Language Selection

புதிய ஜனநாயகம் 2010

இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில், முன்னெப்போதும் கண்டிராத ""இயற்கைப் பெரும் பேரழிவுகளை'' உலகம் கண்டது. கொதிக்கும் கோடைக்காலங்கள், அதிபயங்கர சூறாவளிகளும் புயல்களும், மிக மோசமான வறட்சிகளும் கொட்டித் தீர்த்த பேய்மழைகளும் வெள்ளப் பெருக்குகளும், பயபீதியும் நாசமும் விளைவித்த பெருங்கடற் சீற்றங்கள் கடல்மட்ட உயர்வுகள், இவற்றோடு பல நாடுகளின் விவசாயத்தின் தலைகுப்புற வீழ்ச்சிகள். இத்தகைய நிகழ்வுகள் உலகின் ஏதோ சில பகுதிகளில் மட்டும், எப்போதோ ஒரு சிலதடவைகள், தன்னியல்பாக வரக்கூடிய இயற்கைப் பேரழிவுகள் என்று இனியும் கருதிவிட முடியாது.

இத்தகைய பேரழிவுகள் மிகப் பெரும்பாலும் உலகின் தட்பவெப்பநிலை மாற்றங்களால் தூண்டிவிடப்பட்டவை என்று அறிவியல்பூர்வமாக இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

 

சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த வான்கோள் களில் பூமி மட்டுமே வாழும் வான்கோளாக அறியப்பட்டுள்ளது. அதாவது தாவரங்களும் விலங்குகளும் உயிரினங்களாக வாழும் இயற்கைச் சூழல் வாய்க்கப் பெற்ற வான்கோள் பூமி மட்டுமே. வட, தென் துருவங்களில் உள்ள பனிப்படலங்கள், பூமியின் சுழற்சி, புவிஈர்ப்பு சக்தி, பூமியைச் சுற்றியுள்ள வளி மண்டலம், அதில் நிலவும் காற்றழுத்த மாறுபாடுகள் போன்ற காரணங்களால் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஓரளவு சீரான தட்பவெப்ப நிலை ஏற்பட்டு, உயிரினங்கள் தோன்றவும், நீடிக்கவும் ஏற்றதான இயற்கைச் சூழல் நிலவி வருகிறது.

 

ஆனால், கடந்த சில நூற்றாண்டுகளாகப் பெருகிவரும் எரிசக்தி இயந்திரங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைகள், மோட்டார் வாகனங்கள் ஆகியவை வெளியேற்றி வரும் கரிம வாயுக்களால் உலகம்மேலும் மேலும் வெப்பமடைந்து கொண்டே வந்து, இதுவரை மனித இன வரலாறு காணாதவாறு இப்பூவுலகையே பேரழிவின் விளிம்புக்குத் தள்ளும் பேராபத்தை விளைவித்திருக்கிறது.

 

இதுனால், வட,தென் துருவங்களில் உள்ள பனிமலைகள் பிளந்து பாளங்களாகி, உருகும் பனி ஆறுகளாக மிதக்கத் தொடங்கிவிட்டன. அதனால் கடல் மட்டம் உயர்ந்து, பசிபிக் மாகடலில் பல தீவுத் திட்டுகள் மூழ்கிப் போய்விட்டன. இப்படியே போனால் நமது நாட்டுக்குத் தென்மேற்கில் உள்ள மாலத்தீவுக் கூட்டங்களும், நமது நாட்டிலேயே உள்ள சுந்தரவனக் காடுகளும் கடலில் மூழ்கிப் போகும்.

 

எப்போதாவது நிகழக்கூடியதாக இருந்த தீயாய் எரிக்கும் எல்நினோ என்ற கடும் வறட்சி நிகழ்வுகள் கடந்த ஒன்பது ஆண்டுகளில் மூன்று முறையும் நீண்ட நெடியதாகவும் வந்துவிட்டது. அதேசமயம் உலகின் வேறு பல நாடுகள் வெள்ளக் காடுகளாகி, பல பத்து இலட்சம் மக்கள் வீடற்றவர்களாகவும் அகதிகளாகவும் வீசியெறியப்படுகின்றனர். நுண்ணுயிரிகள் கிருமிகள் பலவும் (நீடித்த வெப்பநிலை பருவகாலத்தில்) பல்கிப் பெருகிப் புதுப்புது கொள்ளை நோய்களைப் பரப்பி, தம் பங்கிற்கு ஏராளமான உயிர்களைப் பலிவாங்குகின்றன.

 

பனிமலைகள் உருகுவது பெரும் தொடர் நிகழ்வுப்போக்குகளைத் தொடங்கி நடத்துகிறது. பனிப் படலங்களின் பரப்பு தொடர்ந்து குறைவதாலும், கடல்பரப்பு அதிகரிப்பதாலும், பூமியின் மீது விழும் சூரிய வெப்பத்தைத் திருப்பி அனுப்பும் அளவும் குறைந்து, புவி வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. துருவப் பகுதிகளின் நிரந்தரப் பனிப் பாளங்களில் பல கோடி டன் அளவுக்கு கரிம வாயுக்களான கரியமில வாயு, மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு, கந்தகடைஆக்சைடு, குளோரோ ஃபுளோரோ கார்பன் ஆகிய பசுமைக் குடில் வாயுக்கள் புதைந்து கிடக்கின்றன.

 

பனிப் பாளங்கள் உருகும்போது அவற்றிலிருந்து ஏராளமான பசுமைக் குடில் வாயுக்கள் வெளிப்பட்டு, வளி மண்டலத்தில் ஏற்கெனவே உள்ள பசுமைக் குடில் வாயுக்களின் அடுக்கை மேலும் பருமனாக்கி, பசுமைக்குடில் பாதிப்பை மேலும் கூடுதலாக்கி விடும். சூரியனிலிருந்து வரும் வெப்பத்தை ஓசோன் மண்டலத்தைப் போல வடிகட்டுவது அல்லது தடுப்பதற்கு மாறாக, அதை இந்த கரிம வாயுக்கள் உள்வாங்கிக் கொண்டு வளிமண்டலத்தையும் புவியையும் மேலும் வெப்பமடையச் செய்வதைத்தான் பசுமைக் குடில் பாதிப்பு என்கிறார்கள்.

 

உலகளாவிய வெப்பநிலை மேலும் 3 செல்சியஸ் டிகிரி உயர்ந்தால், உலகிலுள்ள காடுகள் அழிந்து சிதைந்து கரிமவாயுக்களைக் கக்கத் தொடங்கி விடும். அத்தகைய நிலைமை ஏற்பட்டால், 100 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி எப்படி இருந்ததோ, இன்று வெள்ளிக்கிரகம் எப்படி இருக்கிறதோ, அப்படி பூமி எங்கும் வெப்பமும் புகை மண்டலமும் நீராவியுமாகவே இருக்கும். மனிதர்களோடு எல்லா உயிரினங்களும் உயிர்வாழ்வதே சாத்தியமற்றதாகி விடும்.

 

இதுவெறும் அனுமானம் அல்ல. பருவகால மாற்றம் பற்றிய நாடுகளுக்கிடையிலான குழுவின் தலைவராகிய ஆர்.கே. பச்சௌரி அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் பின்வருமாறு கூறுகிறார்: தற்போதைய அளவு மட்டத்தில் தேசங்கள் பசுமைக்குடில் கரிம வாயுக்களை வெளியிடுமானால், 2015ஆம் ஆண்டே உலகின் சராசரி வெப்ப அளவு பொறுத்துக் கொள்ள முடியாத அதன் விளிம்பு முனையைத் தாண்டி விடும். பிறகு திரும்பவும் மாற்றமுடியாத பருவகால மாற்றங்களை ஏற்படுத்தி விடும்.

 

இப்பூவுலகைப் பேரழிவின் விளிம்பிற்குத் தள்ளும் அளவிற்கு புவியை வெப்பமடையச் செய்ததற்கு யார் யார்காரணமாக இருந்திருக்கிறார்கள்? பேரழிவு என்ற நிலையிலிருந்து இப்பூவுலகைக் காப்பதற்கான முயற்சியில் யார், யார் ஈடுபட்டிருக்கிறார்கள்? அதற்குத் தடையாக யார் யார் நிற்கிறார்கள்? புவி வெப்பமடைவதைத் தடுப்பதற்கான அறிவியல்பூர்வமான ஆக்கப்பூர்வமான வழிவகைகள் தாம் என்னென்ன? இந்தக் கேள்விகளுக்கான விடைகள் மட்டும் தொடக்கப்பள்ளி மாணவர் முதல் கற்றுத் தேர்ந்த அறிவுஜீவிகளில் பலருக்கும் தெரியவில்லை. உலகின் எல்லா நாடுகளும் தேசங்களும் மோட்டார் வாகனங்களும், குளிர்பதனப் பெட்டிகளும், தொழிற்சலைகளில் உற்பத்தியாகும் பொருட்களைப் பாவிக்கும் எல்லா மனிதர்களும் புவி வெப்பமடைவதற்குக் காரணமாக இருக்கிறார்கள்; வீட்டுக்கொரு மரம் வளர்ப்பது முதல் போக்குவரத்துக்கு மிதிவண்டிகளைப் பாவிப்பது வரையிலான தனிமனித முயற்சிகள் மூலம் புவி வெப்பமடைவதைத் தடுத்துவிட முடியும் என்று பாமரத்தனமான பிரச்சாரங்களில் மக்கள் மூழ்கடிக்கப்படுகின்றனர்.

 

நமது நாட்டிலுள்ள இந்தியா டுடே செய்தி ஊடகம் தான் முதன்மையான அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய ஆதரவு நிலை கொண்டது. உலகிலேயே மிக அதிக அளவு கரிம வாயுக்களை வெளியேற்றிப் புவிவெப்பமடையச் செய்யும் அமெரிக்காதான், புவி வெப்பமடைவதைத் தடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக நிற்கிறது என்பதற்காக, அமெரிக்காதான் இப்பூவுலகின் முதன்மையான எதிரி என்று அடையாளங்காட்டுகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா, பிரான்சு, ஜெர்மனி, இங்கிலாந்து, ருசியா, சௌதி அரேபியா, இத்தாலி, சீனா, இந்தியா ஆகிய 12 நாடுகளை, உலகின் மிக மோசமான கொடூரன்கள் என்று அது வரிசைப்படுத்தியிருக்கிறது.

 

உலக மக்கட் தொகையில் 4.73 சதவீதத்தைக் கொண்ட அமெரிக்க வல்லரசு, உலகளாவிய அளவில் 26 சதவீத கார்பன்டைஆக்சைடையும் 20 சதவீத மீதேன் வாயுவையும் நச்சுக் கழிவாக வெளியேற்றி முதலிடம் வகிக்கிறது. பிற ஐரோப்பிய நாடுகளும் ரசியாவும் அதற்கடுத்த நிலையில் உள்ளன. உலக மக்கட் தொகையில் 24 சதவீதத்தைக் கொண்ட தொழில் வளர்ச்சியடைந்த ஏகாதிபத்திய நாடுகள் ஏறத்தாழ 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட உற்பத்திப் பொருட்களைப் பாவிக்கின்றன. மொத்த எரிசக்தியில் முக்கால் பங்கை விழுங்கும் இந்நாடுகளிலிருந்து தான் 75 சதவீத கார்பன்டைஆக்சைடு வெளியாகிறது. அதேசமயம், ஏழை நாடுகள் கரிம வாயுக்களை வெளியேற்றுவதில் கடைசி வரிசையில்தான் இருக்கின்றன.

 

கரிம வாயுக்களை வெளியேற்றுவதையும், புவி வெப்பமடைவதையும் தடுப்பதற்காக 1992 முதல் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தட்பவெப்ப நிலை மாற்றம் பற்றிய மாநாட்டுக் கட்டமைப்பு சார்பாக உலகின் பல்வேறு நகரங்களில் பதினைந்துக்கும் மேற்பட்ட உலகநாடுகளின் உயர்மட்ட கருத்தரங்குகளும் மாநாடுகளும் நடந்திருக்கின்றன.

 

பொதுவான, ஆனால் வெவ்வேறான பொறுப்புகள் கடமைகளை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கையை சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஒப்பந்தத்தை 1992இல் தட்பவெப்ப நிலை பற்றிய ஐ.நா. மன்றத்தின் கட்டமைப்பு நிறைவேற்றியது. புவி தட்பவெப்ப நிலை சீர்குலைந்து போவதற்கான வரலாற்று வழிக் காரணகர்த்தாக்களாக உள்ள முன்னேறிய தொழில்மயமான நாடுகள்தாம் கரிம வாயுக்கள் வெளியேற்றுவதைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக அந்நாடுகள் தமது பொருளுற்பத்தி மற்றும் நுகர்வுமுறைகளை மிகவும் தீவிரமான வேகத்தில் மாற்றிக் கொள்ளவேண்டும். வளரும் நாடுகள் தட்பவெப்ப நிலைக்குச் சாதகமானதாகத் தமது வளர்ச்சிப் பாதையை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். ஏழை நாடுகள் வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியிருப்பதால், சீரான உலக தட்பவெப்ப நிலையை நிலைநாட்டுவதற்கான தமது பங்கை ஆற்றுவதற்கு வளர்ந்த நாடுகள் தேவையான தொழில்நுட்பங்களும் நிதி உதவிகளும் செய்தாக வேண்டும். இவை சர்வதேச சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தாலும், கடந்த 18 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரவே இல்லை; வெறும் பேச்சாகத்தான் இருக்கிறது.

 

1997ஆம் ஆண்டு ஜப்பானின் கியோட்டோ நகரில் நிறைவேற்றப்பட்ட கியோட்டோ உடன்படிக்கையின்படி, 1990 ஆண்டு தாம் வெளியேற்றிய கரிம வாயுக்களின் அளவைவிட 5 சதவீத அளவுக்கு வளரும் நாடுகள் 2005-2012 ஆகிய ஏழாண்டுகளில் குறைத்துக் கொள்ளவேண்டும்; தட்பவெப்ப நிலையில் பாதகம் ஏற்படுத்துவதை வளரும் நாடுகள் தவிர்ப்பதற்கு வளர்ந்த நாடுகள் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவி செய்ய வேண்டும்; இவற்றோடு ஐரோப்பிய சமூகம் மற்றும் 37 வளர்ந்த தொழில்மயமான நாடுகளும் குறைத்துக்கொள்ள வேண்டிய கரிமவாயுக்கள் வெளியேற்ற அளவையும் கியோட்டோ உடன்படிக்கை சட்டபூர்வமாக வலியுறுத்தியது. உலகின் பெரும்பாலான நாடுகள் முதற்கட்ட இலக்கை நிறைவேற்றாதது மட்டுமல்ல, கீழே தள்ளிய குதிரை குழியையும் பறித்ததைப் போல, 1992இல் நடந்த முதல் மாநாட்டிற்குப் பிறகு, கடந்த 17 ஆண்டுகளில் கரிம வாயுக்கள் வெளியேற்றும் அளவை 30 சதவீதம் அதிகரித்திருக்கின்றன.

 

இப்பூவுலகின் முதன்மை எதிரியான அமெரிக்காவோ, கியோட்டோ உடன்படிக்கையை இன்னமும் ஏற்க மறுப்பதோடு, அதற்குக் குழிபறிக்கும் வேலையிலும் தானே முன் நிற்கிறது. கறுப்பினத் தலைவர் பாரக் ஒபாமா அமெரிக்க அதிபரானதை ""உலக சமுகமே'' கொண்டாடியது. ஆப்கானில் ஆக்கிரமிப்பு பயங்கரவாதப் போரைத் தொடர்வதற்கு மேலும் படை அனுப்பும் ஒபாமா, கியோட்டோ உடன்படிக்கையை நிராகரிப்பதிலும் உறுதியாக நிற்கிறார். கியோட்டோ உடன்படிக்கையின்படி 2012-2016 ஆகிய இரண்டாவது அமலாக்கக்கட்டத்தில் உலக நாடுகளின் கரிமவாயுக்கள் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் அளவை வரையறுப்பதற்காக நடந்த கோபன்ஹேகன் மாநாட்டில், அந்நோக்கம் நிறைவேறாமல் தடுத்ததில் முக்கிய பங்காற்றியவர் அமெரிக்காவின் பாரக் ஒபாமாதான். தன் பங்கிற்கு அமெரிக்கா, 2005ஆம் ஆண்டு தான் வெளியேற்றிய கரிம வாயுக்களின் கனஅளவில் 17 சதவீ தத்தை 2020இல் குறைத்துக் கொள்ளும் என்று ஒபாமா அறிவித்துள்ளார். இது 1990இல் அமெரிக்கா வெளியேற்றிய அளவில் வெறும் 4 சதவீதம்தான். இதுவும் கூட, ஏற்கெனவே கியோட்டோ உடன்படிக்கையை 95 0 என்ற விகிதத்தில் நிராகரித்த அமெரிக்க செனட்டால் ஏற்றுக்கொள்ளப்படாமல், நிராகரிக்கப்பட வாய்ப்புண்டு.

 

இந்தியாவை விடத் தலைக்கு 18 மடங்கு அதிகமாகக் கரிம வாயுக்களை வெளியேற்றும் அமெரிக்கா இவ்வாறு நடந்து கொள்வதற்கான காரணம் நேரானது எளிமையானது. தற்போதைய நிலை நீடித்திருப்பதற்காக ஆண்டுக்கு முன்னூறு மில்லியன் டாலர் செலவழிப்பதற்கு அமெரிக்க ஏகாதிபத்திய ஏகபோக முதலாளிகளின் கும்பல்கள் பலவும் தயாராக உள்ளன. இவற்றில் அமெரிக்காவின் 50 மாநிலங்களில் இருபத்திரண்டை ஆட்டிப்படைக்கும் நிலக்கரி முதலாளியக் கும்பல்கள், முன்னாள் அதிபர்களான புஷ் குடும்பத்துக்கு நெருக்கமான எரிசக்தி எண்ணெய் முதலாளியக் கும்பல்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் நெடுஞ்சாலை முதலாளியக் கும்பல்கள் அடங்கும். அமெரிக்கா மட்டுமல்ல, இப்படிப்பட்ட ஏகாதிபத்திய ஏகபோக முதலாளிகள்தாம் உலகின் தட்பவெப்ப நிலையையும் தலைவிதியையும் தீர்மானிக்கக்கூடியவர்களாக உள்ளார்கள்.

 

கியோட்டோ உடன்படிக்கையின் 2வது கட்ட அமலாக்கத்தை, உலக நாடுகளின் கரிமவாயு வெளியேற்ற இலக்கை தீர்மானிப்பதற்காக, 2009ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் நாள், கோபன்ஹேகன் மாநாட்டில் 192 நாடுகளின் பெருந்தலைகளும், அவர்களின் எடுபிடிகளும் கலந்து கொண்டனர். இம்மாநாடு ஒரு துன்பவியல் நகைச்சுவை நாடகமாகவே நடந்து முடிந்திருக்கிறது. அலுவல் நாட்களில் எல்லாம் கேளிக்கை, விருந்து, அரட்டை என்று போக்கிவிட்டு, இறுதிநாளில் அவசர அவசரமாக சில தீர்மானங்களை நிறைவேற்றும் நான்காம் தர சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்களின் கேலிக்கூத்துகளைப் போலவே கோபன்ஹேகன் மாநாடும் நடந்துள்ளது.

 

தாம் வாழும் உலகம் பேரழிவை எதிர்கொண்டிருந்தபோதும், தமது சொந்த நாட்டு ஏகாதிபத்திய ஏகபோக முதலாளியக் கும்பல்களின் கொள்ளை இலாப வெறிக்குத் துணை நிற்பது ஒன்றையே கருத்தில் வைத்து, அமெரிக்கஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஏழை நாடுகளின் கதறல்களுக்குச் சிறிதும் செவிமடுக்க மறுத்துவிட்டனர். அவர்கள் கியோட்டோ உடன்படிக்கையை கிழித்தெறிந்தார்கள். மாநாட்டின் நிகழ்ச்சி நிரல்கள் எல்லாம் தோல்வியில் முடிவுற்றபிறகு, ஏகாதிபத்திய மேல்நிலை வல்லரசு நாடுகள், இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய தமது நான்கு பெரும் தரகுமுதலாளிய நாடுகளோடு இரகசிய சதி உடன்படிக்கை போட்டுக் கொண்டு, புவி வெப்பமடைவதைத் தடுக்கும் இலக்கு உறுதி, சட்டபூர்வ உடன்படிக்கை எதனையும் நிறைவேற்றாமல், வெறுமனே அரசியல் கூட்டறிக்கையை நிறைவேற்றிவிட்டுக் கலைந்தனர்.

 

· ஆர்.கே.