Language Selection

புதிய ஜனநாயகம் 2009

""நெருக்கடியான தருணத்தில் மனித சமுதாயத்தின் மேன்மைக்காக அயரது பாடுபடுபவன்தான் உண்மையான வீரன்'' என்றார், செக். நாட்டு கம்யூனிசப் புரட்சியாளரான தியாகத் தோழர் ஜூலியஸ் பூசிக். இந்தியாவின் புரட்சிகரஜனநாயக சக்திகள், டாக்டர் பாலகோபால் என்ற வீரனை இழந்து துயரத்தில் தவிக்கின்றன. வாழ்நாள் முழுவதும் உழைக்கும் மக்களின் மனிதஉரிமைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ""மனித உரிமைப் போராளி'' முனைவர் பாலகோபால், கடந்த 8.10.09 அன்று கடுமையான நெஞ்சுவலியால் தனது 57ஆவது வயதில் காலமாகிவிட்டார்.

ஆந்திர மாநிலத்தில் நக்சல்பாரிகளுக்கு எதிரான நரவேட்டை கட்டவிழ்த்துவிடப்பட்டு, போலீசின் கேள்விமுறையற்ற பயங்கரவாதம் தலைவிரித்தாடிய காலம் அது. 1980களில் இப்பயங்கரவாத பாசிச அடக்குமுறைக்கு எதிராகவும் மனித உரிமையை நிலைநாட்டவும் புரட்சிகரஜனநாயக உணர்வு கொண்டோரால் ஆந்திரப் பிரதேச குடியுரிமைக் கழகம் (APCLC) என்ற அமைப்பு தொடங்கப்பட்டு, அவ்வமைப்பு தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி, போலீசின் பயங்கரவாதத்தை நாடெங்கும் அம்பலப்படுத்தியது. ஆந்திரப் பிரதேச குடியுரிமைக் கழகத்தை நக்சல்பாரி இயக்கத்தின் ஓர் அங்கமாகவே அரசும் போலீசும் கருதி, அதன்மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டன. போலீசின் இரகசியக் கூலிப்படைகளால் இவ்வமைப்பின் முன்னணியாளர்கள் பலர் அடுத்தடுத்துக் கொல்லப்பட்டு வந்த காலம் அது. உயிருக்கு உத்தரவாதமற்ற சூழல் நிலவிய அக்காலத்தில்தான், 1983இல் இவ்வமைப்பின் பொதுச்செயலாளராக தோழர் பாலகோபால் பொறுப்பேற்றார். பலமுறை போலீசாரால் தாக்கப்பட்ட போதிலும், தடா வழக்கில் சிறையிடப்பட்ட போதிலும்,டாக்டர் இராமநாதம் முதலான மனித உரிமைப் போராளிகள் அடுத்தடுத்து போலீசாரால் கொல்லப்பட்டபோதிலும், அஞ்சாமல் தொடர்ந்து போலீசு பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடினார், தோழர் பாலகோபால்.

 

கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்ற தோழர் பாலகோபால், இந்தியப் புள்ளியியல் கழகத்தில் ஆராய்ச்சியாளராகவும், பின்னர் காகேதிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார். அப்பணிகளை உதறிவிட்டு, பின்னர் ஆந்திரப் பிரதேச குடியுரிமைக் கழகத்தின் முக்கிய தூண்களில் ஒருவராக உயர்ந்து, சட்டம் படித்து வழக்குரைஞராகப் பணியாற்றி, மனித உரிமைக்காக முழுநேரமும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். ஆந்திராவில் போலீசு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்அடக்குமுறைகளுக்கு நடுவே, போலி மோதல் குறித்த உண்மையறியும் குழுவின் மூலம் பல பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு நடத்தி, போலீசாரின் நரவேட்டையை நாடெங்கும் அம்பலப் படுத்தினார். அப்படுகொலைகளுக்குப் பின்னேயுள்ள பாசிச அரசியலை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதில் தோழர் பாலகோபால் முக்கிய பங்காற்றியுள்ளார்.

 

போலீசின் பயங்கரவாதப் படுகொலைகளுக்கு எதிராக, தேசிய மனித உரிமை ஆணையத்தில் ஆந்திரப் பிரதேச குடியுரிமைக் கழகத்தின் சார்பில் வாதிட்ட தோழர் பாலகோபாலின் தொடர் முயற்சியால், மோதல் கொலைகளில் ஈடுபட்ட போலீசார் தவறு செய்யவில்லை என்று விசாரணையில் நிரூபிக்கப்பட வேண்டும், இல்லையெனில் அப்போலீசார் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 320வது பிரிவின்கீழ் கொலை வழக்கு தொடரப்பட வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் 1997இல் தீர்ப்பளித்தது.

 

எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி என்ற ஆங்கில வார இதழில் அரசின் பாசிச அடக்குமுறைகளுக்கு எதிராகவும் மனித உரிமைக்காகவும் அவர் தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதி வந்தார். இந்தியாவில் மனித உரிமைப் போராட்ட வரலாற்றில் புதிய தடம் பதித்த போர்குணமிக்க இயக்கமாக ஆந்திரப் பிரதேசக் குடியுரிமைக் கழகத்தை வளர்த்தெடுத்ததில் தோழர் பாலகோபாலுக்கு முக்கிய பங்குண்டு. எனினும், வன்முறை குறித்த அணுகுமுறையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவ்வமைப்பிலிருந்து விலகி, மனித உரிமை அரங்கம் (HUMAN RIGHTS FORUM) எனும் அமைப்பை 1998இல் தொடங்கி மனித உரிமைக்காகத் தொடர்ந்து போராடி வந்தார்.

 

மறுகாலனியாக்கம் தீவிரமாகியுள்ள இன்றைய சூழலில், உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் பாசிச பயங்கரவாதத்துக்கு எதிராகவும் தொடர்ந்து உறுதியாகப் போராடுவதுதான், நாம் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

 

ஆசிரியர் குழு