நாம் வசிக்கும் பூமியில் முக்கால் பகுதி கடலாகவும் கால்பகுதி மட்டுமே நிலமாகவும் இருக்கிறது. முக்கால் பாகமுள்ள கடலை நம்முடைய வசதிக்காக கடல்களாகவும், பெருங்கடல்களாகவும் பிரித்திருக்கிறோம்.
சில கடல்கள் நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டு எல்லைகளுடைய தனிக்கடலாக இருக்கும் மத்திய தரைக்கடலைப்போல. இன்னும் சில கடல்கள் மூன்றுபுறமும் நிலங்களாலும் ஒருபுறம் மற்றொரு கடலாலும் சூழப்பட்டிருக்கும் வங்காள விரிகுடா போல. பொதுவாக கடல்களின் எல்லை என்றால் நிலப்பரப்பு தான். நிலப்பரப்பு அல்லாமல் கடல்களுக்கு எல்லை என்று ஒன்றில்லை. பசுபிக் பெருங்கடலும், அட்லாண்டிக் பெருங்கடலும் தனித்தனி பெயர்களால் குறிக்கப்பட்டாலும் இவற்றிற்கிடையே எல்லை என்று ஒன்றில்லை, அந்தந்த பகுதியைக்கொண்டு அட்லாண்டிக் பெருங்கடல் என்றும் பசுபிக் பெருங்கடல் என்றும் அழைக்கிறோம். இரண்டு நாடுகளுக்கிடையே எல்லைக்கோடு இருப்பதைப்போல் இரண்டு கடல்களுக்கிடையே எல்லைக்கோடு இருப்பதில்லை. ஆனால் குரானின் இந்த வசனங்களை கேளுங்கள், “அவனே இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச்செய்தான்” “அவற்றிற்கிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது அதை அவை மீற்மாட்டா” குரான் 55:19; 55:20. இந்த வசனங்கள் இரண்டு கடல்களுக்கிடையே ஒரு தடுப்பு இருப்பதாக கூறுகிறது. ஆனாலும் அவை என்ன வகையினாலான தடுப்பு? என்ன பண்புகளினாலான தடுப்பு? அவற்றின் செயல்பாடு? எதுவும் விளக்கப்படவில்லை.
இதுபற்றி மதங்கற்ற அறிவியலாளர்கள் கூறுவதைக்கேட்கலாமா? ஆரம்பத்தில் மனிதனுக்கு கடல்கள் எல்லாம் ஒன்று தான் அவற்றினிடையே வித்தியாசம் ஒன்றுமில்லை என்று தான் நினைத்துக்கொண்டிருந்தான். பின்னர்தான் விஞ்ஞானிகள் ஒரு கடலுக்கும் இன்னொரு கடலுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதை கண்டுபிடித்துச் சொன்னார்கள். எல்லாக்கடல் நீரும் உப்பாக இருந்தாலும் அவற்றின் அளவுகள் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஆனால் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மாபெரும் அறிவியல் உண்மை 1400 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த முகம்மது நபிக்கு எப்படி தெரிந்தது? அதிலும் அவர் படிக்காதவர். இதிலிருந்து நமக்கு தெரிவதென்ன? அனைத்தும் அறிந்த அல்லாஹ்தான் முகம்மது நபியின் வழியாக குர் ஆனை இறக்கியிருக்கிறான் என்பது உறுதியாகிறதல்லவா? இப்படிப்போகிறது மதம் படித்த விஞ்ஞானிகளின் விஞ்ஞானம்.
பண்டைய கடலாடிகளுக்கு இது தெரிந்தே இருந்திருக்கிறது. பலநாடுகளுக்கு கடல்கடந்து வணிகம் செய்த வணிகர்களுக்கும் மாலுமிகளுக்கும் கடல் நீரின் தன்மை எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இருக்காது என்பது நன்றாகவே தெரிந்திருந்தது. அவர்கள் கண்களாலும் நாவினாலும் அறிந்து வைத்திருந்த அதை அறிவியலும் உறுதி செய்தது. எல்லா இடத்திலும் கடல் நீரின் உவர்ப்புத்தன்மை ஒரே திறத்தில் இருப்பதில்லை. அந்தந்த இடத்திற்கு ஏற்ப வளரும் கடற்றாவரங்கள் வசிக்கும் கடல் உயிரிகள் மண்ணின் தன்மை நீரோட்டங்களின் விளைவு கலக்கும் ஆற்றுநீரின் அளவு இவைகளின் அடிப்படையில் அந்த கடலின் உப்பு தாதுக்கள் மட்டுமல்லாது நீரின் தெளிவுத்தன்மை உட்பட பல மாறுதல்கள் இருக்கும். இவை வேறு வேறு கடல்களுக்கு என்று மட்டுமில்லை ஒரே கடலிலும் கூட பலப்பல மாறுதல்கள் இருக்கின்றன. வங்காள விரிகுடாவில் தான் சென்னையும், போர்ட் பிளேரும் (அந்தமான் நிகோபர் தீவுகள்) இருக்கின்றன, ஆனால் சென்னை மெரினாவிலும் போர்ட் பிளேர் கடற்கரையிலும் நீரின் தெளிவுத்தன்மை உட்பட எவ்வளவு வித்தியாசங்கள்? ஒரே கடலில் உள்ள வேறுபட்ட தன்மைகளையோ அல்லது வேறு கடல்களின் மாறுபட்ட தன்மைகளையோ தான் குரானின் வசனங்கள் தடுப்பு என குறிப்பிடுகிறதா? குரானின் வசனங்கள் தெளிவாகவே கடல்களின் எல்லை குறித்தே பேசுகின்றன. வசனம் 25:53 இன்னும் தெளிவாகவே இதனை குறிப்பிடுகிறது, “அவன் தான் இரண்டு கடல்களையும் ஒன்று சேர்த்தான். ஒன்று மிக்க இனிமையும் சுவையுமுள்ளது, மற்றொன்று உப்பும் கசப்புமானது. இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்” கடல் நீரின் சுவை குறித்து கூறினாலும் இரண்டு கடல்களுக்கும் ஒரு வரம்பு இருக்கிறதென்றும், இரண்டினிடையே இருக்கும் தடைய அவைகளால் மீறமுடியாதென்றும் ஐயத்திற்கிடமின்றியே அறிவிக்கிறது.
கடலுக்குள் யாரும் எல்லைக்கோடு பிரித்து வைக்கவில்லை என்பது ஒருபுறமிருக்கட்டும், கடலுக்குள் நீரோட்டங்கள் இருக்கின்றன, இந் நீரோட்டங்கள் நிலத்தில் ஓடும் ஆறுகளைப்போல் கடலுக்குள் ஓடுகின்றன. ஒருகடலிலிருந்து மற்றொரு கடலுக்கு, ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்திற்கு பாயும் பல கடலடி நீரோட்டங்களை கண்டுபிடித்திருக்கிறார்கள். இரண்டு கடல்களுக்கிடையே மீற முடியாத தடுப்பு இருக்கிறதென்றால் நீரோட்டங்கள் எப்படி நகர்கின்றன? இனப்பெருக்கத்திற்காகவும், பருவ மாற்றங்களுக்காகவும் சிலவகை மீன்கள் இடம்பெயர்கின்றன, ஒரு கடலிலிருந்து மற்றொரு கடலுக்கு சர்வ சாதாரணமாக வந்து போகின்றன? கடல்களுக்கு இடையே இருக்கும் தடையை மீன்களால் எப்படி தகர்க்க முடிந்தது? ஒன்று தெளிவாகிறது கடலாடி அனுபவமில்லாத முகம்மது, கடலாடிகளிடமிருந்து கடல்நீரின் சுவை வேறுபாடுகளைப்பற்றி அரைகுறையாக செவியுற்று அதையே தன்னுடைய குரானில் தடையாக அரங்கேற்றிவிட்டார். அதையே இவர்கள் மாபெரும் அறிவியல் உண்மையாக அளந்துவிடுகிறார்கள்.
கடலைப்பற்றிய இன்னொரு மாபெரும் அறிவியல் உண்மையும் குரானில் காணக்கிடைக்கிறது. வசனம் 24:40 “அல்லது ஆழ்கடலில் பல இருள்களைப் போன்றதாகும் அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை. அதற்கும் மேல் மேகம். பல இருள்கள். சில சிலவற்றிற்கு மேல் இருக்கின்றன. அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதை பார்க்க முடியாது. எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை”
இஸ்லாத்தை ஏற்காதவர்களின் நிலையை விவரிக்கும் இந்த வசனம். ஒருவனை அல்லா நேர் வழியில் செலுத்தவில்லை என்றால் அவனுக்கு எந்த நேர்வழியும் இல்லை என எச்சரிக்கிறது. இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஆழ்கடலில் பல இருள்களைப் போன்றதாகும் எனும் வாக்கியம் தான் அந்த மாபெரும் அறிவியல் உண்மை.
கடலில் ஆழத்தில் செல்லச்செல்ல வெளிச்சம் குறைந்து உள்ளங்கைகளை கூட பார்க்கமுடியாத அளவுக்கு இருட்டாகிவிடும். இது ஒன்றும் யாருக்கும் தெரியாத சங்கதி அல்ல. கடலோடு மனிதனுக்கு தோடர்பு ஏற்பட்ட பிறகு எளிதாக இதை மனிதன் கண்டிருக்கமுடியும். ஆனால் இதையும் பிற்கால அறிவியல் கண்டுபிடிப்பான கடல் நீரில் ஒளியின் நிறமாலை நிறங்கள் ஊடுருவும் ஆழம் பற்றிய தகவல்களை ஒன்றிணைத்து பிற்கால அறிவியல் கண்டுபிடிப்பை குரான் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டது என்கிறார்கள்
இதில் இன்னொரு வேடிக்கையும் இருக்கிறது. அமெரிக்காவின் கடலாய்வு அறிவியலாளரான பேராசிரியர் வில்லியம் ஹை என்பவர் 1980 களின் தொடக்கத்தில் தாம் ஜித்தா பல்கலைக்கழகத்தில் அறிக்கை சமர்ப்பிக்க அழைக்கப்பட்ட கதையை விளக்குகையில், தாம் குரானில் கூறப்பட்டிருக்கும் ஆழ்கடல் இருளை அறிவியல் ஆதாரங்களுடன் மெய்பிக்கும் தகவல்களுடன் கூடிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தன்னிடம் கோரப்பட்டதை விவரிக்கிறார். ஆனால் தான் அவ்வாறான அறிக்கையை அளிக்காமல் குரானில் கூறப்பட்டிருப்பதும் நிறங்களின் ஊடுறுவும் ஆழமும் தொடர்பில்லாதது என சொற்பொழிவாற்றியதாகவும், பின்னர் தன்னுடைய கட்டுரை மலரில் சேர்க்கப்படவில்லை என்றும் அதற்குப்பதிலாக அதே தலைப்பில் பேராசிரியர் துர்க்கா ராவ் என்பரின் கட்டுரை இடம்பெற்றிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இன்னொரு விசயத்தையும் நீங்கள் கவனிக்கலாம், அறிவியல் உண்மை என மதவாதிகள் ஆராதிக்கும் விசயங்களையெல்லாம் அராய்ந்தால் அவைகளெல்லாம் சௌதி அரேபியாவில் பெறப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளாக மட்டுமே இருப்பதைக்காணலாம். ஆக அனைத்து ஆற்றல்களையும் கொண்ட அவர்களின் அல்லாவைவிட அறிவியல் நிரூபணம் இஸ்லாத்தின் பரவலுக்கு அவசியம் என்பதை அவர்களும் உணர்ந்தே இருக்கிறார்கள்.