மே 18 வரை எதையும் மக்களுக்காக முன்வைத்து போராடதவர்கள் இவர்கள்.  தமிழீழக்கட்சியின் அரசியலுடன் புலிப்பினாமிக் கும்பலாக மாறி, காட்டிக்கொடுத்தபடி படுத்துக் கிடந்தவர்கள் தான் இந்த திடீர் "மே 18" இயக்கக்கரார்கள். மே 18க்கு பின், திடீரென தம்மை "முன்னினேறிய பிரிவு" என்று கூறிக்கொண்டு திடீரென அரசியல் "வியூகம்" போடுகின்றனர்.

இந்த வியூக அரசியல் எப்படிப்பட்டது? அதன் தார்மிக நேர்மை எப்படிப்பட்டது? 

 

1. கடந்தகால மக்களுக்கான போராட்டங்களையும், தியாகங்களையும் மறுப்பதுடன், அந்த அரசியலையும் (மார்க்சிய லெனிய மாவோ சிந்தனையையும்) தூற்றுகின்றனர்.

 

2. கடந்தகால எமது விமர்சனங்களை திருடுகின்றனர். அதாவது இலக்கிய திருட்டில் ஈடுபடுகின்றனர். எமது விமர்சனம் முன்வைத்த வர்க்க கண்ணோட்டம் சார்ந்த அரசியல் சமூகக் கூறுகளை நீக்கி, தன்னியல்பு சார்ந்ததாக அதைத் திரித்து தமது கண்டுபிடிப்பாக வெளியிடுகின்றனர்.

 

3. மார்க்சிய லெனிய மாவோயிச சிந்தனைமுறையை "மார்க்சியத்தின்" பெயரில் மறுத்து சேறடிக்கின்றனர்.  

 

"வியூகம்" இதழின் இறுதிக் கட்டுரையான "விடுதலைப் போராட்டமும் புலிகளும்" புலியை விமர்சிக்கின்றது. இந்த விமர்சனம் புலியை "தன்னியல்புவாதம்" ஊடாக காட்டி, அதை விமர்சிக்கின்றது. அதாவது புலியின் வலதுசாரிய வர்க்க அரசியலை இது விமர்சிக்கவில்லை. அந்த வர்க்கத்தின் வலது போக்கை, அந்த வர்க்கத்தின் இடது போக்கு சார்ந்து அதை விமர்சிக்கின்றது. புலியின் வர்க்க குணாம்சமாக வெளிப்பட்ட அதன் வர்க்கப் போக்கை, "தன்னியல்புவாதமாக" திரித்துக் காட்டி அதை விமர்சிக்கின்றது. வலதுசாரிய வர்க்கத்தை வெளிப்படுத்தி சர்வாதிகார போக்கு ஊடாக முதன்மை பெற்று இருந்த, அதன் தன்னியல்புவாத கூறு மீது விமர்சனம் செய்கின்றது. புலியின் வர்க்கக் குணாம்சமல்ல, தலைமையின் தன்னியல்புவாதம் தான் தவறானது என்று, வலதுசாரிய இடது போக்கு சார்ந்து விமர்சனம் செய்கின்றது. வர்க்கம் சார்ந்து புலியை பாதுகாப்பதால், புலிப் பாசிசத்தைக் கூட அது மறுத்து ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கவில்லை. சுரண்டும் வர்க்கமாக இருந்த புலிகள், தங்கள் சர்வாதிகாரம் மூலம் பாசிசத்தை தமிழ்மக்கள் மேல் ஏவியதையும் இது மறுத்து நிற்கின்றது.

 

இதற்கு மாறாக இவர்களுடன் இருந்தவரும், இவர்களால் புலியிடம் காட்டிக்கொடுக்கப்;பட்டவருமான கேசவன், தன் "புதியதோர் உலகம்" நாவலில் புளட்டின் பாசிசம் பற்றி கொண்டிருந்த அரசியல் தெளிவை இவர்கள் மறுக்கின்றனர். கேசவன் எழுதுகின்றார் "கழகம் நீங்கள் எல்லோரும் கூறுவதுபோல தன்னை ஒரு அராஜகப் போக்கில் பலப்படுத்தியுள்ளது. பலமான ஒரு இராணுவமும் அதற்கு இப்போ இருக்கிறது. மக்கள் மத்தியில் முற்போக்கான தாபனம் என்ற செல்வாக்கையும், மார்க்சிய அமைப்பு என்ற முகமூடியையும் போட்டிருக்கிறது. உண்மையில் இது ஒரு பாசிச ஆட்சிக்கான முழு அடித்தளத்தையும் கொண்டிருக்கிறது. ஜேர்மனியில் ஹிட்லர் கூட ஆரம்பத்தில் தன்னை ஒரு சோசலிஸ்ட் ஆகத்தான் காட்டினான். மக்கள் ஆதரவு பெற்று பதவிக்கு வந்த பின்பே அவன் பாசிசத் தோற்றம் வெளியில் தெரிந்தது. அதே வளர்ச்சிப் போக்கில்தான் கழகமும் சென்றுகொண்டிருக்கிறது." என்கின்றார்.

 

இந்த அரசியல் தெளிவு, முன்னோக்கு அவருக்கு இருந்தது. இந்த அரசியல் பார்வை வர்க்க ரீதியானது. அவரை காட்டிகொடுத்த புலிக் கும்பலுக்கு, இது கிடையாது. இவர்கள் புலியின் வர்க்க அடிப்படை ஊடாக, புலியை பார்க்க மறுக்கின்றனர். புலிப் பாசிசம் பற்றி "வியூகம்" எதையும் சொல்லாது, அனைத்தையும் தன்னியல்புவாதமாக காட்டுகின்றது. மற்றவர்கள் இப்படி பார்ப்பதாக கூறும் போது, அதை "ஏகப் பிரதிநிதித்துவம்" ஊடாக, அதாவது "தன்னியல்புவாதக்" கோட்பாடு ஊடாக காட்டுகின்றது.    

 

புலிப் பாசிசத்தின் அரசியலாக இருந்த அதன் சுரண்டும் வர்க்க உள்ளடக்கத்தை மறுத்து "வியூகம்" போடுகின்றனர். அதை எப்படி என்பதை நீங்களே பாருங்கள். "புலிகளது ஏக பிரதிநிதித்துவ நிலைப்பாடானது ஒரு பாசிச வெளிப்பாடாகவே புரிந்து கொள்ளப்பட்டது. இதனால், எமது போராட்டத்திற்கு சாதாரணமாக தார்மீகரீதியாக கிடைக்கக் கூடிய ஆதரவுகள் கூட கிடைக்காமற் போயின. எமது போராட்டத்தை சர்வதேசரீதியாக தனிமைப் படுத்துவதற்கான சிறீலங்கா அரசின் முயற்சிகளுக்கு உரம் சேர்ப்பதாகவே இந்த செயற்பாடு அமைந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பானது இந்த ஏக பிரதிநிதித்துவ நிலைப்பாட்டை வென்றெடுப்பதற்காக என்ன விலையை கொடுக்கவும் தயாராக இருந்தது." இப்படி "புலிகளது ஏகப் பிரதிநிதித்துவ நிலைப்பாடானது ஒரு பாசிச வெளிப்பாடாகவே புரிந்து கொள்ளப்பட்டது" என்று கூறி, அதை தவறானதாக கூறிக்கொள்கின்றனர். "ஏக பிரதிநிதித்துவ நிலைப்பாட்டை" தன்னியல்புவாதத்தின் ஊடாக இட்டுக்காட்டுகின்றனர்.

 

இங்கு புலிகளின் சுரண்டும் வர்க்க அரசியல் உள்ளடக்கத்தை மறுக்கின்றனர். அதில் இருந்து உருவான அதன் பாசிசமயமாகல் மற்றும் அதன் சர்வாதிகாரப் போக்கையும் மறுக்கின்றனர். மொத்தத்தில் புலியின் சுரண்டும் வர்க்க அரசியல் உள்ளடக்கத்தை மறுக்கின்றனர்.

 

இங்கு புலிகள் பற்றிய இவர்கள் விமர்சனம், வர்க்க உள்ளடக்;கம் சார்ந்தல்ல. மாறாக அந்த வர்க்கத்திடம் மிகையாகிப் போனதாக இவர்கள் கருதும் "தன்னியல்புவாத" குணாம்சம் மீது  விமர்சனமாக செய்கின்றது. அதை அந்த சுரண்டும் வர்க்கத்தின் இடது பிரிவுக்குரிய அரசியல் உள்ளடக்கத்தில் நின்று, முன்வைக்கின்றது.

 

இதையும் எங்கிருந்து பெறுகின்றனர் என்றால், இலக்கிய திருட்டில் ஈடுபடுகின்றனர். அதே புலிக்குணாம்சத்துடன், தமிழீழகட்சியின் திருட்டு நடத்தை சார்ந்த உள்ளடக்கத்துடன், தனக்கு ஏற்ப திருடி அதை திரித்தும் கடைவிரிக்கிகின்றது.

 

புலிகளின் சுரண்டும் வர்க்க உள்டக்கத்தின் மீதும், அது வெளிப்படுத்திய குணாம்சம் மீதும், நாம் மட்டும் விமர்சனம் செய்து வந்தோம். புலிகளின் பாசிசம் நிலவிய காலத்தில், ஒரு மக்கள் சார்ந்த விமர்சனத்தை தொடர்ச்சியாக நாம் நடத்தி வந்தோம். இதை நாம் மட்டும் செய்ததால், மாறி வந்த அரசியல் நிலைமை பகுத்தாயும் போக்கில் ஏற்பட்ட பல மாற்றத்தை விளக்க பல புதிய சொற்களைக் கூட அறிமுகம் செய்தோம். இதன் மூலம் ஒரு அரசியல் உள்ளடக்கத்தை நாம் உருவாக்கினோம். எம் விமர்சனம் சார்ந்த அரசியல் உள்ளடக்கத்தையும், பல புதிய  சொற்களையும் எமது விமர்சனத்துக்கு வெளியில், வேறு யாரும் வெளிப்படுத்தியிருக்கவில்லை. ஏனென்றால் அப்படி விமர்சனமே இருக்கவில்லை. 

 

இப்படிப்பட்ட ஒரு நிலையில், எம் விமர்சனத்தை இருட்டடிப்பு செய்தபடி, அதை "மே18" காரரும், வேறு பலரும் செத்த புலியை அடிக்கத் திருடுகின்றனர். செத்த புலியை "தன்னியல்புவாதம்" ஊடாக திட்ட, "மே18"காரர் அதை தமக்கு ஏற்பத் திரிக்கின்றனர்.

 

புலியின் வர்க்க அரசியலைப் பாதுகாத்தபடி, புலித்தலைமையின் குணாம்சத்தை "தன்னியல்புவாதம்" ஊடாக திட்டி முன்வைக்கும் "வியூகத்தின்;" விமர்சனங்கள்;, அனைத்தும் எமது கடந்தகால விமர்சனத்தில் முன்வைக்கப்பட்டவைதான். அதை எம்மிடம் திருடித்தான், அதில் இருந்த வர்க்க உள்ளடக்கத்தை அரசியல் ரீதியாக நீக்கித்தான், "மே18" என்ற சதிகாரக் கும்பல் அரசியல் "வியூக"த்தைப் போடுகின்றது. இதன் அரசியல் உள்ளடக்கம் மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை அன்று முதல் இன்று வரை மறுப்பது தான். அதை அவர்கள் தங்கள் குள்ள நரித்தனத்துடன், தமது வர்க்க உள்ளடக்கத்தில் சேறுபூசி மறுக்கின்றனர். எப்படி என்பதை பார்ப்போம்

 

தொடரும்

பி.இரயாகரன்
17.01.2001