Language Selection

புதிய ஜனநாயகம் 2010

போபால் விஷவாயுப் படுகொலையால் பாதிக்கப்பட்ட மக்கள் உரிய நட்ட ஈடு வழங்கக் கோரியும், யூனியன் கார்பைடு முதலாளி வாரன் ஆண்டர்சனைக் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் தண்டிக்கக் கோரியும் இன்று வரை போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில், மன்மோகன் சிங் அரசு, அணு ஆலை விபத்துக்கள் தொடர்பாக ஒரு புதிய மசோதாவொன்றைத் தயாரித்து, அதனைச் சட்டமாக்கிவிட முயன்று வருகிறது.

அம்மசோதாவின் பெயர் குடிமை அணுசக்தி கடப்பாடு மசோதா (). இந்தியாவிலுள்ள அணு மின்சாரம் தயாரிக்கும் அணுக்கூடங்களில் விபத்து ஏற்பட்டால், அவ்விபத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு எவ்வளவு நட்ட ஈடு தருவது, அந்த நட்டஈட்டை யார் தருவது என்பது பற்றி வரையறுக்கிறது, இம்மசோதா. பிரதமர் மன்மோகன் சிங் கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்காவிற்குக் கிளம்பிச் செல்வதற்கு முன்பாக, இம்மசோதா மைய அமைச்சரவையின் ஒப்புதலோடு அறிவிக்கப்பட்டது. இதிலிருந்தே, யாரைத் திருப்திபடுத்துவதற்காக இம்மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

 

அமெரிக்காவில் அணு மின்சாரம் தயாரிக்கத் தேவைப்படும் இயந்திரங்களைத் தயாரிப்பது, அணுஉலைகளை நிர்மாணிப்பது, அவற்றை இயக்குவது ஆகிய நடவடிக்கைகள், இந்தியாவைப் போல முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பெனி, வெஸ்டிங்ஹவுஸ் எலெக்ட்ரிக் கம்பெனி போன்ற தனியார் நிறுவனங்கள்தான் அணுமின்சாரத் தயாரிப்புத் தொழிலில் கோலோச்சி வருகின்றன. இத்தனியார் நிறுவனங்கள் தயாரித்து நிர்மாணித்த அமெரிக்க அணு உலைகளில் ஏதாவது விபத்து ஏற்பட்டால்,

 

அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இந்நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டியதும் இல்லை; பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டிய கடப்பாடும் அந்நிறுவனங்களுக்குக் கிடையாது. அமெரிக்காவில் சட்டபூர்வமாகவே இப்பாதுகாப்பு இத்தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இயங்கி வரும் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால், அவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்குவதற்காக காப்பீடு திட்டமொன்றை அமெரிக்க அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

 

ஆனால் இந்தியாவிலோ, ஆலைகளை யார் நடத்தி வருகிறார்களோ, அவர்கள்தான் அவ்வாலையினால் பொதுமக்களுக்கும் சுற்றுப்புறச் சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகளுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும் என்பது அரசின் கொள்கையாக இருந்து வருகிறது. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்கத் தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் இரண்டு இடங்களில் அணு உலைகளை அமைக்க முன் வந்திருப்பதைöயாட்டி, இந்திய அரசு தனது கொள்கையை மாற்றிக்கொண்டு, குடிமை அணுசக்தி கடப்பாடு மசோதாவைக் கொண்டு வந்திருக்கிறது. அமெரிக்காவின் உள்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இந்தியாவிற்கு வந்திருந்தபொழுது, இந்தியாவின் அணு மின்சார உற்பத்தியில் முதலீடு செய்ய முன்வரும் அமெரிக்க நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் இருப்பதைப் போன்ற சட்ட பூர்வ பாதுகாப்பு இந்தியாவிலும் வழங்கப்பட வேண்டும் எனக் கட்டளையிட்டுச் சென்றிருந்தார். அக்கட்டளையை நிறைவேற்றிவிட்டு, அமெரிக்காவிற்குப் பறந்திருக்கிறார் மன்மோகன் சிங்.

 

""இந்தியாவின் அணு மின்சார உலைகளுக்குத் தேவைப்படும் இயந்திரங்களைத் தரும் நிறுவனங்கள், அவ்வணு உலைகளில் ஏற்படும் விபத்துக்களுக்குப் பொறுப்பேற்க வேண்டியதில்லை; அவ்வணு உலைகளை யார் இயக்கி வருகிறார்களோ, அந்நிறுவனம்தான் விபத்தினால் ஏற்படக்கூடியப் பாதிப்புகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். இதற்காக அந்நிறுவனம் 45 கோடி அமெரிக்க டாலர் பெறுமான தொகைக்கு (ஏறத்தாழ 2,300 கோடி ரூபாய்) விபத்துக் காப்பீடு எடுக்கவேண்டும். விபத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு வழங்க வேண்டிய நட்ட ஈடு 2,300 கோடி ரூபாய்க்கு அதிகமானால், அதனை இந்திய அரசுதான் வழங்க வேண்டும்.'' — இவைதான் இம்மசோதாவின் முக்கிய அம்சங்கள்.

 

மைய அரசின் கீழுள்ள அணுசக்திக் கழகம்தான் இந்தியாவிலுள்ள அணு உலைகளை இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. எனவே, எதிர்காலத்தில் அமெரிக்காவின் தயவில் இயங்கும் இந்திய அணு உலைகளில் ஏதாவது விபத்து ஏற்பட்டால், நட்ட ஈடு வழங்குவது உள்ளிட்ட அதற்கான முழு பொறுப்பையும் இந்திய அரசுதான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் இம்மசோதா சுற்றி வளைத்துச் சொல்லும் செய்தி. அணு உலைகளை நிர்மாணிப்பதன் மூலம் கிடைக்கும் இலாபத்தையும், ராயல்டியையும் சுருட்டிக் கொள்ளும் அமெரிக்க நிறுவனங்கள், தாங்கள் வழங்கிய அணுஉலைகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்குப் பொறுப்பெடுத்துக் கொள்ளாமல் தட்டிக் கழிப்பது எந்தவொரு வர்த்தக நியாயத்திலும் அடங்காது. ஆனால், அமெரிக்க எஜமானர்களோ, ""அமெரிக்க நிறுவனங்கள் அணுஉலைகளை வழங்கினாலும், அதை இயக்கப் போவதும், அவ்வணு உலைகளில் இருந்து கிடைக்கும் மின் சாரத்தை அனுபவிக்கப் போவதும் இந்தியாதானே;எனவே, விபத்தினால் ஏற்படக்கூடிய சுமைகளை இந்தியாதான் சுமக்க வேண்டும்'' எனக் கூறி, இந்த அடாவடித்தனமான மசோதாவை நியாயப்படுத்தி வருகிறார்கள்.

 

அடுத்த இருபது ஆண்டுகளுக்குள் 40,000 மெகாவாட் மின்சாரத்தை அணு ஆற்றலைப் பயன்படுத்தித் தயாரிக்கவும் (இதற்கு ஏறத்தாழ 9 இலட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும்) அதற்கேற்பஅணு மின்சார உற்பத்தியில் தனியாரை அனுமதிக்கவும் இந்திய அரசு திட்டமிட்டிருப்பதால், இந்த ஒருதலைப்பட்சமான மசோதாவை இந்தியத் தரகு முதலாளிகளும் வரவேற்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால், டாடா, ரிலையன்ஸ், எல் அண்ட் டி,காமோன் ஆகிய இந்திய நிறுவனங்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டுதான் இந்திய அணுசக்தித் துறை இம்மசோதாவையே தயாரித்திருக்கிறது. இம்முதலாளிகளின் பேராசைதான் மசோதாவாக அவதாரமெடுத்திருக்கிறது.

 

இப்படிபட்ட சட்டபூர்வ பாதுகாப்பு அளிக்கப்பட்டதால்தான் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவின் அணு மின்சாரத் துறையில் முதலீடு செய்ய முன்வரும் எனத் தனது சரணாகதிக்கு விளக்கம் அளிக்கிறது, இந்திய அரசு. இந்திய அணுசக்தித் துறையில் முதலீடு செய்ய விருப்பமுள்ள ரசியாவும், பிரான்சும் இப்படிபட்ட அடாவடித்தனமான பாதுகாப்பைக் கோரவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே, அமெரிக்க முதலாளிகளுக்கு இப்படிபட்ட சலுகையை அளித்து ஒரு ஏமாளித்தனமான ஒப்பந்தத்தைப் போட்டுக்கொள்ள வேண்டிய அவசியமே இந்திய அரசிற்குக் கிடையாது. ஆனாலும், டாக்டர் மன்மோகன் சிங் இந்திய மக்களின் நலன்களுக்கு எதிரான ஒப்பந்தத்தைப் போட்டுக் கையில் எடுத்துக் கொண்டு அமெரிக்காவிற்குப் பறந்து போகிறார் என்றால், இத்தகைய அமெரிக்க அடிவருடி இன்னும் இந்தியப் பிரதமர் பதவியில் உட்கார்ந்திருப்பதைக் கண்டு இந்திய மக்கள் வெட்கப்படவேண்டும்.

 

அமெரிக்காவின் தயவில் உருவாகும் இந்திய அணு உலைகளை இயக்கப் போகும் இந்திய அணுசக்திக் கழகம், 2,300 கோடி ரூபாய்க்கு விபத்துக் காப்பீடு எடுத்துக் கொள்ள வேண்டும் என ஒரு நட்ட ஈட்டுக் கணக்கைப் போட்டிருக்கிறார்களே, அக்கணக்குக்குப் பின்னும் அமெரிக்க எஜமானர்களின் இரக்கமற்ற வக்கிரப் புத்திதான் வெளிப்பட்டுள்ளது. போபால் விஷவாயுப் படுகொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு யூனியன் கார்பைடு நிறுவனம் 300 கோடி அமெரிக்க டாலர் நட்ட ஈடாகத் தர வேண்டும் என இந்திய மக்களின் சார்பாகக் கோரப்பட்டது. ஆனால், இந்திய அரசும், அமெரிக்காவின் யூனியன் கார்பைடு நிறுவனமும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு, இந்திய உச்சநீதி மன்றத்தின் மூலம் கட்டப் பஞ்சாயத்து செய்து 45 கோடி அமெரிக்க டாலருக்கு மேல் ஒரு சல்லிக்காசுகூட நட்ட ஈடாகத் தர முடியாது என அறிவித்தன.

 

அந்தக் கட்டப் பஞ்சாயத்து கணக்கைத்தான் அணுஉலை விபத்துக் காப்பீடு தொகையாக இந்திய, அமெரிக்க முதலாளிகள் அறிவித்திருக்கிறார்கள். மேலும்,போபால் படுகொலைக்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சனைக் கைது செய்து அழைத்து வந்து விசாரிக்க வேண்டும் என இந்திய மக்கள் இன்றும்கூடக் கோரி வருவதால், அப்படிபட்ட சிக்கல்கள் எதிலும் அமெரிக்க அணுசக்தி நிறுவன முதலாளிகள் எதிர்காலத்தில் மாட்டிக் கொண்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான், இந்த குடிமை அணுசக்தி கடப்பாடு மசோதாவில் அம்முதலாளிகளுக்கு விபத்துக்குப் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டிய கடப்பாடிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

போபால் விஷவாயுப் படுகொலை சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் (ஏறத்தாழ 6 இலட் சம் பேர்) கிடைத்துள்ள நட்ட ஈட்டுத் தொகை வெறும் 500 அமெரிக்க டாலர்கள்தான். விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களின் ஓராண்டு மருத்துவச் செலவை ஈடு கட்டக்கூட இந்த அற்பத் தொகை பயன்படாது என முதலாளித்துவப் பத்திரிகைகளே அம்பலப்படுத்தி எழுதியுள்ளன. அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால், அது போபால் "விபத்தை'க் காட்டிலும் பல மடங்கு அதிகமான பாதிப்புகளை இந்திய மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படுத்தும் வாய்ப்பிருக்கும்பொழுது, இந்த 2,300 கோடி ரூபாய் காப்பீடு என்பது வெறும் சுண்டைக்காய் பணம்தான். ஆனால், அணுசக்தித் துறை அதிகாரிகளோ, இதற்கு மேல் யாரால் நட்ட ஈடு தர முடியம் எனக் கேட்டு, இந்தக் கண்துடைப்பு நட்ட ஈட்டை நியாயப்படுத்த முனைகிறார்கள். ஒருபுறம், அணு உலை விபத்துக்களுக்குப் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டிய கடப்பாடிலிருந்து அமெரிக்க முதலாளிகளுக்கு விலக்கு அளிப்பது; இன்னொருபுறம், விபத்தினால் பாதிக்கப்படக்கூடிய இந்திய மக்கள் உரிய நட்ட ஈட்டைக் கோரிப் பெற முடியாமல் தடுப்பது என இரண்டு அபாயங்களைக் கொண்டுள்ளது, இம்மசோதா.

 

அமெரிக்காவின் கட்டளைக்கு அடிபணிந்து இம்மசோதாவை நிறைவேற்றியுள்ள மன்மோகன் சிங் கும்பல், இதே போன்று அணு உலை விபத்துக்களில் இருந்து தனியார் முதலாளிகளைக் காப்பாற்றும் நோக்கத்தோடு ஏகாதிபத்திய நாடுகளால் உருவாக்கப்பட்டுள்ள வியன்னா ஒப்பந்தத்திலும் கையெழுத்திடச் சம்மதம் தெரிவித்திருப்பதாகச் செய்திகள் கசிந்து வெளிவருகின்றன. அமெரிக்கா இன்னும் நெருக்கிப் பிடித்தால், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில்கூட கையெழுத்திடுவதற்கு மன்மோகன் சிங் கும்பல் தலையாட்டிவிடும்.

 

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவப்போவதாக அதன் ஆதரவாளர்கள் ஊதிப் பெருக்கி வருகிறார்கள். ஆனால், அவ்வொப்பந்தம் இந்திய மக்களின் உயிர் வாழும் உரிமைக்கும், இந்தியச் சுற்றுச்சூழலுக்கும் வேட்டு வைக்கும் கயமைத்தனம் நிறைந்தது என்பதை இம்மசோதா அம்பலப்படுத்தியிருக்கிறது.

 

· ரஹீம்