08102022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

பிரபாகரன் செத்தவுடன் திடீர் புரட்சி பேசுவோரும், பு.ஜ.கட்சி கட்டி புரட்சியை கனவு காண வைத்தவர்களும்

தமிழ்மக்கள் மேல் அரச பாசிசமும், புலிப் பாசிசமும் பாய்ந்து குதறிய போது, "முன்னேறிய பிரிவு" என்று தம்மைத்தாம் கூறும் கூட்டம் என்னதான் செய்தது!? அந்த மக்களுக்கு குரல் கொடுத்ததா? வரலாற்றில் அது மக்களுக்காக மக்களுடன் நின்று போராடியதாக, எந்த ஆதாரத்தையும் முன்வைக்க முடியாது. அப்படியிருக்க "முன்னேறிய பிரிவு" என்று தன்னை தான் அடையாளப்படுத்திக் கொண்டு, இன்று குழையடிக்கின்றது. இந்தக் கூட்டம் அரசியல் ரீதியாக, மக்கள் சார்ந்த அரசியலை முன்னெடுத்திருக்கவில்லை.

மக்கள் தங்கள் வாழ்வை இழந்து போராடிக்கொண்டு இருந்தபோது, கண்ணை மூடிக்கொண்டு படுத்துக் கிடந்தவர்கள் ஒருபுறமும். மறுபுறம் புரட்சி பற்றி கனவு காண வைத்துக் கொண்டும்  இருந்தனர். பிரபாகரன் செத்தான் என்றவுடன் பதறியடித்துக் கொண்டு, பாயை விட்டு எழும்பியவர்களும், கனவு கலைந்தவர்களும் "மார்ச்சியம்" "புரட்சி" என்று உருவெடுத்தாடுகின்றனர். தம்மைப் போல் தான் அனைவரும் படுத்துக் கிடந்தனர், கனவு கண்டனர் என்ற கூறிக் கொண்டு, சுயவிமர்சனத்தை அனைவரின் பெயரிலும்;, சுயவிமர்சனம் என்றால் என்ன என்று கூறத்தொடங்கியுள்ளனர். இப்படி கனவு கலைந்த கையுடன், இன்று குழையடிக்கும் அரசியலை முன்தள்ளுகின்றனர்.

 

1983 இல் இயக்கங்கள் வீங்கி வெம்பிய போது, அது மார்க்சியத்தையும் சோசலிச தமிழீழத்தையும் கூட சேர்த்தே முன்வைத்தது. இது நந்திக் கடற்கரையில் முடியும்வரை ஆயிரம் வே~ம் போட்டது. பிரபாகரன் செத்தவுடன், 1983 இல் நடந்தது போல் மீண்டும் மார்க்சியம் புரட்சி என்று வே~ம் போட்டபடி குழையடிக்கத் தொடங்கியுள்ளனர்.

 

சரி இவர்கள் கடந்தகாலத்தில் இருந்து மே 18 வரை என்ன செய்தனர் என்று கேட்டால், தப்பு இப்படி கேட்கக் கூடாது என்கின்றனர். புலம்பெயர் இலக்கிய சீரழிவை வித்திட்ட  "பேராசிரியர்" பெரும்குடி சிவசேகரமோ, கடந்தகாலத்தை பற்றிக் கேட்பது அபத்தம் என்று கவிதை பாடுகின்றார். புலிகள் கூறுகின்றனர் கடந்ததை எதையும் பற்றி கதைக்காது, வேலை செய்வோம் என்கின்றனர். அவையெல்லாம் நேற்றிரவோடு முடிந்து போய்விட்ட வரலாறுகள் என்கின்றனர். திடீர் "மார்க்சியம்" "புரட்சி" பேசும் கூட்டமும் இதைத்தான் சொல்லுகின்றது.

 

கடந்த காலத்தில் சவுக்குத்தோப்பில் புதைத்ததைப் பற்றியும், புதைத்தவர்கள் பற்றியும், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் பற்றியும் பேசுவது "வரட்டுவாதமாம்", "கலைப்புவாதமாம்". குற்றமும், குற்றத்தை அரசியலாகவும் கொண்டு வாழ்ந்த வாழ்கின்ற இருப்பு அரசியலை, குழையடிக்கும் அரசியலை மார்க்சியமாக காட்டி மூடிமறைக்க எம்மைக் கோருகின்றனர். அதற்குதான் பேராசிரியர் முதல் அனைவரும் வரிந்துகட்டிக் கொண்டு நிற்கின்றனர்.

 

கடந்தகால மனித அவலத்துக்காக அந்த அரசியலையும் சரி, இதற்காக யாரையும் எவரையும் குற்றம்சாட்டக் கூடாது என்கின்றனர். இதையே "மே 18" காரர் தன்னியல்புவாதம் என்று கூறி குழையடிக்கின்றனர். "மார்க்சியம்" பேசுவோர் இதை பேசுவது "சுயவிமர்சனம்" பற்றிய அறியாமையும் தலைக்கனமும் தான் என்கின்றனர்.  

               

இதன் பின்னணியில் தமிழ்மக்களுக்கு நடந்ததை இட்டு, யாரும் தங்களைப் போல் எதிர்த்துப் போராடவில்லை என்ற திரிபை சமூகத்தில் திணிக்கின்றனர்.

 

இதுபோல் தமிழ் மக்களை முன்னிறுத்தி மக்கள் அரசியலை முன்வைக்காத, தங்கள்  சுய அடையாள அரசியலைச் செய்த கூட்டமும் இதையே செய்கின்றது. தமிழ் மக்களைச் சார்ந்து முன்வைத்த அரசியல் எதுவும் இவர்களிடமும் இருக்கவில்லை என்பதால், போராடியவர்கள்  வரலாற்றை திரிக்கின்றனர்.

 

இந்த இரு கூட்டமும் சேர்ந்து, இன்று குழையடிக்கும் அரசியலை முன்தள்ளுகின்றது. குழையடிக்கும் இந்;த அரசியல்தான், இன்றைய அரசியல் போக்காகும். இதன் அரசியல் அடிப்படை என்பது, கடந்தகாலத்தின் மக்களுக்காக நடந்த அரசியல் போராட்டத்தை மறுக்கின்றது. மக்கள் அரசியல், குறிப்பாக மார்க்சிய அரசியல் முன்வைத்த போராட்டத்தை மறுதலிக்கின்றது. வரலாற்றை திரித்துக்காட்ட முனைகின்றது.

 

மிக விரைவில் பல ஆயிரம் பக்கம் கொண்ட ஆவணப்பகுதியை திறக்கவுள்ளோம். இது பலவற்றை அம்பலமாக்கும்;. அதுவரை திரித்து புரட்டுவது கூட, அரசியல் குழையடிப்பில் ஒரு அரசியல் அம்சமாக இருக்கும்.

 

நாங்கள் இங்கு சுயவிமர்சனத்தையும், விமர்சனத்தையும் ஒன்றாக கோரி வந்தோம். இந்தக் குழையடிப்பில், இரண்டும் அக்கம்பக்கமாக மூடிமறைத்த சந்தர்ப்பவாத அரசியலாக நீடிக்கின்றது. நாம் இதை அவர்களிடம் கோரியது என்பது, இணைந்து வேலை செய்யக் கூடிய அரசியல் வரையறையில்தான். அரசு மற்றும் புலிக்கு எதிரான அரசியல் நிலையெடுத்த அனைவருடனும், விமர்சனம் சுயவிமர்சனமூடாக ஒரு அரசியல் இணக்கத்தை அடைய முனைந்தோம்.

 

இதற்கு வெளியில் நாம் எந்த சுயவிமர்சனத்தையும், விமர்சனத்தையும் கோரவில்லை. ஆனால் அவர்கள் கடந்நகாலத்தில் மக்களைச் சார்ந்திராத அரசியல் நிலையை, சுயவிமர்சனம் செய்யவோ விமர்சனம் செய்யவோ இவர்கள் தயாராகவிpருக்கவில்லை. 

 

மக்களை சார்ந்திராத தங்கள் அரசியல் நிலையை தொடர்ந்து தக்கவைக்க, குழையடிப்பு அரசியலை முன்தள்ளுகின்றனர். இந்த இடத்தில் இதை அம்பலப்படுத்துவதும், அரசியலாக மாறிவிடுகின்றது.

 

இந்த நிலையில் கடந்தகாலத்தில் புரட்சியைக் கனவில் காண வழிநடத்திய புதிய ஜனநாயகக் கட்சி, இனியொருவுக்கு அரசியல் எடுபிடியாக முன்வருகின்றது. "பொதுவாக மற்றவர்களைச் சுயவிமர்சனம் செய்யுமாறு ஆணையிடுகிறவர் என்றாவது தன்னைச் சுயவிமர்சனம் செய்தவராக இருப்பதில்லை." என்கின்றனர். நாங்கள் யாரையும் எப்போதும் ஆணையிடவில்லை. மாறாக நாம் இணைந்து வேலை செய்வதாக இருந்தால், அவர்கள் மக்கள் அரசியலை முன்னிறுத்தி நடைமுறையில் போராடியிருக்கவேண்டும். இதை நாம் இவர்களிடம் கடந்த காலத்தில் காணமுடியாது. இதனால் கடந்தகாலத்தில் மக்களுடன் நிற்காத காலம் பற்றிய, விமர்சனம் சுயவிமர்சனத்தை எதிர்பார்ப்பது இயல்பானது.

 

கடந்தகாலத்தில் மக்களுக்கான போராட்டத்தையும், அந்த தியாகங்களையும் அங்கீகரிக்க மறுப்பது, இதன் அரசியல் சாரமாகிவிடுகின்றது. இதைச் செய்யாத வரை, அதை அம்பலப்படுத்தல் என்பது தவிர்க்க முடியாதது.   

 

விமர்சனம், சுயவிமர்சனத்துக்கு பதில் குழையடிக்கும் அரசியலை கேள்விக்குள்ளாகும்  நிலையில் "என்றாவது தன்னைச் சுயவிமர்சனம் செய்தவராக இருப்பதில்லை" என்று கூறி நாம் சுயவிமர்சனத்தை செய்யாதவராக இட்டுக் கட்டுகின்றனர். சுயவிமர்சனம் என்பது, மக்கள் அரசியலுடன் மக்களுக்காக நின்று போராடுவதுதான். கடந்தகாலத்தின் தவறான அரசியல் நடத்தைகளை களைந்து, மக்களுக்காக மக்களுடன் போராடுவதுதான். மக்கள் அரசியலை கைவிட்டு அனைவரும் அரசியலை துறந்து துறவறம் போன நிலையில், நாம் அந்த மக்களுடன் நிற்க முனைந்தவர்கள். புலியின் பாசிசத்தின் கீழ் மக்கள் அடிமைப்பட்டு அவலத்தை சந்தித்த போது, நாம் மட்டும் தொடர்ந்து அதை அம்பலப்படுத்தி மக்களுக்கான மாற்று அரசியலை முன்வைத்தவர்கள். இந்தப் போராட்டம் தான், எமது சுயவிமர்சனத்தின் அரசியல் விளைவாகும். இதுவே சுயவிமர்சனத்தின் அரசியல் அடிப்படையுமாகும். இதற்கு வெளியில் (உதாணரமாக அசோக் சோடித்த குற்றசாட்டுகள் அபத்தமானவை. இவை எப்படி அபத்தமானவை பொய்யானவை என்பதை குறித்த அந்தத் தொடர் பதிலளிக்கும்.) நாம் சுயவிமர்சனம் செய்ய வேண்டும் அல்லது எம் மீதான குற்றச்சாட்டுகள் இருப்பின், அவைக்கு நிச்சயமாக பதிலளிப்போம்.

 

கடந்தகாலத்தில் மா.லெ.மாவோ சிந்தனையை நாம் முன்னிறுத்தி மக்களின் அவலங்களுக்காக நாங்கள் மட்டும் குரல் கொடுத்த நிலையில்தான், இந்த அரசியலை மறுத்தவர்கள் தான் என்மீது தனிப்பட்ட குற்றச்சாட்டை முன்தள்ளுகின்றனர். இங்கு எமது அரசியலையும், அதற்காக விட்டுக்கொடுக்காத எமது போராட்டத்தையும், எதிர்கொள்ள வக்கற்றுப் போகின்றவர்கள் தான் இன்று, நடந்த போராட்டத்தை மறுக்கின்றனர். இதனால் தனிப்பட்ட என் மீது, என் மொழி மீதும் அவதூறு பொழிகின்றனர். ஆனால் இந்தத் தனிநபர் தாக்குதல், குழையடிக்கும் கூட்டத்துக்கு முன் தெரியவில்லை.

 

கலையரசன் மீது அவதூறை பொழிந்த போது, குழையடிக்கும் கூட்டம் குழையடித்துக் கொண்டுதான் இருந்தது. அவர் அதை மறுத்த போதும், குழையடிக்கும் கூட்டம் குழையடித்துக் கொண்டு இருந்தது. இதை நாம் அம்பலப்படுத்தி அசோக்கை நோக்கி கேள்வி எழுப்பியவுடன், அசோக் எம்மீது தனிப்பட்ட தாக்குதலை நடத்துகின்றார். அரசியல் ரீதியாக எம்மை எதிர்கொள்ள, அரசியல் எதுவும் அவரிடம் கிடையாது.

 

இந்த நிலையில்தான் புதிய பூமி அசோக்கின் எடுபிடியாகி களமிறங்குகின்றது. அது "எதையாவது யாரேன் கண்டித்தோ விமர்சித்தோ கருத்து வெளியிட்டால் அக் கண்டனத்தையோ விமர்சனத்தையோ திசை திருப்புவதற்காகக், கருத்துக் கூறியவர் மீது ஏதாவது குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. அல்லது அதற்கும் அப்பாற் சென்று நீ முதலிற் சுய விமர்சனம் செய்து விட்டுப் பேசு என்று சொல்லப்படுகிறது." என்று எம்மீது குற்றச்சாட்டை முன்வைக்கின்றது. வேடிக்கை என்னவென்றால், அசோக் கலையரசன் மேல் நடத்திய சேறடிப்புக்கும் சரி, பின் நாம் அசோக் மேல் எழுப்பிய கேள்விக்கு பதிலளிப்பதற்கு பதில், தனிநபர் தாக்குதலை நடத்தினர். இதை எல்லாம் திசை திருப்ப, ஏதோ நாங்கள்தான் என்று "புதிய பூமி" அசோக்கின் அடியாளாக மாறி இனியொருவில் வலம் வருகின்றனர்.     

 

"சுய விமர்சனம் என்றால் என்ன?" என்று அதை மா.லெ.மாவோயிசமாக கூறும் புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பாக, குழையடிக்கும் கூட்டத்தையும் அதன் அரசியல் கூத்தையும் பாதுகாக்க விளக்கம் கொடுக்கின்றது. இது எப்படிப்பட்ட மா.லெ.மாவோயிசமாக  இருக்கின்றது. கடந்த 30 வருடமாக மா.லெ.மாவோயிசத்தை உருத்திராட்சைக் கொட்டையாக்கி, தங்கள் இருப்பு அரசியலுக்காக உருட்டி அந்த அரசியலை வழிபட்டதுதான். 30 வருடமாக தமிழ்மக்கள் பட்ட துன்பங்களை கண்டு கொள்ளாத, வழிபாட்டுக்குரிய "மா.லெ.மாவோயிசமாக" புதிய ஜனநாயகக் கட்சியின் பின் அது இருந்து வந்துள்ளது. அது இன்று குழையடிக்கும் கூட்டத்தின் பின் எடுபிடியாகி, அரோகரா போடுகின்றது. இதற்கமைய சுயவிமர்சனம் என்றால் என்ன என்று, விளக்கம் கொடுக்கின்றது.

 

கடந்த காலத்தில் மக்கள்பட்ட துன்பத்தை மக்களுடன் மக்களாக நின்று குரல் கொடுக்காத கூட்டம்தான், இன்று தமக்குள் குழையடிப்பில் ஈடுபடுகின்றது. செத்துப் போன புலியின் நடத்தையை, திடீர் விமர்சனம் செய்து தாங்களும் புலியை விமர்சனம் செய்வதாக கூறுகின்றது. புலிகள் உயிருடன் இருந்த போது அம்பலப்படுத்தி போராடியவைகளை மறுத்தபடிதான், அதைத் திருடி மறுபடியும் தொகுத்து இந்த குழையடிப்பு அரசியல் அரங்கேறுகின்றது.

 

திடீரென கனவு கண்டு எழுந்தும், மா.லெ.மாவோ சிந்தனை பெயரிலும், கடந்தகால இருப்பு அரசியலை தொடரவும், இன்று திடீரென செத்துப் போன புலியை விமர்சிக்கின்றனர். இதில் பெரும்பாலானவை எமது முந்தைய விமர்சனங்களில் இருந்து திருடப்பட்டவை. அதை ஏதோ புதிதாக இன்று தாம்தான் முதன் முதலில் புலிக்கு எதிராக முன் வைப்பதாக, திடீரென  காட்ட முற்படுகின்றனர்.

 

இவை அனைத்தும் அரசியல் குழையடிப்பின் பின், இந்தக் கூட்டத்தால் அரங்கேற்றப்படுகின்றது. கடந்தகால போராட்டத்தை மறுத்து, அன்று புலிகளை நோக்கி நாம் விமர்சனம் செய்தவற்றை திருடியும், இன்று திடீர் அரசியல் செய்கின்றனர். இவர்கள் தான் எதிர்காலத்தில் மக்களை நேர்மையாக வழிநடத்துவர்கள் என்று, எம்மை நம்பவைக்க முனைகின்றனர். இந்த அரசியல் அடிப்படையில் விமர்சனத்தையும் சுயவிமர்சனத்தையும் மறுத்து, குழையடிக்கும் தமது "புத்திஜீவித்தனமான" தங்கள் மோசடியான அறிவு அரசியல் மூலம் மக்களை தொடர்ந்து ஏமாற்றலாம் என்று நம்புகின்றனர். எத்தனை நாளுக்கு இந்த "புரட்சி மார்க்சிய" நாடகம் நடக்கின்றது என்று பார்ப்போம்.

 

பி.இரயாகரன்
29.12.2009

                  


பி.இரயாகரன் - சமர்