வடசென்னை அனல் மின்நிலையம் (NCTPS), 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழுள்ள அரசுத்துறை நிறுவனம். நாளொன்றுக்கு 60,000 டன் நிலக்கரி கையாளப்படும் இந்த நிறுவனத்தில், கரியள்ளும் பிரிவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக உழைத்த 261 தொழிலாளர்கள் இன்று வேலையிலிருந்து வீசியெறியப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஒப்பந்தத் தொழிலாளிகள்; இராதா என்ஜினியரிங் ஒர்க்ஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் முடிந்துவிட்டதால் இவர்களுக்கு இனி வேலை கிடையாது என்கிறது நிர்வாகம். அந்த ஒப்பந்த நிறுவனமோ, தொழிலாளிகளுக்கு மாதம் ரூ.5000 மட்டும் கொடுத்துவிட்டு கடந்த ஏழு ஆண்டுகளில் பல கோடிகளைச் சுருட்டியுள்ளது. இந்த ஒப்பந்ததாரருக்கு முன்பிருந்தே இங்கு பணியாற்றியவர்களும் வேலையிலிருந்து விரட்டப்பட்டுள்ளனர். இப்போது புதிய ஒப்பந்ததாரர் மூலம் புதிய ஒப்பந்தத் தொழிலாளிகளை நிர்வாகம் வேலைக்கு அமர்த்திக் கொண்டுள்ளது. புதிய ஒப்பந்த நிறுவனமோ, புதிதாக வேலைக்கு அமர்த்தப்படும் தொழிலாளிகளிடம் ரூ.20,000 லஞ்சமாக வாங்கிக் கொண்டு வேலைக்கு எடுக்கிறது. இதில் மின்வாரிய அதிகாரிகள் முதல் மேலிடம் வரை ஊழல் புழுத்து நாறுகிறது. தொழிலாளர் சட்டப்படி, ஒப்பந்தத் தொழிலாளிகள் நிரந்தரமாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அரசுத் துறை நிறுவனமான மின்துறையே சட்டத்தை மதிப்பதில்லை.

 

தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக்கும் ஒப்பந்தமுறையை எதிர்த்தும், சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்வதை எதிர்த்தும் தொழிலாளர்களை அணிதிரட்டி வந்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, வடசென்னை அனல்மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தைக் கட்டியமைத்து, அதன் தொடக்கவிழாவை கடந்த 11.12.09 அன்று அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே புதுநகரில் நடத்தியது. பு.ஜ.தொ.மு. மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் சங்கக் கொடியேற்றி, பெயர்ப் பலகை திறந்து வைக்க, அதன் பிறகு நடந்த பொதுக்கூட்டத்தில் பு.ஜ.தொ.மு. மாநிலச் செயலர் தோழர் சுப.தங்கராசு, திருவள்ளூர் மாவட்டச் செயலர் தோழர் சுதேஷ்குமார், ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத் தலைவர் தோழர் மதியழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். குடும்பத்தோடு திரண்டு வந்த தொழிலாளர்களிடம் வர்க்க உணர்வூட்டி, போராட்டத் திசையைக் காட்டியது, ம.க.இ.க.மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி. பு.ஜ.தொ.மு. தலைமையில் உருவாகியுள்ள இச்சங்கம், வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலையில் அமர்த்தி நிரந்தரமாக்கக் கோரியும், ஒப்பந்தமுறையை ஒழிக்கக் கோரியும்போராட்டத்தை உறுதியாக நடத்தி வருவதோடு, அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் போராட்டத்துக்கு அணிதிரட்டி வருகிறது.

 

— பு.ஜ.செய்தியாளர்கள்