விரிந்து கிடந்தது வானம்
வீசியது இளங் குளிர்காற்று
உதயனின் வெக்கை தணிக்க
வெண்குடை பிடித்தன மேகங்கள்
கூடிக் களித்து கலந்து கறைந்தன
கார்கொண்ட மேகத்திரள்கள்
பொழிந்த எள்ளு கொள்ளு… பேத்திகளை
மடியில் கிடத்தித் திளைத்தனள்
பூமித்தாய்.

அப்பா, என்னே வாசம் இதுவென்றாள்
என் மகள்
மகளின் ரசனை கண்டு மகிழ்ந்தேன்.. ஆனால்,
கேட்பாரற்றுக் கிடந்த கறந்த பசு
தன் வயிற்றெரிச்சலை
ஒரு வாரத்தில் வெளிப்படுத்தியபோது
அந்த நாற்றத்தை நுகர மரத்த என் மூக்கைப்
பெரிதுபடுத்தாத நான்
மகளொடு சேர்ந்து மண்மணத்தை
நுகர்ந்து மகிழ முடியாத மூக்கை
அறுத்தெரிந்தால் என்னவென்று
ஒருகணம் எண்ணினேன்..
வாழ்க ஐ.டி.சி

விரிந்து கிடந்தது வானம்
பரந்து கிடந்தது பூமி
வீசியது இளங் குளிர்காற்று
விரித்த பெரும் பச்சைக் கம்பளத்தில்
விருந்துண்டன ஆநிரைக் கூட்டம்.

அதில் அப்போதுதான் பிறந்திருந்த
பச்சிளங் கன்றொன்று
துள்ளிக் குதித்தாடிய அழகில்
கணம் எனை மறந்தேன்.
பட்டாம் பூச்சி என் முதத்தை
மொய்த்துப் பறந்தது
அறுகிவிட்ட சிட்டுகள் இரண்டு
சீழ்க்கையிட்டுப் பறந்தன
வானில் அம்பெனப் பறந்து வந்த
கொக்குக் கூட்டம்
ஆநிரையோடு பகிர்ந்துண்ண அமர்ந்தது
துள்ளிக் குதித்தது பச்சிளங்கன்று
என்னே சுதந்திர வாழ்க்கை இதுவென
இயற்கையில் கறைந்தேன்.

உலுக்கியது என்னை ஓங்கியதொரு குரல்
சனியன் கயித்த அறுத்துகிட்டு
பயித்த மேயப் போவுது
என்ற வசவு தொடர்ந்தது.
நடுகல்லில் பூட்டிய நீண்ட கயிறு தளர
விளை நிலத்தை நெருங்கிவிட்ட பசு
அடிபட்ட வேதனையில் அரற்றியது
நிலத்தில் விலக்கி நட்ட கருங்கற்கள்
விளையவில்லையே …
போட்டிக்கு நாணலும், தட்டையும்,
தருப்பைப் புல்லுமல்லவா மண்டுகிறது
தின்ன என் சுணை நாக்கே அறுபடுதே
பச்சையெல்லாம் பச்சையல்லடா முண்டமே
நிலமெங்கே, வரப்பெங்கே, 
மேச்சத் தரைதான் எங்கே ..
உனக்கும் சோறில்லை
எனக்கும் உணவில்லை.. என
ஓ..வென்றழுதது.
குற்ற உணர்ச்சி என் நெஞ்சைப் பிளந்தது
துள்ளிய என் மனம் துவண்டு படுத்தது

மாட்டுக்கு மூக்கணாங்கயிறு
நாய்க்கு சங்கிலி குதிரைக்குக் கடிவாளம்
குருவிக்குக் கூண்டு
இல்லை இல்லை
இவற்றுக்குச் சுதந்திரம் இல்லை
இயற்கையில் பிறந்து இயற்கையில் வளர்ந்து
செயற்கையால் இயற்கையை
ஆள்பவனாய்ப் பரிணமித்த
மனிதன்தான் சுதந்திரமானவனோ..
எனத் தொடர்ந்த என் எண்ண ஓட்டத்தை
மறித்தது ஒரு மனக்குரல்.
கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய்
என்றது அந்த செயற்கையின் சூத்திரம்.
இல்லையா..?!

மனதில் விசாரம் குடிகொண்ட வேளையில்
என்காதில் மோகனமாய்த் தொடங்கிய இசை
மூர்க்கமாய்த் தொடர்ந்தபோது
முத்தாய்ப்பாய்ச் சொன்ன இரு சொற்கள்
என் செவிப்பறை கிழித்தன ..
துமீ வித்யா  துமீ தர்மா.
புரிந்தது.. எல்லாம் புரிந்தது.

குதிரைக்குக் கடிவாளம் குதிரை பூட்டுவதில்லையே
மனிதனே கூட
துள்ளித் திரியும் கன்றுக்கு
மூக்கணாங்கயிறு பூட்டுவதில்லையே
ஆனால்.. குழவி ஒன்று கல்லில் இறங்குமுன்பே
சுடுகோலால் குறியிட்டுக் கருத்திருக்கும்
தொப்புள் கொடியாய் கழுத்தை சுற்றிய
சுறுக்குக் கயிறு கண்ணில் தோன்றி மறைந்தது
பெற்றெடுத்து .. கிருஷ்ணன் என்றும்
கண்ணன் என்றும் கருப்பன் என்றும் பெயர்சூட்டுமுன்பே
அதற்குப் பெயர் சூட்டப் பட்டுவிட்டது
இன்ன சாதி இன்ன மதமென்று.

இதை மீறிய ஆய்ந்தறிதல் இல்லை
இதை மீறிய வாழ்நெறியும் இல்லை
இட்டபடி நட என
காலித் தராசை கையில் பிடித்து
சமன் காட்டித் திரிகிறது இந்திய நீதி

அடுத்தவன் மூக்கைத் தொடாத வரைதான்
உனக்குச் சுதந்திரம் என
மெத்தப் படித்தவர்கள் விளக்கம் சொல்கிறார்கள்.
இந்த மூக்கு இந்தியாவின் குறுக்கு நெடுக்காய்
நீண்டுகிடக்கிறதே .. கட்டிய கையைப் பிரிக்கமுடியாமல்
இதை என்ன செய்ய?

-          அனாமதேயன்.

குறிப்பு: எனக்குக் கவிதை எழுதத் தெரியவில்லை.. ஆனால் இதுபற்றி எழுதவேண்டும்போல் இருந்தது.  எனவே என் சமீபத்திய மனப் பதிவுகளைத் திரட்டி, என்னை வதைத்த வந்தே மாதரம்மற்றும் லவ் ஜிகாத் விசயத்தைக் கருவாக்கி ஒரு பெரும் சித்திரம் வரைந்துவிட்டேன்.  அதில் அவுட் ஆஃப் போக்கசில் வைக்க வேண்டியதையும், ஃபோக்கஸ் பண்ணவேண்டியதையும் படிப்பவரின் பார்வைக்கு விடுகிறேன்.

——————————

http://www.vinavu.com/2010/01/23/saturday-poems-15/