Language Selection

புதிய ஜனநாயகம் 2009

வடக்கு கர்நாடகாவிலுள்ள பரிமாரு கிராமத்தைச் சேர்ந்த அனிதா என்ற இளம் பெண் கடந்த ஜூன் மாதம் காணாமல் போனார். இப்பிரச்சினையைக் கையிலெடுத்த இந்து மதவெறி அமைப்புகள், ""அனிதா, பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் ஜிகாதி காதலர்களால் கடத்தப்பட்டு, மதம் மாற்றப்பட்டிருக்கலாம்'' எனக் குற்றம் சுமத்தியதோடு, கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், ""அனிதா தீவிரவாதிகளின் சதிக்குப் பலியாகிவிட்ட தாக'' ப் பிரச்சாரம் செய்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கின. குருபுரா மடாதிபதி ராஜசேகரானந்தா தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பல்வேறு இந்து மடங்களும் ஆதரவு தெரிவித்தன.

ஒரு சாதாரண கிரிமினல் வழக்கு, அசாதாரணமான மதக்கலவரச் சூழலை ஏற்படுத்துவதை நோக்கி நகர்ந்ததையடுத்து, அனிதா காணாமல் போன விவகாரத்தை விசாரிக்கத் தனி போலீசு படை அமைக்கப்பட்டது. இரண்டே வாரத்தில் குற்றவாளியை மடக்கிப் பிடித்த போலீசார், ""அனிதா, மோகன்குமார் என்ற பாலியல் வக்கிரம் பிடித்த கொலைகாரனால் கொல்லப்பட்ட'' உண்மையைப் போட்டு உடைத்தனர். மேலும், மோகன்குமார் அனிதாவைப் போல 17 பெண்களைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டிக் கொன்ற பயங்கரமும் போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.

 

எனினும், முசுலீம்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பல்வேறு இந்து மதவெறி அமைப்புகளின் சதித்தனமான வெறியூட்டும் பிரச்சாரம் மட்டும் ஓய்ந்துவிடவில்லை. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் புதிய பரிசோதனைச் சாலையாகக் கருதப்படும் வடக்கு கர்நாடகாவிலும், கேரளாவிலும் ""இந்து'' மதத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் காணாமல் போனால், முசுலீம் இளைஞர்கள்தான் திருமண ஆசை காட்டி, மயக்கி, அப்பெண்களைக் கடத்திக் கொண்டு போவதாக ஆர்.எஸ்.எஸ்.கும்பல் முசுலீம் எதிர்ப்புப் பிரச்சாரத்தை இம்மாநிலங்களில் நடத்தி வருகிறது. இப்படி முசுலீம் இளைஞர்களால் திருமண ஆசை காட்டிக் கடத்தப்படும் பெண்கள், மதம் மாற்றப்படுவதோடு, தீவிரவாதப் பயிற்சி அளிக்கப்பட்டு இறக்கி விடப்படுவதாகவும்; போதை மருந்துகளையும் ஆயுதங்களையும் கடத்துவதற்குப் பயன்படுத்தப்படுவதாகவும் இந்து மதவெறி அமைப்புகள் பீதியூட்டி வருகின்றன.

 

இந்து ஜனஜாக்ருதி சமிதி என்ற இந்து மதவெறி அமைப்பு, ""வடக்கு கர்நாடகாவில் மட்டும் ஒவ்வொரு நாளும் மூன்று இந்துப் பெண்கள் முசுலீம் இளைஞர்களால் திருமண ஆசைகாட்டி கடத்தப்படுவதாகவும், அம்மாநிலத்தில் இதுவரை 30,000 பெண்கள் மதம் மாற்றப்பட்டிருப்பதாகவும்'' கூறி வருகிறது. எவ்வித ஆதாரமுமற்ற இந்த நச்சுப் பிரச்சாரத்தைப் பத்திரிகைகளும் ஊதிப் பெருக்கி வெளியிட்டு வருகின்றன. இந்த இந்து மதவெறி அமைப்பு முசுலீம் இளைஞர்களைப் ""பாலியல் ஓநாய்கள்'' என வசை பாடுவதோடு, இந்தக் கடத்தலைத் தடுக்க ""ராணாராகினி'' என்ற அமைப்பைக் கட்டியிருப்பதாகவும் கூறியிருக்கிறது.

 

இந்துப் பெண்களைத் திருமண ஆசைகாட்டி மயக்குவதற்காக முசுலீம் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதாகவும்; இதற்காக வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாகவும்; இந்தப் பணத்தைக் கொண்டு அந்த இளைஞர்கள் விதவிதமாக ஆடை அணிந்துகொண்டு, விதவிதமான ""பைக்''குளில் சுற்றி வந்து இந்துப் பெண்களை மயக்குவதாகவும் கதைவிடும் இந்து மதவெறி அமைப்புகள், இந்தக் கட்டுக்கதைக்கு ""காதல் புனிதப் போர்'' (Love Jihad) என்ற திருநாமத்தையும் சூட்டியுள்ளன. முசுலீம்கள் இதனை ஓர் இயக்கமாக நடத்தி வருவதாகவும், இந்தக் காதல் புனிதப் போருக்கும் அல்காய்தாவுக்கும் தொடர்பிருப்பதாகவும் இந்து மதவெறி அமைப்புகள் திகிலூட்டி வருகின்றன.

 

ஏ.கே.47 துப்பாக்கியை ஏந்தி வரும் தீவிரவாதிகளைக் கண்டு மட்டுமல்ல, கொஞ்சம் வெள்ளையும் சொள்ளையுமாக இருக்கும் முசுலீம் இளைஞர்களைக் கண்டும் இந்துக்கள் பயப்பட வேண்டும் என்பதுதான் இந்த விஷமப் பிரச்சாரத்தின் நோக்கம். இந்து மதவெறி அமைப்புகள் முசுலீம் சமுதாயம் பற்றி பரப்பிவரும் பல்வேறு கட்டுக் கதைகள்அவதூறுகளில் இதுவும் ஒன்று என அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக, இந்த நச்சுப் பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கும் விதமாக நீதிமன்றமும் போலீசும் நடந்து வருகின்றன.

 

கேரளாவில் பதனம்திட்டா என்ற நகரில் உள்ள செயிண்ட் ஜான் கல்லூரியில் முதுநிலை பட்ட ப் படிப்பு படித்து வந்த இரு மாணவிகள், ஷஹான் ஷா, சிராஜுதீன் என்ற இரு முசுலீம் இளைஞர்களைக் காதலித்து, வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்து கொண்டனர். அந்த இரு மாணவிகளும் மதம் மாறித் திருமணம் செய்துகொண்ட பிரச்சினை கேரள உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தபொழுது, அந்த இரு பெண்களின் விருப்பத்துக்கு மாறாக, கேரள உயர்நீதி மன்றம் அந்த இரண்டு திருமணங்களும் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்ற காரணத்தைக் கூறி, அந்த இரு பெண்களையும் அவர்களது பெற்றோர்களோடு செல்லுமாறு உத்தரவிட்டது.

 

இந்த வழக்கு விசாரணையின் அடுத்த வாய்தாவின் பொழுது அவ்விரு பெண்களும்,""தாங்கள் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டதாக'' பல்டியடித்து புதிய வாக்குமூலம் கொடுத்தனர். இந்த வாக்குமூலத்தைப் பிடித்துக்கொண்ட கேரள உயர் நீதி மன்றம், ""லவ் ஜிகாத் என்றொரு அமைப்பு நிஜமாகவே உள்ளதா? கடத்தல் மற்றும் தீவிரவாதத்தோடு இந்த அமைப்புக்குத் தொடர்புண்டா?'' என்பது உள்ளிட்ட எட்டு கேள்விகளை எழுப்பி, இது பற்றி தீர விசாரித்து அறிக்கை கொடுக்குமாறு கேரள போலீசுக்கு உத்தரவிட்டது. இந்த எட்டு கேள்விகளுக்கும் இல்லை என்று பதிலளித்த கேரள போலீசார், மறுபுறமோ கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான கலப்புத் திருமணங்களும், மதமாற்றங்களும் நடந்து வருவதால், இது பற்றி இன்னும் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த இரண்டுங்கெட்டான் அறிக்கையைப் பிடித்துக் கொண்ட பத்திரிகைகள் ""லவ் ஜிகாத்'' பற்றி ஊதிப் பெருக்கிப் புலனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டன.

 

தெற்கு கர்நாடகாவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர், ""தனது மகள் சில்ஜாராஜை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 8ஆம் தேதி முதல் காணவில்லை; அவர் கேரளாவிலுள்ள மதரசா ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்; எனவே, தனது மகளைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்'' எனக் கோரி கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கு விசாரணையின்பொழுது சில்ஜாராஜ்,""தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை; தான் விரும்பியே மதம் மாறித் திருமணம் செய்து கொண்டதாக'' வாக்குமூலம் அளித்தார். எனினும் கர்நாடகா உயர்நீதி மன்றம் அப்பெண்ணிண் விருப்பத்துக்கு மாறாக, சில்ஜா ராஜை அவரது பெற்றோரோடு போகுமாறு கட்டளையிட்டது. சில்ஜாராஜ் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டு, மதம் மாற்றப்பட்டுத் திருமணம் செய்து வைக்கப் பட்டாரா என்பதை ஆராய வேண்டிய நீதிமன்றம், அதனையும் தாண்டி, ""இது தேசிய அளவில் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது; தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது'' என்றெல்லாம் இவ்விவகாரத்தை ஊதிப்பெருக்கி, ""லவ் ஜிகாத்'' பற்றி அறிக்கை தருமாறு கர்நாடகா போலீசுக்கு உத்தரவிட்டது.

 

போலீசார் தமது அறிக்கையில், ""கடந்த மூன்று ஆண்டுகளில் 404 பெண்கள் காணாமல் போயிருப்பதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுள் 332 பெண்கள் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும், 57 பெண்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் அல்லது காதலனோடு வெளியேறிப் போயிருக்கலாம்'' எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும் போலீசாரின் அறிக்கையில் காதலனோடு வெளியேறிப் போன பெண்களுள் ஒருசிலர் இந்து மதத்தைச் சேராதவர்கள்; அதே சமயம், இந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் இந்து வாலிபர்களோடு வெளியேறிப் போன வழக்குகளும் உள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கர்நாடகா போலீசாரின் இந்த அறிக்கை ""லவ் ஜிகாத்'' என்ற இந்து மதவெறிக் கும்பலின் நச்சுப் பிரச்சாரத்தை மறுத்துவிட்ட போதிலும், கர்நாடகா உயர்நீதி மன்றம் சில்ஜாராஜைத் தனது காதல் கணவனோடு போவதற்கு இதுவரை அனுமதி அளிக்கவில்லை. கர்நாடகா பா.ஜ.க. அரசாங்கமோ லவ் ஜிகாத் பற்றி விசாரிக்குமாறு சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட்டு, ஆர்.எஸ்.எஸ். நச்சுப் பிரச்சாரத்தின் சூடு தணியாமல் பார்த்துக் கொள்கிறது. உத்திரப் பிரதேச மாநில அரசுக்கும் லதா சிங் என்பவருக்கும் இடையே உச்சநீதி மன்றத்தில் நடந்த வழக் கொன்றில், ""வயதுக்கு வந்த ஒருவர் தனக்கு விருப்பமானவரைத் திருமணம் செய்து கொள்ளும் உரிமையை'' ஆதரித்து அந்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாகவும், அத்தீர்ப்புக்கு எதிராகவே கேரளா மற்றும் கர்நாடகா உயர்நீதி மன்றங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் வழக்குரைஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். மேலும், அந்நீதிமன்றங்கள் அரசியல் சாசனம் அளித்துள்ள தனிநபர் சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரத்திற்கு எதிராக நடந்து கொண்டிருப்பதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.

 

இந்த விவகாரத்தில் கேரளா மற்றும் கர்நாடகா உயர் நீதிமன்றங்களின் நடத்தை "நீதியை' நிலைநாட்டப் பயன்பட்டதைவிட, ஆர்.எஸ்.எஸ். கும்பலின் சதித்தன மான நச்சுப் பிரச்சாரத்திற்கு இலவச விளம்பரமாக அமைந்து போனதுதான் உண்மை. வடக்கு கர்நாடகாவிலுள்ள கல்லூரிகளில் பயிலும் இந்து மற்றும் முசுலீம் மாணவர்கள் வகுப்பறைகளில் தனித்தனியாக அமரும் அளவிற்கு, அப்பகுதியில் மதப்பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், நீதிமன்றங்களின் ஆர்.எஸ்.எஸ். சார்பான நடத்தை எத்தகைய பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்? இந்த விளம்பரத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். கும்பல், மதமாற்றத் தடைச் சட்டம் போல், காதல் திருமணத் தடைச் சட்டம், கலப்புத் திருமணத் தடைச் சட்டம் போன்றவற்றையும் கொண்டுவர வேண்டும் எனக் கோரினால்கூட ஆச்சரியப்பட முடியாது!

 

• செல்வம்