09292023வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

ஏரில்லை பூட்டுவதற்கு எருதுமில்லை வாக்குப்பெட்டியுடன் வாருங்கள்…

அதேஉரப்பும் உரைகளும் உறுதிமொழிகளும்
உபதேசம் செய்தபடியே மீளவும் மேடையேறுகிறது
எறிகணைகளைவிடவே கொடூரமானதாய்
கரங்களை அசைத்தபடியே வருகிறார்கள்
எந்தப் பதுங்கு குழிகட்குள்ளும் ஒதுங்கமுடியாதபடியாய்
யுத்தத்தில் எஞ்சியவர்கள் கைதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள்

போரின் கோரமும் இழப்புகளும் ஆறாத்துயரும்
கொதிதணலாய் நெஞ்சத்துள் வெந்துகிடக்கிறது
கருகிய பிஞ்சுகளின் கதறல் கண்மூடா கொடும் இரவுகளாய்
ஜயோ முருகாவென்று அழுது ஓயவில்லை
நஞ்சொடு வலம்வரும் நாகங்கள் செட்டைகழற்றி
சீற்றமடக்கி கையில் தட்டுடன் உந்தன் திருவடியில்
கல்லாய் சமைந்தாய் போ நல்லூர்கந்தா…….

கரிகாலன் உயிர்பிரியக்  காத்திருந்து
தெருநாய்கள் தேர்தல் பரிவார ஊளையிடல்
ஆணையிட்டபடி வால்மடக்கிப் பேரழிவிலும் பேசாஅடிமைகள்
முன்று தசாப்தம் பின்னோக்கிக் கண்முன்னே
தின்றும் திமிரடங்கா கூத்தமைப்பாய்
நின்று நிதானிக்க சனம்முடியா நெடும்துயர்
வென்று தருமாப்போல் குன்றேற்றிப் படுகுழியில் வீழ்த்துதற்காய்…

பொங்கலிற்கு முற்றமில்லை சுற்றி நிற்கப்பிள்ளையில்லை
சுற்றமில்லை உற்றார் உறவில்லை
பெற்றோர் உடன்பிறந்தோர் பெரியோரில்லை
பட்டியில்லை பசுவில்லை ஏரில்லை பூட்டுதற்கு எருதுமில்லை
வாக்குப்பெட்டியுடன் வாருங்கள்………


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்