Language Selection

புதிய ஜனநாயகம் 2010

பிரதமர் மன்மோகன் சிங் கடந்த அக்டோபர் மாதம் மும்பய் நகரில் நடந்த கூட்டமொன்றில், ""நமது கஷ்டகாலம் முடிவுக்கு வந்துவிட்டதாக'' அருள்வாக்கு செõன்னார். அவர் எந்த நேரத்தில் திருவாய் மலர்ந்தாரோ தெரியவில்லை, அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் நாடெங்கும் உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளியின் விலை தாறுமாறாக உயர்ந்து, பாமர மக்களை மயக்கம் போடவைத்தது.

கடந்த மூன்று மாதங்களாக அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே போகிறது. இது, கடந்த பத்தாண்டுகளில் இல்லாத விலை உயர்வு என முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களே அச்சப்படுமளவிற்கு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன.

 

ஒரு ரூபாய் அரிசியையும், 50 ரூபாய்க்கு அஞ்சறைப் பெட்டிச் சாமான்களையும் ரேஷனில் தருவதைக்காட்டி, விலைவாசி உயர்வுக்கு எதிராக மாபெரும் நடவடிக்கைகளை எடுத்துவிட்டதைப் போல தி.மு.க.அரசு காட்டிக் கொள்கிறது. அதே சமயம், அவரது கூட்டாளிகளோ இந்த விலை உயர்வை நியாயப்படுத்தும் திமிரோடு நடந்து வருகின்றனர். ""விலைவாசி உயர்ந்தால் அதன் பலன் விவசாயிகளுக்குத்தான் போய்ச் சேருகிறது'' எனத் திட்ட கமிசனின் துணைத் தலைவரும் மன்மோகன் சிங்கின் மனசாட்சியுமான மாண்டேக் சிங் அலுவாலியா பேசியிருக்கிறார். ""இந்த விலை உயர்வு எதிர்பாராத ஒன்றல்ல; இதனைக் கட்டுப்படுத்த அவசரகால நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியமும் இல்லை'' எனக் கூறி வருகிறார், நிதி அமைச்சகச் செயலர். ""ஐயா, இப்படியெல்லாம் பேசி மக்களின் கோபத்தைத் தூண்டிவிடாதீர்கள்'' என முதலாளித்துவப் பத்திரிகைகளே அறிவுரை செõல்லும் அளவிற்கு, ஆளும் கும்பலின் திமிர்த்தனம் கரைபுரண்டு ஓடுகிறது.

 

கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு, அத்தியாவசிய மளிகைப் பொருட்கள்காய்கறிகளின் விலை உயர்வுக்குக் காரணம் என்ன? என்று கேட்டால், அவர்கள் கீறல் விழுந்த ரெக்கார்டைப் போல ஒரே பதிலைத்தான் திரும்பத் திரும்பச் செõல்லி வருகிறார்கள். ""இந்தியர்களின் உணவுத் தேவை அதிகரித்து வருகிறது; அந்தளவிற்கு உணவுப் பயிர் உற்பத்தி அதிகரிக்கவில்லை'' என்பதுதான் அந்தப் பதில்.

 

ஏதோ 100 கோடி இந்தியர்களும் தின்று கொழுப்பதைப் போல ஆளும் கும்பல் கூறிவருவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும். உலகிலுள்ள பல்வேறு நாடுகளின் அரசுகள் பட்டினிக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றி அறிக்கை தயாரித்துள்ள ஐ.நா.மன்றத்தின் உணவு முகாமை, அதில், ""இந்தியாவில் 3 கோடி பேர் உணவு கிடைக்காமல் தினந்தோறும் பட்டினி கிடப்பதாகவும், பட்டினிக்கு எதிரான நடவடிக்கைகள் எடுப்பதில் இந்தியா, எத்தியோப்பியாவைவிடப் பின்தங்கி இருக்கிறதென்றும்'' குறிப்பிட்டுள்ளது. இந்தப் பட்டினி பட்டாளம் ஒருபுறமிருக்க, இந்திய மக்களுள் ஏறத்தாழ 26 கோடிப்பேர் சத்தான உணவைப் பெறும் வசதியின்றி, வெந்ததைத் தின்று உயிர்வாழ்ந்து வருவது ஊரறிந்த உண்மை. விலைவாசி உயர்வுக்கு இந்தப் பட்டினிப் பட்டாளத்தின் மீதும் பழி போடுவது வக்கிரமானது.

 

""தேவைக்கும் வரத்துக்கும் இடையே இடைவெளி இருந்தால், விலைவாசி உயர்வது இயல்பு; ஆனால், தற்போதைய விலைவாசி உயர்வுக்கு இது முழுமையான காரணமாகத் தெரியவில்லை'' என ""பிசினஸ் லைன்'' ஆங்கில நாளிதழ் குறிப்பிடுகிறது. உணவுப் பொருள் உற்பத்தியில் பற்றாக்குறை நிலவுவது உண்மையான காரணம் இல்லையென்றால், மன்மோகன் சிங் யாரைப் பாதுகாக்க இந்தப் பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்?

 

விலைவாசி உயர்வு பற்றி ஆராய்ந்துள்ள நிதி அமைச்சகத்தின் நிலைக்குழு, ""சர்க்கரை விலை உயர்வுக்குக் கரும்புச் சாகுபடி பரப்பு குறைந்து போயிருப்பது காரணமல்ல; சர்க்கரை ஆலை அதிபர்களின் கூட்டுக் களவாணித்தனம் தான் காரணம்'' என உண்மையைப் போட்டு உடைத்துள்ளது. இது சர்க்கரைக்கு மட்டுமல்ல, அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய்உள்ளிட்ட மற்ற உணவுப் பொருட்களுக்கும் பொருந்தும்.

 

பருப்பு மற்றும் எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் நமது நாடு தன்னிறைவு அடையவில்லை. கடந்த பத்தாண்டுகளாக்கும் மேலாகவே உள்நாட்டுத் தேவையை ஈடுகட்ட இறக்குமதியைச் சார்ந்திருக்கும் கொள்கையைத்தான் மைய அரசு கடைப்பிடித்து வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை பொய்த்துப் போனதால், அரிசி உற்பத்திகூட எதிர்பார்த்த அளவு இருக்காது என்பதும் உறுதியாகிவிட்டது. ""எதிர்பார்த்த அளவு உற்பத்தியில்லை என்பது பதுக்கலைத் தூண்டி விட்டிருப்பதாக''ப் போகிறபோக்கில் முதலாளித்துவப் பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன.

 

தொழிலாளர்களின் போராட்டத்தால் தொழிற்சாலைகளில் உற்பத்தி முடங்கிப் போய்விட்டால், அவர்கள் மீது அத்தியாவசிய பணிப் பாதுகாப்புச் சட்டத்தைப் பாய்ச்சத் தயங்காத அரசு, அத்தியாவசிய உணவுப்பொருள் சட்டத்தின் கீழ் இதுவரை எந்தவொரு பதுக்கல் வியாபாரியையும் கைது செய்யவில்லை. மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளைக் கட்டுப்படுத்தி வரும் சரத் பவார் உணவு அமைச்சராக இருக்கும்பொழுது, சர்க்கரை ஆலை முதலாளிகள் மீது இந்தச் சட்டம் பாய்ந்துவிடுமா?

 

இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் இரண்டு கோடி டன் அரிசியும், 2.6 கோடி டன் கோதுமையும் கையிருப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இக்கையிருப்பில் இருந்து தேவையான அளவு அரிசியை எடுத்து ரேஷன் கடைகளின் மூலம் விநியோகித்திருந்தால், வெளிச்சந்தையில் அரிசியின் விலை தாறுமாறாக உயர்ந்திருப்பதைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும். இதற்குத் தயாராக இல்லாத மன்மோகன் சிங் அரசு, இந்த விலை உயர்வைப் பயன்படுத்திக் கொண்டு கொள்ளை இலாபம் அடிக்கத் திட்டம் போட்டு வருகிறது. ஒரு குவிண்டால் கோதுமையை ஆயிரம் ரூபாய்க்கு விவசாயிகளிடமிருந்து வாங்கியுள்ள மைய அரசு, ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,550/ என விலை நிர்ணயம் செய்து, 15 இலட்சம் டன் கோதுமையைத் தனியார் வியாபாரிகளிடம் விற்பதற்கு பேரம் நடத்தி வருகிறது. இதன்மூலம், மைய அரசும், பெரு வியாபாரிகளும் நல்ல இலாபம் பார்ப்பதற்கு உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது.

 

மேலும், பற்றாக்குறையை ஈடு செய்வது என்ற பெயரில் தனியார் வியாபாரிகள் வெளிநாடுகளில் இருந்து அரிசி, பருப்பு வகைகள், சர்க்கரையைத் தாராளமாக இறக்குமதி செய்து கொள்வதற்கு வசதியாக, அப்பொருள்களுக்கு இறக்குமதி வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த இறக்குமதியினால் விலைவாசி உயர்வு கட்டுக்குள் வரவில்லை என்பது தெரிந்த பிறகும்கூட, வரிச் சலுகையினை ரத்து செய்ய மறுக்கிறார், மன்மோகன் சிங். இதற்கும் மேலாக, சர்க்கரை மீதான இணையதள வர்த்தகத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, டிசம்பர் 31ஆம் தேதியன்று நீக்கிவிடவும் ஒப்புக்கொண்டிருக்கிறார். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதைவிட, அதன்மூலம் பெருவியாபாரிகளின் கல்லாப்பெட்டியை நிரப்புவது பற்றித்தான் மன்மோகன் சிங் அக்கறை கொள்கிறார்.

 

உண்மையைச் சொன்னால், பொருளாதார நெருக்கடியில் இருந்து தரகு முதலாளிகளைக் காப்பாற்ற, மன் மோகன் சிங் அவர்களுக்கு அளித்துவரும் சலுகைகள்தான் பணவீக்கம் அதிகரித்திருப்பதற்கும், அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துகொண்டே போவதற்கும் காரணமாக அமைந்துள்ளது.

 

தனியார் நுகர்வை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளத் திட்டம் போட்ட மன்மோகன் சிங், இதற்காக கடந்த ஆண்டு அக்டோபருக்குப் பின் ஏறத்தாழ 1,86,000 கோடி ரூபாயை வங்கிகளில் இருந்து எடுத்து, சந்தையில் புழங்கவிட்டார். அதற்கு முன்னதாக மைய அரசு ஊழியர்களுக்கு ஆறாவது ஊதிய கமிசன் பரிந்துரையின்படி சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது. உற்பத்தி தேங்கிப் போயிருக்கும் சமயத்தில், சந்தையில் அதிகப்படியான பணம் புழக்கத்தில் இருந்து வருவதுதான் பண வீக்கத்தையும், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளையும் உயர்த்தியிருப்பதாக முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்கள்கூட ஒப்புக் கொள்கின்றனர்.

 

இதனைக் கட்டுப்படுத்த சந்தையில் இருக்கும் அதிகப் பணப்புழக்கத்தைத் திரும்பப் பெறுவதோடு, வங்கிகள் கடன் கொடுப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும்; வட்டி வீதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. இப்படிச் செய்தால், 7 சதவீதப் பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியாமல் போகும் எனத் தரகு முதலாளிகள் பயமுறுத்தி வருகிறார்கள். அடித்தட்டு மக்கள் பட்டினி கிடக்க நேர்ந்தாலும், தங்களின் கல்லாப்பெட்டி நிரம்புவதில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது என்பதுதான் அவர்களின் விருப்பம்.

 

இதுவொருபுறமிருக்க, விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஒப்பந்த விவசாயச் சட்டத்தை எளிமையாக்குவது; உணவுப் பொருள் மீதான இணைய தள சூதாட்ட வர்த்தகத்தைத் தாராளமயமாக்குவது; அத்தியாவசிய உணவுப்பொருள் பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்துவது; உணவுப்பொருள் கொள்முதல்விற்பனை நடவடிக்கைகளில் இடைத் தரகர்களை ஒழித்துக் கட்டும் விதமாக, சில்லரை விற்பனையில் தாராளமயத்தைப் புகுத்துவது எனத்தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஆதரவான ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் ொளுத்தச் சொல்லும் கதைதான் இது.

 

இந்த ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தினால், அடித்தட்டு மக்களுக்குத் தற்பொழுது இருந்து வரும் அரைகுறை உணவுப் பாதுகாப்புகூட நாசமாகிவிடும். இந்திய விவசாயிகளையும், உணவுப் பாதுகாப்பையும் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றால், ""விவசாய விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய விலை கிடைப்பதை உறுதி செய்; பதுக்கல் வியாபாரிகளைக் கைது செய்; இந்திய மக்கள் அனைவரையும் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் கொண்டுவருவதோடு, அத்தியாவசிய உணவுப் பொருட்களை ரேஷன் கடைகளின் மூலம் விநியோகிப்பதை உத்தரவாதப்படுத்து'' என்ற முழக்கங்களை முன்வைத்து உழைக்கும் மக்கள் போராட வேண்டிய தருணமிது.

 

· குப்பன்