பாலின சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-ஐ நீக்க வேண்டும் என்று டில்லி உயர்நீதி மன்றத்தில் கடந்த 2001-ஆம் ஆண்டு ‘நாஸ் பவுண்டேசன்’ என்கிற தனியார் அமைப்பு, வழக்கு தொடர்ந்திருந்தது.

  

 

 

 

 

இவ்வமைப்பு பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இயங்கும் அமைப்பாகும். கிட்டத்தட்ட 8-வருடங்களாக என்ன தீர்ப்பு சொல்வது என்று முழித்துக் கொண்டு வழக்கை இழுத்தடித்துக் கொண்டிருந்த டில்லி உயர்நீதி மன்றம் இந்த வருடம் ஜூலை 2-ஆம் தேதி  ஏ.பி.ஷா, எஸ்.முரளிதர் ஆகிய நீதிபதிகளால் தீர்ப்பளித்து இருக்கிறது. 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவாகிய வாழ்க்கைப் பாதுகாப்பு, 14-வது பிரிவாகிய தனிமனித சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் 15-வது பிரிவாகிய மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடுத்தலைத் தடுத்தல் ஆகிய சட்டங்களை மீறும் விதமாகவும், மனிதரின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகவும் இந்திய குற்றவியல் சட்டத்தின் 377-ஆவது பிரிவு இருக்கிறது என்பதன் அடிப்படையில், 18-வயதிற்கு மேற்ப்பட்ட வயது உடையவர்கள் பரஸ்பரம் சம்மதத்துடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடத்தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்து இருக்கிறது.
 
இத்தீர்ப்பு குறித்து ஆதரவுகளும் இருந்தது. பலத்த எதிர்ப்புக்களும் மதவாதிகளிடமிருந்து கிளம்பி இருக்கிறது.

இருக்கட்டும், இக்கட்டுரையின் நோக்கம் மதவாதிகளுக்கு ஆதரவாகவோ, பாலின சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு ஆதரவாக அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராகவோ நாம் ´கலாச்சார காவலர்களாக´ விவாதத்தை தொடரவில்லை.

உலக சுகாதார நிறுவனம் [WHO] 1992-இல் தன்பால் புணர்ச்சியை அங்கீகரிப்பதாக அறிவித்ததும் மற்றும் ஐரோப்பியாவில் சில நாடுகளைத் தவிர்த்தும் அமெரிக்கா மற்றும் கனடாவிலும் தன்பால் புணர்ச்சிகளை அங்கீகரித்து சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது என்பதையும் இங்கே சுட்டிக்காட்டுகிறோம். அதே சமயம், மருத்துவ உலகம் இதன் ஆபத்துக்களை குறித்து எச்சரிக்கை செய்திருப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.[1][2]

இதையெல்லாம் தாண்டி வேறு சில தார்மீக கேள்விகள் எம்முள் இருக்கின்றன.  

சுயபுணர்ச்சிகளை இலக்கியத்தின் பெயரால் நியாயப்படுத்தும் இலக்கியவாதிகள் தங்கள் படைப்புக்களால் இளைய தலைமுறையினரை எந்த திசையை நோக்கி திருப்ப முயல்கின்றனர் என்பதே அக்கேள்வி! 

ஓரினச்சேர்க்கையிலும், இருபால்புணர்ச்சியிலும்[3][4] ஈடுபடும் பொதுமக்களின் புணர்ச்சி உணர்வுகள் பெரும்பான்மையான மக்களின் சிந்தனைகளை பாதிக்க வைப்பதில்லை. ஆனால் இதுகுறித்து எழுதுவதும், அதுவே மிக உன்னத உணர்வென்றும் கிளர்ச்சி இலக்கியங்களாக வரும்போது இளைய சமுகத்தினரை தவறான நிலைப்பாடுகளுக்கு கொண்டு செல்ல தூண்டுகோலாகி விடக்கூடும். 

தமிழக சூழலில் பாலியல் குறித்த விவாதங்கள் இலக்கியவட்டத்தில் நடக்கும் போது, பாலியல் கருத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் இருபிரிவுகள் என்றும் உண்டு. அவர்களுடைய கடும் கண்டனங்களையும் விவாதங்களையும் தாண்டி புணர்ச்சிகள் குறித்து பேசும் பெண்/ஆண் இலக்கியவாதிகளின் அரசியல் குறித்த கேள்வியை இதுவரையில் எவரும் எழுப்பியதில்லை. ஏன்? 

இந்நிலையில் பெண்ணியம் பேசும் இலக்கியவாதிகள் பெண்ணியத்திற்கு போராடும் போராளிகளாக தங்கள் சுயஇச்சைகளை கவித்துவத்தில் திணித்துக் கும்மாளமிடுகிறார்கள். இதையே தான் ஆண் கவிஞர்களும் செய்கிறார்கள். ஆனால் அவர்களுடைய உடல்கள் அரசியல் நோக்கத்திற்காக புணர்ச்சிக்காக உபயோகப்படுத்தப்படுகிறதா என்று எமக்கு தெரியவில்லை. அதேபோல் சுயபுணர்ச்சி குறித்து பேசும் தமிழகத்தை சேர்ந்த ஆண் இலக்கியவாதிகளான ராஜன் குறை, அ.மார்க்ஸ் போன்ற ஒருசிலர் தான் புலியெதிர்ப்பு கூட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் புணர்ச்சி பற்றி பேசும் பெண்களில் பலர் புலியெதிர்ப்பாளர்களுடனான தொடர்புகளை என்ன சொல்வது? இந்தப் பெண்ணியவாதிகள் இந்திய உளவுக்கு எடுபிடி ஆட்களா? 

தமிழகத்தில் இலக்கியத்துறையைச் சேர்ந்த சில பெண்கள் ஈழஅரசியலுக்காக தவறான முறையில் பயன்படுத்தப்படுவதைக் குறித்து ´பெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா´[5] சார்பாக விசாரணை நடத்தக்கோரி மின்னஞ்சல் செய்திருந்தோம். சில அரசியல் காரணங்களுக்காக அவை முக்கியத்துவம் பெறவில்லை. 

இருப்பினும் எத்தனை காலம்தான் இந்த ´புணர்ச்சி பெண்ணிய காமெடி´களை இரசித்துக் கொண்டிருப்பது? 

பெண்ணியவாதிகளில் புணர்ச்சி ஒப்பாரிகளிடம் சமீபத்தில் மீண்டும் ஒரு வாக்குவாதம் ஆரம்பித்திருக்கிறது. 

நவம்பர் 2009-இல் தீராநதியில்[6] வெளியான, "பாலியல் கலகம்: நொறுங்கும் கலாச்சாரம்" என்னும் தலைப்பில் பாலியல் சிறுபான்மையினர் வழக்குக்கு ஆதரவாக அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து கட்டுரை எழுதியிருந்தார் மீனா என்பவர்.

அறநெறிகளால் மட்டுமே வழிநடத்தப்படும் இந்திய கலாச்சாரத்தை ஆட்டம் காண வைத்திருக்கிறது டில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு என கட்டுரையை தொடங்குகிறார்....

இந்திய கலாச்சார நெறிகள் என்பது அறநெறி சார்ந்ததல்ல. இந்துத்துவத்தின் மதம் சார்ந்த சிந்தனைகள் அறம்சார்ந்த நெறிகளாய் புனையப்பட்டு பெண்ணியத்தின் மீது திணிக்கப்பட்ட கலாச்சார வீச்சங்கள் அவை.  

ஆனால், அறநெறி என்பதற்கு மதமில்லை, கலாச்சாரமில்லை. தனிமனிதனின் கட்டுப்பாடுகளும், பகுத்தறியும் சிந்தனைகளும், ஒழுக்கங்களாகி ஆண்களுக்கும் பெண்களுக்குமாக நடுநிலைமையோடு இயங்கிக் கொண்டிருக்கிறது. 

கட்டுரையாளர் மீனாவோ ´அறநெறி´ என்பதை ஒரு மோசமான சொல்லாடலாக இளையதலைமுறைக்கு அடையாளப்படுத்த முற்பட்டிருக்கிறார்.

‘மனிதரை உள்ளுணர்ச்சிகள் வழிநடத்த வேண்டும். அறநெறிகள் அல்ல’ என்ற நீச்சேவின் வாக்கியங்கள் துணைக்கு வேறு...

புணர்ச்சியாளர்கள் தனி மனித ஒழுக்கங்களையும் தாண்டி இங்கே இலக்கியம் பேசும் நோக்கங்களை பாருங்கள். தன் புணர்ச்சியின் புராணமே இலக்கியமாக மாறும்போது ஒரளவு பக்குவமற்ற சமுகம் வாசிக்கும் போது எந்நிலைக்கு கொண்டு செல்லும்? 

நவம்பர் 2009-´அம்ருதா´[7] இதழில் மீனா பின்நவீனத்துவ இலக்கியவாதியும் புலியெதிர்ப்பாளருமான சோபாசக்தியை நேர்காணல் செய்து  வெளியிட்டிருந்தார். சுயபுணர்ச்சி, இருபால் புணர்ச்சி, ஓரினச்சேர்க்கை, புணர்ச்சிகள் குறித்து பேசும் பெண்ணிய இலக்கியவாதிகளில் அனேகர் ஈழத்தைச் சேர்ந்த புலியெதிர்ப்பு அரசிலோடு புணரும் மர்மம் குறித்து எப்பொழுதுமே எமக்குள் கேள்விகள் உண்டு.

இன்னொரு பக்கம் ´சூரிய கதிர்´[8] என்னும் இதழில் "ஓரினச் சேர்க்கையை குற்றம் என சொல்லும் இந்தியக் குற்றவியல் சட்டம் 377-வது பிரிவை நீக்குவது குறித்து உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ள நிலையில் ஊடகங்களில் ஓரினச் சேர்க்கை குறித்து ஆரோக்கியமான விவாதம் எழுந்துள்ளது. கவிஞர் லீனா மணிமேகலை கூட தன்னுடைய ‘உலகின் முதல் அழகிய பெண்’ கவிதைத் தொகுப்பின் முன்னுரையில், தான் இருபால் விருப்பமுள்ளவர் என எழுதியுள்ளார். கட்டுப்பாடுகள் மிக்க இந்திய சமூகத்துக்குள் இத்தகைய வெளிப்படையான அறிவிப்புகள், விவாதங்கள் மாற்றங்களை ஏற்படுத்துமா?” என்று குட்டி ரேவதியிடம் நேர்காணல் நடத்தியவர் கேள்வியெழுப்ப....

அதற்கான குட்டிரேவதியின் பதில்களால் எதிர்வினையாற்றியிருக்கிறார் லீனா மணிமேகலை.[9]

"பாலியல் விருப்பங்களும், தேர்வுகளும் அவரவர் சுதந்திரம். பளிச்சென்று சொல்கிறேன், என்னைப் பொறுத்தவரை குறியுடனான புணர்ச்சி என்பதை விட பாலுறுப்புகளை உரசுவதால் உண்டாகும் கிளர்ச்சியே உச்சத்தை தரும். பாலுறுப்புகளை வருடி, முத்தமிட்டு எழுச்சி ஏற்படுத்தச் செய்வதற்குரிய விரல்களோ, நாக்கோ ஆண் தோழமையுடையதாய் இருந்தால் என்ன? பெண் தோழமையுடையதாய் இருந்தால் என்ன? ஏன் என்னுடையதாகவே இருந்தால் தான் என்ன? எல்லாமே எனக்கு ஒன்றுதான், விருப்பம் தான். ஆக இருபாலுமை என்பது என் தேர்வு, உரிமை" என்கிறார் லீனா மணிமேகலை.

அதைத்தான் இந்நாள்வரையிலும் பெண்ணியத்தின் பெயராலும், இலக்கியத்தின் பெயராலும் செய்துக் கொண்டிருக்கிறார். 

ஓரினச் சேர்க்கையாளர்கள், இருபால் சேர்க்கையாளர்களையும், கூட்டு  கலவி செய்பவர்களையும் அங்கீகரிப்பதில்லை. இருபால் புணர்ச்சியாளர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களின் சேர்க்கை குறித்து விமர்சிப்பார்கள். அவரவருக்கு அவரவருடைய புணர்ச்சி சரியான தேர்வாக இருக்கிறது. ஆனால் இயற்கையில் ஆண்/பெண் சேர்க்கையின் புணர்ச்சி உலகில் பெரும்பான்மையோரிடம் இருக்கிறது. 

இனி விஷயத்திற்கு வருவோம்....

ஈழத்தமிழர் நலன் காக்க கோரி இந்திய நாடாளுமன்றத்தை முற்றுகையிட போவதாக ´ஈழத்தமிழர் தோழமைக் குரல் அமைப்பு´ அறிவித்திருந்தது. அதன்படி பிப்ரவரி 10,2009-இல் நாடாளுமன்றம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது[10] அதில் இருந்த புலியெதிர்ப்பு கூட்டத்துடன் தொடர்புள்ள சில பெண் இலக்கியவாதிகளை கண்டோம். 

2008-ஆம் வருடம் கனடாவில் புலியெதிர்ப்பு கூட்டங்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெண்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்ட கவிஞர் மாலதி மைத்ரீ, அதில் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை வைத்தவருக்கு புலிகளுக்கு சார்பான கோஷங்கள் இந்தியாவில் எதற்கு?  

லீனா மணிமேகலையால் ஒழுங்கமைக்கப்பட்ட- ஈழத்தமிழ்க் கவிஞர்களின் கவிதை நூல் விமர்சனக் கூட்டத்தில் கூட்டுக்கலவி கூட்டாளியான சுகனுக்கு இலங்கையின் தேசிய கீதத்தை பாட வாய்ப்பளித்த லீனா மணிமேகலைக்கு புலிகளுக்கு ஆதரவாக கூட்டத்தில் கோஷங்கள் எதற்கு? 

தமிழக பெண் இலக்கியவாதிகளில் புணர்ச்சி பேசும் பெண்களின் அரசியல் செயல்பாடுகள் இலக்கியத்தின் ஊடாக வெளிப்படும் போக்குகள் குறித்தும் அதன் நம்பகத்தன்மையைக் குறித்தும் நாம் அலட்சியமாக இருக்க முடியாது. 

அதை நாம் கேள்விக்குட்படுத்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஈழம்  சின்னாபின்னமாக்கி இன்று சிதைந்துபோய் இருப்பதற்கு காரணம் அரசியல்வாதிகள் மட்டுமல்ல. தமிழக பெண்ணிய புணர்ச்சி இலக்கியவாதிகளின் பங்கும் அதிகம். 

ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் பொதுமக்களைப் பற்றி நாம் எந்த கருத்தையும் இங்கே முன்வைக்கவில்லை. தனிமனித சுதந்திரத்தில் நாம் தலையிடுவதாக புணர்ச்சி பெண்ணியம் முணங்ககூடும். 

ஆனால் கேடுகெட்ட அரசியல் விபச்சாரத்தை நாம் விமர்சிக்கலாம் அல்லவா? 
 
பிரான்ஸ் நாட்டின் பெண் விடுதலைக்கு போராடிய ´சிமோன் தெ பொவ்வா´ Le Deuxieme Sexe´[11] என்ற நூலின் முதல் பகுதியில், 

´பால்´ அடிப்படையின் செயல்பாடுகளால் ´ஒரு பெண்ணை´ தீர்மானிக்க முடியாது. அவ்வாறே ´பாரம்பரியப் பெண்ணுக்குறிய´ இலக்கணம் என்ன என்பதில் தேடுதலை தொடங்குகிறார்.... 

பெண்ணியத்தின் போராட்டங்கள் பாலியல் கட்டமைப்புகளை மட்டும் தகர்ப்பது இல்லை. எவ்வளவோ சமுக அவலங்கள் இருக்க அதையெல்லாம் எழுத்தில் விவாதிக்காமல் கவிதையில் புணர்ச்சி செய்யும் பெண்ணிய எழுத்துக்கள் எதை நோக்கி செல்கிறது? 

அதிகார மையமா? உரிமையை நோக்கியா? புணாச்சிகளை நோக்கியா? 

புணர்ச்சி இலக்கியவாதிகள் அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இலக்கியத்தின் மூலமாக இளைய சமூகத்தினரை திசைமாற்றம் செய்ய முற்படும் போது நாம் எதிர்வாதம் செய்து அம்பலப்படுத்துவதே கடமையாகிறது. 

இதையே தோழர் இரயாகரனும் அம்பலப்படுத்த முயன்றார். 

பெண்கள் சந்திப்பு நடத்தும் பெண்களின் யோக்கியதையை விமர்சித்த போது, குறிப்பாக இராஜேஸ்வரி அம்மாளை பற்றிய இரயாகரன் விமர்சனத்தை புலியெதிர்ப்பு கூட்டம் பெண்ணியத்தை அவமதிப்பு செய்கிறார் என்றது. 

தோழர் இரயாகரனின் கேள்வி ஆணாதிக்க திமிரால் வரவில்லை. பெண்ணிய கோட்பாட்டாளர்களுக்கு எதிரான கருத்தும் அல்ல. அறிநெறி சார்ந்ததே. 

பெண்ணியம் குறித்து விவாதிக்க கிளர்ச்சி தேவையில்லை. அவை ஒரு பகுதி மட்டுமே. பெண்ணிய உடல்கூறு சார்ந்த அறிவு தேவை. அவ்வறிவே கிளர்ச்சியானாலும் நிதானமாக பார்க்க வைக்கிறது.  

´ஆயுதம் தன் கையில் இருந்தாலும், எதிரியின் கையில் இருந்தாலும் அழிவு அழிவு தான்´ என்கிறார் லீனா மணிமேகலை. 

அதையேதான் புணர்ச்சி இலக்கிய பெண்களுக்கும் சொல்கிறோம்...

ஆயுதத்தைவிட, சக்திவாய்ந்த பேனாவையல்லா உங்கள் கைகளுக்குள் வைத்திருக்கிறீர்கள். சிந்தனைகளை ஒருமுறை அலசி பாருங்கள். எதை சமுகத்திற்கு கொடுக்க விரும்புகிறீர்கள் என்று.... 

தன்னுடைய புணர்ச்சி, கிளர்ச்சி, வரைமுறையற்ற பாலியல் உறவுகள், அதனூடாக முன்னெடுக்கும் அரசியல் நகர்வுகளுக்கு பெயர் இலக்கியமாக இருக்க முடியாது. எழுத்து விபச்சாரமாகத்தான் இருக்கும். 

"விபச்சாரம் என்பதற்குக் கொள்ளும் பொருள் என்னவென்றால், தங்கள் ஆசைக்கும், மன உணர்ச்சிக்கும் விரோதமாய் வேறு நிர்பந்தத்திற்காக அடிமைப்படுவதையே தான் இங்கு நாம் விபச்சாரம் என்று கொள்ளுகிறோம்." என பெரியார் குறிப்பிடுகிறார். 

அந்த வகையில் இருபால் புணர்ச்சியாய் இருந்தால் தான் என்ன? கூட்டுக் கலவி புணர்ச்சியாய் இருந்தால் தான் என்ன? தன் தேவைகளுக்காகவும், வேறு நிர்பந்தங்களுக்காகவும், புணர்ச்சிகளுக்கு இலக்கியம் கற்பிக்கும் இலக்கியமாக இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் ஆணும் சரி, பெண்ணும் சரி விபச்சாரர்களே!   

தமிழச்சி
06.12.2009


*LGBT[1][2]
http://en.wikipedia.org/wiki/LGBT
http://www.glbtq.com/
*இருபால்புணர்ச்சி[3][4]
http://tr.im/GOFx
http://tr.im/GOFI
*´பெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா´[5]
http://tr.im/GQjG 
*நவம்பர் 2009-தீராநதி[6]
http://tr.im/GOtA
*நவம்பர் 2009-அம்ருதா[7]
http://amruthamagazine.com/
*சூரிய கதிர்[8]
http://tr.im/GPqD
*லீனா மணிமேகலை[9]
http://tr.im/GP6N
*´ஈழத்தமிழர் தோழமைக் குரல் அமைப்பு´[10] 
http://tr.im/GQFU
*சிமோன் தெ பொவ்வா´[11] 
http://tr.im/GQJh
*சென்னையில் நடைப்பெற்ற ஓரினச்சேர்க்கையாளர்களின் ஒன்று கூடல்!
http://tr.im/GP8s

http://tamizachi.com/index.php?page=date&date=2009-12-06