இந்தியாவில், சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறது என இன்றும் நம்பிக் கொண்டிருப்பவர்களது அறியாயை எள்ளி நகையாடும் சம்பவம் ஒன்று அண்மையில் நடந்துள்ளது. விடுதிப் பணிப்பெண் ஜெசிகா லாலை சுட்டுக் கொன்ற வழக்கில் சிறையில் உள்ள மனு சர்மா, நன்னம்பிக்கை விடுப்பில் (பரோல்) வெளிவந்து ஆட்டம் போட்ட விவகாரம், சட்டத்தின் ஆட்சியைச் சந்தி சிரிக்க வைத்துள்ளது.
மூன்று முறை காங்கிரசு எம்.எல்.ஏ.வாக இருந்தவரும், இந்திராகாந்தியின் நெருங்கிய நண்பரும், அரியானா மாநிலத்தின் முக்கிய காங்கிரசுத் தலைவருமான விநோத் சர்மாவின் கோடீசுவர மகன்தான் மனு சர்மா. இவனும் இவனது நண்பர்களும் சேர்ந்துகொண்டு 1999ஆம் ஆண்டு ஏப்ரல் 29 அன்று பின்னிரவில், தில்லியில் ஒரு மது விடுதியில் ஜெசிகா லால் என்ற பணிப் பெண்ணைச் சுட்டுக் கொன்றனர். அந்த வழக்கில் மனு சர்மாவின் குற்றம் நிரூபிக்கப்பட்ட தாலும், இக்குடிகார கொலைகாரனுக்கு எதிரான போராட்ட நிர்பந்தத்தாலும் தற்போது தில்லி திகார் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறான்.
இந்நிலையில், இவனது தாயின் உடல்நிலை சரியில்லாததால் அவரைச் சென்று சந்திக்க வேண்டும் எனவும், மேலும் குடும்பத் தொழிலை கவனிக்க வேண்டியிருப்பதாலும் தனக்கு ஒரு மாத காலம் பரோல் தருமாறு விண்ணப்பித்திருந்தான். இதனைச் "சட்டப்படி' ஆராய்ந்த தில்லி அரசுச் செயலர், ஜெயில் சூப்பிரண்டு, தில்லி துணை ஆளுநர் உள்ளடங்கிய குழு அவனுக்கு பரோல் அளித்தது. இவனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், அவனது பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டித்துக் கொடுத்தார்.
சிறையிலிருந்து வெளிவந்தவுடன் மனுசர்மா சென்றதோ, நட்சத்திர விடுதியொன்றில் நடந்த மது விருந்துக்கு. இவன் இவ்வாறு சட்டத்தை ஏமாற்றிவிட்டுக் குடித்துக் கூத்தடித்துக் கொண்டிருந்தபோது, உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாகக் கிடப்பதாகக் கூறப்பட்டிருந்த இவனது தாய், அரியனாவில் உள்ள தமது ஓட்டலில் பெண்கள் கிரிக்கெட் குறித்து செய்தியாளர் சந்திப்பு நடத்திக் கொண்டிருந்தார். முதலமைச்சர், துணை ஆளுநர், சிறைத் துறை மற்றும் அரசு அதிகாரிகள் என அனைவரது ஆசியோடும், ஆதரவோடும் இவன் வெளியே வந்து கும்மாளமடித்துக் கொண்டிருக்கிறான். சட்டத்தின் ஆட்சியோ இதனைக் கண்டும் காணாமல் நடித்துக் கொண்டுள்ளது.
இவன் தனது குடும்பத் தொழிலை கவனிக்க பரோல் கேட்டால் கொடுக்கும் அரசாங்கம், இதையே ஒரு விவசாயி தனது வயலில் விவசாயம் பார்க்க வேண்டும் எனக் கேட்டால் கொடுக்குமா? நக்சலைட்டுகளை ஆதரித்தார்கள் என்ற பொய்க்குற்றம் சாட்டப்பட்டு, கணக்கற்ற அப்பாவி மக்கள் பல ஆண்டுகளாகச் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்கள். இதே சட்டத்தின் பெயரால்தான், செய்யாத குற்றத்திற்காக, விசாரணைக் கைதிகளாகவே பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, இசுலாமிய இளைஞர்கள் பலர் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்குக் கூட சட்டம் இவர்களை அனுமதிப்பதில்லை.
இவர்களுக்கெல்லாம் தனது கொலைக்கரத்தை நீட்டும் இதே சட்டம், பணக்காரர்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் தனது வர்க்கப் பாசத்தோடு நேசக்கரத்தை நீட்டுகிறது. சரவணபவன் அண்ணாச்சி முதல் "கல்வித்தந்தை' ராஜா வரை சட்டத்தை கேலிக் கூத்தாக்கும் மனு சர்மாக்களின் பட்டியலோ நீண்டுகொண்டே செல்கிறது.