Language Selection

செங்கொடியின் சிறகுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மாட்சிமை தாங்கிய ஆட்சிமை வழங்கும்(!) பெருமை மிகு பாராளுமன்றத்தில் வெளியிடும் முன்பே நாளிதழ்களில் வெளியாகி விட்டது லிபரான் அறிக்கை. அடுக்குமா இது, இந்தியாவுக்கே தலைகுனிவல்லவா எகிரிக்குதிக்கின்றன ஓட்டுக்கட்சிகள்.

 

காட் ஒப்பந்தம் முதல் இப்போதைய அணு ஒப்பந்தம் வரை நாடாளுமன்றத்தில் வைக்காமலேயே நடப்புக்கு வந்தபோதெல்லாம் அடங்கியிருந்த கோபம் லிபரான் அறிக்கையில் பொங்கி வழிகிறது. 17 ஆண்டுகள் 48 முறை கால நீட்டிப்பு சற்றேறக்குறைய 8 கோடி ரூபாய் செலவு இவ்வள‌வையும் செரித்துவிட்டு லிபரான் அறிக்கை தந்திருக்கும் சாறு வாஜ்பாய், அத்வானி, பால் தாக்கரே, மற்றும் காங்கிரஸ் அமைச்சர் வகேலா உட்பட அறுபதிற்கும் மேற்பட்டோர் மசூதி இடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகள் என அறிவித்திருப்ப‌து. 92 டிசம்பர் 6க்கு மறுவாரத்தில் தேனீர்கடைகளில் பேசப்பட்ட உண்மையை கண்டுபிடிக்க 17 ஆண்டுகள்; கோபம் வரவேண்டிய இந்த இடத்தில் யாருக்கும் கோபம் வரவில்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாள் நாளிதழ்களில் வந்துவிட்டதால் இரு அவைகளும் அமளியில் அதிர்ந்தது. ஏன்? ஏனென்றால் மெய்யாகவே இது கோபமில்லை, கோபமாக வெளிப்படுத்தப்படும் மகிழ்ச்சி.

லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வேதுறையில் ஊழல் நடந்திருக்கிறது, அதை விசாரிக்கவேண்டும் என்று தற்போதைய அமைச்சர் மம்தா பானர்ஜி நேரடியாக சிபிஐ க்கு கடிதம் எழுதியதால் காங்கிரசுக்கு  என்ன செய்வது என்று தர்மசங்கடம். தங்கவிலை எகிறுவது போல் நாளுக்கு நாள் மது கோடாவின் சொத்துக்கணக்கு எகிறுவதால் ஏதாவது செய்து திசைதிருப்பியாக வேண்டிய நிர்ப்பந்தம். அலைவரிசை ஊழலில் திமுகவை எதிர்த்து நடவடிக்கை எடுக்கவும் முடியாமல் எதிர்ப்பையும் சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் சூழல்,  இவைகளை மந்திரம் போட்டாற்போல் மறக்கடிக்க வைக்கும் ஒன்றாக கிடைத்தது அறிக்கை கசியவிடப்பட்டது. எனவே ஆளும் கும்பலுக்கு மகிழ்ச்சி.

ஆர் எஸ் எஸ் மோகன் பகவத்தை நேரடியாக எதிர்த்து அறிக்கை விட்ட ராஜ்நாத், தேர்தல்களில் அடிக்கு மேல் அடிவாங்கிய கலக்கத்திலும் பிரதமர் கனவு தகர்ந்து போன அதிர்ச்சியிலும் அத்வானி. இனியும் ராமன் பயன்படமாட்டான் என்று பரணில் வீசியாயிற்று வேறு யாரைச்சொல்லி  நடத்திச்செல்வது என்ற குழப்பத்தில் கட்சி. ஒரு வழியாக அடுத்த தலைவரை தேர்வு செய்து விட்டாலும் மல்லுக்கு நிற்கும் சுஷ்மாவையும் மனோகர் ஜோஷியையும் என்ன செய்வது என்ற கவலை. எல்லாவற்றுக்கும் மேலாக லிபரானை காரணம் காட்டி காங்கிரஸ் பழி வாங்கினால் அதை எப்படி கட்சிக்கான ஓட்டாக மாற்றுவது என்ற யோசனை. இவ்வளவிலிருந்தும் ஆசுவாசப்பட அருமணியாய் வாய்த்தது அறிக்கை கசியவிடப்பட்டது. எனவே காவிக்கும்பலுக்கு மகிழ்ச்சி

ஆண்டு தோறும் டிசம்பர் 6 நினைவு நாளைப்போல் கொண்டாட மக்களை பழக்கி விட்ட போதிலும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு இத்தனை ஆண்டுகளாக சட்டரீதியாகவே இழுத்தடிக்கப்பட்டபோதிலும், பாபர் பள்ளியை சொல்லியே அரசியல் விழிப்புணர்வு என்ற பெயரில் மதரீதியாக  ஓரளவு ஒன்று திரட்டிவிட்ட போதிலும்; இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த ஆதரவை இப்படியே தக்கவைக்க முடியும் எனும் வேளையில் மிகச்சரியாய் வந்த லிபரான் அறிக்கையும், எதிர்பார்த்தது போலவே இந்து பாசிசங்களை குற்றம் சாட்டி வந்ததும் மதவாத கும்பல்களுக்கு மகிழ்ச்சி

லிபரான் அறிக்கையுடனேயே தாக்கல் செய்யப்பட்ட மேல் நடவடிக்கை திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கை குறித்த எந்த உருப்படியான திட்டமும் இல்லை. ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு உறுதி என்று நாளிதழ்கள் வாயிலாக சவடால் அடிப்பதில் எந்தக்குறைவும் இல்லை. ஆக திட்டமிட்ட நாடகம் வெற்றிகரமாக அரங்கேற்றப்பட்டுவிட்டது. இதில் பார்வையாளர்களான மக்கள் தான் வழக்கம் போல் பாதிப்புக்கு உள்ளாகி நிற்கிறார்கள்.

நடப்பு ஆண்டில் மட்டும் பல‌முறை சர்க்கரை விலை  உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் கரும்பு கொள்முதல் விலையோ உயர்த்தப்படுவதில்லை. கரும்பு கொள்முதல் விலை சட்டத்தை எதிர்த்து கரும்பு விவசாயிகள் ஒன்றுகூடி தலைந‌கரில்  போராட்டம் ஒன்றை நடத்திக்காட்டினார்கள். லிபரான் அறிக்கை சுனாமியில் கரும்பு கட்டுமரங்கள் தூக்கிவீசப்பட்டன. ஒட்டுக்கட்சிகளின் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களின் ஒருங்கிணைவையும் தளராத போராட்டத்தையுமே கோரி நிற்கின்றன. அதை நோக்கி நகர்வது தான் மக்களின் முன்னுள்ள ஒரே தெரிவாக இருக்கிறது. இதையும் தன் லிபரான் அறிக்கை கசிவு உணர்த்தி நிற்கிறது.,

http://senkodi.wordpress.com/2009/12/05/liparhan-commission/