நாடு செல்லும் புலம்பெயர் தமிழன் ஒவ்வொருவரும் சொல்வது இதைத்தான். 20 வருடத்துக்கு முந்தைய யாழ் சமூகமல்ல இன்றைய யாழ் சமூகம் என்று சொல்வதன் மூலம், அதில் இருந்து அன்னியமாகின்றனர். புலம்பெயர் தமிழர் தாங்கள் அப்படியே இருக்கின்ற ஒரு மனநிலையில் இருந்து, தம்மில் இருந்த அன்னியமாகிவிட்ட யாழ் சமூகத்தைப் பார்க்கின்றனர்.

அவர்கள் யுத்த சிதைவுகளை வைத்துக் கூறவில்லை. சுற்றுவட்டாரத்தில் நடந்த மாற்றத்தை வைத்துக் கூறவில்லை. கால் இடறும் வண்ணம் உள்ள இராணுவ நடமாட்டத்தை வைத்துக் கூறவில்லை. அவர்கள் எதைக் வைத்துக் கூறுகின்றனர்.

அது தன் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், அது சார்ந்த வாழ்வியல் முறையையும் இழந்து, நிற்கும் லும்பன் தனத்தை வைத்துக் கூறுகின்றனர். ஆம், இன்றைய யாழ் சமூகம் தன் வாழ்வுசார் சமூகப் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கூட இழந்து நிற்கின்றது. இதுதான்,   இவர்கள் சொல்;லும் செய்தி. அது தன் நுகர்வு வெறியால் வெம்புகின்றது. லும்பன் குணாம்சம் கொண்ட சமூகமாக மாறி, தனிமனிதர்களைச் சுற்றிய ஒரு உலகம் கட்டமைக்கப்பட்டிருகின்றது. லும்பன் தனத்துடன் கூடிய சுயநலம், எல்லா சமூக விழுமியங்களையும் அழிக்கின்றது.

பணம் தான் வாழ்வின் விழுமியமாக, அதை உழையாது பெற்று வாழ்வதும், வரைமுறையின்றி நுகர்வதும் இலட்சியமாகின்றது. உலகமயமாதல் சந்தை முதல் நாடகத் (சீரியல்) தொடர்வரை இதற்கு அமைய, உழைப்பில் இருந்த யாழ் சமூகத்தை மிக வேகமாக அன்னியமாக்கியுள்ளது.

உழையாத பணத்தைக் கொண்ட சமூக உறவாக்கங்கள், வேறு ஒரு சமூகப் பண்பாட்டை உருவாக்கியுள்ளது. பணத்தில் இருந்து ஒரு பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் உற்பத்தி செய்திருக்கின்றது. இது எப்படி எம் சமூகத்தில் நிகழமுடிந்தது?

தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் சிதைவும் சீரழிவும் இதற்கு முக்கியமான அடிப்படையான காரணமாகும். இதனால் லும்பன்தனம் கொண்ட நுகர்வை மையப்படுத்தி, சமூக அடித்தளமற்ற உதிரிக் கும்பலாக சமூகத்தை அது மாற்றிவிட்டது. சமூகத்தை ஏதுமற்றதாக்கியுள்ளது. இந்த சமூக வெற்றிடத்தில் தான் எல்லாப் பொறுக்கி அரசியலும், தழைத்தோங்குகின்றது. தமிழ்மக்களைக் கொன்றவனையும் அதற்கு உதவியவனையும் மட்டுமின்றி, தமிழ் மக்களை கொன்றவர்களை தமிழ்தேசியத்தின் பெயரில் ஆதரிக்கும் அரசியல் புறம்போக்குகள் வரை, மிக இலகுவாக இன்று யாழ் சமூகத்தில் அரசியல் செய்ய முடிகின்றது

.

தமிழ்மக்கள் கடந்த தங்கள் சொந்த அவலத்தை மீட்டுப் பார்க்கவோ, ஏன் அதை எதிர்கொண்டு போராடவோ,  முடியாத வண்ணம் சமூக அடிக்கட்டுமானத்தை முற்றாக இழந்து நிற்கின்றனர். லும்பன் தனமே சமூகத்தின் முன்நோக்காக மாறி, அனைத்து சமூக அடித்தளத்தையும் அது சிதைத்து வருகின்றது.

லும்பன்; என்றால் என்ன? என்ற கேள்வி எம்மை நோக்கி எழுப்பப்பட்டிருந்தது. சமூகத்தின் எந்தக் கட்டுப்பாடுமற்ற, சமூக வாழ்வியல் முறைகளை நிராகரித்த உதிரிகளின் உதிரிப் போக்குத்தான் லும்பன்தனம். உழைத்து வாழ்வதை மனித வாழ்வாக வாழ மறுப்பது, அதன் அடிப்படையான குணாம்சமாகும். சமூகத்தில் இருந்து விலகிச் செல்லும் நடைமுறையை, தன் வாழ்வுசார் பண்பாடாகக் கொண்டது. அது தன்னை மையப்படுத்தி, அனைத்தையும் தனது தேவைக்குட்பட்ட ஒன்றாக்குகின்றது. குறுகிய சுயநலம் முதல் இலக்கற்ற வன்முறை வரை, அதன் மையமான நடத்தைசார் நெறியாகும்.

குறிப்பாக யாழ் சமூகம் இன்று இந்த நிலையை அடைந்துள்ளது. உழைத்து வாழாத வாழ்வு, குடாநாட்டை பண்பாடற்றதாக்கியுள்ளது. இதை வித்திட்டவர்கள் விடுதலைப்புலிகள். ஏன்  விடுதலைப்புலிகளை அழித்ததும், இந்த உழையாத பணம் தான்.

விடுதலைப்புலிகள் தங்கள் பாசிச சர்வாதிகாரத்தை நிறுவி அதைத் தக்கவைக்க, அவர்கள் செய்தது யாழ் சமூகத்தை ஏதுமற்ற ஒன்றாக நலமடித்ததுதான். சமூகத்தின் தாம் அல்லாத எதையும், அவர்கள் வாழவிடவில்லை.

இதன் விளைவு புலிக்கு துதிபாடுவதுதான், சமூகத்தின் கடமையாகியது. சமூகம் இப்படியாக சிதைந்து, சமூக ஆற்றலற்றுப் போனது. புலியை வைத்துப் பிழைக்கும் பொறுக்கிகள், சமூகத்தை வழிநடத்தத் தொடங்கினர். பிழைப்புவாதிகளும், பொறுக்கிகளும் கொண்ட துதிபாடும் ஒரு சமூகமாக, சமூகத்தை புலிகள் மாற்றி அமைத்தனர்.

இந்த யாழ் குடாவை இராணுவம் புலியிடமிருந்து எந்த சமூக ஆற்றலுமற்ற நலமடிக்கப்பட்ட வெற்றுடலாகத்தான் கைப்பற்றியது. இதைக் கொண்டு அது தன்னைப் பலப்படுத்தியது. தன் மீதான இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக, தொடர்ச்சியான படுகொலைக்கு எதிராக, சமூகத்தில் இருந்து எதுவும் தோன்றாத வண்ணம் அனைத்தையும் புலிகள் காவு கொண்டிருந்தனர். எப்போதும் அரசியல் ரீதியாக முதலில் விழிப்புற்று போராடும் யாழ் சமூகத்தை, ஒரு பொம்மை சமூகமாக புலிகள் மாற்றியிருந்தனர். புலிக்கு வெளியில் எதையும் சமூகம் தெரிந்து கொள்ளவில்லை, தெரிந்து கொள்ள அனுமதிக்கவில்லை. இப்படி சமூகத்தை காயடித்த புலிகள், மலட்டுத்தனத்தை சமூகத்தின் இருத்தல் ஆக்கினர்.

பேரினவாதம் தன் ஆக்கிரமிப்பின் பின்னாக, இந்த நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது. மேலும் இந்தப் போக்கை அது தன் பங்குக்கு வளர்த்தெடுத்தது. சமூகத்தில் எஞ்சிய உயிர்த்துடிப்புள்ள சமூகக் கூறுகளை தேடி அழித்தது. மக்கள் கையேந்தி தம்மை எதிர்பார்த்து நிற்கும் நிலையைத் தவிர, அது எதையும் அங்கு அனுமதிக்கவில்லை. ஈ.பி.டி.பி.யின் அலுவலக வாசலில் காத்திருக்க வைத்ததன் மூலம், சமூகத்தை இயங்க வைத்தது. ஈ.பி.டி.பி. யே அனைத்துமாகியது.

நிவாரணத்தையும், தன்னார்வ உதவியையும் நம்பி வாழும் வாழ்க்கை முறையும், ஈ.பி.டி.பி. மற்றும் இராணுவத்தையும் அண்டி வாழ்வதே சமூக இருப்பின் அடித்தளமாகியது. இதற்கமைய புலம்பெயர் பணம் உதவியது.

இதன் மூலம் சமூகம் தன் சொந்த முயற்சியில் உழைத்து வாழ்வதும், போராடி வாழ்வதும், கேவலமான இழிவான ஒன்றாக மாற்றப்பட்டது. அப்படி இன்று பார்க்கப்படுகின்றது. சொகுசாக உழையாது வாழும் முறை நாகரிகமாகியது. அதுவே பண்பாடாகியது. சாதாரணமாக வீட்டில் வீட்டுவேலை செய்வது கூட, சமூகத்தில் இருந்து மெதுவாக மறைந்து போனது, போகின்றது.

அதாவது சமூக விழுமியங்கள் அனைத்தும் சிதைந்து போனது. இது ஏது, என்னவென்று தெரியாத வண்ணம், அவை மக்களின் வாழ்வியல் கூறுகளில் இருந்து மறைந்து போய்விட்டது.

சமூகத்தில் அராஜகவாதம் மேலோங்கி நின்றது, நிற்கின்றது. புலிகள் முதல் ஈ.பி.டி.பி. வரை இதன் பிரதிநிதிகளாக இருந்தனர் என்றால், இவர்கள் இல்லாத இடத்தில் தனிமனித உதிரிக்குழுக்கள் அல்லது உதிரி நபர்கள் அதை கையாண்டனர். சமூக விரோத கும்பல்கள், ரவுடிகள் சமூகத்தை ஆட்டிப்படைக்கும் எல்லைக்குள் சமூகம் நலிவுற்று வீழ்ந்தது. இதற்கு புலிகள் முதல் இராணுவம் வரை பக்க துணையாக நின்றனர், நிற்கின்றனர்.

எப்போதும் எங்கும் சமூகத்தில் லும்பன்தனம் விதிவிலக்கு கொண்டது. ஆனால் யாழில் லும்பன்தனம் சமூகத்தின் உயிர்நாடியான ஒரு வாழ்வியல் முறையாக இன்று மாறிவிட்டது.

கற்றல், உழைத்தல், தேவைக்கு உட்பட்டு வாழ்தல், சமூகத்துடன் இணைந்து சமூகமாக சேர்ந்து வாழ்தல் என்று அனைத்தையும், இது இன்று தன்னளவில் மறுதலிக்கின்றது. பணத்தை குறிக்கோளாக கொண்டு, அனைத்தையும் அது விலை பேசுகின்றது. மேற்கில் வாழும் புலம்பெயர் தமிழனின் நுகர்வு கூட, இவர்கள் முன் கேவலமான இழி நிலைக்குள் தாழ்ந்து கிடக்கின்றது. புலம்பெயர் தமிழனின் வாழ்வை, வாழத் தெரியாத பிச்சைக்காரத்தனமாக அவர்களின் பணத்தை பெற்றபடி பார்க்கின்றனர். அந்தளவுக்கு அது வெம்பி வீங்கிக் கிடக்கின்றது. இங்கிருந்து செல்லும் புலம்பெயர் தமிழன், அங்கு உள்ள வாழ்வுசார் முறையையும் நுகர்வு பண்பாட்டையும் கண்டு திகைத்துப் போகின்றான். அதற்கு முன் கூனிக் குறுகி, தாழ்வு மனப்பான்மையுடன் தடுமாறி நிற்கின்றான். என்ன நடந்தது என்று தெரியாது, விக்கித்துப் போகின்றான். அவர்களின் வாழ்வின் முன், மவுனமாக ஊமையாக மாறிவிடுகின்றான்.

உழைத்து வாழும் வாழ்வுசார் மனிதப் பண்பாட்டை இழந்து, அது போடும் ஆட்டத்தை ஜீரணிக்க முடியாது திகைத்து திணறுகின்றான். இவன் அனுப்பி கொடுத்த பணத்தில், அவர்கள் போடும் நுகர்வு ஆட்டமோ இவர்களை அதிரவைக்கின்றது.

உழைப்புக்கு வெளியிலான பணத்தின் வருகையும், அதை ஒட்டிய சமூக கண்ணோட்டமும் மோசமான இழிவான ஒரு பண்பாட்டை உருவாக்குகின்றது. புலம்பெயர் பணம், தன்னார்வ நிதி, அரச நிவாரணம் என்ற மூன்று தளத்தில், சமூகம் தலைகீழ் தெரியாத லும்பன் பண்பாட்டை உருவாக்கியுள்ளது.

இது தனக்கு சேவை செய்யும் உதிரி கூலிகளை உருவாக்கியுள்ளது. அங்கும் நுகர்வு வெறி என்பது, இந்த எல்லைக்கு உட்பட்ட ஒன்றாக மாறி வருகின்றது. உழைப்பின் பெறுமதி என்பது, லும்பன் வாழ்வு சார்ந்து வீங்கிவெம்பிய ஒரு சமூக வக்கிரத்தில் இருந்து கிடைக்கின்றது. அதாவது இந்தியா பயிற்சியும் ஆயுதமும் வழங்கி போராட்டத்தை வீங்க வைத்ததன் மூலம் அது எப்படி வெம்பி அழுகியதோ, அதே போல் உழையாத பணம் சமூகத்தை வீங்க வைத்து சமூகத்தையே வெம்பிப்போக வைத்துள்ளது. இது அந்த சமூகத்தின் இருப்பை, இன்று இல்லாததாக்கி வருகின்றது. போராட்டமே எப்படி இல்லாமல் போனதோ, அப்படி சமூகத்தின் இருப்பே இன்று இல்லாமல் போகின்றது.

வாழ்வுக்கும், உழைப்புக்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்கின்றது. சமூகத்தின் அனைத்து கூறும், உழையாத பணத்தில் இருந்து வாழும் ஒரு பண்பாட்டு வடிவம் பெற்று நிற்கின்றது. இதற்கு ஏற்ப கடந்தகால நிகழ்கால அரசியல் மட்டுமின்றி, சமூகத்தின் முன்னோடிகளினதும் புத்திஜீவிகளினதும் பிழைப்புத்தனமும் இதற்கு வழிகாட்டியது.

உழையாத இந்த பணவரத்து நின்று போகும்போது, லும்பன்தனமான பண்பாடு தன் சமூகம் மீதான பாரிய வன்முறைக்குள் இட்டுச் செல்லும். மீண்டும் உழைப்பை மீட்டல், உழைப்பை நம்பி வாழ்தல், என்ற ஒரு சமூகப் பண்பாட்டை சமூகம் அடைதல் என்பது, லும்பன்தனமான சமூக வன்முறைக்கு எதிரான ஒரு போராட்டத்தின் ஊடாகத்தான் நடக்கும். அந்தளவுக்கு உழைப்பை மறுக்கும் லும்பன்தனமும், உழையாத பணத்தை பெற்று வாழும் வக்கிரமும், இன்று சமூகத்தில் ஆழமாக புரையோடிப் போயுள்ளது.

அங்கு சென்று திரும்பும் புலம்பெயர் தமிழன், நாங்கள் அன்று பார்த்த யாழ்ப்பாணம் இன்று இல்லை என்று சொல்லி அங்கலாய்க்கும் அளவுக்கு, அங்கு புறநிலையாக சமூகம் வீங்கி வெம்பிய ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்த மாற்றம் புலம்பெயர் சமூகத்தில் நடக்கவில்லை என்ற உண்மை (இங்கு அவர்கள் சமூகமாக உழைத்து வாழ்கின்றனர்), மறுபக்கத்தின் சீரழிவையும் சிதைவையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. அது வீங்கி வெம்பி வெடிக்கின்றது. சமூகத்தை கற்றுக் கொண்டு, இங்கு இருந்துதான் நாம் போராட வேண்டியுள்ளது. போராட்டம் பல தளத்தில், பல முனையில், பல முரண்களுடன் காணப்படுகின்றது.

பி.இரயாகரன்
19.01.2010