05162022தி
Last updateபு, 02 மார் 2022 7pm

சிவசேகரத்தின் தொப்பி : மகிந்தாவுக்கும் பொருந்தும் குழையடிப்போருக்கும் பொருந்தும்

சிவசேகரம் போன்றோரின் இன்றைய திடீர் அரசியல், கடந்தகாலத்திய தங்கள் எதிர்ப்புரட்சி அரசியலை மூடிமறைப்பதாகும். அதே நேரம் கடந்தகால புரட்சிகர அரசியல் செயல்பாட்டை மறுத்தலாகும்;. இதுவே இன்று இவர்களின் திடீர் அரசியலாக, கடந்தகாலத்தில் மக்களுடன் நிற்காத அனைவரும் கூடி, எமக்கு எதிராக குழையடிக்கும் அரசியலை முன் தள்ளுகின்றனர்.

இதற்கு 'மா.லெ.மாவோ" சிந்தனை முதல் தங்களை இட்டுக்கட்டி சமூகத்துக்கு காட்டமுனைகின்றனர். தங்களைப் பற்றியும், தங்கள் அரசியல் பற்றியும் வெளிப்படையற்ற தன்மை, மூடிமறைத்த சந்தர்ப்பவாதமாக வெளிப்படுகின்றது. அது தன் அரசியல் எதிராளியை திரித்துப் புரட்டுகின்றது. 

 

தவறுகள் செய்த எமக்கு "தவறு செய்யாதவர்கள்" என்று பட்டம் கட்டி, தவறுகளையும் கிரிமினல்களையும் பாதுகாக்க கவிதை பாடுகின்றார் சிவசேகரம். அவர் எம்மைத் திரித்து  குழையடிப்போரின் துணையுடன் வக்கரிக்க, அதுவே கவிதையாகின்றது. அவரின் 'மா.லெ.மாவோ" சிந்தனையோ "தவறு செய்யாதவர்கள்" என்று திரித்து, கிரிமினல் அரசியலை "தவறாக" காட்டி கூடி குழையடிக்க முனைகின்றது. 

 

எம் மக்களையும், சக போராளிகளையும் கொன்றதும் கூட பேசக் கூடாத தவறாம். அதை மூடிமறைப்பதும் பேசக் கூடாத தவறாம். அந்த அரசியலை பேசாது இருப்பதும் பேசக் கூடாத தவறாம். கடந்த காலத்தில் மக்களுக்காக மக்களுடன் நிற்காதது பேசக் கூடாத தவாறம்;. "தவறு செய்யாதவர்கள்" இருக்கும் வரை, எந்தத் தவறு பற்றியும் பேச வேண்டியதில்லை என்கின்றார். "தவறு செய்யாதவர்கள்" என்று எமக்கு முத்திரை குத்தி, கிரிமினல் நடத்தைகளை "தவறு" என்று அரசியல் விளக்கம் கொடுக்கின்றார்.

 

"தவறு செய்யாதவர்கள்" என்று எம்மைப் பார்த்து இட்டுக்கட்டி கூறுவது, தவறுகளை நியாயப்படுத்தத்தான். எம் அரசியலை மறுத்து, அதை கொச்சைப்படுத்த செய்கின்ற குறுக்கு வழி அரசியல். அது "பேராசிரியர்"மாரின் குறுக்குவழி அரசியல். நாங்கள் தவறுகள் "செய்யாதவர்கள்" என்று, எம்மை பற்றிக் கூறுவது திரிபு. தங்கள் தவறான அரசியலை நியாயப்படுத்த செய்யும் அரசியல் குதர்க்கம்.

 

நாங்கள் கம்யூனிஸ்ட்டுக்கள் என்பதால், இன்றைய இந்த நிலைமைக்கு நாங்கள் தான் முழு பொறுப்புமாகும். இதை நான் இன்று கூறவில்லை, இந்த நிலைக்கு நாம் தான் பொறுப்பு என்று முன்பே எழுதி வந்துள்ளோம். நாம் அரசியலுக்கு வந்தபோது, கம்யூனிஸ்ட்டுகள் விட்டு வந்த  தவறை நாம் அறிவுபூர்வமாக தெரிந்து கொண்ட போது, அதை மாற்ற நாம் முற்பட்ட போது காலம் கடந்துவிட்டது. இருந்தும் நாங்கள் அந்தத் தவறுக்கு பொறுப்பேற்றோம்;. ஏனெனின் நாங்கள் கம்யூனிஸ்ட்டுகள். இதனால் தான் நாங்கள் (மட்டும்) மற்றவர்களில் இருந்து வேறுபட்டு, தொடர்ந்தும் மக்களை சார்ந்து நின்றோம். மக்களின் துயரங்களை பேசியும், மாற்றங்களைக் கோரியும் தொடர்ந்து போராடினோம்.

 

அதேநேரம் புதிய தவறுகள் எம்முடனும் தொடருகின்றது. புலித்தலைமை அழிக்கப்பட்ட பின், அரசு மற்றும் புலிக்கு எதிரானவர்களை ஒன்றிணைக்கும் போது, அரசியல் அடிப்படையை கையாண்டதில் கூட நாம் தவறு இழைத்தோம். மிதவாத இணக்கமான அணுகுமுறையைக் கையண்டோம். இந்தவகையில் கடந்தகாலத்தில் தொடர்ந்து சமூகத்துடன் நிற்காதவர்கள், மக்களுக்காக போராடதவர்கள், மக்களைச் சார்ந்த எம்முடன் வருவார்கள் என்று நாம் மதிப்பிட்ட எம் அரசியல் அணுகுமுறை மிகத்தவறானதாகியுள்ளது. புலித்தலைமை அழிந்தவுடன், கடந்தகாலத்தில் மக்களுடன் நிற்;காதவர்கள் சமூகத்துடன் வந்து நிற்பார்கள் என்று கருதி, நாம் கையாண்ட இணக்கமான அணுகுமுறை தவறானது என்பது எமக்கு முகத்தில் அடித்துச் சொல்லுகின்றது. சமூகம் சார்ந்து நாம் கையாண்ட எம் நடைமுறைகள், சமூகத்துக்கு எதிராக எம்மையும் தம்முடன் வா என்று  கோருகின்றது. அவர்கள் தம் இருப்பு சார்ந்து புலியின் இறதிக் காலகட்டத்தில் கட்டமைத்த அரசியலை, சமூகம் சார்ந்ததாக நாம் கருதியதன் மூலம் நாம் தவறு இழைத்தோம். இப்படி நாம் வந்த வழியில் தவறுகள், எம் வரலாறு முழுக்க இருந்துள்ளது. அதை நாம் தொடர்ந்து திருத்தினோம், மக்களுடன் தொடர்ந்து நிற்பதன் மூலம் அதை நாம் சுயவிமர்சனம் செய்தோம்.

 

சுயவிமர்சனம் என்பது தவறுகள் மற்றும் அறியாமை மீதானதுதான். கிரிமினல் தனத்தின் மீதானதல்ல. தவறுக்கும், அறியாமைக்கும் அப்பால் அரசியல் கிரிமினலுக்கும் வித்தியாசம் தெரியாத வண்ணம் நடித்து திரிக்கும் "பேராசிரியர்கள்", "முனைவர்கள்", "கவிஞர்கள்", "ஆய்வாளர்கள், "ஊடகவியலாளர்கள்" தான், கடந்த காலத்தில் கிரிமினல் அரசியலுக்கு முண்டு கொடுத்தவர்கள். சிவத்தம்பி, சேரன், நித்தியானந்தன்  முதல் இடதுசாரியம் பேசிய சண்முகரத்தினம், சிவசேகரம் வரை என்று நீண்ட இந்தப் பட்டியல் எதிர்ப் புரட்சி அரசியலில் அடங்கும். 

    
  
இன்று மீண்டும் பழையபடி குழையடிக்க வந்துள்ள "பேராசிரியர்" சிவசேகரம், கிரிமினல்களை மூடிமறைக்கும் ஒரு அரசியலுக்கு ஏற்ப தவறுகள் என்று இதற்கு விளக்கம் கொடுத்து கவிதை பாடுகின்றார். மா.லெ.மாவோயிசத்தை தன் அரசியலாக முன்னிறுத்தி என்றும் போராடாத முதுகெலும்பற்ற இந்த பேராசிரியரான சிவகேசரம், தனக்கொரு கன்னை கட்டி கவிதை பாடுகின்றார். மக்கள் அனுதினம் செத்துக் கொண்டிருந்த போது, அவர்கள் வாழ்வதற்காக போராடிக் கொண்டிருந்த போது, அவர்களுக்காக முட்டி மோதி "பேராசிரியர்" சிவசேகரம் போராடியிருந்தால் தெரிந்திக்கும் எது தவறு, எது கிரிமினல் என்று.

 

சிவகேசகரம் என்றும் மக்களுக்காக நேர்மையாக செயல்பட்டது கிடையாது. புலிப்பாசிசம் நாட்டில் ஆதிக்கம் பெற்ற போது, புலத்தில் இதற்கெதிரான போராட்டம் சஞ்சிகைகள் ஊடாக வெளிவந்;தது. அதுவே இலக்கிய சந்திப்பாக மாறியிருந்தது. இன்று போல் அன்றும் இதற்குள் நுழைந்தவர்தான் இந்த சிவசேகரம். அங்கு அவர் செய்ததுதான் என்ன? அங்கு உருவாகி வந்த அரசியல் சீரழிவை வாழ்த்தி, அதற்கு வக்காலத்து வாங்கி, அதை அழித்த பெருமை உங்களைப் போன்ற பல "பேராசிரியர்மாருக்கு" உண்டு. 

 

மக்கள் போராட்டத்தையும், அந்த அரசியலையும் துறந்து இலக்கிய கூத்தாடிய போது,  மா.லெ.மாவோ சிந்தனையை முன்வைத்து சிவசேகரம் போராடியது கிடையாது. அந்த சீரழிவுக்  கும்பலுடன் கும்பலாக "பேராசிரியர்" சிவசேகரம் கும்மியடித்த போது, அதை நாங்கள் எதிர்த்து அம்பலப்படுத்தினோம்.

 

பார்க்க சிலவற்றை:

 

சிவசேகரம் தேடும் நடுநிலைக் கோட்பாடு பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரானது

 

இலக்கிய சந்திப்பும் பிழைப்புவாதப் பிரமுகர்களும்

 

இலக்கியச் சந்திப்பும் நிகழ்ச்சிகள் மீதான எமது நிலையும்

 

இலக்கிய சந்திப்பும் மறுக்கப்பட்ட கருத்துச் சுதந்திரமும்

 

மார்க்சியவாதிகள் அறிவிலிகளாம் மூடர்களாம்.

 

தேசிய சக்திகள் தொடர்பான விவாதம் 

 

சமூகத்தின் எல்லையா தனிமனிதன்? அல்லது தனிமனிதனின் எல்லையா சமூகம்?

 

இப்படிப்பட்ட"பேராசிரியர்" சிவசேகரம் மீண்டும் குழையடிக்கும் கூட்டத்தினுள் சேர்ந்து, குழையடிக்க மீண்டும் கவிதை பாடுகின்றார். போங்கள் மீண்டும் நல்ல வேடிக்கைதான். "தவறாம்" மக்களை கொன்று குவித்ததும் "தவறாம்". உள்ளியக்க படுகொலைகள் முதல் அதை மூடிமறைத்து செய்யும் அரசியல் வரை, "தவறாம்". இப்படிப் பார்த்தால் மகிந்த கும்பல் தமிழ் மக்களை கொன்றதையும் கூட, சிவசேகரம் அடியெடுத்து பாடி பாடல் தவறாக்கி விடுகின்றது. இப்படி கும்மியடிக்கும் தங்கள் கூட்டத்தை பாதுகாக்க, அனைத்தையும் தவறாக இட்டுக் காட்டி கவிதை படிவிடுகின்றார். இப்படி "தவறு" என்று தொப்பி, மகிந்தாவும்  எடுத்து போட்டுக் கொள்ளும் வண்ணம் பொருந்திப் போகின்றது.

 

இதை எதிர்த்தால் "தரையில் போட்ட தொப்பி எத்தனை தலைகட்குப் பொருந்துகிறது! ஆசையாக அணிந்து கொள்கிறார்கள். ஆளை விடுங்கள்" என்று கூறிக்கொண்டு நழுவி  விடுவார். முதுகெலும்பற்ற அரசியலில், வழமை போல் ஓட்டிக்கொள்கின்றார். தாங்கள் கூடி குழையடிக்கும் கூட்டத்தின், கடந்தகால கிரிமினல் அரசியல்களை எல்லாம் "தவறுகள்" என்கின்றார். இப்படிக்  கூறிக் கொண்டு, மகிந்தாவின் தலைக்கும் பொருந்தும் வண்ணம் வரலாற்றை "தவறாக" திரித்து, அனைத்து கிரிமினல்களுக்கும் பொருத்திப் பொருந்திப் போகும் வண்ணம் "கவிதை" என்னும் தொப்பியை அளவாக அணிய வைத்து விடுகின்றார். இப்படி குழையடிக்கும் தொப்பி அரசியலை "மா.லெ.மாவோயிசிய" கவிதையாகின்றது.

 

"தவறு" செய்யாதவர்களாக நாம் எம்மை காட்டிக்கொள்வதாக, எங்களையே இட்டுக்கட்டியும், திரித்துப் பாடி, கிரிமினல் அரசியலையும் அது சார்ந்த நடத்தைகளையும் எங்கள் "தவறு போல்" அவையும் என்று சொல்லி குழையடிக்கும் "மார்க்சிய" மகிமை என்னே மகிமை.

 

நாங்கள் சிவசேகரம் இட்டுக்கட்டியும் திரித்து காட்டியதும் போல் "தவறு செய்யாத" தளபதிகள் போல், நாங்கள் தவறு செய்யாதவர்கள் அல்ல. இது அவரின் குழையடிக்கும் அரசியலுக்கு இட்டுக்கட்டிப் பாடியது. நாம் தவறு செய்வதால்தான், அதை சுயவிமர்சனம் செய்வதால் தான், நாங்கள் தொடர்ந்தும் மக்களுக்காக உறுதியாக குரல் கொடுத்து, மக்களுடன் நிற்க முடிகின்றது. யார் சுயவிமர்சனத்தை மறுக்கின்றனரோ, அவர்கள் தான் மக்களுடன் நிற்கவில்லை. மாறாக மக்கள் விரோத அரசியலை கடந்த காலம் முதல் செய்தனர். மக்களுக்காக கடந்தகால போராட்டத்தை இன்று மறுக்கின்றனர். இவர்களா சுயவிமர்சனம் செய்வார்கள்!? இவர்களா அரசியலில் "தவறு" செய்தவர்கள்!? 

 

அன்று அரசியலைத் துறந்த சிவசேகரம், சீரழிந்த இலக்கிய சந்திப்பில் கூடி கும்மியடித்த போது, உங்களையும் உங்கள் கூட்டத்தையும் நாங்கள் எதிர்த்துப் போராடியவர்கள். அன்றும் நாங்கள் உங்களுடன் சேர்ந்து அந்தத் தவறை இழைக்கக் கூடாது என்ற தனித்துவமான முன்முயற்சியுடன், உங்கள் இருப்பு சார்ந்த "பேராசிரியர்" பிழைப்புத் தனத்தை எதிர்த்து நின்றோம். இதனால்தான், எம்மால் மட்டும் தொடர்ந்து மக்களின் அவலத்தை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக உறுதியாக போராட முடிந்தது.

 

நீங்கள் மார்க்சிய அரசியலை துறந்து அரசியல் ரீதியாக அன்று பாதுகாத்த, உங்கள் கூட்டாளிகள் எல்லாம் இன்று எங்கே போனார்கள்? மனித அவலம் தமிழ் மக்களின் வாழ்வாக நிகழ்ந்த போது, பலர் கொலைகாரன் மகிந்தாவின் கூட்டாளியாகவும், சிலர் வரலாற்றில் எதுவும் எதிர்வினையாற்றாத இருப்பு "அரசியல்" வாதிகளாகவும் இருந்தனர். அன்று எம்மை எதிர்த்த, இதற்கெல்லாம் அடியெடுத்து கொடுத்த "பேராசிரியர்" பெருந்தகையே, மீண்டும் குழையடிக்கும் கவிதைக்கு பதில் அதைச் சொல்லி பாடியிருக்கலாமே!? எப்படித்தான் பாட முடியும். அப்படி பாடின் குழையடிக்க யார்தான் எஞ்சுவர்?

 

நீங்கள் குழையடிக்கும் "மார்க்சிய" அரசியல் மூலம் கக்கும் கவிதையை, குழையடிப்;போர் கூட்டம் போல் நாமும் கூறினால் "நல்லாயிருக்கு" என்று கூறலாம்;. இதை "வர்க்க"க் கவிதை என்பதா, "மார்க்சிய" கவிதை என்பதா? மக்களுக்காக எதிர்வினையாற்றாத உங்கள் "மார்க்சியம்" மூலம், மரணித்தார்களே மக்கள் எதனால்? உங்கள் அரசியலுக்கு மாறாக, உங்களை எதிர்த்து இறுதிவரை மக்கள் நலனுக்காக நின்றதால் கொல்லப்பட்டவனின் தியாகம் தவறானதா? மக்களுடன் நின்றவர்களுக்கு எதிராக நீங்கள் கட்டமைத்து உருவாக்கிய எதிர்ப்புரட்சி அரசியல் மூலம், அவர்களை எல்லாம் வரலாற்றில் புதைத்தவர்கள் நீங்கள். நீங்கள் பொறுக்கிகள் என்பதை உங்கள் வரலாறாக்கியவர்கள் நீங்கள்.

 

கடந்த வரலாற்றில் மக்கள் அரசியலை முன்வைக்காது, புலிக்கு நிகராக எதிர்ப்புரட்சி அரசியலை முன்தள்ளியவர்கள் தான் நிகழ்காலத்தில் திடீர் "புரட்சி" அரசியல் பேசுகின்றனர். இன்றைய காலம் அரசியலில் "புரட்சி" பேசும் சீசன். இதற்கமைய தமக்கு வெளியில் கடந்தகாலத்தில் நடந்த போராட்டத்தையும், தியாகங்களையும் மறுத்து, அதை கொச்சைப்படுத்தி காட்ட இட்டுக்கட்டி கவிதை பாடுகின்றார். அரசியல் பொறுக்கிக்கேயுரிய "பேராசிரியர்" தனம்.   

 

"அவர்கள் தவறுகளே செய்வதில்லை, அது
அவர்கள் எதையுமே செய்யாதலாலில்லை.
அவர்கள் செய்கிற எதிலும்
சரியான அனைத்தும் அவர்களுடையதாகவும்
தவறான அனைத்தும் மற்றவர்களுடையதாகவும்
உரிமைப் படுத்தப் படுகின்றன."

 

கடந்தகாலத்தில் பொறுக்கி அரசியலை செய்தவர்கள், கடந்தகால தியாகங்களையும் போராட்டத்தையும் மறுதலிக்கும் "மா.லெ.மாவோயிச" குழையடிப்பு கவிதையில் "சரியானதை" நாம் உரிமை கோருவதாகவும், "தவறானதை" தம்மிடம் தள்ளுவதாகவம் கூறி புலம்புகின்றார். இதன் மூலம் "சரியானதை" உரிமை கோர முனைகின்றார். சரி "பேராசிரியர்" பெருந்தகையே, உங்கள் சரியானதுதான் என்ன? தவறானதுதான் என்ன?

 

மக்களுக்காக போராடியதால் தியாகம் செய்தவனையும், போராடியவனையும், திண்ணையில் "மா.லெ.மாவோசிய" புத்தகத்துடன் படுத்துக்கிடந்து புரட்சிக்கு வழிகாட்டிய "பேராசிரியர்" பெருந்தகைகள், கொச்சைப்படுத்தி பாடாமல் குழையடிப்பு அரசியல் செய்யமுடியாது என்பது இன்றைய அரசியலாகிவிட்டது. "அது அவர்கள் எதையுமே செய்யாதலாலில்லை" என்று போராடிய வரலாற்றையும் தியாகங்களையும் புதைத்து அதன் மேல் சேறடித்து விட்டு, கொக்கரிக்கின்ற பேராசிரியர்தனமான "மார்க்சியம்" பேசுகின்றனர். அவர்கள் செய்தார்கள் என்றால் என்ன? சரி யாருக்கு எதிராக? உங்களுக்கு எதிராகவும் தானே.

 

"பேராசிரியர்" பெருந்தகை கனவு கண்டு எழுந்து திடீரென கூறுகின்றார் "தவறானவற்றைப் பகிர பலருங் காத்திருக்கின்றனர்" ராம். முதலில்  நீங்கள் செய்தீர்களா? 1990 களில் புலம்பெயர் நாட்டில் அரசியலை துறந்து, மற்றவர்களை துறக்க வைத்து ஆடிய ஆட்டம் தான் என்ன? எமக்கு வெளியில் மக்களுடன் நின்று ஒரு மாற்றைக் கூட, உங்கள் அரசியல் விட்டுவைக்கவில்லை. நாம் திரும்பிய பின், பு.ஜ.கட்சின் உருத்திராட்சைக் கொட்டையாக இருந்த "மா.லெ.மாவோயிச"த்துக்கு பல்லவி பாடியது அல்லவா உங்கள் "மார்க்சிய" அரசியல்.

 

நாங்கள் இன்று உங்களை அம்பலப்படுத்த, தவறை பகிர்வது பற்றி திடீரென பேசுகின்றார் சிவசேகரம். இதை நாங்கள் அம்பலப்படுத்த முன்னம், கவிதையாக பாடி செய்திருக்கலாமே. சரி நீங்கள் இதை செய்யவில்லையே ஏன்? சரி, குழையடிப்பதைவிட்டுவிட்டு, பகிருங்கள் பார்ப்போம். அது சரி "தவறானவற்றைப் பகிர பலருங் காத்திருக்கின்றனர்" என்று கூறும் நீங்கள், கடந்து போன போராட்டத்தை மறுப்பது அரசியல் தவறாக தெரியவில்லையோ!? பலர் என்கின்றீர்களே, சரி யார்? உங்களுடன் குழையடிக்கும் கூட்டமா? குழையடிக்க, நல்ல பகல் கனவு காண்கின்றீர்கள்.

 

சரி நாங்கள் "தவறு செய்யாத தளபதி"களாக காட்டி எங்கள் தவறுகளை மூடிமறைக்கின்றோம் என்று வையுங்கள். "மார்க்சிய வரட்டுவாதத்துடன்" ஏதோ ஏதோ சொல்கின்றோம் புலம்புகின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

 

சரி, நீங்கள் கடந்தகால போராட்டத்தை எல்லாம் மறுப்பது ஏன்? மக்களுக்காக இயக்கங்களை எல்லாம் எதிர்த்து உட்கட்சி போராட்டத்திலும், வெளியிலும் கொல்லப்பட்டவர்களை, அரசியல் ரீதியாக முன்னிறுத்தாமல் எது உங்களைத் தடுக்கின்றது? கடந்த மக்கள் விரோத அரசியலையம், அதற்கு உடந்தையாக இருந்தவர்களையும் பற்றிப் பேசுவதை, எது, எந்த அரசியல் தடுக்கின்றது?

 

உங்கள் அரசியல் நேர்மையீனம் மட்டுமின்றி, மக்களுடன் நிற்காத உங்கள் "மா.லெ.மாவோயிச"மும், அதாவது இருப்புக்காக பிழைப்புவாதம் ஊடாக முன் தள்ளும் "மா.லெ.மாவோயிச" அரசியலும் கூட இதைத் தடுக்கின்றது. கூடிக் கும்மியடிக்க "மா.லெ.மாவோயிச"த்தை கடைவிரித்து நிற்கின்றது திடீர் புரட்சி அரசியல்.   

 

பி.இரயாகரன்
02.01.2010

 


பி.இரயாகரன் - சமர்