திடீர் அரசியல் சாக்கடையில், மக்களுக்கு எதிரான வரலாறுகள் புதைக்கப்படுகின்றது

தமிழ் மக்களுக்கு எதிரான அரசியல் மூலம் ஆயிரம் ஆயிரம் கொடுமைகள் நிகழ்ந்த போது, அதற்கு ஆதரவாக "முன்னேறிய பிரிவு" என்று கூறிக்கொள்ளும் கூட்டம் செயல்பட்டது.  இதற்கமைய ஆழ்ந்த உறக்கத்தில்; கிடந்தவர்களும், எதிர்ப்புரட்சி அரசியலை அரசியலாக செய்தவர்களும், "திடீர் ஆய்வு", "திடீர் மார்க்சியம்" "திடீர் புரட்சி" என்று இன்று  கடைவிரிக்கின்றனர்.

சரணடைந்து புலித் தலைவர் "மே 18" செத்ததாக பேரினவாதிகள் அறிவிக்க, திடீர் அரசியல் பிழைப்புவாதமும் உசுப்பேற்றப்பட்டது. அந்த "மே 18" பெயரில் இயக்கம் முதல் சுயவிமர்சனம் என்றால் என்ன என்று விளக்கும் இலங்கை பு.ஜ கட்சி ஈறாக, அரசியலில் புதுவே~ம் போடுகின்றனர். புலிகள் மே 18 இருந்தவரை, தமிழ்மக்கள் பட்ட துன்பங்களுக்கும் சரி, தேசிய விடுதலையில் பெயரில் புலிப் பாசிட்டுகள் மாபியாத்தனத்துடன் நடத்திய கொடுமைகளையும் கண்டு கொள்ளாத கூட்டம் தான், அன்று தாம் அதற்கு எதிராக போராடியதாக இன்று கூறுகின்றது. திடீர் மார்க்சியம், ஆய்வுகள், அறிக்கைகள், விளக்கங்கள் என்று கடைவிரிக்கின்றனர். இதற்கு அமைவாக கடந்த தங்கள் எதிர்ப்புரட்சிக் காலத்தையும், பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தையும், இருட்டில் வைத்திருக்க தீவிரமாக முனைகின்றனர். அன்று நடந்த போராட்டத்தை எதுவுமற்றதாக காட்ட, தாம் விரும்பியவாறு முத்திரை குத்துகின்றனர். "கம்யூட்டர் புரட்சி" என்றும், "மார்க்சிய கோசங்கள்" என்றும், "தனிநபர் தாக்குதல்கள்" என்றும், "மேல் ப+ச்சு சிவப்பு கோசங்கள்" என்றும், "யாழ் மேட்டுக்குடி" மொழி என்றும், "ஜனநாயகமற்ற எழுத்தென்றும்" தாங்கள் எதிர்ப்புரட்சி அரசியல் பேசிய காலத்தின் எதிர்ப்புப் போராட்டத்தை இட்டுக்காட்ட முனைகின்றனர்.

 

இதன் மூலம் இவர்கள் இன்று எமக்கு சொல்லவருவது என்ன? தம்மை விமர்சிப்பதை நிறுத்து என்கின்றனர். வாயை மூடிக்கொண்டு இரு என்கின்றனர். இதைத்தாண்டி இவர்களால் எதையும் முன்வைக்க முடியவில்லை. எமது அரசியலுக்கு முன்னால், இந்த திடீர் பம்மாத்து அரசியல், ஒருநாளும் நின்று பிடிக்க முடியாது. எம் வாயை மூடவைத்து, பிழைக்க முனைகின்றனர். இதற்கு அமைய பல முனைத் தாக்குதல், அவதூறு… என்று பல குறுக்கு வழியில் முனைகின்றனர்.

 

இன்று தம்மை புரட்சியாளனாக காட்ட, கடந்த தங்கள் வரலாற்றை திரிப்பதுடன் அதை இருட்டிலும் வைக்க முனைகின்றனர். புலிகள் வரலாற்றை தமக்கு ஏற்ப புனைய, அனைத்தையும் அழித்தார்கள். அதன் துணையில் நின்று நீடித்த இந்தக் கூட்டம், இன்று அதை தமக்கேற்ற ஒரு வரலாறாக்கி காட்ட முனைகின்றனர்.

 

கடந்த வரலாறுகளில், வென்றவர்கள் சொல்வதே வரலாறு. இன்றும் எம்மைச் சுற்றியும், அதுதான் நிலைமை. தத்துவ விண்ணர்கள், மோசடிக்காரர்கள், பிழைப்புவாதிகள், சந்தர்ப்பவாதிகள்… இன்று எம்மைச் சுற்றி அரசியல் செய்கின்றனர். மக்களைக் கொன்ற புலிகள், புலித் தலைமையை சரணடைய வைத்து சாகடித்த புலிகள், அரசியலை காட்டிக்கொடுத்தவர்கள் முதல் அரசியல் குற்றத்தை இழைத்தவர்கள் வரை, எந்த விமர்சனம் சுயவிமர்சனமின்றி அரசியல் செய்யமுடிகின்றது. கடந்த அரசியல் வரலாற்றை மூடிமறைத்துக் கொண்டுதான், இன்று அனைத்தும் அரங்கேறுகின்றது. கடந்தகாலம் பற்றிய மக்களின் அறியாமை என்னும் இருட்டில், தமக்குத் தாமே ஒளிவட்டம் கட்டுகின்றனர்.     கடந்தகாலத்தில் மக்கள் மேலான கொடும்கோன்மைகளை மூடிமறைப்பதன் மூலம், நிகழ்கால அரசியலை செய்யமுனைகின்றனர். இந்த அரசியல் பொறுக்கிகள், தம்முடன் எம்மை இணையக் கோருகின்றனர். இதைச் செய்ய மறுத்தால் தனிமைப்படுத்தப்படுவீர்கள் என்று மிரட்டப்படுகின்றோம். அவதூறுகளை அள்ளி எறிகின்றனர்.

 

தமிழ்மக்கள் மேல் இனவொடுக்குமுறை இருந்தது என்பது, இன்று வெறும் கோசமாகிவிட்டது. தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை என்பதை, சமூகம் இன்று அரசியல் ரீதியாக சொல்லும் நிலையில் இன்றில்லை. பல பத்தாயிரம் மக்களை, கடந்த காலத்தில் பேரினவாதம் கொன்று குவித்தவை, வரலாற்றில் இருந்து மெதுவாக மறைந்து போக்கின்றது. இந்தக் குற்றங்கள் கூட, அரசியல் ரீதியாக இன்று மறுதலிக்கப்படுகின்றது. அண்மையில் பேரினவாதம் நடத்திய இனவழிப்பை கூட, அரசியல் ரீதியாக மெதுவாக காணாமல் போகின்றது. தமிழ் மக்கள் மேல் பேரினவாதம் நடத்திய ஒரு இனவழிப்பு வரலாறு, மெதுவாக வரலாற்றில் இருந்து காணாமல் போகின்றது. அதை வெறும் "அபிவிருத்தி" மறுப்பாக காட்டி, இன்று "வியூக"த்தின்  அரசியலாக்கப்படுகின்றது.

 

மறுபக்கத்தில் இதை எதிர்த்து போராடமுனைந்தவர்கள் நடத்திய உட்படுகொலைகள், வரலாற்றில் அரசியல் ரீதியாக புதைக்கப்பட்டுவிட்டது. மாற்று இயக்க படுகொலைகள் எதுவும் எம்மண்ணில் நடந்ததாக சொல்லும் வரலாற்றுக் குறிப்புகள், அரசியல் ரீதியாக இன்று நீக்கம் செய்யப்பட்டுவிட்டது. புலிகள் ரெலோவை வீதிவீதியாக எரித்துகொன்ற உண்மையை, இன்றைய வரலாற்றில் பொய்யான இட்டுக்கட்டலாகவே வரலாறு பதிவு செய்ய முனைகின்றது.

 

புலிகள் தங்கள் இறுதி யுத்தத்தின் போது, மக்களை பணயம் வைத்து கொன்ற வரலாறு என்பது, வரலாற்றுப் பதிவுகளில் இன்று காண முடியாத ஒன்றாக மாறிவருகின்றது. புலிகளின் தலைவர் சரணடைந்ததும், அவர் கொல்லப்பட்டதும் வரலாற்றில் நடவாத ஒன்றாகிவிட்டது.

 

அரசு மற்றும் புலிகளுக்கு எதிராக மாற்றைத் தேடியவர்கள் நடத்திய மக்கள் விரோத அரசியல் பக்கங்;கள், வரலாற்றின் முன் இருண்ட பக்கமாகிவிட்டது. இந்தப் போக்குக்கு எதிரான போராட்டங்கள், வரலாற்றின் முன் காயடிக்கப்படுகின்றது.

 

இப்படி மக்களுக்கு எதிரான கடந்தகாலத்தின் அனைத்து வரலாறும், அரசியல் ரீதியாக அரசியல் நீக்கம் செய்யப்பட்டு வருகின்றது. மக்களுக்கான உழைப்பும், தியாகங்களும,; அரசியலில் பிழைக்கத் தெரியாதவர்களின் கையாலாகாத்தனமாக வரலாற்றில் காட்டப்பட்டு வருகின்றது.

 

இன்று அரசியல் என்பது, கடந்த எதிர்ப்புரட்சி வரலாற்றைக் குழிதோண்டி புதைக்கும் சாக்கடையில் தான் அரசியல் புத்துயிர்ப்பு பெறுகின்றது. இந்த அரசியல் அவலத்தை, அரசியல் ரீதியாக எத்தனை பேர் புரிந்துள்ளனர். எத்தனை பேர் இன்று எதிர்வினையாற்ற முனைகின்றனர். கடந்த எம் வரலாற்றில் நடந்தவைகளை, அதற்கு யார் எப்படி துணையாக வரலாற்றில் நின்றனர் என்பதை, அரசியல் ரீதியாக இனம்காட்டாத புதிய அரசியல் போக்குகள், நிச்சயமாக மீளவும் மனித குலத்தை தொடர்ந்தும் ஒடுக்கவே உதவும்.

 

இதன் மூலம் கடந்த எம் துயரமான மனித வரலாறு, ஆதாரமற்ற கட்டுக்கதையாக மாறிவருகின்றது. இதை அனுமதித்து அரசியல் செய்வதை விட, நேர்மையாக அரசியலில் இருந்து நாம் விலகிக்கொள்ளலாம்.

 

கடந்தகால எதிர்ப்புரட்சி அரசியலை செய்த பொறுக்கிகளும், புறம்போக்குகளும், மீள அதை செய்வதை தொடர்ந்து அனுமதிப்பதா "நேர்மையான" அரசியல்!? மனச்சாட்சி உள்ள ஒவ்வொருவரிடமும் இதைத்தான் நாம் கேட்கின்றோம். சொல்லுங்கள்.

 

கடந்தகாலத்தில் பல முனையில் எம் மக்களுக்கு எதிராக நடந்ததை எல்லாம் எதிர்த்து போராடிய ஒரு புரட்சிகர பரம்பரை செய்த தியாகங்களை எல்லாம் கொச்சைப்படுத்தி பிழைக்கும் கூட்டம், "மே 18" பின் இன்று தவளைகள் போல் சலசலக்கின்றது. கடந்தகாலத்தில் (தொடர்ந்து) மக்களுடன் நிற்காத பிழைப்புவாத சந்தர்ப்பவாத அரசியலை செய்தவர்கள், இன்று கடந்த காலத்தைத் திரித்தும் புரட்டியும் இருட்டடிப்பு செய்தபடி மீண்டும் புது வேசம் கட்டி வருகின்றனர். இதை இன்று எதிர்கொண்டு போராடுவதன் மூலம்தான், மீண்டும் புதிய எதிர்ப்புரட்சி அரசியல் மூலம் மக்களை ஏமாற்றுவதில் இருந்து அவர்களை விழிப்படைய வைக்க முடியும்;.

 

பி.இரயாகரன்
22.12.2009