06242022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

சான்றோர் கூற்று

பெரிய நீதிவான் சொன்னார்
பிறகு பெரிய பாதிரியார் சொன்னார்,
பிறகு பேராசிரியரும் அல்லவா சொல்லுகிறார்,
“பழைய பிழையைச் செய்யாதீர்
புறக்கணித்து உங்கள் வாக்குக்களை வீணாக்காதீர்”
என்று
பழைய பிழை எது?

வஞ்சகர் என்று தெரிந்தும் வாக்களித்ததா?
தெரிந்தால் எவருக்கும் அளிக்காமல் விட்டதா?
குறுக்குக் கேள்வி கேட்காதீர்
பேராசிரியரும் பெரிய பாதிரியும் நீதவானும்
தெரியாமலா சொல்கிறார்கள். தகைமைசால்
பேரறிஞர்மாரெல்லாம் ‘பேசாப் பொருளைப்
பேசவுந் துணிவதற்கு’
நீங்கள் யார்?
படிப்புண்டா? பட்டமுண்டா?
பதவியெதுந் தானுண்டா? – இல்லை
பத்திரிகை எசமானர் ஆசிகளேன் உமக்குண்டா?
போடென்று சொல்லுகிற பெரியோர்கள் எல்லோரும்
யாருக்குப் போடென்றோ
எதை நம்பிப் போடென்றோ
ஏன் சொல்ல மாட்டார்கள்?

இருட்டு அறைகளுக்குள் இரகசியமாய் முடிவெடுத்து
அஞ்சுங் கெட்டு அறிவுந்தான் கெட்டொழிந்தோர்
ஆலோசனையெல்லாம் அம்பலத்தில் சொல்லி வைத்து
ஊர் சிரிக்கத் தங்களது
பேர் கெட்டுப் போவதற்குப்
பெரியோர் விரும்புவரோ?
பெரிய நீதவான் சொன்னார்,
பெரிய பாதிரியார் சொன்னார்,
பேராசிரியருஞ் சொன்னார். போதாதா?
எனவே,
குறுக்குக் கேள்விகளை உரக்கவே கேட்காதீர்
பதில் கிடைக்கப் போவதில்லை
உரிய பதிலை நீங்களே உணருங்கள்.

- பரதேசிப் பாவாணர்

http://www.vinavu.com/2010/01/23/saturday-poems-15/


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்