மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் பெயரில், சமகாலத்தில் இரண்டு முக்கிய செய்திகள் வெளிவந்துள்ளது.

1. திடீர் மார்க்சியம் பேசியபடி ஆயுதப் போராட்டத்தை நடத்தப்போவதாக ஒரு குழு அறிவித்துள்ளது.

2. மார்க்சியம் பேசியபடி ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது அணி உருவாக்கம் பற்றி பேசுகின்றது.

சமகாலத்தில் எழுந்துள்ள இவ்விரண்டு அரசியல் போக்குகளும், மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனைக்கு முரணானது. பேரினவாத சுரண்டும் பாசிச அரசுக்கும், சுரண்டும் வர்க்கங்;களுக்கும் எதிராக மக்களை அரசியல் மயப்படுத்தும் அரசியல் கடமையை, இவ்விரண்டு வழிகளும் நிராகரிக்கின்றது. குறுக்கு வழியில் மக்களை சிந்திக்கவும், செயற்படவும் கோரும்  அரசியலாகும்.

பாசிச அரசின் யுத்த குற்றங்களாகட்டும், இன்றைய இனவாத வடிவங்களாகட்டும், அதன் தேர்தல் நாடகங்களாகட்டும், மக்களை அதன்பால் அரசியல்மயப்படுத்துவதே மைய அரசியல் வடிவமாகும். மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையிலான ஒரு அமைப்பு, எப்போதும் வர்க்க அடிப்படையில் மக்களை விழிப்புற வைத்து மக்களை அணிதிரட்டிப் போராடுவதே புரட்சிகர அரசியல் வழிமுறையாகும்.

இதைவிடுத்து திடீர் ஆயுதப் போராட்டம் பற்றி கூறுவதும், மூன்றாவது அணியை உருவாக்கி அதற்கு வாக்கு போடக் கோருவதும், மக்களுக்கான மாற்று அரசியல் பாதையல்ல. மக்களை மந்தைகளாக, சுரண்டும் வர்க்க நலனுக்கு பலியிடும் அரசியலாகும்.

இவை அனைத்தும், குறிப்பாக தமிழ் மக்களையும், இலங்கை மக்களையும் புரட்சிகர அரசியல் வழிக்கு மாறாக செல்லக் கோருவதாகும்.

.

இலங்கை மக்கள் இன்று எதிர்கொள்ளும் நெருக்கடிகளை, அவர்கள் தான் அதை எதிர்கொண்டு போராட வேண்டும். இதை இவ்விரண்டு அரசியல் வழியும் நிராகரிக்கின்றது. சுரண்டும் வர்க்கங்களினதும், ஏகாதிபத்திய மற்றும் தென் ஆசிய நாடுகளின் விரிவாக்க முரண்பாடுகளினதும் தேவைக்கு உட்பட்ட ஒன்றாக, இவ்விரண்டு அரசியல் வழியும் உள்ளது. மீண்டும் மீண்டும் தொடர்ந்தும் மக்களை தவறாகவே, இவை வழிநடத்த முனைகின்றது.

திடீர் ஆயுதப்போராட்டம்

மக்கள் அரசியல் மயமாகி தமக்குத்தாமே அவர்கள் போராடும் போது, அவர்கள் தம் மேலான ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் போதுதான், ஆயுதப்போராட்டம் ஒரு அரசியல்  போராட்ட வடிவமாக மாறுகின்றது. இதை நிராகரித்த ஆயுதப் போராட்டம், மக்களுக்கு எதிரானது. மக்களை அவர்களின் சொந்த பிரச்சனைக்கூடாக அணி திரட்டுவதுதான், உடனடியான அரசியல் கடமையாகும்.

இதற்கு மாறாக இலங்கையில் ஜே.வி.பி முதல் புலிகள் வரை செயல்பட்டன. சிலர் மக்களுக்காக புரட்சி செய்ய, ஆயுதப் போராட்டத்தை மக்கள் முன் திணித்தனர். மக்கள் மேல் பயங்கரவாதத்தைக் தூண்டி, மக்களை தம் பின் அணிதிரட்ட முனைந்தனர். இந்த அரசியல் வழியின் தோல்வி, இயல்பாக மக்களை ஒடுக்குவதாக மாறியது. தங்களை தாங்கள் அரசியல் ரீதியாக அழித்தனர்.

இதே கூத்தைத்தான், மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் பெயரில் தலைகால் இன்றி முண்டமாக திடீரென அறிவிக்கின்றனர். யுத்தத்தையும், ஆயுதப் போராட்டத்தையும் மறுத்து நிற்கும் மக்கள் முன், யுத்தத்தையும் ஆயுதத்தையும் திணிக்கும் இது தனிநபர் பயங்கரவாதமாகும்;. இந்த திடீர் ஆயுதப் போராட்டம் பற்றிய அறிவித்தல், மக்கள் விரோதத் தன்மை கொண்டது. இதன் அரசியல் பின்னணி என்பது, நிச்சயமாக ஏகாதிபத்திய நாடுகளின் முரண்பாடுகளை உள்ளடக்கமாக கொண்ட, அரசியல் சதியை அடிப்படையாகக் கொண்டது. இலங்கை ஆளும் கும்பலுக்குள் ஏற்பட்டு வரும், உள் முரண்பாட்டின் தேவைக்கும் அதன் அரசியல் எல்லைக்கும் உட்பட்டது.

மூன்றாவது அணி கோரும் "மார்க்சியம்"

மார்க்சிய லெனிய மாவோ சிந்தனை பெயரில், மூன்றாவது அணியைக் கோருவது அதை அரசியல் ரீதியாக கொச்சைப்படுத்துவதுதான். புதிய ஜனநாயக கட்சி, இலங்கை தேர்தல்கள் தொடர்பாக கடந்தகாலம் முதல் இன்றைய ஜனாதிபதி தேர்தல் வரை, அது கையாளும் அரசியல், மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் பாற்பட்டதல்ல.

இலங்கையில் நிலவும் பாசிசத்தையும், பூர்சுவா ஜனநாயகத்தையும் மறுக்கும் சமூக பொருளாதார அரசியல் அமைப்பையும், ஜனநாயக வடிவம் கொண்டதாக காட்டும் அரசியல் பிரச்சாரத்தை இது முன்னிறுத்துகின்றது. இப்படி பாட்டாளி வர்க்க அரசியல் அடிப்படையை மறுதலிக்கின்றது. இதன் மூலம் பாசிசம் மற்றும் பூர்சுவா ஜனநாயக வடிவத்தைப் பற்றிய, அரசியல் குழப்பத்தை விழிப்புறும் மக்கள் முன் ஏற்படுத்திவிடுகின்றது. பாசிட்டுகள் தாம் ஆள நடத்தும் தேர்தலை, ஜனநாயகமாக கருதி வழிபடும் அரசியல் நிலைக்கு இது வழிகாட்டி விடுகின்றது.

புதிய ஜனநாயக கட்சி, 1960 களில் சண் தலைமையிலான கட்சியில் இருந்து உருவானது. 1970 களில் அதன் புரட்சிகர நடைமுறையை படிப்படியாக கைவிட்டு, வர்க்கப் போராட்டத்தை நடைமுறையில் முன்னெடுப்பதை மறுத்து வந்தது. இதன் விளைவுதான், சமூக அழிவாக மாறியது.

இலங்கையில் ஜே.வி.பி முதல் புலிகள் வரையான உருவாக்கம் என்பது, வர்க்க அரசியல் நடைமுறையைக் கொண்ட ஒரு கட்சி எதார்த்ததில் மக்களை அணிதிரட்டடி தலைமையைத் தாங்க தவறியதன் அரசியல் விளைவாகும். சமூகத்தின் முரண்பாடுகளை வர்க்க ரீதியாக அணிதிரட்டி போராடாத நிலையில், இளைஞர் சமூகம் படுபிற்போக்கான ஜே.வி.பி முதல் புலிகள் வரை சென்று போராட முடிந்தது. இது எம் வரலாறு. அங்கு வர்க்க அரசியல் என்பது மறுதலிக்கப்பட்டு வந்துள்ளது. புதிய ஜனநாயக கட்சி இதற்கு விதிவிலக்கல்ல.

கடந்த காலத்தில் புதிய ஜனநாயக கட்சியும், கடந்த வரலாற்றுடன் நீடித்து இருந்தது. அது வர்க்கக் கட்சியாக இருக்காமல், சும்மா உட்கார்ந்து இருந்தது. 1980கள், 1985 கள், 1990 கள் மாறுபட்ட சூழல் எங்கும், வர்க்க கட்சிக்குரிய அரசியல் பாத்திரத்தை முன்னெடுக்கவில்லை. அதன் கொள்கைகள் மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையிலான வர்க்க கட்சிக்குரியதாக இருந்தபோதும், அதன் நடைமுறைகள் இதற்கு முரணாக இருந்தது. இன்று தேர்தலில் மூன்றாவது அணி பற்றி பேசுகின்றது. ஒரு வர்க்கக் கட்சியாக தொடர்ந்து இருக்க முடியவில்லை என்பது எதார்த்தமாகி நிற்கின்றது. மார்க்சியத்தை கொள்கையாக கொண்டு எதிர்ப்புரட்சியை முன்தள்ளும் ஜே.வி.பி யைப் போல் அல்லாது, புதிய ஜனநாயக கட்சியை வேறுபடுத்தி பார்க்கவேண்டியுள்ளது. ஆனால் ஒரு புரட்சிகர வர்க்க கட்சியாக மாறுவதற்கான அரசியல் நடைமுறைக்கு எதிராகவே, அது தொடர்ந்து இயங்குகின்றது.

பி.இரயாகரன்
10.12.2009