10022023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

முன்கூட்டிய ஜனாதிபதித் தேர்தல்:அரசு இனவழிப்புக் குற்றத்திலிருந்து தப்பும் முயற்சி!

"சிங்கள-உலக ஆளும் வர்க்கங்கள் இலங்கை அரசினது யுத்தக்
குற்றத்தை மறைப்பதற்கெடுக்கும் முயற்சியில் தமிழ்த் தலைமைகளையே தமது
நோக்கிற்கிணங்கச் செயற்பட வைப்பதற்கும்,அவர்கள் வாய்மூலமே ஆளும் மகிந்தாவினது அரசை
மெச்சவும் ஒரு தேர்தல் நாடகம்.அதுள்,இரையாக்கப்படும் தமிழ்பேசும் மக்களது நீதியான
உரிமைகள் அந்த மக்களுக்கு எட்டாக் கனியாகிறது!"

 

சரி இவற்றுக்கும் கீழாக,நாம் கட்சி கட்டுவதும்-இயக்கம் தொடங்குவதும் குறித்து யுத்தத்துள் பாதிக்கப்பட்ட மக்களது தெரிவு எப்படியென்பது பரவலாக விளங்கிக்கொள்ளப்படுகிறதா?இதைப் புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் புரிந்துதாம் ஊடகங்களில் கருத்துக்கட்டுகிறார்களா?இன்றைய நெருக்கடிகள் குறித்து இலங்கையில் வாழும் தமிழ்பேசும் மக்கள் என்ன தெரிவோடிருக்கின்றனர்?
 
 
புலம்பெயர் தமிழர்கள் மத்தியில்,மிக எளிமையான சொல்லாடல்கள்மூலம் ஒரு இனத்தின் வாழ்வாதார அடிப்படைக் கோரிக்கைகளை கிண்டலக்குட்படுத்திச் சீரழிக்கும் நரித் தனத்துடன் கருத்தாடுகிற தமிழ்ச் சூழலொன்று, புலி அரசியலிலிருந்து மிக வலுவாக வளர்ந்துள்ளது.இது, மக்களின் உரிமைகளை புலி எதிர்ப்பு அரசியலில் நீர்த்துப் போக வைத்தபடி,இந்திய மேலாதிக்கக் கனவுகளுக்கு வக்காலத்து வேண்டுவதில் தனது எஜமான விசுவாசத்தைக் காட்டிக் கொள்கிறது.இதைத் தேசம் நெற்றும்,ஜெயபாலனும் மிகக் கபடத்தனமாகச் செய்து முடிப்பதில் பலவகைக் கூட்டுக்களைப் பின் தொடருவதும் நாம் காணத்தக்க அரசியல்.
 
இதனது மிக உயர்ந்த போக்கு, இலங்கையில் வரும் ஜனாதிபதித் தேர்தலையிட்டு நாம் அனுபவிப்பதுதாம்.
 
இலங்கை அரசினது கடந்த வன்னியுத்தம், தமிழின அழிப்பைச் செய்த கையோடு மீளக் கட்டியமைக்கும் படுமோசமான கட்சி, அரசியலில் மிகக் கேவலமாகத் திசைவழிகளை அமைக்கும் தமிழ்க் கட்சிகள்-முன்னாள் ஆயுதக் குழுக்கள், இந்த வன்னி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களையும் மறந்து, அரசியல் செய்யும் இந்தத் தருணத்தில்தாம் நாம் இப்போக்குகள் குறித்துக் கவனத்தைக் குவிக்கவேண்டும்.
 
எதிர்ப்பு அரசியல் நிலையோ இன்று, ஆளும் வர்க்ககங்களுக்கிசைவாகப் பிற்போக்குச் சக்திகளால் முன்னெடுக்கப்படுகிறது.மக்களை மிக இலகுவாகத் தமது வலுக்கரங்கள்மூலம் வரும் தேர்தலில் மகிந்தாவுக்கு ஓட்டுப்போட முயற்சிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளது சுயதேவை மக்களது அழிவின்மூலம் நிறைவேற்றப்படுகிறது.

 

 

 

 
இவற்றைப் பல தளங்கிளில் புரிந்தாகவேண்டும்:
 
அ: அழிவு யுத்தத்தினூடாகத் தமிழ்பேசும் மக்களது சமூக சீவியம் நிர்மூலமாகியுள்ளது,
 
ஆ: அவர்களது வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டது,
 
இ: தமிழ்ச் சமுதாயத்துள் குடிசார் அமைப்புகள் இல்லாதாக்கப்பட்டது,
 
ஈ: மக்களது ஆளுமையை அரை இராணுவ ஆட்சியின்வழி செல்லாக் காசாக்கியது,
 
உ: நேரடி ஜனநாயகத் தன்மையோ அன்றி மறைமுகமான ஜனநாயகத்தன்மையையோ இலங்கையின் இராணுவ-கட்சியாதிக்க-குடும்ப அரசியல் விட்டுவைக்காதது,
 
ஊ: தமிழ்பேசும் மக்களைத் திறந்தவெளிச் சிறைச் சாலையிலும்,மூடிய சட்டரீதியான சிறைச் சாலைகளிலும் அடைத்துவைத்துக் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுவது,
 
எ: தமிழ்பேசும் ஒரே காணத்தால் பெண்கள் பாலியில் ரீதாயாகச் சுரண்டப்பட்டு, நிர்பந்தமாக இராணுவத்தின்முன் தமது சுயதேர்வை,மரியாதையை இழந்து நிற்பது,
 
ஏ: தமிழ்பேசும் சிறார்கள் உளரீதியாக ஒடுக்கப்பட்டு,அவர்களது சுய ஆளுமையை உடைத்து,சமூகப் பொறுப்பற்று வாழ்வதற்கேற்ற வகைகளில் பண்பாட்டுச் சிதைவை ஏற்படுத்துவது,
 
ஐ: யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களது குடும்ப வாழ்வுமுறைகளில் ஏற்படுத்தப்பட்ட வெடிப்புத் தொடர்ந்து நிலவுவதற்கேற்ற முறைமைகளில் அவர்களது பூர்வீக வாழ்விடங்களை மறுத்து, முட்கம்பி முகாங்களென்ற"கொன்சன்ரேஷன் காம்புகளில்"வாழ அனுமதிப்பது.அதைச் சட்டரீதியாக நியாயப்படுத்துவது.
 
இத்தகைய நிலைமைகளைத் தொடர்ந்து நிலைப்படுத்தும் இலங்கை அரசானது, தேர்தல்மூலம் இவற்றைத் தீர்த்துவிடுவதாகப் பரப்புரை செய்கிறது.இது,தேர்தல் கோசமாக மாறியுள்ளபோது இதைவிடக்கொடுமை உலகில் நடக்க முடியாது.
 

தமிழ்பேசும் மக்களை ஒடுக்கி வந்த சிங்களப் பேரினவாதமானது இவ்வளவு கொடுமைக்கும் பொறுப்பாக இருக்கும்போது,இத்தகைய செயல்களுக்காககத் தண்டிக்கப்படவேண்டி நிலையைத் தடுத்து நிறுத்துவதற்கேற்ற வகையில் மகிந்தாவை மக்கள் நலக் காவலாகக்காட்டத் தமிழ்க் கட்சிகளைப் பயன்படுத்துகிறது சிங்கள-உலக ஆளும் வர்க்கங்கள்!
 
அதன் தெரிவிலேதாம் இத்தகைய தேர்தல் வியூகத்தின்மூலம் உலகை ஏமாற்றுகிறது.இத்தகைய ஏமாற்று வேலைகளுக்காகத் தமிழ்க்கட்சிகளைப் பயன்படுத்துவதனால் இலங்கை அரசு யுத்தக்கிரிமினற் குற்றத்தை நீர்த்துப்போக வைக்கிறது.இதற்கு உடந்தையாக அனைத்துத் தமிழ்த் தலைமைகளும் தமது வர்க்க நலனின் அடிப்படையில் ஒத்தூதுகின்றன.
 
இந்நிலையில், இவர்களின் முன்னே கண்ணீர்விட்டுத் தமது நிலையை விளக்கும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்பேசும் மக்களது பரிதாப நிலை!
 
தொழில் வளர்ச்சியடைந்த தேசங்களினது இன்றைய தேசிய இனங்களின் எதிர்காலக் கனவு, தத்தம் தேசியத்தின் முன்பாய்ச்சலையும்,முன்னணி வகிக்கும் உலகப் பொருளாதார வலுவையும் கோரிக் கொள்ளும்போது,அங்கே நிலைத்திருக்கும் அரசியல் மற்றைய பலவீனமான சிறுபான்மை இனங்களை குதறுவதிலேலே குறியாக இருக்கிறது.தமக்குப் போட்டியற்ற இனக்குழுக்களாக்கிவிடத் துடிக்கும்"உலகச் சமூக ஒழுங்கில்"உயிர் வாழும் மானுட உரிமையைக்கூட தமது பொருளாதாரக் கனவுகளின் சாத்தியப்பாட்டோடுதாம் அனுமதிக்கும் வர்க்க நிலைமைகளில் இவர்கள்"ஜனநாயகம்"பேசுகிறார்கள்.அல்லது, அதற்கிசைவான விளக்கத்தை முன் வைக்கிறார்கள்.இன்றைய சிங்களப் பேரினவாதமும் இதற்கு விதிவிலக்காகச் செயற்படவில்லை.
 
தமிழர்களைத் தனித்தேசப் போராட்டத்துக்குத் தள்ளிய சிங்கள மையவாதத்தைக் கேள்விக்குட்படுத்தாத இந்தத் தமிழர் "ஜனநாயகவாதிகள்" இதுவரை தொடர்ந்த போராட்ட வழிமுறைகளை விவாதிக்கத் திரணியற்றவர்கள்.இது சிங்கள இனவெறி அரசினது எந்த வரலாற்றுப் பயங்கரங்களையும் சிறுபிள்ளைத் தனமாக விவாதிக்க முனையும் இன்றைய காலத்தில், நாம் தொடர்ந்தும் அடிமைப்படும் கருத்தியல் மற்றும் அரச வன்முறை ஜந்திரங்களுக்கும் ஒத்திசைவாக இருக்கும் அரசியல் சித்து விளையாட்டாகிறது இது.இதனால் இலாபம் அடையும் இயக்க-கட்சி அரசியல், மக்களிடமிருந்து அந்நியப்பட்ட சூழலில்,மக்களின் உண்மையான வாழ்வியல் தேவைகளைக் தமது எதிர்கால இருப்புக்குக் கோசமாக்கிறது.இதுவே இன்றைய தமிழர்களின் தலைவிதி.
 


 
டக்ளஸ் போன்ற தமிழ்க் கட்சி அரசியல் தலைவர்கள், தம்மை மக்களது நலனுக்காக அர்ப்பணித்ததாகவும்,அவர்களது வாழ்வாதாரத்தைச் செப்பனிடுவதாகவும் தேர்தலை முன்வைத்துப் பரப்புரை செய்கிறார்கள்.தமது பங்களிப்புகளைப் பட்டியல்போட்டு மகிந்தாவினது பரோபகாரமாகவும் சொல்லுகிறார்கள்.இஃது, கடைந்தெடுத்த அயோக்கியத்தனமில்லையா?
 
சிங்களப் பேரினவாத யுத்தக் கிரிமினல் அரசு,தமிழ்பேசும் மக்கள்மீது கட்டவிழ்த்துவிட்ட இனவழிப்பு யுத்தத்தால் பலிகொள்ளப்பட்ட தமிழ்ச் சமுதாயத்தின்முன் குற்றவாளியாக நிற்பதும்,அது தமிழர்களுக்கு ஏற்படுத்திய கொடூரத்துக்குத் தண்டிகப்படவேண்டியதும் இப்போது செயலிழக்க வைக்கப்படுகிறது.மக்களது வாழ்வைச் செப்பனிடுவதும்,அவர்களுக்குக் காலகாலத்துக்குமான நஷ்ட ஈடுவழங்குவதும் இலங்கையை ஆளும் அரசுகளுக்கான தார்மீகக் கடமையாகிறது.இது, தமிழ்ச் சமுதாயத்துக்குத் தகுந்த அரசியல் தீர்வை முன்வைத்த பின்புங்கூட அவர்களுக்கான சிறப்புச் சலுகைகளை(வரிவிலக்குத் தொடங்கி யுத்தத்தால் கொல்லப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்குத் தலைமுறை தலைமுறையாக நஷ்ட ஈடு வழங்குதல்)வழங்கியாகவேண்டும்.இஃது, ஜேர்மனியில்(ஜோமனியத் தேசியவாதம் சிந்தி-ரோமா மக்களை முதலாம்-இராண்டாம் உலக யுத்தத்தில் கொன்று குவித்து இனவழிப்புச் செய்தது.) சிந்தி ரோமா மக்களுக்கு இன்றும் வழங்கப்படுகிறது.இலங்கை அரசு சட்ட ரீதியாகப் பதிலுரைக்க வேண்டிய கடமைகளிலிருந்து தப்பவைக்கப்படுகிறது.இதைச் செய்பவர்கள் இன்றைய தமிழ்த் தலைமைகள் என்பது எவ்வளவு கொடுமையானது!
 
தமிழ்பேசும் மக்களுக்கு அரசு செய்வேண்டிய நிர்மானப் பணிகளை, தானே செய்து முடிப்பதாகச் சொல்லி விளம்பரம் தேடும் டக்ளஸ் போன்றவர்களே இன்று இலங்கையின் யுத்தக் குற்றத்தை மறைத்து, மகிந்தாவுக்காக ஓட்டுக் கேட்கிறார்கள்.இது, சாபக்கேடா இல்லை வர்க்கம் வர்க்கத்தோடுதாம் சேருமென்ற சமூகப் புரிதலா?
 
எமது மக்களின் அமைதி வாழ்வுக்கும்,அடிப்படை வாழ்வுரிமைகளுக்கும் எம் மக்களால் பரிந்துரைக்கப்படும் நியாயமான வாழ்வியல் தேவையிலிருந்து- கோரிக்கைகளிலிருந்து, இலங்கைத் தேசம் அரசியல் தீர்வுக்கான முன் பரிந்துரைகளை எமது மக்களுக்கு முன்வைத்தாக வேண்டும்.இதுவே, எமது மக்கள் இலங்கைத் தேசத்துக்குள் வாழும் மற்றைய இனங்களின் உரிமைகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கான பாரிய முன் நிபந்தனைகளை இலங்கையிடம் கையளிப்பதாகவும் கொள்ளத்தக்கது. இதைச் செய்ய வக்கற்ற இந்தத் திடீர் அரசியல் கூட்டுக்கள்-தலைமைகள் நமது மக்களின் எந்த நியாயமான உரிமைகளையும் நிஷத்தில் முன்னெடுக்க முடியாது.
 
இவர்கள் மறுதலையாக, இலங்கைப் பேரினவாத அரசை யுத்தக் குற்றத்திலிருந்து தப்புவிக்க முனைகிறார்கள்.இதைத் திட்டமிட்டுச் செய்யும் இந்தியச் சாணாக்கியமே நேரத்துக்கு முந்திய ஜனாதிபதித் தேர்தலூடாக அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் மகிந்தாவுக்கும்,பொன்சேகாவுக்கும் பின்னால் செல்லவிட்டு,அவர்கள்மூலமே யுத்தக் கிரிமனல்களை மக்கள் தலைவர்களாகக்காட்டி, இலங்கையின் இனவழிப்பை நியாயப்படுத்தி யுத்தத்தால் பாழடிக்கப்பட்ட தமிழினத்தை ஏமாற்றி வருகிறார்கள்.இதை எந்த மனிதர்களும்-அரசும்,மனிதவுரிமை அமைப்புகளும் பாராமுகமாக இருக்கின்றனர்-இருக்கின்றன!
 
மே.18 இயக்கங்கட்ட அவசரப்படுபவர்கள், இலங்கையின் யுத்தக் கிரிமினல்போடும் சதி அரசியலை எங்ஙனமும் தொடரவே உலக உளவு நிறுவனங்களுடனிணைந்து காரியமாற்றுகின்றனர்.இத்தகைய தொடர் இயக்கக் கட்டுமானத்தினூடாக மக்களது உண்மையான நீதி மறைக்கப்பட்டு,அவர்கள் தொடர்ந்தும் ஆதிக்கச் சக்திகளிடம் அடிமைப்படுத்தப்படுகிறார்கள்.இதற்காகவேனும் மக்களிடம் உண்மைகளை எடுத்துச் சென்றாக வேண்டும்.அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதி கிடைப்பதற்கான வழி முறைகளை நாம் தொடர்ந்தாற்றவேண்டியிருக்கிறது.
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
23.12.2009

 

 
ல இலட்சம் மக்களைப் பலிகொடுத்து, "தமிழீழ"ப் போராட்டஞ் செய்த புலிகளின் அழிவுக்குப் பின்பு மக்கள் அமைப்புத் தோற்றம் பெறுவது,கட்சி கட்டுவது,மக்கள் சமுதாயத்தில் சாதியாக-வர்க்கங்களாகப் பிளவுப்பட்ட ஒவ்வொரு வர்க்கத்தினதும் ஆர்வங்களாக விரிகிறது.
 
அந்த ஆர்வங்களின் வாயிலாக சமூகத்தில் நிலவுகின்ற உற்பத்தி முறைகள்,அந்த முறைகளைக் காத்து,அவற்றை நிலை நிறுத்தும் நிறுவனங்கள் விதைக்கும் கருத்தியல் தளங்கள் நடந்த இனவழிப்பை மறைக்க முனைகின்றன இன்று!
 
இந் நிறுவனங்களின் வன்முறைசார் கருத்தியல் வடிவம் மற்றும், வன் முறை சாராக் கருத்தியல் தளத்தைக் காத்து,நிர்வாகித்துவரும் அரசோ அமைப்பாண்மையுடைய கட்சிகள்-திடீர் இயக்கம்,பேரவை,சங்கம்-கழகம்,மகாசபை எனும் பலவற்றின் பின்னால் மறைந்திருந்து இவைகளை இயக்கும் ஆளும் வர்க்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் புதிய ஜனாதிபதித் தேர்தலை நடாத்த முற்படுகிறது. இதன் மூலம் யுத்தக் குற்றங்களைக் கிடப்பில்போட்டுத் தப்ப முனைகிறது சிங்கள ஆளும் வர்க்கம்.
 
இவை குறித்தெல்லாம் எப்போதாவது நாம் புரிந்துகொண்டோமா?ஜனாதிபதித் தேர்தலில் கட்டுப்பணம் கட்டும் தமிழ் தலைமைகள் இதைப் புரிந்துகொண்டார்களா?அல்லது, மூன்றாம் நபருக்கு ஓட்டுப்போட அறைகூவலிடும் புதிய ஜனநாயகக்கட்சி இவற்றைப் புரிந்துகொண்டதா?
 
http://jananayagam.blogspot.com/2009/12/blog-post_23.html


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்