Language Selection

புதிய ஜனநாயகம் 2009

தில்லைக் கோயிலை அரசு மேற்கொண்டதற்கும், சிற்றம்பலத்தில் தமிழ் பாடுவதற்கும் எதிராகத் தடையாணை கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் சுப்பிரமணிய சுவாமி. மேற்கூறிய இரு கோரிக்கைகளையும் போராடி வென்றவர்கள் என்ற முறையில், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் (HRPC) சார்பில் உச்சநீதி மன்றத்தில் எதிர்மனு தாக்கல் செய்துள்ளோம்.

சட்டப்படி பார்த்தால், தற்போது நடைபெறும் வழக்கென்பது அரசுக்கும் தீட்சிதர்களுக்கும் இடையிலானதுதான். மேலோட்டமாகப் பார்த்தால், தில்லைக் கோயிலை அறநிலையத் துறை மேற்கொண்டதை தி.மு.க. அரசின் சாதனையென்றும் சிலர் கருதிக் கொண்டிருக்கலாம். ஆனால், 2000ஆவது ஆண்டில், தமிழ் பாடிய குற்றத்துக்காக சிற்றம்பல மேடையிலிருந்து சிவனடியார் ஆறுமுக சாமி தீட்சிதர்களால் அடித்து வீசப்பட்டபோதும் தி.மு.க. ஆட்சிதான் நடந்து கொண்டிருந்தது என்பதையும்; அப்போது, அடித்த தீட்சிதர்களுக்கு பிணை வழங்கி வழியனுப்பி வைத்தது போலீசு என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும்

 

ம.க.இ.கவின் தமிழ் மக்கள் இசை விழாவில் ஆறுமுகசாமி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர்தான், தில்லைக் கோயிலில் தமிழ் பாட முடியாது என்ற உண்மையையே தமிழகம் அறிந்தது. இப்போராட்டத்தை நாங்கள் தொடங்கியபோது, ""வள்ளலார் முதல் வ.சுப.மாணிக்கனார் வரை பலரும் பார்த்துவிட்டார்கள். இப்போது நீங்களா?'' என்று பலர் பரிதாபப் பார்வை பார்த்தார்கள். அதிகாரத் தாழ்வாரங்களெங்கும் ஆள் வைத்திருக்கும் தீட்சிதர்களோ ஆறுமுகசாமியை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

 

சிற்றம்பலத்தில் தமிழ் பாட இந்து அறநிலையத் துறையின் இணை ஆணையருக்கு மனுச் செய்தோம். அது சம்பிரதாயத்துக்கு விரோதமானது என்று அவர் மறுத்தார். அதனை எதிர்த்து ஆணையரிடம் மேல்முறையீடு செய்தோம். ஆண்டுக்கணக்கில் வழக்கு நடத்தி , தமிழ் பாடலாம் என்ற ஆணையை அவரிடம் வாங்கினோம். உடனே, அதற்கு முன்சீப் நீதிமன்றத்தில் தடை வாங்கினார்கள் தீட்சிதர்கள். பின்னர் கோயில் சம்பிரதாயத்தில் தலையிட அறநிலையத் துறைக்கு அதிகாரம் கிடையாது என்று கூறி, உயர்நீதி மன்றத்தில் அடுத்தடுத்துத் தடை வாங்கினார்கள். அந்தத் தடைகள் அனைத்தையும் தகர்த்தோம். இத்தனைக்குப் பிறகும் அரசாங்கம் சொந்தமாக வாய் திறக்கவில்லை. ஜனவரி 2008க்குள் தமிழ் பாடும் கோரிக்கை பற்றி அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உயர்நீத மன்றத்தின் ஆணையைப் பெற்று அறநிலையத்துறை நெருக்கினோம். அப்புறம் பிப்ரவரி 29 அன்று வந்தது அரசு ஆணை. பின்னர் மார்ச் 2, 2008 அன்று தமிழை அரங்கேற்றினோம்.

 

இது தமிழ் அரங்கேறிய கதையின் இரத்தினச் சுருக்கம். இதன் பொருட்டு ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., ஆகிய அமைப்புகள் நடத்திய பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், ஒரு இலட்சம் கையெழுத்து இயக்கம், ஊடகங்களில் பேட்டிகள், தில்லையிலிருந்து சென்னை உயர்நீதி மன்றத்துக்கும் அறநிலையத் துறைக்கும் சில நூறு முறை நடந்த நடைகள், பாட முயன்று சிறை சென்ற போராட்டங்கள், தடியடி ஆகிய அனைத்தும் இந்த நான்கு ஆண்டுப் போராட்டத்தில் இரத்தமும் சதையுமாகக் கலந்திருக்கின்றன. முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் வீ.வீ.எஸ், முன்னாள் நகர்மன்றத் தலைவர் வி.எம்.எஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த காவியச்செல்வன், பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் வேல் முருகன், பேரா.பெரியார்தாசன் ஆகியோர் இப்போராட்டத்திற்குத் துவக்கமுதலே துணை நின்றவர்கள்.

 

தமிழை அம்பலத்தில் ஏற்றிய மறு கணமே, தீட்சிதர்களின் இடுப்பிலிருந்து கோயில் சாவிக்கொத்தை இறக்குவதற்கான போராட்டத்தில் கவனத்தைக் குவித்தோம். தமிழுக்காக நடத்திய போராட்டத்தின் ஊடாகத்தான் தில்லைக் கோயில் குறித்த பல சிதம்பர இரகசியங்களையும் அறியப் பெற்றோம்.

 

நீதிக்கட்சியின் ஆட்சி முதல் தற்போதைய கருணாநிதி ஆட்சி வரை பல அரசாங்கங்கள், இக்கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்றிருக்கின்றன. ஆனால், அத்தகைய முயற்சிகள் மர்மமான காரணங்களுக்காகப் பாதியில் கைவிடப்பட்டிருக்கின்றன. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தீட்சிதர்களின் முறைகேடுகள் அம்பலமாகி, கோயிலை அற நிலையத்துறை எடுக்கும் தருணத்தில், இந்திரா காந்தியின் தலையீட்டால் எம்.ஜி.ஆர். அரசு பின்வாங்கியது. 1997இல் சென்னை உயர்நீதிமன்றம் நகைக்களவு போன்ற குற்றங்களுக்காக கிரிமினல் வழக்கு போட்டு தீட்சிதர்களை உள்ளே தள்ளுமாறு தனது தீர்ப்பிலேயே அறிவுறுத்தியது. ஆனால், தி.மு.க. அரசு செய்யவில்லை. தீர்ப்பின்படி 1997இல் கோயிலில் திறக்கப்பட்ட நிர்வாக அதிகாரியின் அலுவலகத்தையும் அடித்து உடைத்தார்கள் தீட்சிதர்கள். அதற்கும் தீட்சிதர்கள் மீது வழக்கு இல்லை. காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் அழகிரி கோயிலை எடுக்கவேண்டாமென்று கருணாநிதிக்கு சட்டமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். அதன் பின், மீளா உறக்கத்தில் ஆழ்ந்த வழக்கை எழுப்ப அரசு முயற்சிக்கவில்லை.

 

2008 இல், இவ்வழக்கில் நாங்கள் இணைந்து (இம் பிலீட்) கொள்கிறோம். அரசுக்கும் எங்களுக்கும்தான் பிரச்சினை. இவர்களுக்கு வழக்கில் தொடர்பில்லை என்று எங்களை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள் தீட்சிதர்கள். நாங்கள் நுழைந்த பின், வழக்கை இழுத்தடிப்பதற்கு தீட்சிதர்கள் செய்த ஒவ்வொரு முயற்சியையும் முறியடித்து, இறுதி விசாரணைக்கு வழக்கை நெட்டித் தள்ளிக் கொண்டு வந்தோம். தீட்சிதர்கள் கோயில் நிலங்களை விற்றதற்கான ஆதாரங்களை அரும்பாடுபட்டுச் சேகரித்து அவற்றையும் தாக்கல் செய்தோம்.

 

கோயிலை அரசு மேற்கொண்டது சரி என்றும், தீட்சிதர்களுக்கு கோயில் சொந்தமல்ல என்றும் 2009 பிப்ரவரியில் நீதிபதி பானுமதி தீர்ப்பளித்தார். இதற்கெதிராக உயர்நீதி மன்ற பெஞ்சில் மேல்முறையீடு செய்தார்கள் தீட்சிதர்கள். பிறகு வழக்கில் சு.சாமி நுழைந்தார். முட்டையடி, உயர்நீதிமன்றத் தடியடி சம்பவங்களைத் தொடர்ந்து வழக்கு தள்ளிப்போகிறது. பிறகு, கோயிலை அரசு எடுத்தது சரியே என்று இரண்டு நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற பெஞ்சும் தீர்ப்பளித்தது.

 

1885இல் தீட்சிதர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, அவர்களே நீதிமன்றத்தை நாடிய நாள் முதல், இன்றுவரை இந்தக் கோயில் தங்களுடைய சொத்து என்றோ, இதன் பரம்பரை அறங்காவலர்கள் தாங்கள்தான் என்றோ நிரூபிக்கத்தக்க எந்தவொரு ஆவணத்தையும் அவர்கள் எந்த நீதிமன்றத்திலும் கொடுத்ததில்லை. எந்தவித ஆதாரமும் இல்லாமல் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள இந்தச் சொத்தை, 1925 நீதிக்கட்சி ஆட்சிக்காலம் முதல் இன்றுவரை அவர்கள் கைப்பற்றி வைத்திருந்தார்கள் என்றால் அதற்குக் காரணம், சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து தப்பிக்கும் அவர்களது வழக்குரைஞர்களின் திறமை மட்டுமல்ல; தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று கூறும் நாயன்மார்கள் எல்லாக் கட்சிகளிலும், அதிகார வர்க்கத்திலும், போலீசிலும், நீதித்துறையிலும் நிறைந்திருக்கிறார்கள் என்பதுதான். இவர்களுடைய உதவி இல்லாமல், பல பத்தாண்டுகள் ஒரு வழக்கை விசாரணைக்கே வராமல் தீட்சிதர்களால் இழுத்தடித்திருக்க முடியாது.

 

தில்லைக் கோயிலுக்கு எத்தனை ஏக்கர் நிலம் இருக்கிறது என்று தகவல் அறியும் உரிமையின் கீழ் நாங்கள் கேட்டபோது, 493 ஏக்கர் என்று 2008இல் எங்களுக்கு பதில் வந்தது. 2009 பிப்ரவரியில் 2500 ஏக்கர் என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார், அரசு வழக்குரைஞர். 3487 ஏக்கர் என்று இந்த மாதம் பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கிறார் அறநிலையத்துறை ஆணையர். எது அறுதி உண்மை?

 

தீட்சிதர்களின் மோசடியை நிரூபிக்க ஒரு சில சொத்து விற்பனை குறித்த ஆவணங்களை அரும்பாடு பட்டுத் திரட்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம். அரசு நினைத்திருந்தால் ஒரே நாளில் அத்தனை விவரங்களையும் பதிவாளர் அலுவலகத்திலிருந்து பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்க முடியும். செய்யவில்லை.

 

தீட்சிதர்கள் மீதான கொலை, திருட்டு உள்ளிட்ட பல வழக்குகளை சிதம்பரம் போலீசு அப்படியே அமுக்கி விட்டது. அதற்கெதிராகவும் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறோம். போலீசு தலைமைப் பீடமோ இன்னும் தீட்சிதர்கள் பக்கம்தான் நிற்கிறது.

 

நாங்கள் உள்ளே புகுந்து நெட்டித் தள்ளியிராவிட்டால், தமிழக மக்கள் மத்தியில் இப்பிரச்சினையைப் பரவலாகக் கொண்டு சென்றிருக்காவிட்டால், அரசு ஒரு அங்குலம்கூட நகர்ந்திருக்காது என்பதே உண்மை. இன்னமும் நகரவில்லை என்பதும் உண்மை. பிப்ரவரி 29 அன்றே நீதிபதி பானுமதி அளித்த தீர்ப்பில், ஒரு வாரத்திற்குள் நிர்வாகத்தை அறநிலையத் துறை அதிகாரிகள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று தீட்சிதர்களுக்கு உத்தரவிட்டிருந்தும், தீட்சிதர்கள் நிர்வாக அதிகாரியிடம் இதுவரை சாவியை ஒப்படைக்கவில்லை. அரசு கேட்கவும் இல்லை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் இல்லை. இதுதான் உண்மை நிலை. இதன் காரணமா கத்தான் பட்டபாடெல்லாம் வீண் போய்விடக் கூடாதே என்று உச்சநீதி மன்றத்துக்கும் நாங்கள் சென்றிருக்கிறோம்.

 

இரண்டாவது வழக்கு, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராதல் தொடர்பானது. 2006 இல் தமிழக அரசு இதற்கான அரசாணையைப் பிறப்பித்தது. பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை எடுத்ததற்காக விழாவும் நடந்து முடிந்து விட்டது. ஆனால், அரசாணை பிறப்பித்த மறு கணமே, மதுரையைச் சேர்ந்த பட்டர்கள் அதற்கு உச்சநீதி மன்றத்தில் தடையாணை பெற்றுவிட்டனர். அதன் பின்னர், இதற்கான அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதில் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்க வழிசெய்யும் பிரிவைத் தமிழக அரசு நீக்கிவிட்டது. அதே நேரத்தில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பல்வேறு சாதிகளிலும் பிறந்த சுமார் 250 மாணவர்கள் பயின்று முடித்து விட்டார்கள். படித்து முடித்து ஒன்றரை ஆண்டு கழிந்த பின்னரும், சான்றிதழ்கூடக் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாணவர்களை ஒரு சங்கமாகத் திரட்டியிருக்கிறோம். அவர்கள் சார்பிலும் உச்சநீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளோம், 2006ஆம் ஆண்டு முதல் உச்சநீதி மன்றத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் வழக்கை எழுப்புவதற்காக.

 

அரசியல் சட்டப்பிரிவு 25, 26 ஆகியவற்றுடன் தொடர்புள்ள இந்த வழக்கு மிகக் கடினமானது, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. பார்ப்பன பட்டர்கள் சார்பில் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் பராசரண் ஆஜராகிறார். சிதம்பரம் வழக்குக்கு சுப்பிரமணியசாமி; தீட்சிதர்கள் சார்பில் பிரபல வழக்குரைஞர் கே.கே.வேணு கோபால்.

 

இவர்களை எதிர்த்து வாதாடத்தக்க மூத்த வழக்குரைஞர்களை நாம் நியமிக்க வேண்டும். படாத பாடுபட்டு மக்கள் மத்தியில் நிதி திரட்டி சென்னை உயர்நீதி மன்றச் செலவுகளை சமாளித்துவிட்டோம். இது உச்சநீதி மன்றம். இலட்சங்களுக்குக் கீழ்ப்பட்ட ரூபாய்கள் அங்கே செலாவணியிலேயே இல்லை. எனவே, உங்களுடைய வழக்கு நிதியினை ஆயிரங்களில் எதிர்பார்க்கிறோம்.

 

இது சக்திக்கு மீறிய விடயம் என்று தமிழக அரசின் கைகளில் நம் தலைவிதியை ஒப்படைத்து விடலாம். ஆனால், சேதுக்கால்வாய் வழக்கையும், முல்லைப் பெரியாறு வழக்கையும் பார்த்த பின்னால், அத்தகைய நம்பிக்கை எங்களுக்கு இல்லை. நாங்கள் நம்பியிருப்பது தமிழ் மக்களாகிய உங்களைத்தான். இவை சாதி, மொழித் தீண்டாமைக்கு எதிரான வழக்குகள் மட்டுமல்ல, தமிழக மக்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் நிலம், பல்லாயிரம் கோடி சொத்துகளை மீட்பதற்கான வழக்குகள். பார்ப்பன ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் இந்து மத உரிமையாக நிலைநாட்டிக் கொள்வதைக் கேள்விக்குள்ளாக்கும் வழக்குகள். தீர்ப்புகள் எதுவானாலும், தமிழகம் எழுப்பும் கேள்விகள் நாடெங்கும் ஒலிக்க வேண்டும்.

 

தில்லைக் கோயிலிலும், மதுரைக் கோயிலிலும் இன்னபிற பெருங்கோயில்களிலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தோர் அர்ச்சகர்களாக நிற்பதையும், தில்லைக் கோயிலின் தெற்கு வாயிலை அடைத்திருக்கும் தீண்டாமைச் சுவர் நிற்க முடியாமல் வீழ்வதையும் மனக்கண்ணில் எண்ணிப் பாருங்கள்! அந்தக் கனவை நனவாக்க நிதி தாருங்கள்! - மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

 

காசோலை அல்லது வரைவோலை அனுப்ப வேண்டிய முகவரி

S.Raju

S.B.A/c No. 1210 155 24043

Karur Vysia Bank Vridhachalam Bank