதரனொருவன்,
“சமூக மாற்றத்திற்கானது
இந்த இதழ்
வாய்ப்பு இருந்தால்
வாங்கி படியுங்கள்” என்று
என்னை பார்க்க,
மௌனமாய் நின்ற நான்…
‘வீட்டில் ஆள் இல்லையென்றே’
அனுப்பி வைத்தேன்.

-          முகிலன்

குறிப்பு : சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் “புதிய ஜனநாயகம்” இதழ் விற்க சென்ற போது, ஒரு வீதியில் குறைந்தபட்சம் நான்கைந்து பெண்களிடமாவது  இயல்பாய் இப்பதில் வரும். அப்பதில்களின் விளைவே இக்கவிதை.

http://www.vinavu.com/2010/01/23/saturday-poems-15/