பொல்லா வினை என
புதுப் புது ஆண்டுகள் தோன்றியே என்னே
புகழுடலெனப் போனோர் என்னே
என்னோர் என்றும் இயம்பும் குரலெனப்
பின்னே செல்லும் வாழிளம் உயிரோ

மெல்லப் போவதும் மேடுகள் விரிவதும்
எல்லாந் தொலையாத ஏதோ ஒன்றாய்
இரந்தது மண்ணும் அதுகொண்ட உயிரும்
ஞாயிறு ஏறிய நடுப் பகற் கனவு

நமக்கென் றொரு நாடுகாண் நோக்கு
வானமும் பொழியா வயலும் விளையா
வன்னியாய்க் கொண்ட மக்களும் முட்பதர்
மேவிய திசை மெல்லச் சாயும்



சொல்லுவார் சொல் கேட்பது குடி எனக்
கொண்டோர் கூவிய இந்தக் கடுப்பாண்டு
கோர முகந் தொலைக்க இனி வரும் பொழுது
யுத்தம் என முனியாது புயல் என மடியாது

குடிகளே கோல் கொண்டொரு முறை செய்யக்
கடன் பழி காணாத காட்சி என் மாட்சி
ஈன்ற குழவி முகம் கண்டு இரங்கும்
இனியவள் முலை சுரக்கும் வெண் மனம்

இறையுக்கும் பொருந்த உழைப்பவர் எவர்?
எல்லோர் கோசமும் விடுதலை புரட்சி
பொல்லா வினை எனப் பொங்கும் சிறந்தோர்
வதைகாண் குடிகள் வன்னிகொள் சிறை

வந்து தோன்றி அவர் விலங்கு களைந்து
உயிர்கொண்டு ஊர ஒப்புவார் எனவும்
ஊன் வருத்த என்று இனி ஒரு தவமும்
உப்பு இல்லா இவர்க்கு வேண்டவே வேண்டாம்!





காணார் கேளார் கால் கை முறிபட்டோர்
கணவன் துணைவி குழவியெனப் பட்டோர்
இழந்தவை அனைத்தும் வலிகொள்
வன்னி மக்கள் அவர் வழி உயிர்கொண்டு துய்க்க

எல்லாம் நிறைக என்று இசைத்து
உடன் ஊட்டி உண்டு ஒழி மிச்சில் உண்டு
உறங்க எனக்கு எனக் காலம் வரும்
எவருரைப்பை இனி கேட்க ஏது காலம்?

வன்னி மாள்வோர் யாவரும் இன்மையின்
"மன் உயிர் ஓம்பும் இம் மா பெரும் செயலும்
எனக்கு எட்டாக் கரு வினையாக வரண்ட தவத்துள்
வழி வழி உழந்தேன் சுமந்த என் கோலால்!" என்றென வருந்தி

இனிவந்த ஆண்டில் ஊழ் அடியிட்டு அதன் உள்ளகம் புகா
ஒரு வினை செய்ய உய்த மானுடர் தவமொடு சாலப்
பயன் கொள் அகமும் பார்கொள் ஞானமும்
நாடிய யானும் யாவும் ஆக வருக புது-ஆண்டு,வருக!


ப.வி.ஸ்ரீரங்கன்

01.01.2010