08152022தி
Last updateபு, 02 மார் 2022 7pm

எம்மை புதிய ஜனநாயகக் கட்சியின் "முகவராக, கிளையாக" இருக்கட்டுமாம்!?

திடீரென "மார்க்சியத்தின்"  பெயரால் சிலர் கூறுகின்றனர். ஆயிரம் தவறுகள் இருந்தாலும் களத்தில் நிற்கும் புதிய ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து நிற்க வேண்டுமாம்! இதைக் கடந்த 30 வருடமாக சொல்லாதவர்கள், இன்று திடீரென சொல்லுகின்றனர். ஆச்சரியமும், அதிர்ச்சியும் தான். கடந்த 5 வருடத்துக்கு முன், ஏன் ஒரு வருடத்தின் முன் கூட கோரியது கிடையாது. அன்று நாங்கள் மட்டும் போராடிக் கொண்டிருந்த காலம்.

அப்போது இதைக் கோரியிருந்தால், ஏன் இன்று இவர்கள் கோரியது போல் நாம் "முகவராக, கிளையாக" அன்று மாறியிருந்தால், புலிக்கு ஏற்ப நாம் வில்லுப்பாட்டுதான் அடித்து இருக்க வேண்டும். சர்வதேசியக் கடமையாக, இப்படிக் கோருவோரின் அமைப்புக்கு நாம் செய்த எதையும் செய்திருக்க முடியாது. இன்று புலி அழிந்தவுடன் எமக்கு எதிராக கடைவிரிக்கின்றனர். எம்முதுகில் சிலர் குத்துகின்றனர்.

 

எம்மை "முகவராக, கிளையாக"  இருக்கக் கோரும் கட்சி கடந்த 35 வருடமாக புதிய ஜனநாயகக் கட்சயியாக இருந்துள்ளது. இலங்கையில் நடந்த கொந்தளிப்பான காலத்தில், அது என்னதான் செய்தது? மா.லெ.மாவோயிசத்தை உருத்திராட்சைக் கொட்டையாக்கி செபம் செய்தது. இதற்கு வெளியில் தான் மார்க்சியம் சார்ந்த வர்க்கப் போராட்டங்களும், தியாகங்களும் நடந்தது. இப்படியிருக்க எம்மை, எம் போராட்டத்தையும் கைவிட்டு அவர்களின் கிளையாக இருக்குமாறு கோருகின்றனர். இதுவா மார்க்சியம்!?; சரி 35 வருடமாக கட்சி நடத்தியவர்கள், இன்று புலியின் அழிவின் பின் எப்படி ஒரு திடீர் வர்க்கக் கட்சியாக மாறிவிட்டனர். உங்களுக்கு மட்டும் அந்த அருள் எப்படி கிடைத்தது?

 

எம்மை "முகவராக, கிளையாக" மாறக் கோரும் ம.க.இ.கவின் ஆதரவாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு சிலர், எமது அரசியல் நிலைக்கு எதிராக திடீரென கருத்துரைக்கின்றனர். அத்துடன் அவர்கள் "ஐரோப்பாவில் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து கொண்டு விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை." என்கின்றனர்.

 

நல்ல வேடிக்கையான "மார்க்சிய"  அரசியல். நாங்கள் புலியை விமர்சித்த போதும், அரசு ஆதரவு கூலிக் குழுக்களை விமர்சித்த போது இதையே பலர் கூறினர். எம் விமர்சனத்துக்கு பதிலளிக்க வக்கற்ற அவர்கள், தங்களை மக்கள் விரோத அரசியலை பாதுகாக்க மண்ணில் வந்து விமர்சிக்க கோரினர். எதார்த்தம் தெரியாது விமர்சிப்பதாக கூறினர். கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து கொண்டு, விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை என்றனர். இதையே "மார்க்சியத்தின்" பெயரால் சிலர் கூறுகின்றனர். அவர்கள் உருத்திராட்ச "மார்க்சியத்தை" முன்னிறுத்தி, பிளவுவாதத்தை கலைப்பு வாதத்தை திணிக்கின்றனர். அதுவும் அயல்நாட்டு விவகாரத்தில் புகுந்து கொண்டு எமது முதுகில் குத்துகின்றனர்.

 

நீங்கள் எந்த அமைப்பின் ஆதரவாளர் என்று கூறிக்கொள்கின்றீர்களோ, அவர்களுடன் எமக்கு அரசியல் ரீதியாக நீண்டகாலமாக உறவு உண்டு. அவர்கள் இதுவரை இப்படி எமக்கு எதிராக எதையும் அமைப்பு ரீதியாக முன்வைக்கவில்லை. ஏன் "கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து" கொண்டிருந்த எமது சர்வதேசிய கண்ணோட்டத்தையும் சரி, நாம் சர்வதேச உணர்வுடன் உதவிய எதையும், அவர்கள் இன்றுவரை நிராகரித்தது கிடையாது.

 

அவர்களின் ஆதரவாளராகிய நீங்கள் இந்த விவகாரத்தில் ஒரு பக்கமாக பக்கச் சார்புடன் தலையிடுவதன் மூலம், பிளவுவாத்தையும் கலைப்புவாதத்தையும் ஊதிப்பெருக்கி திணிக்கின்றீர்கள். இந்த விவகாரத்தின் பின், பருண்மையான பொருள் சார்ந்த விடையத்தை திரிக்கின்றீர்கள் அல்லது அதை தெரிந்து கொள்ள முனையாது ஒரு நிலைப்பாட்டை திணிக்கின்றீர்கள். அது எப்படி என்று பார்ப்போம்.

 

"இத்தனை பாகங்களாக எழுத்தித்தள்ளும் இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் இத்தனை ஆண்டுகளாக தனக்குள் மட்டும் வைத்துக்கொள்ளச்சொல்லி அவருக்கு நிர்ப்பந்தம் கொடுத்தது எது அல்லது யார்?" என்கின்ற போது, இங்கு இரண்டு விடையம் இங்கு திரிக்கப்படுகின்றது.

 

1.”குற்றச்சாட்டுகளை இத்தனை ஆண்டுகளாக நாம்  முன்வைக்கவில்லை” என்று கூறுவது அரசியல் திரிபு. நாம் நேரிலும் எழுத்திலும் இக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இடைவிடாது போராடி வந்துள்ளோம். அத்துடன் நாம் மண்ணில் போராடிய காலத்தில், இதற்கு எதிராக போராடியவர்கள். அத்துடன் கணமும் தூங்காது இடைவிடாது புலத்தில் எமது தொடர்ச்சியான ஒரு போராட்டம், இவர்களுக்கு  எதிராகவும் இருந்துள்ளது.

 

பார்க்க சில உதாரணங்களை

1.(a)  கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தைக் கோரி

   (b) சின்ன ஒரு விடையத்துக்கே சுயவிமர்சனம் செய்ய மறுத்து நியாயம் சொல்லி திரிபவர்கள் கடந்த காலத்தை எப்படி சுயவிமர்சனம் செய்திருப்பார்

   (c) முற்போக்கின் பின் ஒழித்து விளையாடும் காட்டிக் கொடுப்பை இனங் காண்போம்

   

2. இவர்கள் அரசியலை துறந்து செயல்படாது இருந்தது வரை, நாம் இதை அம்பலப்படுத்த வேண்டியிருக்கவில்லை.

 

கடந்தகாலத்தில் பாரிய குற்றத்தில் ஈடுபட்டவர்கள் பலர் இப்படி உள்ளனர். இப்படி உள்ளவர்கள் அரசியலில் செயல்படவில்லை. இப்படியிருக்க இங்கு அரசியல் திரிபாக இருப்பது, அவர்கள் "மா.லெ.மாவோயிசத்தை" முன்வைத்து எமக்கு சமாந்தரமாக போராடியதாக இட்டுக் கட்டுவது நிகழ்கின்றது. கவசம் எடுத்து வருகின்றார்கள்.

 

அப்படி அவர்கள் மா.லெ.மாவோயிசத்தை முன்வைத்து போராடியதை, உங்களால் காட்ட முடியுமா? இத்தனை காலமும் உங்களுடன் மட்டும் இரகசியமாக மா.லெ.மாவோயிசத்தை பேசிவந்தவர்களா!? இன்று திடீரென மா.லெ.மாவோயிசத்தை பேசுவதும், கடந்தகாலத்தை பற்றி இருட்டடிப்பு செய்வதும் எந்த வகையான "மார்க்சியம்". இது அவர்களின் ”மார்க்சிய” கவசம்.  

 

மறுபக்கத்தில் இதன் மூலம் எமக்கு முதுகில் குத்தும் அரசியல் முன்தள்ளப்படுகின்றது. இதன் மூலம் பிளவுவாதத்தையும் கலைப்புவாதத்தையும் வலிந்து திணிக்கின்றீர்கள். எங்கள் விமர்சனத்தில் இருந்து அவர்களை பாதுகாக்கும் அரசியல், எம்மைத் தாண்டி உங்களையும் அரசியல் ரீதியான முரண்பாட்டுக்குள் தள்ளும்.

 

அடுத்து நீங்கள் வைக்கும் வாதம் "..ஆயிரம் தவறுகள் இருந்தாலும் களத்தில் நிற்கும் புதிய ஜனநாயகக்கட்சியுடன் இணைந்து நின்று செயல்படும் தோழர் சிவசேகரத்தையோ அல்லது அந்த பாட்டாளி வர்க்க கட்சியையோ தனிநபராக ஐரோப்பாவில் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து கொண்டு விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை. எனவே ஒரு கட்சியை விமர்சிக்கவே கூடாது என்று நான் சொல்லவரவில்லை. விமர்சிக்கலாம், அந்த கட்சியுடன் தோழமைபூர்வமான உறவை பேணிக்கொண்டு அவர்களுடைய பிரச்சாரத்தை ஐரோப்பாவில் எடுத்துச்செல்லும் ஒரு கிளையாக, முகவராக இருந்து கொண்டு அதன் பிறகு கட்சியின் தவறுகளை தோழமையுடன் சுட்டிக்காட்டலாம்."  வேடிக்கையானதும், அரசியலையும், கைவிட்ட நியாயவாதம்.

 

குழையடிப்பதற்கல்ல அரசியல், வர்க்கப் போராட்டத்துக்கு உட்பட்டது தான் அரசியல்.

 

சரி நீங்கள் கூறும் புதிய ஜனநாயக கட்சியை நாம் "பாட்டாளி வர்க்க கட்சி"யாக ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக இது மா.லெ.மாவோயிசத்தை உருத்திராட்சைக் கொட்டையாக்கி உருட்டியவர்கள். "..ஆயிரம் தவறுகள் இருந்தாலும்" என்று கூறி, அவர்களுடன் நின்று இருந்தால், நாங்களும் குட்டிச்சுவர்தான். நாங்கள் மண்ணில் போராடிய காலத்தில் கூட இவர்களுடன் சோந்து வேலை செய்யும் வகையில் இவர்கள் ஒரு பாட்டாளி வர்க்க கட்சியாக இருந்ததில்லை. வர்க்கப் போராட்டங்களும், தியாகங்களும் புதிய ஜனநாயகக் கட்சிக்கு வெளியில் நடந்தது. இவர்கள் "மா.லெ.மாவோயிசத்தை" உருத்திராட்சைக் கொட்டையாக்கி செபம் செய்து கொண்டு இருந்தனர். ஒரு பாட்டாளி வர்க்க கட்சியாக இருக்காத கட்சியின் "..ஆயிரம் தவறுகள்"  உடன் ஆதரிப்பது என்பது, அரசியல் அபத்தம்.

 

சரி ம.க.இ.க கட்சி ஆயுதப்போராட்டத்தை நடத்தாமல், மாவோயிஸ்ட்டுகளை விமர்சிக்க முடியுமா? நாம் முடியும் என்கின்றோம். மாவோயிஸ்ட்டுகள் மா.லெ.மாவோயிஸ்ட்டுகள் தான் என்பதால், விமர்சனத்தை பகிரங்கமாக வைக்க கூடாதா!? வைக்கலாம். இன்று ம.க.இ.க கட்சி இதை செய்ய அதற்குரிய அரசியல் காரணங்கள் எப்படி இருக்க முடியுமோ, அப்படிதான் எம் நிலையும். இங்கு புதிய ஜனநாயகக்கட்சி மா.லெ.மாவோயிசத்தை நடைமுறைக்குரிய தத்துவமாக கொண்டு ஒரு வர்க்கப் போராட்டத்தை நடத்தவில்லை. புலத்தில் திடீர் என இன்று மார்க்சியம் பேசுபவர்கள், காலத்தின் தேர்வுடன் கூடிய அரசியல் வியாபாரிகள்.  


 
தனிப்பட்ட நான், இவர்களின் கட்சியில் இருந்து பிரிந்த மா.லெ.மாவோயிச கட்சியான தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியில் செயல்பட்டவன். இந்த அமைப்பு தான் 1983 இல் என்.எல்.எவ்.ரி.யானது. 1970 களில் சண்முகதாசனில் இருந்து பிரிந்து புதிய ஜனநாயகக் கட்சியான இந்தக் கட்சி, வர்க்கப் போராட்டத்தை தன் அரசியல் நிகழ்ச்சிநிரலாக கொண்டிருக்கவில்லை. மாறாக "மா.லெ.மாவோயிசத்தை" உருத்திராட்சைக்கொட்டையாக்கி செபம் செய்தனர். தம் இருப்புக்கு ஏற்ப, முதலாளித்துவ குட்டிபூர்சுவா சங்கங்களை உருவாக்கிக் கொண்டு இயங்கினர். இது மற்ற தொழில் சங்கங்களில் இருந்து எந்தவிதத்திலும் வேறுபட்டது கிடையாது. இந்தக் கட்சி அரசியல் என்பது தேர்தலில் நிற்பது முதல் சர்வதேசிய திரிபுவாதிகளுடனும் முதலாளித்துவ ”கம்யூனிச” கட்சியுடனும் ஒன்றாக கூடி பேசுவது வேலைசெய்வது வரையான அரசியல் அடிப்படையைக் கொண்டதாக இருந்தது, இருக்கின்றது. அவர்கள் மா.லெ.மாவோயிச நூல்களை வெளியிடுவதன் மூலம்தான், புரட்சிகரமான பக்கத்தில் நிற்பதாக தன்னைக் காட்டி வந்தது.

 

இருந்தபோதும் நாம் விமர்சிக்கவில்லை. மா.லெ.மாவோயிசத்தை வெறும் கோசமாகத்தன்னும் வைத்தாலும், அது தீவிர வர்க்க அரசியலில் தலையிடாததாலும், முடிந்தவரை தொடர்ந்து பேசமுனைந்தோம். அவர்கள் ஐரோப்பா வந்தபோது சந்தித்துப் பேசினோம். மா.லெ.மாவோயிச படங்களை ஆயிரக்கணக்கில் கொடுத்தோம். வர்க்க அடிப்படையில் அரசியல் செயலைக் கோரினோம். குறிப்பாக நாம் அவர்களிடம் புலியைப்பற்றி அல்ல, அவர்கள் செயல்படும் தளத்தில் வர்க்க நடைமுறையை முன்னெடுக்க கோரினோம். இதேபோல் சிவசேகரம் நாடு திரும்பிய பின், அரசியல் சீரழிவை முன்வைக்காத மவுனமான அரசியல் போக்கை அடுத்து தொடர்பு கொண்டோம். எமது இணையத்தில் எழுதக் கோரிய போது, தன்னால் தமிழில் எழுத முடியாது என்று பதிலளித்து தட்டி கழித்தார்.

 

இப்படி ஒரு புரட்சிகரமான நடைமுறைக்குரிய அனைத்து முயற்சியிலும் ஈடுபட்டோம். ஒரு சிறு குழுவாவது, வர்க்க அரசியலுடன் வெளிவரும் என்று நம்பினோம். இதே போல் ஜே.வி.பியுடன் கூட, நாம் முனைந்தோம்.  

    

சரிநிகர் குழுவிடம் (முன்னாள் எம் தோழர்கள்) வர்க்க அடிப்படையில் இயங்க வைக்க முனைந்தோம். அவர்கள் இதை செய்யத் தயாராக இருந்தால், நோர்வேயில் இருந்து அச்சு இயந்திரம் ஒன்றை வாங்கி அனுப்பமுனைந்தோம்.


 
அண்மைக்காலத்தில் நானும் மற்றொரு தோழரும் பெரும் நிதி உதவி மூலம், தேசபக்தன் ஊடாக கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கிளிநொச்சி வரை கூட நூல் கண்காட்சிகளையும் நூல் விநியோகத்தையும் செய்தோம். வவுனியாவில் ஒரு பொதுநூலகத்தை நிறுவினோம். இறுதி யுத்தக்காலத்தில் தமிழீழக்கட்சி (மே 18 இயக்கம்) புலியிடம் காட்டிக்கொடுத்ததன் மூலமும், இலங்கை அரசின் கண்காணிப்புக்குள்ளும் இவர்கள் அழிக்கப்பட்டனர். இதே தமிழீழக்கட்சியைச் (மே 18 இயக்கம்) சேர்ந்தவர்கள் தான், கேசவனையும் புலிக்கு தகவல் கொடுத்து காட்டிக் கொடுத்தனர். புதிய ஜனநாயகக் கட்சி வர்க்க கட்சியாக இருந்து இருந்தால், நாம் எப்போதோ அந்தக் கட்சியில் இணைந்து இருப்போம்.     

 

இலங்கையில் ஒரு புரட்சிகர வர்க்கப் பிரிவு ஒன்றை நாம் கோரினோம். அந்த எல்லைக்குள் எம் செயல்களை மையப்படுத்தியிருந்தோம். இந்த எல்லைக்குள், குறிப்பாக புதிய ஜனநாயகக் கட்சி மேல் வெளிப்படையான விமர்சனங்களைத் தவிர்த்தோம்.

 

இன்று புதிய ஜனநாயகக் கட்சி எடுத்து வரும் நிலைப்பாடு, பக்கச் சார்புடன் வெளிப்படுகின்றது. அதுவும் படுபிற்போக்காக மார்க்சியத்தை கடந்தகாலத்தில் குழிதோண்டிப் புதைத்த கூட்டத்துடன் சேர்ந்து வியாபாரம் செய்;கின்றது. சாராம்சத்தில் இன்று வெளிப்படையாக எங்களுக்கு எதிரான அரசியல் களத்தில் புகுந்துள்ளது. இந்த நிலையில், ஒரு பிற்போக்கான எதிர்ப்புரட்சி அரசியல் தளத்தை உருவாக்குகின்ற இன்றைய நிலையில், அதை அம்பலப்படுத்துவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

 

இங்கு புதிய ஜனநாயகக் கட்சியின் அரசியல் நேர்மையீனம், இந்தக் குழையடிக்கும் கூட்டத்தின் பொதுவான வியாபார அரசியலாகின்றது. அண்மையில் புதிய ஜனநாயகக் கட்சி புலிக்கு எதிரான போராட்டத்தில் போராடியதாக கூறுகின்ற அபத்தத்தையும் கண்டோம். புலி செத்த பின்பு, திடீரென புலியை விமர்சனம் செய்கின்ற போது, எமது கடந்தகால விமர்சனத்தை எல்லாம் திட்டமிட்டு மூடிமறைத்து அதை திருடியே இன்று பலரும் கடைவிரிக்கின்றனர்.

 

அரசியல் ரீதியாக செயல்படாத மவுனமான காலகட்டத்தை தாம் செயல்பட்டதாக காட்டியும், செயல்பட்டதை மூடிமறைத்தும், செயல்பட்டவர்களின் விமர்சனத்தை திருடியும் தமது அரசியலாக இன்று பம்முகின்றனர். இதற்கு ஏற்ப இதையே தொழிலாகக் கொண்ட புலம்பெயர் குழையடிக்கும் கூட்டத்துடன் கூட்டுச்சேர்ந்து நிற்கின்றது. இவர்கள் அதற்கு ஏற்ப "திடீர் மாவோ" வாதியாகி, மாவோவின் கட்டுரை ஒன்றை 20 வருடங்களின் பின் முதன் முதலில் பிரசுரிக்கின்றனர்.  இதுவரை காலமும் மாவோவை மறுத்து நின்றவர்கள், அதற்காகவே இதன் பெயரில் எமக்கு ஐரோப்பாவில் குழி பறித்தவர்கள், இன்று "மாவோவை" எமக்கு எதிராக முன்னிறுத்தி கடைவிரிக்கின்றனர். இதன் மூலம் இந்தியாவில் எமக்கு எதிரான ஒரு அணியாக தம்மைக் காட்டி, தம்மை குறுக்குவழியில் நிலைநிறுத்த முனைகின்றனர்.

 

இந்த திடீர் சந்தர்ப்பவாத "மார்க்சிய" குழையடிக்கும் கூட்டம், எம்மை எதிர்கொள்ள முடியாது  அவதூறை எழுத்துக்கு வெளியில் அள்ளிகொட்டுகின்றது. இந்த திடீர் அரசியல் அடிப்படையில், புதிய ஜனநாயகக் கட்சி எடுபிடி அரசியலாக இன்று சீரழிந்து இவர்கள் பின் கூடி நிற்கின்றது. இதற்கு மாறாக அவர்கள் அரசியல் ரீதியாக எம்மை அணுகவில்லை. குறைந்த பட்சம் அவர்கள் எம் தோழமையைக் கூட விரும்பவில்லை. அவர்கள் எமக்கு எதிராக செயல்பட்டனர், செயல்படுகின்றனர். அதைத்தான் நீங்களும் செய்கின்றீர்கள். வெளிப்படையாக பிளவுவாதத்தையும் கலைப்பு வாதத்தையும் எமக்கு எதிராக முன்னிறுத்தி திணிக்கின்றீர்கள்.  

 

இந்த நிலையில் நீங்கள் அவர்கள் "விமர்சிக்கலாம், அந்த கட்சியுடன் தோழமைபூர்வமான உறவை பேணிக்கொண்டு அவர்களுடைய பிரச்சாரத்தை ஐரோப்பாவில் எடுத்துச்செல்லும் ஒரு கிளையாக, முகவராக இருந்து கொண்டு அதன் பிறகு கட்சியின் தவறுகளை தோழமையுடன் சுட்டிக்காட்டலாம்." என்கின்றீர்கள். தோழமையை மறுத்து நிற்கின்றவர்கள் அவர்கள். இந்த முரண்பாட்டை பக்கச்சார்பாக தலையிட்டு அதை விரிவாக்கி வருகின்றனர். இதைத்தான் நீங்களும் செய்கின்றீர்கள்;. இந்த நிலையில் "தோழமைபூர்வமான உறவை பேணிக்கொள்வது" எப்படி? முதுகில் குத்திக்கொண்டு, தொடர்பைக் கோருவது வேடிக்கையல்லவா. 

 

அவர்களின் "முகவராக, கிளையாக" நாம் இருக்க, அது ஒரு வர்க்க கட்சியாக இருக்கவேண்டும். வர்க்க கட்சியாக இருந்து, இலங்கையில் ஒரு புரட்சியை முதலில் முன்னெடுக்கட்டும் பார்ப்போம். நிச்சயமாக அவர்களால் முடியாது. இதனால்தான், இதைக் கோரும் எமக்கு எதிராக குழையடிக்கும் கூட்டத்துடன் சேர்ந்து இன்று கும்மியடிக்கின்றனர்.

 

அவர்கள் வர்க்க போராட்டத்தை நடைமுறையில் முன்வைத்து செயல்பட்ட பின், "முகவராக, கிளையாக" நாம் இருப்பதைப் பற்றி கோருங்கள். அதுவரை எம் விமர்சனம் தவிர்க்க முடியாது. "தனிநபராக ஐரோப்பாவில் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து கொண்டு விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை" என்கின்றீர்கள். நாங்கள் "தனிநபர்" என்பது முத்திரை குத்தும் அபத்தம். நாங்கள் தனிநபர்கள் அல்ல. அரசியல் கொள்கை கோட்பாட்டுடன் பலர் உள்ளனர். எம்மைச் சுற்றி ஆயிரக்கணக்காக வாசகர்கள் உள்ளனர். தனிநபர் என்று கொச்சைப்படுத்துவது, முத்திரை குத்துவதன் மூலம், வர்க்கப்போராட்டம் வந்துவிடாது. சரி "தனிநபர்" என்று நீங்கள் முத்திரை குத்துவது போல் நாம் இருந்தால் தான் என்ன, நாங்கள் விமர்சகராகவே இருந்துவிட்டு போகின்றோம்.   

                        

நீங்கள் இட்டுக்கட்டும் அடுத்தவாதம் "…ஆனால் இவர்கள் அதையெல்லாம் விட்டுவிட்டு ஐரோப்பாவில் உட்கார்ந்து கொண்டு பாசிச சூழலில் வேலை செய்யும் ஒரு கட்சியை வழி நடத்த முற்படுகிறார்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால் நடைமுறையிலிருக்கும் நபர்களாகட்டும் கட்சியாகட்டும் அவர்களை நடைமுறையில் இல்லாதவர்கள் முதலில் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்." அட என்ன அரசியல் கண்டுபிடிப்பு. "பாசிச சூழலில் வேலை செய்யும் ஒரு கட்சியை"  சரி என்ன வேலை செய்தார்கள்? நாங்கள் அறியோம். 30 வருடமாக எம்முடன் அதை உங்கள் அமைப்பு பேசியது கூட கிடையாது. அதை அவர்கள் சொன்னது கூட கிடையாது. சரி, நாங்கள் அங்கு போரடிய போது கூட, இவர்களை நாம் போராட்டத்தில் காணவில்லை. இதற்கு பின்னும் சரி நாம் அதை அறியவில்லை. பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தில் வர்க்கத் தியாகங்களும் மரணங்களும், இந்தக் கட்சிக்கு வெளியில் தான் நடந்தது. இவர்கள் "மா.லெ.மாவோயிசத்தை" உருத்திராட்சைக் கொட்டையாக்கி பாசிசத்துக்கு எதிராக உருட்டி பாசிசம் ஒழிக என்று செபம் செய்து கொண்டு இருந்தனர்.

 

பாசிசத்தை எதிர்கொள்வதில், வேறுபட்ட நிலமைக்குள் உள்ள இடைவெளியை நாம் மறுத்து இந்த விடையத்தை ஆராயவில்லை. நாம் அவர்கள் செயல்பட்ட தளத்தில் வர்க்க அடிப்படையைத் தேடினோம். அதைக் கோரினோம். அந்த மண்ணில் பாசிசம் ஆதிக்கம் பெற்று வந்த போது, அதைத் தடுத்து நிறுத்த நாம் களத்தில் நின்றவர்கள்;. பலரை இழந்தோம். அப்போது இந்தக் கட்சியை நாம் போராட்ட களத்தில் காணவில்லை. இதன்பின் தன்னார்வ நிறுவனம் வெளியிட்ட "சரிநிகர்" கூட முன்னேறிய நிலையில் பாசிசத்தை எதிர்கொண்டது. சரி இவர்கள் என்னதான் செய்தார்கள். புலியை நியாயப்படுத்தும் வண்ணம் சந்தர்ப்பவாத நிலையெடுத்தே தேசியம்பற்றி மட்டும் பேசினர். புலத்தில் வர்க்க ரீதியாக தனித்து இந்தப் பாசிசத்தை நாம் எதிர்த்து போராடிய போது, எம்முடன் அரசியல் உறவைக் கூட அவர்கள் கொள்ளத் தயாராக இருக்கவில்லை.

 

இந்தக் கட்சியின் பாசிசத்துக்கு எதிரான இன்றைய நிலை என்பது, கடந்த போராட்டத்தை தியாகத்தையும் மறுத்து கொச்சைப்படுத்தும் எல்லையில் மீளவும் அம்பலமாகி நிற்கின்றது. "நடைமுறையிலிருக்கும் நபர்களாகட்டும் கட்சியாகட்டும் அவர்களை நடைமுறையில் இல்லாதவர்கள் முதலில் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்." நடைமுறையில் இருக்கும் என்று கூறுகின்றதன் மூலம், எம் போராட்டத்தையும் கருத்தையுமே மறுக்கின்றனர். இதைத்தான் புலியும் சொன்னது, செய்தது. 

 

சரி நடைமுறை என்கின்றீர்களே, அப்படி என்னதான் நடைமுறையை கொண்டுள்ளனர். நாங்கள் நடத்திய போராட்டம் நடைமுறையற்றது என்று சொல்லுகின்ற சுத்த சூனியவாத அபத்தமாக இது வெளிப்படுகின்றது. வர்க்க நடைமுறையற்ற அவர்களின் அரசியலுக்கு அப்பால், அவர்களை மதிக்க அடிப்படையில் அரசியல் நேர்மை தேவை. இது அறவே அவர்களிடம் கிடையாது. இன்று அவர்கள் குழையடிக்கும் கூட்டத்துடன் கூடி கும்மியடிக்கும் வண்ணம், ஒரு எடுபிடி அரசியல் செய்கின்றனர். நாங்களும் அவர்களுடன் சேர்ந்து  குழையடிக்கத் தயாராகவில்லை. கடந்த 30 – 40 வருடத்தில் குழையடிக்கும் கூட்டம் நடத்திய பலமுனை அரசியல், மக்களின் அவலங்களுடன் விடுதலையுடன் ஒன்றிணைந்ததாக என்றும் இருக்கவில்லை. இதனால்தான் நாம் இவர்களுக்கு வெளியில் தொடர்ந்து போராடி வருகின்றோம்.

 

இவர்களின் பின் எதிர்காலத்தில் செல்வது, குறிப்பாக புதிய ஜனநாயகக் கட்சியுடன் நிற்பது என்பது அவர்களின் வர்க்க அரசியலுடன் எப்படி போராடுகின்றார்கள் என்பதுடன் தொடர்புடையது. 

          

1.வர்க்கக் கட்சியாக மாற அது தன்னைத்தான் சுயவிமர்சனம் செய்து கொண்டால், நாம் நிச்சயமாக அதனுடன் இணைந்து வேலை செய்வோம்.

 

2.வர்க்க கட்சியாக தன்னை புணர்நிர்மாணம் செய்ய, எமது ஒத்துழைப்பைக் கோரினால் நாமும் சேர்ந்து அதைச் செய்யத் தயாராக உள்ளோம்.

 

இதற்கு அது தன்னை நேர்மையாளனாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். கடந்த காலத்தைப் பற்றி நேர்மையான அரசியல் பார்வை கொண்டு இருக்க முனையவேண்டும். எடுபிடி அரசியல் நடைமுறைகளை அது கைவிட வேண்டும். இப்படிப் பல.

 

எதார்த்தத்தில் குழையடிக்கும் இன்றைய அரசியல், கடந்த கிரிமினல் நடத்தைகளை கூட மூடிமறைக்கின்றது. ஒரு சமூகத்தின் கடந்தகால அவலங்களுக்கு யாரும் பதில் சொல்லத் தேவையில்லை என்று, "மார்க்சியம்" மூலமான கிரிமினல் அரசியல் முன்தள்ளப்பட்டு, அரசியலே கிரிமினல் மயமாகின்றது. இன்று குழையடிக்கும் அரசியல் இதன் அடிப்படையாக உள்ளது.    

 

குழையடித்து பேய் ஓட்டும் அவர்களை "மார்க்சியவாதிகளாக" நீங்கள் கருதினால், அவர்களின் அரசியல் அடிப்படைகளை சமூகத்தின் முன்னால் கொண்டுவர முனையுங்கள்.

 

1.அதன் கட்சி திட்டம்


2.முன்னணிக்கான திட்டம்


3.வர்க்கப் போராட்டத்ததை எப்படி நடத்துவது என்ற அதன் கண்ணோட்டம்


4.புரட்சிக்குப் பிந்தைய வர்க்கப் போராட்டத்தை எப்படி அவர்கள் பார்க்கின்றனர்.


5.பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றிய அவர்களின் அரசியல் நிலைப்பாடு என்ன?     

        
6.கடந்த உலக வரலாற்றில், சோசலிச நாடுகள் பற்றிய அவர்கள் வரையறை என்ன? 

 

இப்படிப்பட்ட அடிப்படையான கேள்விகளுக்கு, அவர்கள் சார்பாகத்தன்னும் பதிலளிக்க முனையுங்கள். குழையடிப்பு அரசியல் மூலம் எம்மை சமூகத்தில் இருந்து ஓட்டலாம் என விரும்பும் அரசியல்தான், இன்று இவர்கள் பின் பூத்துக் குலுங்குகின்றது. மார்க்சியத்தை கலைத்துவிட, குழையடிக்கும் கலைப்புவாதத்தை இன்று எமக்கு எதிரான அரசியலாக தள்ளுகின்றனர். மா.லெ.மாவோயிச சிந்தனையை இவர்கள் முன்தள்ளுவது கிடையாது.

 

இந்த நிலையில் "இரயாகரன் எழுதுவது சற்றும் நாகரீக முறையில் இல்லை என்பது முதல் விசயம்" என்பது, இங்கு விமர்சனமே பிரச்சனையாகின்றது. இங்கு இவர்கள் "நாகரீகம்" என்பது

 

1."தனிநபராக ஐரோப்பாவில் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து கொண்டு விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை." என்பதும்,

 

2."இத்தனை ஆண்டுகளாக தனக்குள் மட்டும் வைத்துக்கொள்ளச்சொல்லி அவருக்கு நிர்பந்தம் கொடுத்தது எது அல்லது யார்?"

 

3.ஒரு கிளையாக, முகவராக இருந்து கொண்டு அதன் பிறகு கட்சியின் தவறுகளை தோழமையுடன் சுட்டிக்காட்டலாம்"

 

என்று, அவர்கள் அம்பலமாவதை குறித்த நாகரீகம் பேசப்படுகின்றது.

 

அவர்கள் பாட்டாளி வர்க்க கட்சியாக இருந்தால்,

 

1.நிச்சயமாக நாம் அவர்களுடன் இணைந்து இருப்போம்.

 

2. நாம் இன்று எழுப்பும் எந்த கேள்விக்கும் இடம் இருக்காத வண்ணம் அவர்கள் வர்க்க கண்ணோட்டம் இருந்து இருக்கும்.

 

இவர்களை "தோழர்களாக" கருதி நாம் நாகரீகமாக அணுக எந்த அரசியல் அடித்தளமும் அவர்களிடம் இன்று இல்லை.

 

இந்த நிலையில் "மொத்தமாகச் சொல்வதென்றால் புலம்பெயர்ந்த நாடுகளில் மிகக்குறைவாக இருக்கும் முற்போக்கு புரட்சிகர நபர்களையும் கலைத்துவிடும் கலைப்புவாத வேலையை தான் இரயாகரனும் ஸ்ரீரங்கனும் செய்து வருகிறார்கள்." என்கின்றீர்கள். சரி கலைக்க அவர்களிடம் என்னதான் அரசியல் இருக்கின்றது!? என்றும் மார்க்சியத்தை முன்வைக்காத கூட்டம், இன்று மார்க்சியத்தை குழையடிக்க பயன்படுத்துகின்றது. மார்ச்சியத்தால் முக்காடு போடுகின்றது. இதன் மூலம் அரசியல் வியாபாரம் செய்ய முனைகின்றது. இது எம் விமர்சனத்தால் அம்பலமாவதை "கலைப்புவாதம்" என்று மார்க்சிய விளக்கம் கொடுப்பது மூலம், முதுகில் குத்துகின்றனர். இதையும் எதிர்த்து போராடுவோம்.

 

பி.இரயாகரன்
05.01.2010 


பி.இரயாகரன் - சமர்