08102022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

ஜனாதிபதி தேர்தல் கூத்தில், புதிய ஜனநாயகக் கட்சி முன்வைக்கும் "மார்க்சிய லெனினிய மாவோசிய சிந்தனை"!

"தேர்தலை நிராகரி" என்கின்றது இலங்கை பு.ஜ கட்சி. அட!, இலங்கை பு.ஜ கட்சி வர்க்கப் போராட்டத்தை முன் வைக்கின்றது என்ற ஆச்சரியத்துடன், என்ன எது என்று பார்த்தால் "50 வீத வாக்குகள் பெறமுடியாத நிலைமையை ஏற்படுத்தியிருந்தால் இன்றைய ஜனாதிபதி முறைமைக்கு ஒரு அரசியல் யாப்பு நெருக்கடியை உருவாக்கி அதில் மாற்றம் கொண்டுவர நிர்ப்பந்தித்திருக்க முடியும்" என்று நம்பி தேர்தலில் பங்கு பற்றக் கோரிய ஒரு "வர்க்கக்" கட்சி, அந்த காரணத்தைச் சொல்லியே மீண்டும் தேர்தலைப் பகிஸ்கரிக்கக் கோருகின்றது. 

   

இப்படி இலங்கையில் ஒரு "மா.லெ.மா சிந்தனையை" முன்னிறுத்தும் ஒரு கட்சியாக, தன்னை அடையாளப்படுத்துகின்றது. இந்த புதிய ஜனநாயகக் கட்சி, வர்க்கப் போராட்டத்தையா இப்படி முன்னெடுக்கின்றது!? சண் தலைமையிலான மா.லெ.மா கட்சியில் இருந்து 1970 களில் பிரிந்தவர்கள் தான் இந்த புதிய ஜனநாயகக் கட்சி.  இதற்கு பிந்தைய மிகக் கொந்தளிப்பான இலங்கை வரலாற்றில், இக்கட்சி மா.லெ.மா சிந்னையை என்றும் முன்னிறுத்தியதில்லை. இது வர்க்கப் போராட்டத்தை முன்வைத்து, சமூகத்தை புரட்சிகரமான ஒரு அரசியல் வழியில் மக்களை வர்க்கங்களாக அணிதிரட்டவில்லை.

 

இலங்கை ஜனாதிபதி தேர்தல் பற்றிய அதன் அரசியல் நிலைப்பாடு, மா.லெ.மா சிந்தனைக்கு முரணான சந்தர்ப்பவாதமாகும். அக்கட்சி விட்ட அறிக்கை இதை துல்லியமாக அம்பலமாக்குகின்றது. "தேர்தலை நிராகரித்து வாக்குச் சீட்டை செல்லுபடியற்றதாக்கிக் கொள்வதே உரிய வழிமுறையாகும்" என்று கூறும் இக் கூற்றில் இருப்பது, ஜனநாயகம் பற்றிய மயக்கம் தான். "சீட்டைச் செல்லுபடியற்றதாக்கி" என்பது, அதன் பின் புதைந்துள்ள அரசியல் "ஜனநாயகம்" பற்றிய மாயையை தற்காக்கின்றது. இதை கூறும் உள்ளடக்கம் தெளிவாக மா.லெ.மா சிந்தனைக்கு எதிரான போக்கினை அம்பலமாக்குகின்றது. சரி ஏன் இந்தத் தேர்தலை பகிஸ்கரிக்க கோருகின்றனர்.

 

"இவ் ஜனாதிபதித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஜக்கிய தேசியக்கட்சி தலைமையிலான இரண்டு பேரினவாத முதலாளித்துவக் கட்சி வேட்பாளர்களுக்கும் எதிராகத் தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகளும், இடதுசாரிக் கட்சிகளும் இணைந்து தனியொரு வேட்பாளரை நிறுத்தி 50 வீத வாக்குகள் பெறமுடியாத நிலைமையை ஏற்படுத்தியிருந்தால் இன்றைய ஜனாதிபதி முறைமைக்கு ஒரு அரசியல் யாப்பு நெருக்கடியை உருவாக்கி அதில் மாற்றம் கொண்டுவர நிர்ப்பந்தித்திருக்க முடியும். அத்துடன் மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வையும் வெகுஜன பலத்தையும் கட்டியெழுப்பியிருக்க முடிந்திருக்கும். இதனையே எமது கட்சி ஏற்கனவே முன்வைத்து வந்தது. அதனைக் கவனத்தில் கொள்ளாது பிரதான வேட்பாளர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க முன்னிற்கும் சிறுபான்மை கட்சிகள் தத்தமது பதவிகளுக்கும் ஏதிர்காலப் பாராளுமன்றச் சுயநல அரசியலுக்குமாக மக்களுக்கு மிகப்பெரும் துரோகத்தையே செய்து நிற்கிறார்கள்."

 

தேர்தலில் மூன்றாவது அணியை உருவாக்கத் தவறியதால் தான், பகிஸ்கரிக்கக் கோருகின்றனர். அப்படி முன்றாவது அணியை கட்டியிருந்தால் அரசியல் யாப்புக்கு நெருக்கடியை கொடுத்திருக்க முடியுமாம். இப்படி ஒரு அரசியலையே 'மா.லெ.மா' சிந்தனை என்கின்றனர். இது போன்ற நிறைவேற்று ஜனாதிபதி முறை உலகெங்கும் இருப்பதும், 50 சதவீதம் வாக்கை அங்கு அவர்கள் பெறுவதில்லை. இரண்டாவது சுற்றில் தான் அதைப் பெறுகின்றனர். அங்கு இது எந்த "அரசியல் யாப்பு நெருக்கடியையும் உருவாக்கி" விடுவதில்லை. இலங்கையில் 50 சதவீதம் பெறாவிட்டால் இரண்டாவது சுற்று வாக்களிப்பு நடைபெறும். இது எந்த "அரசியல் யாப்பு நெருக்கடியையும் உருவாக்கி" விடாது. இது சட்டப்படியானது. இலங்கை பு.ஜ கட்சிக்கு மட்டும், இது "அரசியல் யாப்புக்கு நெருக்கடி"யாகி விடுகின்றதாம்.  

 

சரி "மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வையும் வெகுஜன பலத்தையும் கட்டியெழுப்ப" மூன்றாவது வேட்பாளர் உதவுமா? அல்லது நீங்கள் தேர்தலை பகிஸ்கரிக்க கோரிய இந்த வழிதான் உதவுமா? இந்தத் தேர்தல்களை ஏன் பகிஸ்கரிக்க வேண்டும் என்ற அரசியல் விழிப்புணர்வு தான், மக்களை வர்க்க ரீதியாக தேர்தல் முறைக்கு வெளியில் அணி திரட்டும். மூன்றாவது வேட்பளார் இன்மையால் பகிஸ்கரிப்பு என்பதும், "அரசியல் யாப்பு நெருக்கடியை உருவாக்கி அதில் மாற்றம் கொண்டுவர நிர்ப்பந்தித்திருக்க முடியும்" என்று கூறி அதை பகிஸ்கரிப்பது என்பது, மக்களை இந்த "ஜனநாயகம்" மீது நம்பிக்கை வைக்க கோரி அரசியல் முட்டாளாக்குவது.

 

இந்த தேர்தல் வழிக்குள் வாக்குச்சீட்டைப் பயன்படுத்தி புகுந்து விளையாடுவதன் மூலம் "அரசியல் யாப்பு நெருக்கடியை"யும், "அதில் மாற்றம் கொண்டுவர நிர்ப்பந்திக்கவும் முடியும்" என்று கூறி பகிஸ்கரிக்க கோரும் "மா.லெ.மா சிந்தனையை" தான் இலங்கை புதியஜனநாயக கட்சி இன்று முன்தள்ளுகின்றது. இது சாத்தியமற்றதால் தான், நாங்கள் பகிஸ்கரிக்க வேண்டும்  என்கின்றனர். 

 

மூன்றாவது வேட்பாளரை தேர்தலில் நிறுத்த வைக்கும் நியாயவாதம் அபத்தமானது. "கடந்த 31 வருட நிறைவேற்று அதிகாரம் கொண்;ட ஜனாதிபதி ஆட்சி முறையின் கீழ் இந்த நாடும் மக்களும் பல்வேறு நிலைகளில் பொருளாதார நெருக்கடிகளையும், அரசியல் அடக்குமுறைகளையும், அநீதிகளையும், அழிவுகளையும் துன்ப துயரங்களாக அனுபவித்து வந்துள்ளனர். மூன்று தசாப்தகால பேரினவாத முதலாளித்துவ யுத்தத்திற்கும் தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கும் காரணமாக அமைந்தவற்றில் இவ் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையானது முதலிடம் வகித்து வந்துள்ளது" என்று கூறி, நிறைவேற்று அதிகாரம் கொண்;ட ஜனாதிபதி முறைதான் சமூக நெருக்கடிகளை உருவாக்கும் வண்ணம் "முதலிடம் வகித்தது" என்ற "மா.லெ.மா. சிந்தனையை" முன்வைக்கின்றனர். இப்படி சொல்லித்தான் தேர்தலில் மூன்றாவது அணி நின்றால், இதை நீக்க  முடியும் என்று கூறமுனைகின்றனர். இப்படி இலங்கை மக்கள் சமூகத்தில் நிலவும் பிரச்சனைக்கான காரணத்தை "நிறைவேற்று அதிகாரம் கொண்;ட ஜனாதிபதி ஆட்சி முறை" தான் என்கின்றனர். இதற்கு வெளியில் மா.லெ.மா. சிந்தனை என்ன கூறுகின்றது, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல் தெரிவுதான் ஜனாதிபதி ஆட்சிமுறை.

 

ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாடுகளில், தேர்தல் முதல் வாக்குச் சீட்டு வரை மக்களை ஏமாற்ற வழங்கும் நச்சு இனிப்புகள்தான். தேர்தல், வர்க்குச் சீட்டு பற்றியும், இதன் மூலம் மாற்றங்கள் வரும், சுபீட்சம் வரும் என்ற சமூகத்தின் மயக்கத்தை தெளிவுபடுத்தாத "மா.லெ.மா சிந்தனை" தான் புதிய ஜனநாயகக் கட்சியின் அரசியலாக உள்ளது.

 

சாதாரண முதலாளித்துவக் கட்சிகள் மக்களை ஏமாற்றி வாக்களிக்க வைப்பது போல், பு.ஜ கட்சியும் காரணங்களை கூறி மூன்றாவது அணியை உருவாக்கி வாக்களிப்பைக் கோரியது.  அதே காரணத்தை சொல்லி பகிஸ்கரிப்பையும் முன்வைக்கின்றது. இந்த அரசியல் வர்க்கப் போராட்டத்திற்கு எதிரானது. இதை அவர்கள் கைவிட்டு வர்க்கப் போராட்டத்தை முன் எடுப்பார்களா!? அல்லது மா.லெ.மா சிந்தனையின் பெயரால் அதற்கு எதிராக தொடர்ந்து  செயல்படுவார்களா!? என்பதே, இன்று ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் அவதானத்துக்குரிய ஒன்றாக மாறியுள்ளது.

 

பி.இரயாகரன்
19.12.2009
     


பி.இரயாகரன் - சமர்