அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

தோழர் ஸ்டாலின், அவர் உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம். உலக பாட்டாளி வர்க்கத்தின் உற்ற தோழன். டிசம்பர் 21, அவருடைய 130வது பிறந்த நாள்.

 

ரஷ்யாவில் உழைக்கும் மக்களை அழுத்தி கொண்டிருந்த ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்துப் போராடிய ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் தளகர்த்தர் தோழர் ஸ்டாலின். அப்போராட்டத்தில் சிறை சென்றார். நாடு கடத்தப்பட்டார். பல்லாண்டுகள் தலைமறைவாக வாழ்ந்தார். தன்னுடைய வாழ்க்கையை நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் அர்ப்பணித்த மாபெரும் புரட்சியாளர் தோழர் ஸ்டாலின்.

உழைப்பவர்களுக்கே அரசியல் அதிகாரம் என்று சுரண்டும் வர்க்கங்களுக்கெதிராக போர்க் குரலெழுப்பிய மார்க்சிய லெனினியத்தை உறுதியாக பற்றி நின்று நடைபோட்ட கம்யூனிச போராளி தோழர் ஸ்டாலின்.

சுரண்டும் வர்க்கங்களுக்கும் சுரண்டப்படும் வர்க்கங்களுக்கும் பொதுவாய் ஒரு அரசு இருக்க முடியாது. சுரண்டலை ஒழிக்க, இருக்கும் அரசை தூக்கியெரிந்து, உழைக்கும் மக்களின் அரசை நிறுவ வேண்டும் என்று மார்க்சிய லெனினிய அரசியலை உயர்த்தி பிடித்த போல்ஷ்விக் தோழர் ஸ்டாலின்.

சிறுபான்மை முதலாளிகள் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்கும் முதலாளித்துவ ஜனநாயகம் கூறும் பொதுவான அரசு என்பது முதலாளித்துவ சர்வாதிகாரமே! பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் அரசியல் அதிகாரத்தின் கீழ் முதலாளித்துவ சுரண்டலுக்கு முடிவுகட்டும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே ஜனநாயகம் என்று நிலை நாட்டிய மாபெரும் ஜனநாயகவாதி தோழர் ஸ்டாலின்.

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த போதும் ஜப்பான் மீது அணுகுண்டை போட்டு பல லட்சம் மக்களை கொன்று குவித்து மனித கறி தின்றது அமெரிக்க ஏகாதிபத்தியம். அந்தப் போரில் உலகத்தையே அச்சுறுத்திய பாசிச ஹிட்லரை வீழ்த்த இரண்டு கோடி சோவியத் மக்கள் உயிர்த் தியாகம் செய்தனர். தோழர் ஸ்டாலின் தன் மகனை இழந்தார். ஆனால் உலகை பாசிச அபாயத்திலிருந்து மீட்டார். பாசிச ஹிட்லரை வீழ்த்திய ரஷ்ய செஞ்சேனையை வழிநடத்திய மாவீரர் தோழர் ஸ்டாலின்.

அமெரிக்காவும், ஐரோப்பாவும் இரண்டு நூற்றாண்டுகளாக மக்களை கசக்கி பிழிந்து முதலாளித்துவத்தை வளர்த்து வல்லரசுகளாகின. ஆனால் எல்லோருக்கும் வேலை எல்லோருக்கும் உணவு என்று மக்களின்  வாழ்க்கையை மேம்படுத்தி, இருபதே ஆண்டுகளில் வலிய சோசலிச முகாமை படைத்தது சோவியத் ரஷ்யா. அதை கட்டியமைத்த சிற்பி தோழர் ஸ்டாலின்.

மனித குலத்தின் ரத்ததை உறிஞ்சி வாழும் முதலாளித்துவத்தை கொன்று மனித குலத்தின் மேன்மையை பறைசாற்றும் சோசலிசத்தை நிலைநாட்டிய பாட்டாளி வர்க்க பேராசான் தோழர் ஸ்டாலின்.

உலகை சூறையாட மூர்க்கமாய் திரிந்த ஏகாதிபத்தியங்களுக்கு தடையரணாய், பின் தங்கிய நாடுகளின் வளர்ச்சிக்கு உதவியாய், காலனிய நாடுகளின் விடுதலைக்கு ஆதரவாய் நின்றது தோழர் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் ரஷ்யா.

’கம்யூனிசம் தோற்றுவிட்டது, சோசலிசம் நடைமுறைக்கு உதவாது’ என்று பிதற்றுகிறது முதலாளித்துவம். ஆனால் முதலாளித்துவமோ தினம், தினம் திவாலாகிக் கொண்டும் அழுகி நாறிக்கொண்டும் சவக்குழியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தன்னுடன் சேர்த்து உலகத்தையே அழிவில் தள்ளிக்கொண்டிருக்கின்றது. வேலையை பறித்தும், உணவை பதுக்கியும் உழைக்கும் மக்களை வறுமை பட்டினியில் தள்ளி அடங்காத லாப வெறி கொண்டு அலைகிறது. உலக வங்கி, உலக வர்த்தக கழகம், சர்வதேசிய நாணய நிதியம் போன்ற ஏகாதிபத்திய கைகூலி நிறுவனங்களின் மூலம் உலகம் முழுவதும் உள்ள மக்களின் உழைப்பை சுரண்டியும் பின் தங்கிய நாடுகளின் இயற்கை வளங்களை கொள்ளையிட்டும் வருகிறது. வியட்நாம், ஆப்கான், ஈராக், என ஆக்கிரமிப்பு போர்களை நடத்தி மக்களை கொன்று குவிக்கிறது. தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற நாசக்கார கொள்கைகளை திணித்து நாடுகளை மறுகாலனியாக்குகிறது.

கம்யூனிசம் வெல்லும் வரை முதலாளித்துவம் கொன்று கொண்டே இருக்கும். மக்களைக் கொல்வதன் மூலம் முதலாளித்துவம் தன்னுடைய வெற்றியை லாபத்தை வாரி சுருட்டிக்கொள்கிறது. முதலாளித்துவத்தை கொள்வதன் மூலமே மக்கள் வெல்ல முடியும். அதுவே கம்யூனிசத்தின் வெற்றி.

உழைக்கும் மக்களுக்காக போராடிய கம்யூனிஸ்டாய், உழைக்கும் மக்களின் அதிகாரத்தை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மூலமாக நிலைநாட்டி கம்யூனிசத்தின் குறியீடாய், பாசிசத்தை தோற்கடித்து மனித குலத்தை காத்த ஜனநாயகத்தின் பிம்பமாய், சோசலிசத்தை நிலைநாட்டி கம்யூனிச உறுதிபாட்டின் சின்னமாய் விளங்கும் தோழர் ஸ்டாலின்  வழியில் நெஞ்சு நிமிர்த்தி நடைபோடுவோம்.

நமது நாட்டை விழுங்கிகொண்டிருக்கும் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் தலைமையிலான ஏகாதிபத்திய முகாமை வீழ்த்த, ’மக்களே புரட்சியின் நாயகர்கள்’ என்ற தோழர் ஸ்டாலினின் முழக்கத்தை நினைவில் ஏந்துவோம். மக்கள் படையாய் திரண்டெழுவோம். புதிய ஜனநாயக புரட்சியை நடத்தி முடிப்போம்.

தோழர் ஸ்டாலின் புகழ் ஓங்குக!

தோழர் லெனின் ஸ்டாலின் வழி நடப்போம்!

முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

முதலாளித்துவம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!

 

 

 

 

தமிழகம் முழுவதும் பேரணிகள், தெருமுனைக் கூட்டங்கள்


சென்னையில்

குரோம்ப்பேட்டை பேருந்து நிலையம், மாலை 4 மணி

பொன்னேரி

அண்ணா சிலை, மாலை 5 மணி


 

அனைவரும் வருக!


மக்கள் கலை இலக்கிய கழகம்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி

பெண்கள் விடுதலை முன்னணி

விவசாயிகள் விடுதலை முன்னனி

-

தொடர்பு கொள்ள:

ம.க.இ.க         : 94446 48879

பு.ம.இ.மு      : 94451 12675

பு.ஜ.தொ.மு : 94448 34519

பெ.வி.மு      : 98849 50952.