Language Selection

ஊடறு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பெண்ணுக்கு இழைக்கப்படும் உச்சபட்ச அநீதி, உடல் ரீதியாக, பாலியல் ரீதியாக அவள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்; அவளது ஒப்புதலின்றி அவள் உடலைப் பலவந்தமாக...மூர்க்கத்தனமாகக் கையாளும் கொடூரமான, காட்டுமிராண்டித்தனமான வன்முறை.

இந்த வன்முறைக்கு இரையாகி வாழ்க்கையைத் தொலைத்தவர்களின் நெகிழ்வான சோகக் கதையைச் சொல்லி நெக்குருக வைக்கிறது..இத்துடன் இணைத்துள்ள வீடியோ இணைப்பு.

Sunitha Krishnan's fight against sex slavery

இதன் உள்ளர்ந்த நோக்கம் அனுதாபத்தை மட்டும் கிளர்த்திவிட்டு ,அங்கலாய்ப்புக்களைச் சம்பாதித்துக் கொள்வதல்ல.

பாரதி சொல்வதைப் போன்ற வெற்றுப் புலம்பல்களும், பரிதாபப் பெருமூச்சுக்களும், உச்சுக் கொட்டல்களும், இரங்கல் தீர்மானங்களும் இவர்களுக்குத் தேவையில்லை. சமூக விலக்கம், மனித ஜீவிகளாகவே மதிக்கக் கூசும் மனத்தடைகள் இவற்றிலிருந்து சமூகம் விடுபட்டாக வேண்டும் என்பதே இந்த உரைவழி சுனிதா கிருஷ்ணன் விடுக்கும் செய்தி.

வலியின் கடுமை...அதன் வீரியம் இவற்றின் நிஜமான தாக்கம் அது உணர்வாகும்போதே உறைக்கும்.அத்தகைய வலிக்கும்,வேதனைக்கும் ஆட்பட்டவர் சுனிதாகிருஷ்ணன்.தனது பதின் பருவத்தில் -15 வயதில்- எட்டு மூர்க்கர்களால் gang rape எனப்படும் ஒட்டுமொத்தமான பாலியல் வன்முறைக்குத் தான் ஆட்பட நேர்ந்ததை எந்த மனத்தடையும் இன்றி முன் வைக்கும் சுனிதா கிருஷ்ணன்,அந்தச் சம்பவத்தின் வலியும்,அதனால் விளைந்த கோபமும் மட்டுமே தன்னிடம் இன்னமும் கூடக் கனன்று கொண்டிருப்பதை ஆக்ரோஷமாக வெளியிடுகிறார்அதனால் தான் பட்ட உடல் காயங்கள் ஒரு புறமிருக்க அதற்காகவே பெண்ணைப் புறக்கணிப்புச் செய்யும் 'நாகரிக சமூக'த்தின் மீதே அவரது சினம் பொங்கி வெடிக்கிறது.

சுனிதாகிருஷ்ணனின் கோபம் எரிக்கும் சினமல்ல; இது போன்ற குற்றங்களுக்கு மாற்றுத் தேடி அவற்றைத் தணிக்கும் சினமாகத் தன் ரௌத்திரத்தை மடை மாற்றிக்கொண்டதிலேதான் சுனிதாவின் வாழ்க்கை,முத்திரையைப் பதிக்கிறது;தன் சமூக அக்கறையைப் பதிவு செய்கிறது;கழிவிரக்கத்தால் தன் வாழ்வையும் வீணடித்து சமூகத்துக்கும் பயன்படாமல் போவதில் அவருக்குச் சம்மதமில்லை; தனக்கு ஏற்பட்ட இழப்புக்குள் முடங்கிப் போய்விடாமல்... தன் பார்வையை விசாலமாக விரித்துத் தன்னைப் போன்ற பாதிப்புக்களுக்கு ஆளானவர்களைத் தேடித்தேடி,அவர்களின் நோய்க்கு மருந்திடும் அற்புதமான பணியில் தன்னை தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டதன் வழி தன் வாழ்க்கையைப் பொருள் பொதிந்ததாக மாற்றிக் கொண்டிருக்கும் இந்தப் பெண்மணிக்கு வெற்றுப் புகழ்ச்சிகள் தேவையில்லை;அவற்றை அவர் நாடுவதும் இல்லை.

பாலியல் தாக்குதல்களுக்கு ஆளான 3200 பெண்கள், அவரவர்க்கு ஏற்ற வழியில் மறுவாழ்வு பெற வழி காட்டி உதவியிருக்கிறார் இவர்.குறிப்பாக ஆணாதிக்கம் மிகுந்த சமூக அமைப்பில்-ஆண் செய்யும் கடினமான பணிகளையே துணிந்து மேற்கொண்டு (வெல்டிங்,தச்சு,மேஸ்திரி)தங்கள் உடல் வலுவைக் காட்டுவதன் வழி தாங்கள் உடலால் வீழ்த்தப்பட்ட நிலையைக் கடந்து போகும் இந்தப் பெண்கள்,இவ்வாறான பணிகளையே தங்கள் எதிர்ப்பின் குறியீடாக வெளிப்படுத்தும் துணிவை இப் பதிவில் காண முடியும்.

3,4,5 வயதிலுள்ள பச்சிளம் குழந்தைகளின் பாலியல் பலியோடு தன் உரையைத் தொடங்கும் சுனிதா,தன் உரையின் நிறைவில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது மகாகனம் பொருந்திய ...மேன்மை தங்கிய இந்தச் சமூக அமைப்பைத்தான்.

நாய்க்கு எலும்புத் துண்டை வீசுவது போல இத்தகைய உதவி அமைப்புக்களுக்குத் தானம் தர முன் வரும் மனிதர்களும் கூட வீட்டு உதவிக்காக என்று வரும்போது இந்தப் பெண்களைச் சேர்த்துக் கொள்ளத் துணியாத இரட்டை மனப்போக்கைப் பிட்டுப் பிட்டு வைத்து''இவர்களுக்கு வேண்டியது உங்கள் தான தருமமோ பிச்சையோ அல்ல, அவர்களையும் தன்மதிப்புமிக்க மனிதஜீவிகளாக ஏற்க முன் வரும் மாண்பு மட்டுமே''என்பதை அழுத்தமாக முழக்கமிட்டுச் சமூகச் சுயத்தைத் தோலுரிப்புச் செய்கிறர் சுனிதா.

அவர் வைக்கும் குற்றச் சாட்டில் என்ன பிழை இருக்கிறது? விஸ்தாரமாக....விவரணைகளோடு gang rape ஐ முன் வைத்த 'பருத்தி வீர'னைக் கொண்டாடி விழா எடுத்து அதுவே உலகத் தரம் என்று கொண்டாடுபவர்கள்தானே நாம்? பாதிப்பைத் துல்லியமாகக் காட்டியாக வேண்டும் என்பதில் எடுத்துக் கொண்ட முயற்சி-அப்படிப்பட்ட செயல்பாடுகள் தவறு என்பதை இம்மியளவு கூட உணர்த்துவதாக இல்லையே?

அவ்வாறான தாக்குதலுக்கு ஆளான பெண் என்பது வெளிப்பட்டு விட்டால் கூட ஊரும்,சுற்றமும் இழிவுபடுத்தும் என்பதற்காகத்தானே அவளைக் காதலனின் கையால் கண்ட துண்டமாகக் கூறு போட விடுகிறார் இயக்குநர்?பழகிப் போன மதிப்பீடுகளுடன் அதைப் பார்க்கும் சராசரிப் பார்வையாளனின் பொதுப் புத்தியிலும் அது நியாயம் என்ற எண்ணம்தான் ஆழமாகப் படியுமே ஒழிய,அவளும் வாழ்வதற்குத் தகுதி படைத்தவள் என்ற சிந்தனை எப்படி உதிக்கும்?

கலைப் படைப்புக்கள் என்ற பெயர் சுமந்து இத்தகைய படங்கள் வந்தாலும் பார்வையாளர்களின் இரக்கத்தைத் தூண்டுவதைத் தவிர இவை வேறு எதைச் சாதித்திருக்கின்றன?எந்தப் போர்வையில்- எந்த முகமூடியுடன் சொன்னாலும், இவ்வாறான தாக்குதல்களுக்கு ஆட்பட்ட பெண்கள் வாழத் தகுதியற்றவர்கள் என்பதுதானே இவைகளெல்லாம் வலியுறுத்த விரும்பும் கருத்து?அதுதானே அவை முன் வைக்கும் நிஜம்?

இந்தச் சந்தை இரைச்சல்களுக்கிடையே ....இப்படிப்பட்ட மூளைச் சலவைகளுக்கு ஆட்பட்டுக் கிடக்கும் நமக்கு ஆயிரம் சுனிதா கிருஷ்ணன்கள் கூடப் போதாது என்பதுதான் கசக்கும் உண்மை.

இந்தப் பதிவைப் படிக்கும் வாசக நண்பர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்.

இதன் இணைப்பான வீடியோ பதிவைப் பாருங்கள்;சுனிதா கிருஷ்ணனின் உரையைக் கேளுங்கள்......

உங்களால் முடிந்தட எல்லை வரை இந்தச் செய்தியைக் கொண்டு சென்று சமூக மனச் சாட்சியை உலுக்கி எழுப்புங்கள்.

சுனிதா போன்றவர்கள் செய்யும் தொண்டின் மகத்துவத்தை மனங்கொள்ளச் செய்யுங்கள்.

நாம் நல்ல மனிதர்கள் என்று காட்டுவதற்காக அல்ல,
நாம் மனிதர்கள் என்பதே அப்போதுதான் நிரூபணமாகும்.

Name sonthary
January 15, 2010   08:20 AM PST

January 14, 2010 at 6:18 am


வெறும் அடயாளத்தேடல்களுக்காக பெண்ணியத்தை பாவிப்பவர்களாகவே இவர்களை நான் இனம் காண்கின்றேன். பார்வையாளர்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் உறுப்புகளின் பெயர்களையும் சொல்லாடல்களையும் பயன்படுத்துகின்றனர். இவைகள் கண்டிப்பாக கண்டனத்துக்குரியவை.

பெண்ணியம் என்னும் வலைப்பதிவில் இவற்றுக்கான மறுப்பு என்னும் பெயரில் ஒரு பதிவு போடப்பட்டுள்ளது.

பெண்ணியம் வலைப்பதிவு ஜனநாயகத்தன்மை அற்றது. கருத்துச் சுதந்திரம் அற்றது. இலங்கையில் நடந்த போரை ஆண்களின் போராக அடயாளப்படுத்தும் தில்லை என்பவரின் கட்டுரைகுறித்து எனது விமர்சனத்தை எழுதியிருந்தேன். சுருக்கமாக இனவாதப்போரை எவ்வாறு ஆண்களின் போராக கருத முடியும் சந்திரிக்கா சிறிமாவோ போன்ற பெண்கள் இந்தப்போரில் பங்குவகிக்கின்றார்களே என்பதே எனது கருத்து. உடனே எனது கருத்து நீக்கப்பட்டது.

தில்லை என்பவரும் லீனா பேன்றே யோனி குறி போன்ற செற்களை அதிகளவு கையாழ்வதும் அனைத்துப்பிரச்சனைகளையும் யோனி குறிக்குள் அடக்கி விட முற்படுவதும் அபத்தமானது.

தனிப்பட்ட தேவைகள் அடயாளத்தேடல்கள் போன்றவைகளுக்காக இவ்வாறு கீழ்தரமாக நடந்து கொள்வது அருவருக்கத்தக்கது.

அடிப்படையில் பசியால் மாண்டுபோகும் மக்களின் பிரச்சனைளை யோனி குறிப்பிரச்சனையாக இனம்காண்பது எந்தவகையில் சரியானது? ஒரு மனிதன் உணவுண்டு உடலில் தென்பிருக்கும் போதே உடலுறவை செய்யமுடியும். உணவுத்தேவையின் சமன்பாட்டிற்கான பிரச்சனையும் அதை பெறமுற்படும் புரட்ச்சிகளின் அடிப்படையும் கூட யோனியின் தேடல் சம்மந்தப்பட்டதாக எழுதுவது அருவருக்கத்தக்கது. இவை வறுமைப்பட்ட மக்களை சாகடிக்கும் பின்னணியை கொண்டது. இந்தக் குரல்கள் அதிகாரவர்க்கத்தின் என்னுமொரு வடிவமே. இந்த உலக இயக்கத்தை ஆசையின் அடிப்படையில் இனம்காணும் கண்ணதாசன் போன்ற மதவாதிகள் கருத்தை கூட கடந்து வரமுடியாத ஜென்மங்கள் தேவைகள் குறித்து சிந்திக்கும் திறனற்றவர்கள். உண்மையான பெண்ணியவதிகளுக்கு இவ்வாறன சுயநல திரிப்புவாதிகள் எதிரானவர்கள். இனம்கண்டு அப்புறப்படுத்தப்படவேண்டியவர்கள்.

நன்றி ஊடறு

http://udaru.blogdrive.com/archive/1108.html