எல்லா அறிவிப்புகளும் முடிந்துவிட்டன.
செய்திகளும் புகைப்படங்களும் எல்லோரையும்
நம்பவைத்து சென்றுவிட்டன.
அதே முட்கம்பிகளுக்குள்
அம்மாவின் முகம் சுருங்கிக்கிடக்கிறது.
தங்கையின் கூந்தல் வளராமலிருக்கிறது.
எங்களுக்கிடையில் அதே முட்கம்பிச் சுருள்கள்
அம்மாவின் அருந்திக்கொண்டு வந்த புன்னகையை
காயப்படுத்திக்கொண்டிருக்கிறது.
தங்கையின் கையிலிருக்கிற புத்தகத்தை
கிழித்துக்கொண்டிருக்கிறது.
எனக்காக அம்மா பிட்டினைச் சுமந்து வந்தாள்.
காத்திருப்பின் எல்லைகளை
வீடு செல்லுகிற கனவினை நகரத்திற்கு மீள்கிற
நம்பிக்கையை
அம்மா முட்கம்பிகளில் சொருகியிருக்கிறாள்.
நுளம்புகள் கூடாரத்தை தூக்கிச் செல்லும் இரவில்
முட்கம்பிகளில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்க
காலாவதியான அதே கூடாரத்திற்குள்
கால்களை மடக்கி அம்மா அடைந்து கொள்கிறாள்.
நீண்ட தூரத்திலுள்ள நகரத்தின் கடைக்குச் செல்லுவதற்காக
அம்மா கோரிய அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
நெருங்கவும் தழுவிக்கொள்ளவும்
அனுமதிக்கப்படாத
வாசலில் முகாங்கள் என்றோ திறந்துவிடப்பட்டன
என்று எழுதப்பட்டுள்ளன.
முகாங்கள் திறந்து விடப்பட்டதற்காக
பத்திரிகையில் எழுதப்பட்ட
நன்றிகளை நான் உட்பட பலர் வசித்துக்கொண்டிருக்கிறார்கள்.
முட்கம்பிகளைப்பற்றியும்
கூடாரங்களைப்பற்றியும் நிறையவே பேசி விட்டோம்.
எல்லா அறிவிப்புகளும் போராட்டங்களும் முடிந்துவிட்டன.
நான் எப்பொழுதும் சொல்லிக்கொண்டிருக்கும்
அந்தப் பயங்கரமான முட்கம்பிகளால்
சூழப்பட்ட வேலிகளுக்குள்
குழந்தைகள் விளையாடுவதைக் கண்டேன்.
______________________
02.01.2010