தனியார்மய தாராளமயத் தாக்குதலை மேலும் மூர்க்கமாகத் தீவிரப்படுத்தக் கிளம்பிவிட்டனர் காங்கிரசு துரோகிகள். பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சி அமைத்துள்ள திமிரில், உழைக்கும் மக்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிடவும் துணிந்துவிட்டனர்.

தனியார் சர்க்கரை ஆலை முதலாளிகளின் கொள்ளைக்காகவும், வெளிநாடுகளிலிருந்து சர்க்கரை இறக்குமதியைத் தாராளமயமாக்கவும், மாநில அரசுகளுக்குப் பெயரளவில் இருந்த அதிகாரங்களைப் பறிக்கவும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான கொள்முதல் விலையைக் கொண்டுவருவது என்ற பெயரில், அக்டோபர் இறுதியில் கரும்பு விலை நிர்ணய அவசரச் சட்டத்தை மைய அரசு அறிவித்தது. கரும்புக்கு ஒரு டன்னுக்கு ரூ.1298 எனத் தன்னிச்சையாகக் கொள்முதல் விலையை நிர்ணயித்து, இந்த ""நியாயஆதார'' விலைக்கு மேல், மாநிலஅரசுகள் பரிந்துரை விலையை அறிவித்தால், இந்த விலை வித்தியாசத்தை மாநில அரசுகள்தான் ஏற்க வேண்டும்; சர்க்கரை ஆலைகள் மீது இதைச் சுமத்த முடியாது என்று இச்சட்டம் கூறுகிறது. இதை ஏற்க மறுத்து, கரும்பு விவசாயிகளைத் திரட்டி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. அதைத் தொடர்ந்து, இச்சட்டத்தின் 5ஏ விதி திருத்தப்பட்டு, எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு புதிய மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. இந்த ஒரு விதியில் மட்டுமே சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளனவே தவிர, கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளையும் போண்டியாக்கும் கொள்முதல் விலை மற்றும் பிறவற்றில் எந்த மாற்றமுமில்லை.

 

இதேபோல, மீன்பிடித் தொழில் ஒழுங்குமுறை மசோதா (2009), நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படவுள்ளது. நாட்டின் கடலோரஎல்லைக்கு வெளியே, அந்நியபன்னாட்டு ஏகபோக பெரும் மீன்பிடி நிறுவனங்கள் கடல் வளத்தை வரைமுறையின்றிச் சூறையாடவே இக்கருப்புச் சட்டம் கொண்டுவரப்படுகிறது. இம்மசோதாவின் விதிகளின்படி, இனி மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க முன் அனுமதி பெற வேண்டும், 12 கடல் மைல்கள் தாண்டி மீன் பிடித்தால் மூன்றாண்டு சிறைத் தண்டனையும், 9 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றெல்லாம் மிகக் கொடிய விதிகளைக் கொண்டுள்ள இம்மசோதா சட்டமாக்கப்பட்டால், இனி மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கவே முடியாமல் அவர்களின் வாழ்வுரிமை முற்றாக அழியும்.

 

இக்கொடிய சட்டங்களை விஞ்சும் வகையில், நிலம் கையகப்படுத்துதல் திருத்த மசோதா (2007), நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் சட்டமாக நிறைவேற்றப்படவுள்ளது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், சிறப்புப் பொருளாதாரமண்டலங்களுக்காகவும் பெருந்தொழில் நிறுவனங்களுக்காகவும் தனியார் அந்நியப் பெரு முதலாளிகள் விவசாயிகளிடமிருந்து 70% நிலத்தை நேரடியாகக் கையகப்படுத்தலாம். எஞ்சிய 30% நிலத்தை அரசு கையப்படுத்தித் தரும். பணபலமும் அரசியல் அதிகார பலமும் குண்டர்பலமும் கொண்ட பெருமுதலாளிகள், விளைநிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கவும், தரமறுக்கும் விவசாயிகளை உருட்டிமிரட்டி வதைக்கவும் இதன் மூலம் சட்டபூர்வமாக தாராள அனுமதி தரப்பட்டுள்ளது. மாவோயிஸ்டு பயங்கரவாதப் பீதியூட்டி, உள்நாட்டுப்போரைக் கட்டவிழ்த்துவிட்டுப் பழங்குடியின மக்களை அவர்களின் மண்ணிலிருந்து பிய்த்தெறிந்துவரும் அரசு, இப்போது சட்டபூர்வமாகவே நிலப்பறிப்பின் மூலம் விவசாயத்தையும் விவசாயிகளையும் ஒழித்துக் கட்டக் கிளம்பியுள்ளது. ஏற்கெனவே, நாட்டின் பயிரிடப்படும் நிலத்தின் பரப்பு 30 லட்சம் ஹெக்டேராகச் சுருங்கிவிட்ட நிலையில், விளைநிலங்கள் கட்டுப்பாடின்றி பறிக்கப்பட்டால் விவசாயமும் விவசாயிகளும் நாசமாவது மேலும் தீவிரமாகும்.

 

உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைப்படி, உள்நாட்டுத் தரகு முதலாளிகள் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் சூறையாடலுக்கும் மேலாதிக்கத்துக்கும் ஏற்ற வகையில் பொருளாதாரத்தை மாற்றியமைக்க, இந்திய ஆட்சியாளர்கள் கிளம்பியுள்ளனர். போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின்மறைமுக ஆதரவோடு, அவசரமாகவும் மூர்க்கமாகவும் அடுத்தடுத்து கொண்டுவரப்படும் இக்கருப்புச் சட்டங்களால் உழைக்கும் மக்களின் எதிர்கால வாழ்வின் மீது அணுகுண்டு வீசப்பட்டு, நாடு நாலுகால் பாய்ச்சலில் மறுகாலனியாக்கப்படுகிறது. அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களின் எதிர்கால வாழ்வைக்காவுகொள்ளக் கிளம்பியுள்ள தனியார்மயம்தாராளமயத்துக்கு எதிராக, நாடு மீண்டும் காலனியாக்கப்படுவதற்கு எதிராக புரட்சிகரஜனநாயக சக்திகள் போர்க்குணத்தோடு போராட வேண்டிய தருணமிது.