Language Selection

புதிய ஜனநாயகம் 2010

"ஆபரேசன் கிரீன் ஹண்ட்' (காட்டு வேட்டை) என்ற பெயரில் மாவோயிஸ்டு கட்சியையும், நக்சல்பாரி இயக்கத்தையும் நசுக்கி ஒழிக்கும் நோக்கத்துடன் இந்திய அரசு ஒரு உள்நாட்டுப் போரை அறிவித்திருக்கிறது. சட்டிஸ்கர், ஜார்கண்ட், ஒரிசா மாநிலங்களிலும் மகாராட்டிரம், ம.பி, ஆந்திர மாநிலங்களின் எல்லைப்புறங்களிலும் பரவியிருக்கும் தண்டகாரண்யா காடுகளிலிருந்தும் மாவோயிஸ்டு கொரில்லாக்களை ஒழித்துக்கட்டுவதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என்று அறிவித்திருக்கிறார், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்.

சுமார் ஒரு லட்சம் போலீசு மற்றும் துணை இராணுவப் படையினருடன் சல்வாஜுடும், ஹர்மத் வாகினி, நாகிரிக் சுரக்சா சமிதி, சன்லிட் சேனை முதலான அரசு ஆதரவு பெற்ற கூலிப் படைகளும் மாவோயிஸ்டுகளுக்கும் பழங்குடி மக்களுக்கும் எதிராகக் களத்தில் நிற்கின்றன. ""இராணுவம் நேரடியாகக் களத்தில் இறங்காது'' என்று கூறிக் கொண்டே சொந்த நாட்டின் மக்களுக்கு எதிராக, இந்த மண்ணின் பூர்வீகக் குடிகளுக்கு எதிராக ரூ. 7,300 கோடி நிதி ஒதுக்கி, இராணுவ ஹெலிகாப்டர்கள் துணையுடன், இராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் இந்தப் போர் நடத்தப்படுகிறது. சிப்பாய்களுக்கு கொரில்லா எதிர்ப்பு இராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆயுதப் படைகளின் அட்டூழியங்களையும் அத்துமீறல்களையும் வெளிக்கொண்டு வரும் பத்திரிக்கையாளர்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் நசுக்குவதற்கென்றே எல்லா வகையான ஆள் தூக்கிக் கருப்புச் சட்டங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. ""இலங்கை இராணுவத்தின் இறுதிப்போர்தான் எங்களுக்கு வழிகாட்டி'' என்று வக்கிரமாகப் பிரகடனம் செய்திருக்கிறார், சட்டிஸ்கர் மாநில டி.ஜி.பி விசுவரஞ்சன்.

 

இந்தப் போர்வெறிக்குள் புதைந்திருக்கும் இரகசியம் இதுதான்: தண்டகாரண்யாவின் காடுகளிலும் மலைகளிலும் அற்புதமான அரிய கனிமவளங்கள் புதைந்து கிடக்கின்றன. உயர்தரமான இரும்புத் தாது, செம்பு, தங்கம், வைரம், அலுமினியத்தின் மூலப்பொருளான பாக்சைட், சிமெண்டு உற்பத்திக்குத் தேவையான சுண்ணாம்புக் கற்கள், நிலக்கரி, பளிங்கு, கிரானைட், சிலிகா, குவார்ட்சைட் போன்ற 28 வகைக் கனி வளங்களும் காட்டுவளங்களும் நீர் வளமும் நிறைந்திருக்கின்றன. பன்னாட்டுக் கம்பெனிகளும், இந்தியத் தரகு முதலாளிகளும் இஷ்டம் போல இந்தப் புதையலை அள்ளிச் செல்ல முடியாமல் குறுக்கே நிற்கிறார்கள் மாவோயிஸ்டு கொரில்லாக்கள். சிதம்பரத்தின் கொலைவெறிக்குக் காரணம் இதுதான்!

 

ஆகவே, இந்தப் போர் சாராம்சத்தில் மூன்று நோக்கங்களைக் கொண்டிருக்கிறது. காட்டுவளமும் கனிமவளமும் செறிந்த அந்தப் பிராந்தியம் முழுவதிலிருந்தும் பழங்குடி மக்களை விரட்டி விட்டு, அவற்றைப் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தரகு முதலாளிகளுக்குத் தாரை வார்க்கும் வகையிலான ஒப்பந்தங்களைப் போட்டிருக்கும் மத்தியமாநில அரசுகள், அதற்குத் தடையாக இருக்கும் மாவோயிஸ்டு இயக்கத்தை ஒழித்துக் கட்ட விரும்புகின்றன. இது, இந்திய அரசின் உடனடி இலக்காக இருக்கின்ற அதேநேரத்தில், நாடு முழுவதிலும் உள்ள நக்சல்பாரி இயக்கத்தை நசுக்குவதே ஆபரேசன் கிரீன் ஹண்டின் அடிப்படை நோக்கமாக இருக்கிறது. கம்யூனிசப் புரட்சியாளர்களை ஒடுக்குவதென்பது எப்போதுமே ஆளும் வர்க்கத்தின் கொள்கையாக இருந்து வருகிறது என்ற போதிலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆபரேசன் கிரீன் ஹண்ட் என்பதை அத்தகைய வழமையான ஆளும் வர்க்க ஒடுக்குமுறையின் அங்கமாக மட்டும் புரிந்து கொள்ளக் கூடாது.

 

சோட்டா நாகபுரி, தண்ட காரண்யாவின் காடுகள், மலைகள், ஆறுகள் அனைத்தையும் அம்மண்ணின் மைந்தர்களான பழங்குடி மக்களுக்குத் தெரியாமலேயே அறுத்துக் கூறு கட்டி விற்றுவிட்டது அரசு. வேதாந்தா (ஸ்டெரிலைட் கம்பெனியின் தாய் நிறுவனம்) என்ற பிரிட்டிஷ் பன்னாட்டு நிறுவனத்துக்கு ஒரிசா அரசு 40 கி.மீ நீளமுள்ள நியாம்கிரி மலையைத் தாரை வார்த்திருக்கிறது. பழங்குடி மக்களின் கிராமங்களும் விட்டுவைக்கப்படவில்லை. அவர்களுக்கே தெரியாமல், அவர்களது கிராமங்கள் தரகு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு எழுதிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சின்னஞ்சிறிய ஜார்கண்ட் மாநிலத்தில் மட்டும் 1,10,000 ஏக்கர் நிலம் இப்படி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கைமாறி விட்டது. இங்கிருந்து மட்டும் 10 இலட்சம் பழங்குடி மக்களும் விவசாயிகளும் வெளியேற்றப்பட இருக்கிறார்கள்.

 

பழங்குடி மக்களோ வெளியேற மறுக்கிறார்கள். போஸ்கோ, டாடா, வேதாந்தா, மிட்டல்,ஸ்டெர்லைட், ரிலையன்ஸ், ஜின்டால் என ஒவ்வொரு நிறுவனத்துக்கு எதிராகவும் ஆங்காங்கே உள்ள மக்கள் போராடுகிறார்கள். அலுமினிய உருக்காலையை வேதாந்தா நிறுவனம் கட்டி முடித்து விட்டது. ஆனால், பாக்சைட் மலையை நெருங்கமுடியவில்லை. கோபால்பூரில் டாடாவின் இரும்பாலை தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது. ஜார்கண்ட் மாநிலத்தில் சுரங்கம் தோண்டி தங்கமும் பிளாட்டினமும் எடுக்க வந்த ஜின்டால் நிறுவனம் அங்கே நுழையவே முடியவில்லை. இவையெல்லாம் மாவோயிஸ்டு ஆயுதக் குழுக்கள் நடத்திய தாக்குதல்கள் அல்ல; தங்கள் மண்ணைப் பறிக்கும் மறுகாலனியாக்கத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துள்ள மக்களின் போராட்டங்கள். எனவே, மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் தொடுக்கப்பட்டிருக்கும் இந்தப் போர் உண்மையில் மக்களுக்கு எதிரான போர்!

 

""நமது நாட்டில் இயற்கை வளங்கள் நிறைந்துள்ள பகுதிகளில் இடதுசாரித் தீவிரவாதம் தொடர்ந்து வளருமானால், அது முதலீட்டுச் சூழலைப் பெரிதும் பாதிக்கும்'' என்று இந்தப் போருக்கான காரணத்தை நாடாளுமன்றத்தில் பச்சையாகப் பேசியிருக்கிறார், மன்மோகன் சிங். தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் பகற்கொள்ளையைப் பாதிக்கும் விதத்தில் யார் போராடினாலும், அவர்களுக்கு எதிராக அரசு போர் தொடுக்கும் என்பதே மன்மோகன் சிங் கூறும் செய்தி. இந்தப் போர், மாவோயிஸ்டுகளுக்கு எதிரானபோர் மட்டுமல்ல, இது மக்களுக்கு எதிரான போர்.

 

மறுகாலனியாதிக்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் கூர்முனையாக இருக்கும் நக்சல்பாரி இயக்கத்தைக் குறிவைத்து அழிப்பதன் மூலம்தான், உடனடியாகவும் நீண்டகால நோக்கிலும் அரசியல்ரீதியில் தன்னைத் தற்காத்துக் கொள்ள இயலும் என்பதை ஆளும் வர்க்கம் அறிந்தே இருக்கிறது. அதன் விளைவுதான் ""ஆபரேசன் கிரீன் ஹண்ட்''. இதற்காகத்தான் இந்திய இராணுவமும் போலீசும் அங்கே இறக்கப்பட்டிருக்கின்றன என்பது ஊரறிந்த இரகசியமாகி விட்டது.

 

இது தண்டகாரண்யாவுடன் முடிவடைகின்ற வேட்டை அல்ல. வெளியேற்றப்படுவதும் உரிமை பறிக்கப்படுவதும் பழங்குடி மக்கள் மட்டுமல்ல. பன்னாட்டு மீன்பிடி நிறுவனங்களுக்காக மீனவர்களை அவர்களுக்குச் செõந்தமான கடலிலிருந்து விரட்டும் சதி, பாரம்பரிய விவசாய அறிவையும் மரபையும் கிரிமினல் குற்றமாக்கும் சட்டம், சிறப்புப்பொருளாதார மண்டலங்களுக்காக நடத்தப்படும் விவசாயிகளின் வெளியேற்றங்கள், விலை நிர்ணயம் என்ற பெயரில் கரும்பு விவசாயிகளின் கழுத்தில் மாட்டப்பட்டிருக்கும் சுருக்கு.. எனப் பல வடிவங்களில், பல்வேறு தரப்பு மக்கள் மீதும் தீவிரமடைந்து வருகிறது மறுகாலனியாதிக்கத் தாக்குதல்.

 

இந்த மறுகாலனியாக்க கொள்கைகள்அனைத்திலும் எல்லா ஓட்டுக் கட்சிகளும் கருத்து வேறுபாடின்றி ஓரணியில் நிற்கின்றன. கொள்ளையின் ஆதாயங்களைப் பங்கு போட்டுக் கொள்வதற்கு மட்டுமே, அவை தமக்குள் மோதிக் கொள்கின்றன.

 

சீரழிந்து நாறிக்கொண்டிருக்கும் இந்த அரசியலுக்கு வெளியே மக்கள் நலனுக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்களாக, தன்னலனைத் துறந்தவர்களாக, இலஞ்சத்தால் விலைக்கு வாங்க முடியாதவர்களாக, பட்டங்களுக்கும் பதவிகளுக்கும் பல்லிளிக்காதவர்களாக, இழப்புக்கும் தியாகத்துக்கும் அஞ்சாதவர்களாக நாடெங்கும் அரசியல் களத்தில் நிற்பவர்கள் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் மட்டும்தான். ஓட்டுக்கட்சிகள் மீது மக்கள் மென்மேலும் நம்பிக்கை இழந்து வரும் சூழலில், மறுகாலனியாக்கத் தாக்குதல்களின் தீவிரம், மக்களை நக்சல்பாரிப் புரட்சியாளர்களை நோக்கி நகர்த்துகிறது.

 

அடுக்கடுக்காகத் தொடுக்கப்படும் மறுகாலனியாக்கத் தாக்குதல்களால் வாழ்க்கை பறிக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, எதிர்த்துக்கேட்டால் ஒடுக்கப்பட்டு, கிடிக்கப்பட்ட வெடிமருந்தாக வெடிக்கக் காத்திருக்கிறார்கள் மக்கள். இதை அரசு அறிந்தே இருக்கிறது. இந்தவெடியின் திரியும் அதனைப் பற்றவைக்கும் பொறியும் நக்சல்பாரிகள் தான் என்ற உண்மையும் அரசுக்குத் தெரிந்தே இருக்கிறது. எனவேதான், திரியைக் கிள்ளுவதில் கவனம் செலுத்துகிறது. மறுகாலனியாக்க எதிர்ப்பின் கூர்முனையை நக்சல்பாரி இயக்கத்தை முறிக்க முயல்கிறது. ""ஆபரேசன் கிரீன் ஹண்ட்'' என்ற நக்சல் வேட்டையின் நோக்கம் இதுதான்.

 

நக்சல் வேட்டை என்ற பெயரில் நடத்தப்படும் நரவேட்டைப் போரைத் தடுத்து நிறுத்தப் போராடுவோம்!

பன்னாட்டுக் கம்பெனிகள், தரகு முதலாளிகளுடன் போடப்பட்டிருக்கும் அனைத்து தேசத்துரேõக ஒப்பந்தங்களையும் கிழித்தெறிவோம்!

போராடும் பழங்குடி மக்களுக்குத் துணை நிற்போம்! மறுகாலனியாக்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்!