இரவி,“தீப்பொறி“க் குழு-தமிழீழக் கட்சிக்காரர்கள் குறித்தான எனது மதிப்பீடுகள்மீது, உங்கள் எதிர்வினையை இவ்மடலூடாக வைத்திருப்பதைக் கவனதில் கொண்டேன்.
தங்கள் எதிர்வினையின்-நியாயத்தன்மைமீதான பெருமதிப்பில் சில கருத்துக்களை முன்வைப்பது அவசியம்-அதை, நீங்களும் எதிர்பார்க்கிறீர்கள்-நன்று!
„இளங்கோவின் பாத்திரத்தைத் தவிர்த்து „தீப்பொறியின்“சிதைவை அல்லது தடம் மாறலை(…) ஆய்வாக்க முடியும் என நான் கருதவில்லை“என்றுரைக்கிறீர்கள்.
இது, எந்த வகையிலும் இளங்கோவெனும் தனிநபர் சார்ந்த பிரச்சனையாகக் குறுக்கும்போது மட்டுமே சாத்தியம்.மற்றும்படி, பொதுவான-பரந்துபட்ட மக்களது அரசியல் பாத்திரத்தின்மீது அதிர்வுகளைச் செய்யப் புறப்பட்ட பொதுவியக்கச் சூழலில்-அரசியல் என்பது பொதுப்படையான தாக்கத்தைச் செய்வது.அது,ஒரு சில நபர்களுக்கிடையிலானதாகக் குறுக்குவது சாத்தியமில்லை.ஏனெனில்,இதன் இயக்கப்பாடு இன்றுவரை வியூகமாக விரிவதால் அஃது, ஆய்வுக்குரியது-மூலம் அறியப்பட வேண்டியது.இது, நிற்க.
அடுத்து,காந்தன்மீதான எனது மதிப்பீடுசார்ந்து நீங்கள் வைத்தகருத்தானது ஆதாரத்தைக் கோரிக் கொள்வதற்கான தேவையைச் சொல்கிறது.அதாவது,நீங்கள் சுட்டிய „காந்தனை ஒரு உளவாளி எனவும் திட்டமிட்டு முற்போக்குச் சக்திகளை சிதைக்க வந்தவர் எனவும் நீஙகள்குறிப்பிடுவது எவ்வாறென முன்வையுங்கள்“ என்பது.
இரவி,இங்கே உங்களது கேள்வியின்படி இது ஏதோ சேறடிப்பாக அல்லது பழிசுமத்துவதாக எடுப்பதைவிட,காந்தன் எனும் ரகுமான் ஜான் சார்ந்த கடந்தகால அரசியல்மீதான-அவர் கொண்டியக்கிய கட்சி-பத்திரிகை மீதான பார்வையாகவும்,கூடவே,காந்தனை தனிப்பட்ட ரீதியாகவன்றி பொது அரசியல் சக்தியாக இனங்கண்டு முன்வைக்கப்படும் விமர்சனமாக முதலில் எடுத்துக்கொள்ளுங்கள்.
ரகுமான்ஜான்-இளங்கோ முரண்பாடென்பது, நிஷமான அரசியல் பொதுச் சூழலுக்குத் தெரியாத அல்லது மறைக்கப்பட்ட நிலையில்(மகா உத்தமன் குடியினால் செத்தது என்பதுபோல(…)) அது எனக்கு அவசியமற்றது.இளங்கோ பின்னாளிலும் அதற்கு முன்னாலிலும்(அதாவது தமிழீழக்கட்சிக்கு முன்னும்)புலிக்கு உளவு பார்த்தென்பதையும், இணைத்துக் கொள்ளவும்.
இங்கே,ரகுமான் ஜான்-இளங்கோ உறவு எதுவரை நீடித்ததென்பது எனக்கு முன்னால் உள்ள அரசியலுக்கு அவசியம் இல்லை.அது,பரந்துபட்ட மக்களது நலனை நோக்கிச் செல்லும்போது திறந்த விவாதம்-சுயவிமர்சனம் மற்றும் உடைவுகள்-சந்தர்ப்பவாதம் குறித்தான அனைத்துப் பரிமாணங்களையும் வெளிப்படையாகப் பேசப்படச் சந்தர்பங்கள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.இது, எப்போது-எப்படிச் செய்யப்பட்டதென்ற உங்கள் சாட்சியத்தின் பின்னே,காந்தன் குறித்தான எனது மதிப்பீட்டிற்கான அனைத்து ஆதாரங்களையும் நான் பகிரங்கமாக முன் வைக்கின்றேன்.கூடவே,நான் வேண்டிக்கொள்வது,இரகுமான் ஜான் மீதான விமர்சனத்தை-மதிப்பீட்டை-“பழி சுமத்தலை-சேறடிப்பை“நான் பகிரங்கமாகச் சொல்லியுள்ளதால், அதை மறுத்துப் பேச வேண்டியவர் ரகுமான் ஜான் என்பது என்வரை நியாயமாகப்படுகிறது.
இங்கே,இளங்கோவின் பாத்திரத்தையும்,ஜானினது பாத்திரத்தையும் ஒன்றாக்குவதாகச் சொல்வதன்மூலம் ஜானின்மீது எந்தத் தவறுமில்லை என்பது உங்கள் தரப்பு வாதம்.இது பொதுத்தளத்தில் உண்மையானதென நிரூபிப்பது அவரது கடமையாகிறது.ஏனெனில்,இப்போது மக்களுக்காக „மே 18 இயக்கத்தோடு“போராட அறைகூவல் இடுபவர் அவர்.இஃது,அவரது கடமை.
கடந்த காலத்தின் அவரது அரசியல் நடாத்தையின்மீதான நமது சந்தேகம்-மதிப்பீடு தவறென்பதைக் குறித்துப் பேசுவதற்கு அவருக்குத்தான் அவசியமானது.எனக்கு, அவருக்காகத் தீக் குளிக்க அவசியம் இல்லை.இதன் ஆழ்ந்த வேண்டுதல்,கடந்த காலத்தில் அவர் ஆரம்பித்த அரசியலில் சூழ்ச்சிகள்-சூதுகள் இருப்பதென்பது உண்மையானதென பொது அபிப்பிராயம் மட்டுமல்ல பலரிடம் அதற்கான காரணகாரிய பொருத்தப்பாடுகள் இருக்கிறது.அது,ஜானுக்கும் நன்றாகத் தெரியும்.இதன் பொருத்தப்பாட்டின் நிமித்தம் ஆதாரம் என்பதும்-அவரை „எங்ஙனம் புலியினது உளவாளியெனக் கூறமுடியும்?“ என்பதும் அவசியமற்றது.
இத்தகைய கேள்விகளது அடிப்படை, இனம் காணுதல் எனும் ஊக்கத்தின் விளைபொருளென நான் அறிவேன்.அது,அனைவருக்குமான பொதுத் தளத்தில் பகிரங்கமாகப் பேசப்படும் ஒரு சூழலில் மேலும் சாத்தியப்படலாம்-இப்போதைக்குச் சாத்தியமில்லை!
மேலும்,“புலிகளின் போராட்டத்தில் தமிழ்பேசும் பரந்துபட்ட மக்களது நலன்(இனவொடுக்குமுறைக்கு எதிரான யுத்தம்)பின்னிப் பிணைந்திருந்தது“ என்பதும்,“புலிகள் தேசியச் சக்திகள்,புலிகளது போராளிகள் தமிழ்த் தேசத்தின் தேசிய இராணுவம்“ என்பதும் வௌ;வேறானது.தமிழீழக்கட்சி இந்த இரண்டாவது வகைப்படுத்தலுக்குள்தாம் புலிக்கான இருத்தலுக்கும்,தமிழ் மக்கள்மீதான புலியின் பாசிச ஆதிக்கத்துமான உந்துதல்-சித்தாந்த முண்டுகொடுத்தல் வருகிறது.தமிழீழக் குடியரசுக்கான போராட்டம் என்பதே அதன் அடிப்படைச் சித்தாந்தமாகத் தமிழீழக் கட்சி புலியினது இருப்பை வகைப்படுத்தியது.இது, புரட்சிக்கு எதிரான முதலாவது அடிப்படைச் சுத்துமாத்து!
„தமிழீழம்“என்பது மிகப் பெரி பொய்.அது,எப்பவும் தமிழ் மேட்டுக் குடியினது அரசியல் பேரமாக இருந்தது.அதற்கும்,சிங்கள இனவாத அரசால் ஒடுக்குமுறைக்குள்ளான பரந்துபட்ட தமிழ் மக்களுக்கும் என்ன தொடர்பு? இந்தத்“தமிழீழக் குடியரசு“க்கான தெரிவினில் பரந்துபட்ட மக்கள் பட்ட இராணுவக் கொடுமையானது இரட்டிப்பானது. இது இப்போதைக்கு இப்படியிருக்கட்டும்.
„மொட்டையடிப்பது-கட்டுடைப்பது“எனும் வாதம் எப்போதும் ஆய்வுமுறையாகப் பரிணாமிக்க முடியாது.ஆனால்,பாருங்கள் இரவி,இதுவரையான தேசியவாதக் கோசத்தினூடாகவும்,தமிழீழத்துக்கான போராட்டத்துக்கூடாகவும் மொட்டையடிக்கப்பட்ட இனத்தின் சமூக சீவியத்தின் உடைவையே இங்ஙனம் கூற முற்படுகிறேன்.மீளவும்,இந்தத்“தமிழீழக் குடியரசுக்கான“திசை வழிகள்-தெரிவுகள் அவர்களை-நம்மை மொட்டையடிக்காதிருப்பதற்காகத் தமிழீழச் சிஞ்சிகையின் கடந்தகால அரசியல்-சித்தாந்த மேலாண்மையைக் கட்டுடைப்பது குறித்தே நான் பேசினேன்.இதற்கும்,ஆய்வுக்கும் எங்ஙனம் பாலம் அமைத்தல் உங்களுக்குச் சாத்தியமாகிறது?
இவைகள் தவிர்ந்து சிலவற்றைக் குறிப்புணர்த்துக்கிறேன்.
1): உங்கள் கடிதத்தினூடாகக் கேட்டபடி“நீங்கள் பெற்ற தகவல்கள் யாரிடமிருந்து பெற்றுக்கொண்டவை என்பதையும் நீங்கள் வெளிப்படுத்த முடிந்தால்,அவர்களுடன் கலந்துரையாடுவது“ எனக் கேட்டிருந்தீர்கள்.
2): ஒரே தடவையில் தேசங்களில் பத்திரிகை வெளியீடு-நிதி வலு எனப் பிரமாண்டமாகக் காட்டுவதன்றும் குறித்திருந்தீர்கள்.
இவைகளுக்கான எனது பதில்:
தகவல் யாரிடமிருந்து பெறுதல் என்பதைவிட, இத்தகைய சூழலுக்குள் „தீப்பொறி“க் குழுவை கொணர்ந்த கடந்தகால நடாத்தை என்னவென்பதைக் குறித்துத் தேடும்போது நிச்சியம் இதற்கான விடை கிடைக்குமென்பது இப்போதைக்கான எனது பதில்.இதுள் உங்களுக்குப் போதாமை நிலவினால்,மே 18 இயக்கத்தினர் தமது கடந்தகாலத்து நடாத்தைகள் குறித்துப் பகிரங்கமாகப் பேசுவது நிச்சியம் முழுமையைச் சென்றடையுமென நினைக்கின்றேன்.
அடுத்து,நிதி சம்பந்தமாக…
இது,பெரும்பாலும் திடீர் கட்சி-திடீர் வெளியீட்டுடனும்,அவர்களது கடந்தகால அரசியலின் வரவுகளில் நிலவிய அன்றைய சூழல்கள்சார்ந்த தரவுகளிலிருந்தும் கூறக் கூடியதாக இருந்தது.
இப்போதைக்கு,நீங்கள் அவர்கள் சார்பாகக் கேட்டுக்கொண்ட கேள்விகளுக்கு-எதிர்வினைக்குப் பெரும்பாலும் எனது விளக்கங்கள் தந்துள்ளேனெனக் கருதுகிறேன்.இதுள் மேலும் உரையாடுவதற்கு அவசியம் இருக்கும் நிலையையொட்டிப் பேசுவதென்றால், ஜானினது வெளிப்படையான சுயவிமர்சனத்துக்கூடாக அவரது கடந்தகால அரசியல் நடாத்தை நியாயமுறுமானால் அதையொட்டி என்தரப்பு விளக்கங்கள் விரியும்.
என்றும்,
நட்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்
16.12.2009
3.29 மணி.