Language Selection

கங்கா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தாங்கள் கடித்துக்குதறியது
துவாரகா இல்லையென இரணியத்தளபதி அடித்துச்சொல்கிறான்
எங்கள் மகள் எங்கள் சகோதரியென
எல்லா இதயமும் நெருப்பாய் எரிகிறது......


இனவெறியும் ஆணாதிக்கவெறியும் கோரப்பற்களால்
நெருப்பைக்கடந்த பிள்ளைகள் உயிர்களை 
குடித்து எறிந்தபடியே வாக்குக்கேட்டு எப்படிவருவர்.......

 

கடித்துக்குதறிய கழுகுகளின் அலகுகளில்
குருதிக்கறை படிந்தபடியே நீதிக்கதைகள் சொல்கின்றன
ஆண்டின் நாட்கள் பூராகவுமே
குழந்தைகட்கானதாயும் மனிதஉரிமைக்கானதாகவும்
பெண்களிற்கானதாயும் நீண்டபட்டியல்
நிர்ணயிக்கப்பட்டபடியே கூட்டப்படுகின்றன......

 

தேடிக்களைத்து கதறும் உறவுகளின்
கண்ணீர்கதைகள் நெஞ்சை உருக்குவதாய்
கண்களை கசக்கியபடியே ஊடகங்களில் பிரபலமாகிறார்கள்
மன்னம்பரி முதல் துவாரகா வரை
நீதிமான்களது முகங்கள்மீது வீசியெறியப்படுகிறது
பயங்கரவாதிகட்காய் தங்களது கண்கள் திறப்பதில்லையென
இறுகவே முடிக்கொள்கிறார்கள்
கோபன்கேக் மாநாடு போலவே முரண்டுபிடித்தபடியே........

 

எரிந்து மிஞ்சிய முல்லைக்காடுகள் கண்ணீர் வடிக்கிறது
குண்டுக்குப்பதுங்கிய பிள்ளைகள்  உடல்களில்
முட்கள் கிழித்ததாய் அறிக்கைகள் வரலாம்....
தேடிஅலையும் உறவுகளிடம் மரணசான்றிதழ் வழங்கப்படலாம்....
தடயமற்றுப் பொசுக்கிப்போட்ட சாம்பல் மேட்டில்
இந்தியதேச கம்பனிகள் எழுப்பப்படலாம்...


நீட்டிமுழங்கிய பச்சோந்திகள்
எட்டி உதைத்த கால்களைநக்கி எலும்புத்துண்டுக்காய்
கூடியழித்த கூட்டைவருடும் சாக்கடையில் வீழலாம்..

 

அடுப்பொடு கிடந்தகாலமல்ல
அடிமைத்தளையுடைக்க மிடுக்குடன் நிமிர்ந்தயுகம்
குமுறிக்கிடக்கும் உணர்வுகள் இணையும்
கூடியெழுவர் பாசிசம் அழியும்....