Language Selection

புதிய ஜனநாயகம் 2010

அமெரிக்க ஏகாதிபத்தியம் சின்னஞ்சிறு ஏழை நாடான ஆப்கானை ஆக்கிரமித்துக்கொண்டு, கடந்த எட்டு ஆண்டுகளாக அந்நாட்டின் மீது ஒரு அநீதியான போரை நடத்தி வருகிறது. சின்னஞ்சிறு ஏழை நாடாக இருந்தாலும், ""ஆப்கான் ஏகாதிபத்தியங்களின் இடுகாடு'' எனக் கூறப்படுவது மீண்டும் நிரூபணமாகி வருகிறது.

ஒசாமா பின்லேடனைப் பிடிப்பது, அல்காய்தாவை நிர்மூலமாக்குவது, தாலிபானைத் தோற்கடிப்பது, ஆப்கானில் ஜனநாயக அரசைக் கட்டியமைப்பது இவை அனைத்தையும் போரைத் தொடங்கிய ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே செய்து முடிப்பது எனத் தம்பட்டம் அடித்து, இந்த ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்கிய அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதனின் ""நேடோ'' கூட்டாளி நாடுகளும், தமது சபதங்களை நிறைவேற்றவும் வழியின்றி, அதே சமயம், ஆப்கானில் இருந்து கௌரவமாக வெளியேறவும் விருப்பமின்றி மூச்சுத்திணறிக் கொண்டிருக்கின்றன.

 

இப்படிபட்ட தருணத்தில், ஆப்கானுக்கு மேலும் 30,000 அமெரிக்கத் துருப்புகளை அனுப்பப் போவதாக அறிவித்திருக்கிறார், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா. அதனுடன், ""இன்றிலிருந்து 18 மாதங்கள் கழித்து, ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறப் போவதாகவும்'' ஒபாமா அறிவித்திருக்கிறார். இராணுவச் சிப்பாய்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, போரை முன்னைவிடத் தீவிரமாக நடத்துவதற்கான முயற்சி என்பது பாமரனுக்கும் புரியும். ஆனால், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர் அல்லவா; அதனால், ""ஆப்கான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகத்தான் சிப்பாய்களின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதாக''த் தேன் தடவிப் பேசியிருக்கிறார், அவர். இந்த விளக்கத்தைக் கேட்கும் பொழுது கேப்பையில் நெய் வழிகிறது என்ற நம்மூர் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

 

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆப்கான் ஆக்கிரப்புப் போருக்காக 2006ஆம் ஆண்டு செலவழித்த தொகை ஏறத்தாழ 1,900 கோடி டாலர்கள் (95,000 கோடி ரூபாய்). இந்தப் போர்ச் செலவு 2009இல் மூன்று இலட்சம் கோடி ரூபாயாக (6,020 கோடி அமெரிக்க டாலர்கள்) அதிகரித்திருக்கிறது. தற்பொழுது துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் போர்ச் செலவு 10,000 கோடி அமெரிக்க டாலர்களைத் தொட்டுவிடும் என மதிப்பிடப்படுகிறது.

 

வேலையையும் வீட்டையும் இழந்து, பொருளாதார நெருக்கடியால் நடுத்தெருவுக்கு வந்துவிட்ட அமெரிக்கர்களின் மத்தியில் இந்த ஊதாரித்தனமான போர்ச்செலவு ஆப்கான் போருக்கு எதிரான மனோநிலையைத் தோற்றுவித்திருக்கிறது. எனவே, இந்த ஆக்கிரமிப்புப்போரையும் போர்ச் செலவையும் நியாயப்படுத்த தேசியவெறியைத் தூண்டிவிடும் அயோக்கியத்தனத்தில் இறங்கியிருக்கிறார், ஒபாமா. அமெரிக்காவை மீண்டும் தாக்கும் திட்டங்கள் போடப்படுவதாகக் கூறி, அமெரிக்கர்களின் மத்தியில் பீதியூட்டி வருகிறார், அவர். கூடுதலாக 30,000 அமெரிக்கத் துருப்புகளை ஆப்கானுக்கு அனுப்ப எடுத்த முடிவை இராணுவத்தினர் மத்தியில் அறிவித்து, ஒபாமா உரையாற்றியதைக் கேட்டால், போர் வெறியன் ஜார்ஜ் புஷ் ஆவி ஒபாமாவுக்குள் புகுந்துவிட்டதோ என்ற சந்தேகம் தோன்றும்.

 

ஒபாமா அதிபரான பிறகு, துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமலேயே ஆப்கான் போரில் வெற்றியை ஈட்ட வேண்டும் என்ற போர்த் தந்திரத்தைக் கையாண்டு வந்தார். பொருளாதார நெருக்கடி நிலவும் சமயத்தில் துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்தால், போர்ச் செலவு அதிகரித்து, ஏழை அமெரிக்கர் களின் கோபத்தை சம்பாதித்துக் கொள்ள நேரிடும்; அது, தனது எதிர்கால அரசியல் நலனுக்கு நல்லதல்ல என்பதாலேயே இந்தப் போர்த் தந்திரத்தைக் கையாள எண்ணி வந்தாரேயன்றி, வேறெந்த நல்லெண்ணமும் காரணம் அல்ல.

 

இதற்கு மாறாக, அமெரிக்கத் துணை அதிபர் ஜோ பிடேன், துருப்புகளின் எண்ணிக்கையைச் சற்று அதிகரிப்பதோடு, ஆளில்லா விமானத் தாக்குதலை ஆப்கான் மீது மட்டுமின்றி, பாகிஸ்தான் மீதும் தீவிரமாக நடத்த வேண்டும் எனக் கூறி வந்தார். அமெரிக்க அரசின் உள்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன், இராணுவச் செயலர் ராபர்ட் கேட்ஸ் மற்றும் அமெரிக்க இராணுவத் தளபதிகள் ஆகியோர் ஆப்கானில் அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்க வேண்டும் எனக் கூறி வந்தனர். துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற திட்டத்திற்கு அமெரிக்காவின் பத்திரிகைகளும், குடியரசுக் கட்சியும், வலதுசாரி அறிவு ஜீவிகளும் ஆதரவு தெரிவித்தனர். கடந்த சில மாதங்களாக இந்த மூன்று அணிகளுக்கு இடையே ஆப்கான் ஆக்கிரமிப்புப் போரை எப்படி நடத்திச் செல்வது என்பது குறித்து நடந்து வந்த நாய்ச் சண்டையில், அதிபர் ஒபாமா தீவிர வலதுசாரி கும்பலிடம் சரணடைந்துவிட்டார்.

 

""தீவிரவாதத்துக்கு எதிரான போர்'' என்ற போர்வையில் கடந்த எட்டு ஆண்டுகளாக நடந்துவரும் இந்த ஆக்கிரமிப்புப் போர், தாலிபான் மற்றும் அல்காய்தாவைத் தோற்கடிக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, குறிப்பாக ஆப்கான் மக்கள் மத்தியில் மீண்டும் தாலிபானின் செல்வாக்கு வளருவதற்கு வளமõன வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. அமெரிக்கா.

 

ஆப்கான் மீது படையெடுத்த ஐந்து வாரங்களுக்குள்ளாகவே தாலிபானின் அதிகாரம் காபூல் பகுதியில் வீழ்த்தப்பட்டாலும், அப்பொழுதே ஆப்கானின் தென்மேற்கு பகுதியிலுள்ள ஹெல்மண்ட் மாகாணத்தில் ஒரு இணை அரசாங்கத்தை நடத்தும் அளவிற்கு, அப்பகுதியில் தாலிபான் செல்வாக்கு செலுத்தி வந்தது. இப்பொழுதோ, தாலிபானின் செல்வாக்கு ஆப்கானின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் வளர்ந்து வருவதாக முதலாளித்துவப் பத்திரிகைகள்கூட ஒப்புக்கொள்கின்றன.

 

இதனால், தாலிபானைத் தோற்கடிப்பதைவிட, அவ்வமைப்பின் செல்வாக்கு தலைநகர் காபூல் பகுதியில் மீண்டும் வளர்ந்துவிடாமல் தடுப்பதுதான் அமெரிக்காவிற்கும் அவர்களது கூட்டாளி நாடுகளுக்கும் தலை போகிற விசயமாகிவிட்டது. இதற்காகவே துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதோடு, தாலிபானுக்கு எதிரான யுத்தப் பிரபுக்களோடு ஒரு புனிதக் கூட்டணியையும் அமெரிக்காநேடோ துருப்புகள் அமைத்துள்ளன. மேலும், தாலிபானை உடைத்து அமெரிக்காவிற்கு உதவக் கூடிய ""நல்ல'' தாலிபான்களை கருங்காலிகளை உருவாக்கவும் அமெரிக்கா முயன்று வருகிறது. இதற்காக அமெரிக்காவின் இராணுவ பட்ஜெட்டில் 130 கோடி அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

அமெரிக்காவின் தயவிலும், பாதுகாப்பிலும் ஆப்கானை "ஆண்டு' வரும் ஹமித் கர்சாய் அரசோ, ஊழல் பேர்வழிகள், போதை மருந்து கடத்தும் அரசியல் தாதாக்கள், தாலிபானை எதிர்க்கும் யுத்தப்பிரபுக்களால் நிரம்பி வழிகிறது. ஆப்கான் அதிபர் ஹமித் கர்சாயின் சொந்த சகோதரரான அகமது வாலி கர்சாய் ஆப்கானைச் சேர்ந்த போதை மருந்து கடத்தல் பேர்வழிகளுள் முக்கியமானவர் எனும்பொழுது, ஆப்கானில் அமெரிக்கா திணித்துள்ள ஆட்சியின் யோக்கியதைப் பற்றி மேலும் விரிவாக விளக்கத் தேவையில்லை. ""அகமது வாலி கர்சாயின் போதை மருந்து கடத்தல் தொழிலை மேற்குலக பத்திரிகைகள் அம்பலப்படுத்தத் துணிந்தால், நேடோஅமெரிக்கத் துருப்புகளுக்கும் அதில் பங்கு இருப்பதை அம்பலப்படுத்துவேன்'' என அந்நாட்டின் போதை மருந்து கடத்தல் தடுப்பு அமைச்சரே எச்சரிக்கும் அளவிற்கு ஆப்கானில் போதை மருந்து கடத்தல் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது.

 

ஆப்கான் வரலாற்றிலேயே மிகக் கொடூரமான யுத்தப் பிரபுவாகக் கருதப்படும் முகம்மது ஃபஹிம்தான் அந்நாட்டின் துணை அதிபர். உஸ்பெக் இனத்தைச் சேர்ந்த மற்றொரு யுத்தப் பிரபுவான ரஷித் தோஸ்தம் அதிபர் கர்சாயின் நெருங்கிய அரசியல் கூட்டாளி. பஷ்டுன் இன மக்கள் வாழும் பகுதியில் அமெரிக்க நேடோ துருப்புகளுக்குத் தேவைப்படும் ஆயுதத் தளவாடங்களைக் கொண்டு செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை யுத்தப் பிரபுக்கள்தான் செய்து கொடுத்து, சன்மானம் பெற்றுக் கொள்கிறார்கள். போதை மருந்து கடத்தல் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் யுத்தப் பிரபுவான நஸ்ரி முகமது, ஜெர்மன் ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளையாக இருந்து வருவதை அமெரிக்காவைச் சேர்ந்த அனைத்துலக கூட்டுறவு மையம் என்ற அமைப்பு அம்பலப்படுத்தியிருக்கிறது.

 

ஆப்கானில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பாக நடந்த அதிபர் தேர்தலில் ஹமித் கர்சாய்க்கு விழுந்த வாக்குகளில் ஏறத்தாழ 10 இலட்சம் வாக்குகள் கள்ள வாக்குகள் எனக் கண்டுபிடிக்கப்பட்டதால், அதிபர் தேர்தலின் முதல் சுற்றில் கர்சாய் அடைந்த ""வெற்றி'', பின்னர் ரத்து செய்யப்பட்டது. எனினும், கர்சாய் இரண்டாம் சுற்றுத் தேர்தலைச் சந்திக்காமலேயே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தயவால் மீண்டும் நாட்டின் அதிபராக முடிசூட்டிக் கொண்டுள்ளார். பாலஸ்தீனத்தில் அமெரிக்காவை எதிர்க்கும் ஹமாஸ் இயக்கம் நியாயமான முறையில் தேர்தலைச் சந்தித்து, காசா முனையில் வெற்றி பெற்றதை இதுவரை ஏற்றுக் கொள்ளாத அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகள், ஆப்கானில் நடந்த மோசடித் தேர்தலையும், "சட்டவிரோதமான' முறையில் கர்சாய் மீண்டும் அதிபராகியிருப்பதையும் எவ்வித முணுமுணுப்புமின்றி ஏற்றுக் கொண்டுள்ளன.

 

அந்நிய ஆக்கிரமிப்பு, அமெரிக்க மற்றும் நேடோ படைகள் நடத்திவரும் படுகொலைகள் — கடந்த எட்டு ஆண்டுகளில் ஏறத்தாழ 31,000 ஆப்கானியர்கள் ஆக்கிரமிப்புப் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர் — கர்சாயின் ஊழல் ஆட்சி, ஐ.நா. மன்றம் போடும் சோத்துப் பொட்டலத்தை நம்பியே வாழ்க்கையை ஓட்ட வேண்டிய அளவிற்கு உள்நாட்டுப் பொருளாதாரம் நாசமாகிக் கிடப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆப்கான் மக்கள் மத்தியில் தாலிபானின் செல்வாக்கு மீண்டும் வளரத் தொடங்கியிருக்கிறது. அமெரிக்கா இப்பொழுது இதனையே காரணமாகக் காட்டி துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதோடு, ஆளில்லா விமானத் தாக்குதலைத் தீவிரப்படுத்த வேண்டும்; அல்காய்தாவை ஒழிக்க பாகிஸ்தான், சோமாலியா, ஏமன் ஆகிய நாடுகள் மீதும் தீவிரவாதத்துக்கு எதிரான போரைத் தொடுக்க வேண்டும் எனக் கூப்பாடு போடத் தொடங்கியிருக்கிறது.

 

ஆப்கானில் அமெரிக்கநேடோ படைகள் சந்தித்துவரும் தோல்வியையும், அங்கு நிலவும் உள்நாட்டுக் குழப்பத்தையும் பயன்படுத்திக் கொண்டு ஆப்கானில் சமாதானத்தை ஏற்படுத்துவது என்ற பெயரில் ரசிய ஏகாதிபத்தியமும், சீனாவும் அந்நாட்டினுள் நுழைய முயன்று வருகின்றன. இந்தியா, ஆப்கானிலிருந்து பாகிஸ்தானை ஓரங்கட்ட வேண்டும் என்ற திட்டத்தோடு, அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு மட்டுமின்றி, கர்சாய் கும்பலுக்கும், தாலிபானை எதிர்க்கும் யுத்தப் பிரபுக்களுக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறது. மேலும், ஆப்கானைப் புனரமைப்பது என்ற போர்வையில் அமெரிக்க இராணுவத்திற்குத் தேவைப்படும் கள உதவிகளைச் செய்து கொடுத்தும் வருகிறது, இந்தியா. பாகிஸ்தானோ ஒருபுறம் அமெரிக்காவிற்கு ஆதரவளித்துக் கொண்டு, இன்னொருபுறம் தாலிபானுக்குக் கொம்பு சீவிவிடுகிறது. இப்படியாக ஆப்கான், தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் வேட்டைக் காடாக மாற்றப்பட்டுள்ளது.

 

இரானின் எல்லையையொட்டி அமைந்திருப்பதாலும், மத்திய ஆசியப் பகுதியில் கிடைக்கும் எண்ணெய்வளத்தை அரபிக்கடல் பகுதிக்கு எடுத்துச் செல்லுவதற்கான தரைமார்க்கமாகவும் இருப்பதாலும், ஆப்கான் நாட்டைத் தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவே அமெரிக்கா விரும்புகிறது. இந்த நிலையில் அதிபர் ஒபாமா பதினெட்டு மாதங்கள் கழித்து ஆப்கானில் இருந்து படைகளை முழுவதுமாகத் திரும்பப் பெற்றுக்கொள்வார் என நம்புவதற்கு இடமே கிடையாது. 19 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து ஏகாதிபத்தியமும், 20ஆம் நூற்றாண்டில் சோவியத் சமூக ஏகாதிபத்தியமும் ஆப்கான் மக்களால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டதைப் போல், அமெரிக்க மேலாதிக்க வல்லரசும் தோற்கடிக்கப்பட்டதால்தான், அதற்குப் படைகளைத் திரும்பப் பெறும் ""நல்ல புத்தி'' வரும்!