அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாமல் நடத்தப்படும் ஏ. சி. எஸ். மருத்துவக்கல்லூரி, எப்படி 300 மாணவர்களை சேர்த்துக்கொண்டது என்று உச்சநீதிமன்றம் கேள்வியை எழுப்பியுள்ளது. இதனால் 300 மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது (ஹிந்து, 13/12/2009).

ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி நடத்துவதற்கான அனுமதியை மனித வளமேம்பாட்டு அமைச்சகத்திலோ அல்லது பல்கலைக்கழக மானிய குழுவிலோ பெறவில்லை. அதுமட்டுமில்லாமல், இக்கல்லூரி எந்த பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டவில்லை. ஆனாலும், ஏ. சி. எஸ். மருத்துவக்கல்லூரி சென்ற வருடம் 150 மாணவர்களையும், இந்த வருடம் 150 மாணவர்களையும் சேர்த்துக்கொண்டது. இந்த மருத்துவக்கல்லூரி, தனியார் எம் ஜி ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டது என்று சொல்லி மாணவர்கள் சேர்க்கையை செய்துள்ளது.

இதனால், உச்சநீதிமன்றம் 300 மாணவர்களை விடுவிக்கும் கடிதத்தை கொடுக்குமாறு கல்லூரியை கேட்டுக்கொண்டுள்ளது.

ஆனாலும், இன்று வரை கல்லூரி வலைத்தளத்தில் ” இந்திய மருத்துவ கவுன்சில்”, “பல்கலைக்கழக மானிய குழு” ஆகியவற்றின் அனுமதி பெற்றுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது (http://www.acsmch.ac.in/profile.html).

——————————————————
ஏன், அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாமல் நடத்தப்படும் ஏ. சி. எஸ். மருத்துவக்கல்லூரி மீது உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவில்லை?

ஏன், 300 மாணவர்களை விடுவிக்கும் கடிதத்தை கொடுக்கும் நாடகம்?

எது, ஏ. சி. சண்முகத்தை கைது செய்வதை தடுக்கிறது? அப்போ, கல்வி கட்டணக்கொள்ளை அரக்கன்கள் என்ன செய்தாலும் நடவடிக்கை இல்லையோ? இது தான் ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்பதின் அர்த்தமோ?
——————————————-

இக்கல்லூரி பண்ணிய கூத்துகள்:

சென்னை வேலப்பன்சாவடியில் நடைபெறும் விழாவில் ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரியை ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா 25/09/2008 அன்று தொடங்கி வைத்தார்.

எப்படி அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாத மருத்துவக்கல்லூரியை மாநில ஆளுநர் தொடங்கி வைக்கிறார்?

சென்னை ஏ.சி.எஸ். கல்விக் குழுமத்தின் அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாத ஒரு கல்வி நிறுவனம் தான் ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், சினிமா இய‌க்குநர் கே.எஸ்.ரவிக்குமார், விஞ்ஞானி வி.கே.சரஸ்வத் ஆகியோருக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் நவம்பர் 14ஆ‌ம் தே‌தி கெளரவ முனைவ‌ர் பட்டம் வழங்கியது.

அது மட்டுமில்லாமல், விஜய், சந்திராயன் திட்ட இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் டென்னிஸ் இளம் புயல் சானியா மிர்ஸா ஆகியோருக்கு 6/12/2008 அன்று டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது.

இவை எல்லாம் பகட்டு நாடகம் தானே? இல்லை இது தான் தனியார் கல்வியின் தரமோ?

இவர்கள் எல்லாம் யார் கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்களோ?

—————————————————————–
கல்விக்கட்டனக் கொள்ளைக்கு அரசே துணை என்பதை இந்த சம்பவத்தைவிட வேறு என்ன வேண்டும்?

மாணவர்களே!

தனியார்மய கல்விக் கொள்ளையை வீழ்த்தாமல் நமக்கு கல்வியும் இல்லை, வாழ்க்கையும் இல்லை!

அனைத்து தரப்பு மக்களையும் அணி திரட்டுவோம்! வீதியில் இறங்கி போராடுவோம்!

இலவச கல்வி உரிமையை மீட்டெடுப்போம்!

 

http://rsyf.wordpress.com/2009/12/25/அங்கீகாரம்-இல்லாமல்-நடத்/