இன்னுமின்னும் அறியாத சேதிகள்
அந்தப் பெருநிலத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றன)நேற்று உனது புகைப்படம் புதர் ஒன்றிற்குளிலிருந்து
எடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
சகோதரியே! உன்னை உரித்து
சிதைத்தவர்களின் கைளிலிருந்து
எங்கள் காலம் நீண்டுகொண்டிருக்கிறது.
கண்டெடுக்கப்படாதவர்களின் சடலங்களுக்கு
என்ன நேர்ந்திருக்குமென்று
தலைகளை இடித்தழும் தாய்மார்களுக்கு
இரத்தத்தால் முடிவுறுத்தப்பட்ட சகோதரிகளுக்கு
உன்னை சிதைத்திருக்கிற புகைப்படம்
எண்ணிக்கையற்ற முனைகளில்
நடந்த கதைகளை சொல்லிக்கொண்டேயிருக்கிறது.
உன்னை சிதைந்து எங்கு எறிந்திருக்கிறார்கள் என்பதையும்
யார் உன்னை தின்றார்கள் என்பதையும்
உனது தொலைக்காட்சியில்
நீயே செய்தியாக வாசித்துக்கொண்டிருக்கிறாய்.
நீ நடித்த பாடல்களும் படங்களும்
ஒளிபரப்பபட்டுக்கொண்டிருக்கிற அலைவரிசையில்
உனது பாதிப்படம் ஒரு மூலையில்
பார்க்கப் பொறுக்க முடியாத கோலமாக தொங்குகிறது.
அதே படைகளினால் கவலிடப்பட்ட
நிலத்தில் எங்கோ ஒரு மூலையில் உனது
தாயைப்போலவே ஒருத்தி
தன் மகளைத் தேடி துடித்துக்கொண்டிருக்கிறாள்.
ஆண்குறிகளை வளர்த்து
இரத்தத்தை படையலிட்டிருக்கிற
படைகளின் யுத்த முனைகளில்
உன் சீருடைகளை
கழற்றி எறிந்திருக்கிறார்கள்.
உன் வீரத்தை கரைத்துவிட்டார்கள்
தொலைந்துபோன உன் துப்பாக்கி படைகளின் கையிலிருக்கிறது
முன்னர் வெற்றியடைந்த களமொன்றிலேயே
நீ சரணடைந்திருக்கிறாய்.
துப்பாக்கிகளும் ஆண்குறிகளும்
ஒரே மாதிரியாய்
வாயைப் பிளந்து உன்னை தின்று போட்டிருக்கிறது.
முற்றத்தில் தெருவில் வயல்களில்
கண்ணிவெடிகளுக்கு கீழாகவும் மண் பிரளும் இடங்களிலெல்லாம்
சீருடைகள் முதலான உடைகளும்
இரத்தமும் சைனைட் குப்பிகளும் புகைப்படங்களும்
மற்றும் சில குறிப்புகளும் கிளம்பி வந்துகொண்டிருக்கின்றன.
என்னிடம் வாங்கிச் சென்ற
கவிதையை எங்கு போட்டிருப்பாய்?
__________________________________
(இசைப்பிரியாவுக்கு) 25.12.2009
- தீபச்செல்வன்
http://www.vinavu.com/2010/01/23/saturday-poems-15/