Language Selection

மீண்டும் சீன எதிர்ப்பு தேசிய வெறி இந்திய ஆளும் வர்க்கங்களால் கிளறி விடப்படுகிறது. புத்த மதகுருவான தலாய் லாமா அண்மையில் அருணாச்சலப் பிரதேசத்துக்கு "ஆன்மீகப் பயணம்' சென்றதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்ததையும், அம்மாநிலத்தின் தவாங் மாவட்டப் பகுதியைத் தனது பாரம்பரிய பிரதேசம் என்று சீனா உரிமை கோருவதையும் வைத்து, இப்போது ஊடகங்கள் சீன எதிர்ப்பு தேசிய வெறியைக் கக்குகின்றன.

சீன ஊடுருவல் அதிகரித்துவிட்டது என்றும், அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவுக்கே சொந்தமானது என்றும், சீனக் கொடியையும் சீனப் பொருட்களையும் எரித்து இந்துவெறியர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். ""சீன ஊடுருவல் அதிகரித்துவிட்டது; மைய அரசு எஃகு போன்ற முதுகெலும்பில்லாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது'' என்று சாடி அறிக்கை வெளியிட்டார் பார்ப்பனபாசிச ஜெயலலிதா. பா.ஜ.க. தலைவர்களும் முலயம் சிங் உள்ளிட்ட இதர எதிர்க்கட்சித் தலைவர்களும் பிரதமரைச் சந்தித்து உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரினர்.

 

இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே எல்லை சச்சரவு நீடித்துவரும் நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உண்மையில் சீன ஊடுருவல் அதிகரித்து விட்டதா? அந்நாடு இந்தியாவை ஆக்கிரமிக்கத் துடிக்கிறதா? அதனால்தான் இப்போது சீன எதிர்ப்பு என்பது முக்கிய விவகாரமாகிவிட்டதா? அதெல்லாம் இல்லை. அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்த்தந்திரத் திட்டப்படியே, அதன் விசுவாச அடியாளான இந்தியா, இப்போது சீன எதிர்ப்பு தேசிய வெறியைத் திட்டமிட்டு கிளறிவிட்டு வருகிறது.

 

புதிய நூற்றாண்டுக்கான அமெரிக்காவின் திட்டம், ஆசிய கண்டத்தில் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோருகிறது. இந்த மேலாதிக்க நோக்கத்திற்காக இந்தியாவை அடியாளாகப் பயன்படுத்திக் கொள்ளவும் விழைகிறது. கடந்த 2005ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்த அப்போதைய அமெரிக்க அரசுச் செயலரான கண்டலீசா ரைஸ், ""இந்தியா ஒரு உலக சக்தியாக மாறுவதற்கு சந்தேகத்திற்கிடமின்றி அமெரிக்கா உதவும்'' என்று அறிவித்தார். இதற்காகவே ஏங்கிக் கொண்டிருந்த இந்தியா, அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவின் நோக்கத்தை நிறைவேற்றி, அமெரிக்காவின் தெற்காசிய அடியாளாகப் பரிணமித்துள்ளது. அமெரிக்காவின் விசுவாச தெற்காசிய அடியாளாகச் செயல்படுவதன் மூலம், வட்டார மேலாதிக்க வல்லரசாக வளர்ந்து தமது நோக்கங்களை ஈடேற்றிக் கொள்ளவே இந்திய ஆளும் வர்க்கங்களும் விரும்புகின்றன.

 

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான புதிய இராணுவ ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்காவின் ஆயுதங்களையும் இராணுவத் திட்டங்களையும் இந்தியா பெறுவதற்கு வழி திறக்கப்பட்டது. மேலும், ஐ.நா. மன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் பிற நாடுகளில் அமெரிக்கப் படைகளும் இந்தியப் படைகளும் பயங்கரவாதத்துக்கு எதிராக கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடவும் அதாவது, அமெரிக்காவின் அடியாளாகச் செயல்படவும் இந்த ஒப்பந்தம் கதவை அகலத் திறந்து விட்டுள்ளது. எனவேதான், இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ""இது தெற்காசியாவில் மிகப் பெரிய அச்சுறுத்தல்'' என்று சீனா தெரிவித்தது.

 

அமெரிக்காவுக்கு அடியாள் வேலை செய்யும் ஏற்பாட்டின்படியே, ""அனைத்துலக அமைதிப் படை'' என்ற பெயரில் ஆப்பிரிக்காவின் காங்கோ முதல் பல நாடுகளுக்கு, அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளுடன் இந்தியா தனது படைகளை அனுப்பியது. ஆப்கானில் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளுக்கு உதவியாக கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவின் ஒப்புதலுடன் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான மிகக் கொடிய இன அழிப்புப் போரை சிங்கள இனவெறி பாசிச அரசுடன் இணைந்து இந்தியா நடத்தியது. நேபாளத்தில் மன்னராட்சி வீழ்த்தப்பட்டு, புதிதாக ஆட்சிக்கு வந்த மாவோயிஸ்டுகள் சீனாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் போடுவதை எதிர்த்தது. இறையாண்மை மிக்க ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் அத்துமீறி தலையிட்டு, நேபாள இராணுவத் தளபதியைப் பதவி நீக்கம் செய்யக் கூடாது, பசுபதிநாதர் கோயில் பூசாரியை மாற்றக் கூடாது என்று மாவோயிஸ்டுகளை மிரட்டியது. இந்த அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய மறுத்து மாவோயிஸ்டுகள் பதவி விலகியதும், நேபாளத்தில் இந்திய விசுவாச பொம்மையாட்சியை நிறுவியுள்ளது.

 

""இந்தியாவும் அமெரிக்காவும் நேபாளத்தைத் தமது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்து சீனாவைச் சுற்றிவளைத்து அச்சுறுத்திப் பணியவைக்கும் தமது போர்த்தந்திர நோக்கத்துடன் காய்களை நகர்த்துகின்றன. நேபாளத்தை இதற்கான தளமாகப் பயன்படுத்த அவை முயற்சிப்பதாலேயே, நேபாள உள்விவகாரங்களில் அவை அதிகமாகத் தலையிடுகின்றன'' என்று நேபாள மாவோயிஸ்டுகள் வெளிப்படையாகவே குற்றம் சாட்டுகின்றனர்.

 

தற்போது பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் சீனா, தெற்காசியாவில் தனது செல்வாக்கை நிலை நாட்டும் நோக்கத்தோடு இலங்கை, பாகிஸ்தான் முதலான நாடுகளில் மேற்கொண்டுவரும் முயற்சிகளைக் காரணம் காட்டியும், சீன ஆக்கிரமிப்பு பூச்சாண்டி காட்டியும் இந்தியா தனது மேலாதிக்கத்தை மறைத்துக் கொண்டு வருகிறது. இதற்காகவே, ஏற்கெனவே நிலவிவரும் சீன எதிர்ப்பை உசுப்பிவிட்டு குறுகிய தேசிய வெறியை ஊட்டி வருகிறது. அமெரிக்காவின் ஏற்பாட்டின்படி, இப்போது பாகிஸ்தானுடன் இந்தியா இணக்கம் காட்டி வருகிறது. பாக். எதிர்ப்பு தற்போது மங்கத் தொடங்கி சீன எதிர்ப்பு தீவிரமடைந்து வருகிறது.

 

ஏற்கெனவே ""சீனாவிலிருந்து மலிவுவிலை நுகர் பொருட்கள் இந்தியாவிற்குக் கடத்தி வரப்படுகின்றன; இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க சீனா சதி செய்கிறது; காஷ்மீரில் அக்சாய் சின் பகுதியில் 43,180 சதுர கி.மீ. பரப்பளவுக்கு ஆக்கிரமித்துள்ளது; வட கிழக்கே அருணாச்சலப் பிரதேசத்தில் தவாங் மாவட்டத்தை சீனா உரிமை கோருகிறது; காஷ்மீர், அருணாச் சலப் பிரதேசம், உத்ராஞ்சல் ஆகிய மாநில எல்லைப் புற பகுதிகளில் சீனா அத்துமீறி ஊடுருவியுள்ளது; காஷ்மீரின் லடாக் பிராந்திய எல்லையில் சிவப்பு மையில் அடையாளமிட்டுவிட்டுச் சென்றுள்ளது; சீனாவுக் குச் செல்லும் காஷ்மீர் மற்றும் அருணாச்சலப் பிரதேச மக்களுக்கு சீனத் தூதரகம் தனியாகக் கடவுச் சீட்டு (விசா) வழங்கியுள்ளது; எல்லையோரங்களில் சாலைக் கட்டுமானங்களையும் இராணுவ முகாம்களுக்கான கட்டுமானங்களையும் உருவாக்கி வருகிறது'' என்றெல்லாம் ஊடகங்கள் அவதூறு செய்திகளைத் திட்டமிட்டு பரப்பி வந்தன.

 

கடந்த ஆகஸ்டு மாதத்தில் அருணாச்சலப் பிரதேச வளர்ச்சித் திட்டங்களுக்காக இந்தியா, ஆசிய வளர்ச்சி வங்கியிடம் கடன் பெற முயற்சித்த போது, அருணாச்சலப் பிரதேசம் சச்சரவுக்கு உட்பட்ட பகுதி என்பதால் கடனுதவி செய்யக் கூடாது என்று சீனா தடுத்து நிறுத்தியது. இவ்வாண்டின் தொடக்கத்தில் பிரதமர் மன்மோகன் சிங் அருணாச்சலப் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதற்கு சீனா கடும் ஆட் சேபம் தெரிவித்தது. இவையனைத்தையும் காட்டி ஊடகங்கள் சீன எதிர்ப்பு தேசியவெறியை மூர்க்கமாகக் கிளறிவிட்டன. கோகோ கோலாவின் ஆதிக்கத்தையும், சில்லரை வணிகத்தில் அந்நியஇந்தியப் பெருமுதலாளிகளின் ஆதிக்கத்தையும் எதிர்க்க முன்வராத ""இந்தியா டுடே'', சீன பொம்மைகளாலும் சாக்லெட்டுகளாலும் இந்தியப் பொருளாதாரமும் இந்தியக் குழந்தைகளும் பாதிக்கப்படுவதாக ஒப்பாரி வைத்து சீனாவைக் குறிவைத்து தேசியவெறியூட்டுகிறது.

 

சிக்கிம் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் கெராங் எனுமிடத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் சீன இராணுவம் இந்தியப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஒரு கட்டுக்கதை பரப்பப்பட்டது. ஆனால் இந்தியதிபெத் எல்லைப் பாதுகாப்புப் படை இப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளதோடு, இப்பொய்ச் செய்தியை வெளியிட்டு நாட்டு மக்களைப் பீதியூட்டிய குற்றத்திற்காக இரு பத்திரிகை செய்தியாளர்கள் மீது வழக்கும் பதிவு செய்துள்ளது. சீனா, இந்திய எல்லையில் எந்தவித ஊடுருவலையும் நடத்தவில்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சகமும் இராணுவ அமைச்சகமும் அறிவித்துள்ளன.

 

மேலும், டெல்லியில் இப்தார் விருந்தளித்த பிரதமர் மன்மோகன் சிங்கிடம், இந்திய எல்லைப்புற பகுதிகளில் சீனப் படைகள் ஊடுருவியுள்ளனவா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அப்படி எந்த ஊடுருவ லும் நடக்கவில்லை என்றும், ஊடகங்கள் தேவையில்லாமல் இந்த விசயத்தை மிகைப்படுத்துகின்றன என்றும் பதிலளித்துள்ளார்.

 

இப்படி கடந்த 50 ஆண்டுகளாகவே சீன ஊடுருவல், ஆக்கிரமிப்பு என்ற கூச்சல் தொடர்ந்து நடந்து வருகிறது. அதேசமயம், ""இதைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை; அடிக்கடி நடக்கும் சாதாரண நிகழ்ச்சிதான்; பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்'' என்று இந்திய ஆட்சியாளர்கள் அறிவிக்கின்றனர். அதேசமயம், சீன எதிர்ப்பு தேசியவெறியையும் கிளறிவிடுகின்றனர்.

 

இப்படித்தான், 1962இல் இந்தியசீன எல்லைத் தகராறும் ஊதிப்பெருக்கப்பட்டு முரண்பாடான தகவல்களும் அவதூறுப் பிரச்சாரங்களும் நடத்தப்பட்டு, சீன எதிர்ப்பு தேசியவெறியூட்டப்பட்டது. ஆங்கிலேய காலனிய ஆட்சிக் காலத்தில் மக்மகோன் என்ற நில அளவையாளர் தன்னிச்சையாக அறிவித்த வரைபடத்தின்படி, இந்தியசீன எல்லைகள் அப்போது வரையறுக்கப்பட்டன. இந்தியசீன அரசுகளிடையே பரஸ்பரம் பேச்சுவார்த்தைகள் நடந்து எல்லைகள் வரையறுக்கப்பட்டு, ஒப்புக்கொள்ளப்படவில்லை. சச்சரவுக்கு உட்பட்ட பகுதிகளில் இரு நாடுகளும் பாரம்பரிய அனுபோக உரிமை அடிப்படையில்தான் முரண்படுகின்றன. எனவே, இது பேசித்தீர்க்க வேண்டிய பிரச்சினையாகவே நீடித்து வருகிறது. ஆனால், இந்தியாவோ தீர்மானிக்கப்படாத சச்சரவுக்குட்பட்ட பகுதிகளையே உரிமை கொண்டாடி, அப்பகுதிகளில் சீனா ஊடுருவி விட்டதாகக் குற்றம் சாட்டி, அதனடிப்படையில் சீன எதிர்ப்பு தேசியவெறியைக் கிளறிவிடுகிறது.

 

இந்தியசீன எல்லைத் தகராறிலும், 1962இல் நடந்த இந்தியசீனப் போரிலும் இந்தியாவின் இத்தகைய இமாலயத் தவறுகளை ""இந்தியாவின் சீனப் போர்'' என்ற நூலை எழுதிய நிவில் மாக்ஸ்வெல் என்ற ஆங்கிலேயரும், நேருவின் அந்தரங்கச் செயலராக இருந்த பண்டிட் சுந்தர்லாலும் அம்பலப்படுத்தியுள்ளனர். அது குறித்து இந்திய அரசு நியமித்த விசாரணைக் கமிசனின் அறிக்கை இன்றுவரை வெளியிடப்படவுமில்லை. ஆனால், இன்னமும் சீன எதிர்ப்பு தேசியவெறி மூர்க்கமாகப் பரப்பப்பட்டு வருகிறது. தேசியவெறியே தேச பக்தியாக்கப்படுகிறது.

 

சீனாவை சுற்றிவளைத்து தாக்குவது என்பது, அமெரிக்காவின் உலக மேலாதிக்க போர்த்தந்திரத் திட்டத்தின் ஓர் அங்கம். அத்திட்டப்படி, அதன் தெற்காசிய அடியாளான இந்தியா, சீன எதிர்ப்பு தேசியவெறியைத் திட்ட மிட்டுக் கிளறிவிடுகிறது. அதன்படியே தலாய்லாமா இந்தியாவுக்குத் தப்பிவந்த 50வது ஆண்டையொட்டி, அவரை அருணாச்சலப் பிரதேசத்துக்கு ""ஆன்மீகப் பயணம்'' என்ற பெயரில் அனுப்பியது. இது சீனாவுக்கு ஆத்திரமூட்டும் செயல் என்று தெரிந்தும், இதன் மூலம் சீன எதிர்ப்பு தேசியவெறியைக் கிளறிவிட்டு ஆதாயம் தேட முடியும் என்பதாலேயே, தலாய்லாமா பயணமும் அதற்கு முன்பாக பிரதமரின் பயணமும் நடத்தப்பட்டுள்ளன. சீன பூச்சாண்டி காட்டி, சச்சரவுக்குட்பட்ட எல்லைப் பகுதிகளில் இராணுவத் தளங்களை நிறுவ முயற்சித்து, அதன் மூலம் அமெரிக்காவின் போர்த்தந்திரத் திட்டத்தை நிறைவேற்ற இந்தியா துடிக்கிறது. இந்திய அமெரிக்க விசுவாச ஏஜெண்டான தலாய் லாமா, இத்திட்டத்தின்படி ஆட்டுவிக்கப்பட்டுள்ளார்.

 

காலனிய ஆட்சிக்கு எதிராகப் போராடிய போதிலும் வடகிழக்கிந்திய மாநிலங்கள் எவையும் தேசிய நீரோட்டத்தில் சங்கமித்ததில்லை. 1947க்குப் பிறகு அவை துப்பாக்கி முனையில் இந்தியக் "குடியரசு'டன் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டன. அவற்றை "பாரத மாதா'வின் ""ஏழு சகோதரிகள்''என்று இந்திய ஆட்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவற்றில் ஒரு மாநிலமான, கதிரவன் உதிக்கும் மலைப்பகுதி எனப் பொருள்படும் ""அருணாச்சலப் பிரதேசம்'', காலனிய ஆட்சிக் காலத்திலிருந்து வடகிழக்கு எல்லைப்புற பகுதி (NEFA) என்ற பெயரில் குறிப்பிடப்பட்டு வந்தது. அசாம் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த நேஃபா, பின்னர் 1972 இல் மைய அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பிரதேசமாக மாற்றப்பட்டது. அதன் பின்னர், இந்துத்துவ முறையில் வடமொழியில் அருணாச்சலப் பிரதேசம் என்று பெயரிடப்பட்டு 1987இல் இந்தியாவின் 24வது மாநிலமாகச் சேர்க்கப் பட்டது. இம்மாநிலத்தின் தவாங் மாவட்டப் பகுதியை சீனா தனது பாரம்பரிய அனுபோக பகுதி என்று உரிமை கோருகிறது.

 

தெற்காசியாவில் அமெரிக்காவின் மேலாதிக்கம் இந்தியாவின் மூலம் விரிவடைவதால், அதற்குப் போட்டியாக முதலாளித்துவ நாடான சீனா, இலங்கைக்கு ஆயுத உதவிகள் மற்றும் கட்டுமானத் திட்ட உதவிகள் செய்து தன்பக்கம் இழுக்க முயற்சிக்கிறது. இந்த நோக்கத்திலேயே இலங்கை பாசிச அரசின் ஈழத்தமிழின அழிப்புப் போரை ஆதரித்தது. தெற்காசிய நாடுகளில் சீனா, தனக்கு ஆதரவாக செல்வாக்கு பெற முயற்சிக்கிறதே தவிர, மேலாதிக்கம் செலுத்தக் கிளம்பவில்லை. ஆனால், இந்தியாவோ தனது மேலாதிக்க நலன்களுக்காக நேரடியாகத் தலையிட்டு ஈழப்படுகொலையை நடத்தியதோடு, நேபாளத்திலும் தலையிட்டு தனது பொம்மையாட்சியை நிறுவியுள்ளது. இருப்பினும் இலங்கையில் சீனாவின் தலையீடு அதிகரித்து வருவதாகவும், அதனால் இந்தியாவுக்கு ஆபத்து என்றும் ஆளும் வர்க்க ஊடகங்கள் தேசியவெறியூட்டுகின்றன. இதே வாதத்தை வைத்துதான் தமிழினவாதிகளும் சீன பூச்சாண்டி காட்டி, இந்திய மேலாதிக்கத்தை மூடிமறைத்து வருகின்றனர். இலங்கையின் ஹம்பன்டோடா துறைமுக மேம்பாட்டுத் திட்டத்துக்கு இந்தியா உதவ மறுத்த பின்னர்தான், சீனா அத்திட்டத்துக்கு உதவ முன்வந்தது. ஆனால், இதைக் காட்டி இலங்கையில் சீனாவின் ஆதிக்க ம் பெருகிவிட்டதென்றும், அது இந்தியாவுக்கு ஆபத்து என்றும் தமிழினவாதிகளில் சிலர் பெருங்கூச்சல் போடுகின்றனர்.

 

இந்தியசீன எல்லைத் தகராறு பற்றிய பல உண்மைகளும் இந்தியாவின் வட்டார மேலாதிக்கம் பற்றிய உண்மைகளும் இந்நாட்டு வரலாற்றின் இருண்ட பக்கங்களில் புதைந்து கிடக்கின்றன. இந்த உண்மைகள் மறைக்கப்பட்டு, அண்டை நாடுகளுக்கு எதிரான பகைமையும் போர்வெறியும் தேசியவெறியும் தூண்டிவிடப்பட்டு, இந்தியாவின் விரிவாக்க ஆக்கிரமிப்பு மேலாதிக்க நடவடிக்கைகள் "தேசபக்தி' என்ற பெயரால் மூடி மறைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தேசபக்தி என்பது வேறு; தேசியவெறி என்பது வேறு. இரண்டையும் பித்தலாட்டம் செய்துவரும் இந்திய மேலாதிக்கவாதிகளின் முகத்திரையைக் கிழித்தெறியாமல், அண்டை நாடுகளுடன் நியாயபூர்வமான, சமத்துவமான, சமாதான உறவுகளை ஒருக்காலும் நிறுவவே முடியாது. ஆளும் வர்க்கங்களின் தேசியவெறி போர்வெறியை எதிர்த்து முறியடிக்காமல், எந்த நாடும் மக்களும் ஜனநாயகத்தையோ சுதந்திரத்தையோ நிலைநாட்டவும் முடியாது.

• பாலன்

சீனாவில் குயிங் வம்சப் பேரரசு வீழ்ந்ததும் 1913இல் திபெத் தன்னை சுதந்திர நாடாகத் தன்னிச்சையாக அறிவித்துக் கொண்டது. இருப்பினும் அதை உலகின் எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. அதன் பின் வந்த சீன அரசுகளும் அதை சீனாவின் ஒரு பகுதியாகவே குறிப்பிட்டு வந்தன. 1949இல் கம்யூனிஸ்டுகள் தலைமையில் சீனாவில் நடந்த புரட்சியின் வெற்றிக்குப் பிறகு, சீன மக்கள் குடியரசு தனது பாரம்பரிய பிரதேசங்களை சீனாவுடன் இணைக்கும் இயக்கத்தை மேற்கொண்டது. அதன்படி, திபெத்தும் சீனாவுடன் சுயாட்சி பிரதேசமாக 1951இல் இணைக்கப்பட்டது. ஆனால், திபெத்தில் அடிமை சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வந்த லாமாக்கள் இதை ஏற்க மறுத்து, எதிர்ப்புரட்சி சதிகளில் இறங்கினர்.

 

கம்யூனிச சீனாவைச் சுற்றிவளைத்து நசுக்கவும், கம்யூனிசம் பரவுவதைத் தடுக்கவும் திபெத் விவகாரத்தில் அமெரிக்கா மூக்கை நுழைத்தது. திபெத்தின் மீது சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டியது. லாமா படைகளுக்கு அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. ஆயுத உதவிகள் செய்ததோடு, பயிற்சியும் அளித்து இயக்கியது. நேபாளத்தின் வட எல்லையை ஒட்டியுள்ள மஷ்தாங் எனுமிடத்தில் சி.ஐ.ஏ. கூலிப்படைகளின் கொரில்லா தளம் அமைக்கப்பட்டது. 1958இல் ""கொலராடோ திட்டம்'' என்ற இரகசிய பெயரில் திபெத்தின் ஆண்ட்ருக் கான்போ தாஷி என்ற எதிர்ப்புரட்சி குண்டர்படைத் தளபதியின் கீழ் 200 லாமா குண்டர்களுக்கு சி.ஐ.ஏ. இரகசிய இராணுவப் பயிற்சி அளித்து ஏவியது. 1959இல் திபெத்தில் அடிமை எஜமானர்களான லாமாக்களுக்கு எதிராக மாபெரும் மக்கள் எழுச்சி வெடித்துப் பரவத் தொடங்கியதும், லாமா கும்பல் இந்தியாவுக்குத் தப்பியோடி வந்து தஞ்சமடைந்தது.

 

இந்த உண்மைகளை சி.ஐ.ஏ.வில் திபெத்திய சதித் திட்டங்களுக்காக வேலை செய்த ரோஜர் மெக்கார்த்தி என்ற அமெரிக்க உளவாளி ""டியர்ஸ் ஆஃப் லோட்டஸ்'' (தாமரையின் கண்ணீர்) என்ற நூலில் ஆதாரங்களுடன் விவரமாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

1962இல் நடந்த இந்தியசீனப் போருக்குப் பிறகு, திபெத்திய அகதிகளிலிருந்து கொரில்லாப் படையைக் கட்டியமைக்கவும் பயிற்சி அளிக்கவும் நேரு உத்தரவிட்டு வழி காட்டினார். இதற்கு இந்திய உளவு நிறுவனமான ""ரா'' வும் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வும் ஆயுதப் பயிற்சிகள் அளித்தன. சிறப்பு எல்லைப் படை (எஸ்.எஃப்.எஃப். SFF) என்ற பெயரில் இந்தியப் படைகள் போல இந்தக் கூலிப்படை இயங்கியது. இப்படையைப் பயிற்றுவிக்கவும் வழிகாட்டி இயக்கவும் உ.பி.மாநிலம் டேராடூனுக்கு அருகே சக்ராடா எனுமிடத்தில் ""தாண்டவ் அகாடமி'' என்ற பெயரில் இராணுவப் பயிற்சிப் பள்ளி நிறுவப்பட்டது. திபெத்தில் திடீர்த் தாக்குதல் மற்றும் சீர்குலைவு வேலைகளில் இந்தப் படை ஈடுபடுத்தப்பட்டது.

 

இதற்கு ""எஸ்டாபிளிஷ்மெண்ட் 22'' என்று இரகசிய பெயரிடப்பட்டது. பின்னர், இந்தப் படை கிழக்கு பாகிஸ்தானில் சீர்குலைவு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு, ""முக்தி பாஹினி'' என்ற முஜிபுர் ரஹ்மானின் வங்கதேச விடுதலைப் படையாக அவதாரம் எடுத்தது. இந்தப் படையின் மூலம் பாகிஸ்தானிடமிருந்து பிரிந்து வங்கதேசம் என்ற இந்திய விசுவாச நாடு இந்திரா காந்தியின் காலத்தில் உருவாக்கப்பட்டது.