Language Selection

புதிய ஜனநாயகம் 2009

சில ஆண்டுகளுக்கு முன், சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்கியபோது, அவற்றின் நோக்கங்களாக, ""தொழிற்துறை வளர்ச்சி, ஏற்றுமதிப் பெருக்கம், வேலைவாய்ப்பு அதிகரிப்பு'' ஆகியவற்றை ஆட்சியாளர்கள் முன்வைத்தார்கள். சி.பொ.ம.வில் முதலீடு செய்யும் நிறுவனங்களால், நாட்டிற்குப் பெரிய அளவில் பலன்கள் ஏற்படும் எனச் சொல்லி, அந்நிறுவனங்களுக்கு அரசு பல்வேறு வரிச் சலுகைகளை வாரி வழங்கியது. வரிச்சலுகைகளால் கொழுத்த சி.பொ.ம.க்களால் தொழிற்துறையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏதும் நடந்துள்ளனவா எனப் பார்த்தால், ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. அவை உற்பத்தி செய்த பொருட்களில் பெரும்பான்மை உள்நாட்டில்தான் விற்கப்பட்டுள்ளனவே தவிர, ஏற்றுமதி அதிகரிக்கவில்லை. வேலைவாய்ப்போ, அவர்கள் காட்டிய கணக்கை விட மிகவும் குறைந்த அளவில்தான் உருவாகியிருக்கிறது.

2006 ஆம் ஆண்டு சி.பொ.ம. சட்டம் நடை முறைக்கு வந்ததிலிருந்து, நம் நாட்டில் உருவாக்கப்பட்ட சி.பொ.மக்களின் எண்ணிக்கை 315ஐத் தொட்டுவிட்டது. மேலும், கூடுதலாக 253 மண்டலங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சி.பொ.ம.க்களின் தற்போதைய நிலைமை குறித்து அறிய, சென்னைக்கு அருகில் உள்ள திருப்பெரும்புதூரில் அமைக்கப்பட்டுள்ள நோக்கியா சி.பொ.ம.வை உதாரணமாகப் பார்க்கலாம். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 2,225.47 கோடி ரூபாய் முதலீட்டில் செயல்பட்டுவரும் இம் மண்டலம், 10,385 கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி செய்து, 14,859 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி, பிற சி.பொ.ம.க்களுக்கெல்லாம் சிறந்த உதாரணமாக விளங்குவதாக, இந்தியத் தொழில்வர்த்தகத் துறை அமைச்சகச் செய்திக் குறிப்பு குறிப்பிடுகிறது.

 

தமிழகத்தின் நோக்கியா சி.பொ.ம.வினால் கிடைத்த "நன்மை'களையும் "வளர்ச்சி'யையும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தற்போது வெளிக்கொண்டு வந்துள்ளன. 2005 ஆம் ஆண்டில் தமிழக அரசுக்கும் நோக்கியா நிறுவனத்திற்கும் சி.பொ.ம. அமைப்பதற்கானதொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. நோக்கியாவைத் தங்கள் பக்கம் இழுப்பதற்கான போட்டியில் தமிழ்நாடு, மராட்டியம், ஆந்திரம், அரியானா மாநில அரசுகள் போட்டியிட்டன. இறுதியில், தமிழ் நாடு அரசு அறிவித்த சிறப்புச் சலுகைகளின் காரணமான அந்நிறுவனம் தமிழகத்தைத் தேர்வு செய்தது. சி.பொ.ம. சட்டம் வழங்கிய எல்லா சலுகைகளுக்கும் மேலாக, தமிழக அரசின் சிறப்பு வரிச் சலுகைகளும், தொழிலாளர்களைக் கட்டுப்படுத்துதல், மலிவு விலையில் நிலம் போன்ற இதர சலுகைகளும் அந்த ஒப்பந்தத்தின் மூலம் நோக்கியாவிற்குத் தரப்பட்டன.

 

சி.பொ.ம.வின் உற்பத்திப் பொருட்களை உள் நாட்டுச் சந்தையில் விற்கும் போது, அவற்றுக்கு மதிப்புக் கூட்டு வரி, விற்பனை வரி ஆகியவற்றைச் செலுத்த வேண்டும். நோக்கியா நிறுவனம், இவ்வாறு செலுத்தும் வரித்தொகையை, தமிழக அரசு திரும்பக் கொடுத்து விடுமென புரிந்துணர்வு ஒப்பந்தம் கூறுகிறது. சி.பொ.ம.க்களின் நோக்கம் ஏற்றுமதியை மையமாகக் கொண்டிருக்கும் போது, தமிழக அரசு நோக்கியாவிற்கு அளித்திருக்கும் முக்கியமான வரிச்சலுகையான மதிப்புக்கூட்டு வரி விலக்கு என்பது கவனிக்க வேண்டிய விசயமாகும். மதிப்புக் கூட்டுவரி என்பது உள்நாட்டு விற்பனைக்கு விதிக்கப்படும் வரியாகும். ஏற்றுமதிக்காகத் தொடங்கப்படும் ஒரு சி.பொ.ம.விற்கு, சட்டவிரோதமாக உள் நாட்டு விற்பனைக்கும் சலுகை கொடுத்தது, தி.மு.க. அரசு.

 

இவ்வாறு அரசு, வரிகளைத் திரும்பத் தருவது இரு வகையில் நடைபெறும். தமிழகத்தில் நோக்கியா நிறுவனம் தனது செல்பேசிகளை விற்பனை செய்தால், அது கட்டும் மதிப்புக் கூட்டு வரியை அரசு திரும்பச் செலுத்தும். அதேபோல, அந்நிறுவனம் தமிழகம் தவிர பிற மாநிலங்களில் செல்பேசி விற்பனை செய்தால், அது செலுத்தும் விற்பனை வரியையும் தமிழக அரசு திரும்பச் செலுத்தும்.

 

இந்தியாவில் செல்பேசியின் விலையில் 4% மதிப்புக்கூட்டு வரியாகவும் 3% விற்பனை வரியாகவும் விதிக்கப்படுகிறது. இந்தியாவில் செல்பேசி விற்பனையில் முதலிடத்தில் உள்ள நோக்கியாவின் மொத்த விற்பனை 2007-08ஆம் ஆண்டில் மட்டும் 3,578 கோடி ரூபாய். அந்த ஆண்டு மட்டும், தமிழக அரசு நோக்கியாவுக்கு அளித்த மதிப்புக்கூட்டு வரி விலக்கும், பிற மாநிலங்களில் நோக்கியா கட்டிய விற்பனை வரியை திரும்பச் செலுத்த வேண்டியதொகையும் சேர்த்து மொத்தம் 107 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்கியது.

 

மூன்று ஆண்டுகளில் அவர்கள் எவ்வளவு முதலீடு செய்கிறார்களோ, அந்த அளவிற்கு அதிகபட்சமாக வரியைத் திரும்ப அரசு திருப்பித் தரலாம் என ஒப்பந்தம் கூறுகிறது. 2005இல் நோக்கியா 675 கோடி ரூபாய் முதலீடு போடப்போவதாக அறிவித்தது. இதில் 300 கோடி ரூபாய் வரிச்சலுகைக்கு கணக்கிலெடுத்துக் கொள்ளும் வகையில் முதலீடு செய்யப்பட்டது. 2008இல் 338 கோடி ரூபாய் முதலிடப்பட்டது. ஆக, மூன்று ஆண்டுகளில் மொத்தம் 638 கோடி ரூபாய் வரை தமிழக அரசு நோக்கியாவுக்கு வரிச்சலுகை தரலாம். தரவுகளை வைத்துப் பார்க்கும்போது, இந்தத் தொகை அளவிற்கு அவர்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டிருக்கலாம் என்று கூற முடியும். இவ்வாறு நோக்கியா நிறுவனம் செய்த மொத்த முதலீடுகளையும் அவர்களிடமே திரும்ப ஒப்படைத்து, அந்நிறுவனம் "வெற்றிகரமாக' இயங்க வைக்கப்படுகிறது.

 

வரிச்சலுகைக்கு அடுத்தபடியாக அந்நிறுவனம் பெற்ற முக்கியமான சலுகை, குறைந்த விலையில் நிலம். திருப்பெரும்புதூரில் உள்ள சிப்காட் தொழிற் பூங்காவில், நோக்கியா சி.பொ.ம.விற்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டன. அந்நிலங்கள் 1997ஆம் ஆண்டு சிறப்புச் சட்டம் ஒன்றின் மூலம் சிப்காட் நிர்வாகத்தால் விலைக்கு வாங்கப்பட்டவை.

 

முதல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, நோக்கியா நிறுவனம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்குப் பெற ஏக்கர் ஒன்றுக்கு 8 லட்சம் தரவேண்டும் என அறிவிக்கப்பட்டது. இது இரண்டாவது ஒப்பந்தத்தில் ஏக்கருக்கு 4.5 லட்சம் எனக் குறைக்கப்பட்டது. ஆக மொத்தம் 210.87 ஏக்கர் நிலத்திற்கு அவர்கள் தர வேண்டிய தொகை வெறும் 9 கோடியே 48 லட்சத்து 91 ஆயிரத்து ஐநூறு ருபாய் மட்டுமே. அதேசமயம் மத்திய அரசின் ஆணையக் கணக்குப்படி, நிலங்களைக் கையகப்படுத்த அரசு கொடுத்த தொகையோ மிகவும் அதிகம். அதாவது ஏக்கருக்கு 4 முதல் 14 லட்சம் வரை தொகை நிர்ணயிக்கப்பட்டது. இதுவும் போதாதென்று, நீதிமன்றம் சென்ற நில உரிமையாளர்களுக்கு மேலும் 30% அதிகமாகக் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் சிப்காட் நிர்வாகத்திற்கு, அதாவது தமிழக அரசுக்கு 7.4 கோடி ருபாய் நட்ட ம் ஏற்பட்டது.

 

இவ்வாறு குறைந்த விலையில் நிலம் கொடுத்தது மட்டுமல்லாமல், இரண்டாவது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், நிலம் வாங்குவதற்கான பத்திரப் பதிவுக் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டது. முதல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், மொத்த மதிப்பில் 4 சதவீதத்தைப் பத்திரப் பதிவுக்கெனத் தரவேண்டும் என இருந்தது. அதனைத் தள்ளுபடிசெய்ததன் மூலம் நோக்கியா நிறுவனத்திற்கு 38 லட்சம் ருபாய் சலுகையாக அளிக்கப்பட்டது.

 

இந்த நிலத்துக்கு நோக்கியா தர வேண்டிய குத்தகைத் தொகை ஏக்கருக்கு ஆண்டு ஒன்றுக்கு, ஒரே ஒரு ருபாய் மட்டுமே. அடுத்த 99 ஆண்டுகளுக்கான குத்தகைத் தொகையை அந் நிறுவனம் முன்பணமாகத் தந்துவிட்டது. இவ்வாறு குத்தகைக்கு 210 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ள அந்நிறுவனம், அந்த நிலத்தை யாருக்கு வேண்டுமானாலும் எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் உள்வாடகைக்கோ, மறு குத்தகைக்கோ விடலாம். அந்நிலங்களில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கும் முன்பே, அதற்குத் தேவையான சாலைகள், மின்சாரம், தண்ணீர் போன்றவை எல்லாம், தமிழக மக்களின் வரிப்பணத்திலிருந்தே செய்து தரப்பட்டன.

 

மக்களின் வரிப் பணத்தில் முதலீடு, மலிவு விலையில் நிலம், அடிப்படைக் கட்டுமானங்கள் அனைத்தும் இலவசம் என சலுகைக்கு மேல் சலுகையாக வாங்கிக் குவித்த நோக்கியா உருவாக்கிய வேலைவாய்ப்பு, வெறும் நான்காயிரத்து ஐநூறு மட்டுமே. 14 ஆயிரத்துக்கும் அதிகமான பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கப்போவதாக சவடால் அடித்த அந்நிறுவனம், உண்மையில் அதில் பாதியளவிற்குக் கூட வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை என்பதுதான் உண்மை. கடந்த 2008ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், தொழிற்சாலைகளுக்கான ஆணையர் நடத்திய சோதனையின் போது 4,548 பேர் மட்டுமே அங்கு வேலைசெய்வதாகத் தெரிய வந்துள்ளது. இதில் 70% பேர் 19 முதல் 22 வயதுக்குட்பட்ட பெண்கள். இவர்களுக்கு ஆண் தொழிலாளர்களுக்கு தரப்படும் சம்பளத்தில் முக்கால் பங்கை மட்டுமே கொடுத்து ஏமாற்றி வருகின்றனர். மிகக் குறைந்த கூலி தந்து சுரண்டப்படும் இவர்களில் பெரும்பாலோர் ஒப்பந்தத் தொழிலாளர்களாவர்.

 

நோக்கியாவின் மொத்த வேலைவாய்ப்புகளில் 2893 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக, உற்பத்தி சாராத துறைகளில் வேலை செய்து வருகின்றனர். சமையல்காரர்கள், காவலர்கள், ஓட்டுநர்கள் என அடிமட்டத் தொழிலாளர்களாக இருக்கும் இவர்களுக்குப் பணிப் பாதுகாப்பு என்பதே கிடையாது. கடுமையாக வேலை வாங்கப்பட்டாலும், காரணமேயின்றி திடீரென்று வேலைநீக்கம் செய்யப்பட்டாலும் ஏன் என்று கேட்க இவர்களால் முடியாது.

 

தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதைத் தடை செய்யும் நோக்கில், ஆந்திரா, மகாராஷ்டிரா, கருநாடகம் போன்ற மாநில அரசுகள் சி.பொ.ம.க்களை அத்தியாவசியப் பொருளுற்பத்தி நிலையங்களாக அறிவித்து விட்டன. ஆனால், தமிழகத்தில் இதனைப் பகிரங்கமாக அறிவிக்காமல், கள்ளத்தனமாக 2005 ஏப்ரலில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஒரு அம்சமாகவே அதனைச் சேர்த்துள்ளனர். ""சி.பொ.ம.வில் தொழிலாளர்கள் பிரச்சனை செய்யாமல் கட்டுப்படுத்த, அதனை அரசு அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும்'' என அவ்வொப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

 

தொழிற்துறை வளர்ச்சி, ஏற்றுமதிப் பெருக்கம், வேலைவாய்ப்பு அதிகரிப்பு என பல உறுதிமொழிகளோடு நாடெங்கும் உருவாக்கப்பட்ட சி.பொ.ம.க்களின் நிலைமைக்கு, நோக்கியா சி.பொ.ம. ஒரு வகை மாதிரி. கிட்டத்தட்ட 90 ஆயிரம் கோடி வரிச்சலுகைகளை அள்ளித் தந்து வெறும் 3 இலட்சம் வேலைவாய்ப்புகளை மட்டுமே உருவாக்கும் இத்திட்டத்தை நிராகரித்து, அந்தப் பெருந்தொகையை சிறுதொழில் வளர்ச்சிக்கென ஒதுக்கினால் பல மடங்கு வேலைவாய்ப்பை உருவாக்கி, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முடியும். ஆனால் சி.பொ.ம.க்களோ, நம் மக்களின் வரிப்பணத்தில் மஞ்சள் குளித்துக் கொண்டு, அவர்களே உறுதியளித்திருந்த வேலைவாய்ப்பில் பாதியைக் கூட வழங்காமலும், எவ்வித தொழிலாளர் உரிமைகளையும் வழங்காமலும் கொத்தடிமை சமஸ்தானங்களாகத்தான் உருவாகியிருக்கின்றன. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், வளர்ச்சிக்கான முன்னுதாரணம் அல்ல; உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் முதலாளித்துவ சூறையாடலுக்கான அடையாளம்தான் என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்?


• மணி