12042021
Last updateச, 09 அக் 2021 9am

இடைவேளையின் பின்னர்… : காமினி வியாங்கொட

லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட தினத்திலிருந்து இந்த பத்தி எழுதப்படவில்லை. அன்றிலிருந்து இன்று வரை சுமார் பத்து மாதங்கள் கடந்து சென்று விட்டன. அதற்கு முன்னரான இரு வருட காலப்பகுதியில் இலங்கையில் ஊடகவியலாளர்கள் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன ஒரு முறை பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அவரின் கருத்தின்படி மேலும் இருபத்தியேழு பேரளவில் சித்திரவதைகளுக்காளாகியிருந்தனர். ஐவர் கடத்திச் செல்லப்பட்டிருந்தனர். இவை போத்தல ஜயந்தவின் கை கால்கள் உடைக்கப்படுவதற்கு முன்னரான நிலைமையாகும். 

கடந்த பெப்ரவரி மாதம் நான் நாட்டிலிருந்து வெளியேற முடிவு செய்த பொழுது விக்டர் ஐவன் என்னைத் தொடர்பு கொண்டு ஏதேனும் பிரச்சினையா என்று வினவினார். எனது உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல்கள் இருப்பின் அது பற்றி உரியவர்களிடம் கதைத்து எனக்கு பாதுகாப்பினை அளிக்கும் நோக்கத்துடனேயே அவர் அவ்வாறு என்னிடம் வினவினார். எனக்கு அவ்வாறு விசேட அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்றும், தற்பொழுது பதவியில் இருக்கும் அரசாங்கத்தின் கருத்துக்களையும் நடவடிக்கைகளையும் ஏற்காதவர்களை ‘தேசத்துரோகிகள்’ என முத்திரை குத்துகின்றனர். அதனை நடமுறைப்படுத்தி தீவிரப்படுத்தும் போக்கும் உச்சநிலையில் செயலாற்றப்படுகின்றது. இந்நிலையில் எவரது பாதுகாப்பு குறித்தோ பாதுகாப்பின்மை குறித்தோ முன்னரேயே அனுமானிக்கும் ஆற்றல் எம்மில் எவருக்கும் இல்லை என்று நான் ஐவனிடம் தெரிவித்தேன். 


லசந்த படுகொலை செய்யப்பட்ட தினமன்று நான் ஒரு விடயத்தினை தொடர்ச்சியாக வலியுறுத்தினேன். அந்த மரணம் அர்த்தமற்றது என்பதே என் கருத்து. அதன் பொருள் கொலை அர்த்தமற்றது என்பது அல்ல, மரணம் அர்த்தமற்றது என்பதே. படுகொலை அர்த்தம் கொண்டது என்றும், மரணம் அர்த்தமற்றது என்றும் கூறுவது சற்று சிந்தனைக் குழப்பத்தினை ஏற்படுத்தக் கூடும். 

அரசியற் படுகொலையினையை அர்த்தம் உள்ளது என்று ஏற்றுக்கொள்ளும் வரை அதாவது கொலையாளியின் அரசியல் கருத்துநிலை வெற்றி பெறும்வரை, அதற்காக எடுக்கப்படும் பலி, அதன் உரிமையாளர் தொடர்பில் அர்த்தம் உள்ளதாக மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதே அதன் பொருளாகும். மற்றுமொரு முறையில் குறிப்பிட்டால் அரசியலற்ற சமூகத்தினுள் மரணம் அர்த்தம் இழக்கும் வரையிலேயே படுகொலை ஒன்று அர்த்தம் உள்ளதாகவிருக்கும். 

திருடுதல், கொள்ளையடித்தல், ஆவேச உணர்வு ஆகிய நோக்கங்களுக்காக செய்யப்படும் படுகொலையிலிருந்து அரசியற் படுகொலை முற்றிலும் வேறுபடுகின்றது. அரசியற் படுகொலையில் கருத்து நிலை அல்லது கோணம் ஒன்று படுகொலையின் இலக்காக இருப்பதே இந்த வேறுபாடாகும். படுகொலை செய்யப்பட்டவரின் ஊடாக ஒர் கருத்துநிலை சமூகமயப்படுத்தப்படுவதனை தடுத்தலே கொலையாளியின் நோக்கமாகும். நிமலராஜன், சிவராம், லசந்த போன்றவர்களை படுகொலை செய்தவர்கள் படிப்படியாக அந்த இலக்கினை வெற்றி கொண்டனர். படுகொலை என்பது ஓர் அரசியற் கலாசாரமாக மாறும்போது சமூகம் கொலையாளியின் கருத்துக்களுக்கு மாற்றான கருத்துக்களைக் கொண்டிருக்கும் உரிமையை சுய விருப்புடன் கைவிட்டு விடுகின்றது. உண்மையில் கொலையாளியின் இறுதி இலக்கும் இதுவே.

நீதிமன்றமும், சட்டங்களும் கொலையாளியின் சேவைக்காக பணிவு கொள்ளும்போதே கொலை என்பது அரசியற் கலாசாரமாகின்றது. குறிப்பாக கடந்த மூன்றாண்டுகளிலும் பொதுவாக கடந்து சென்ற முப்பதாண்டு காலப்பகுதியிலும் இந்நாட்டில் எந்தவொரு அரசியற் கொலையாளியும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவில்லை. அவர்களுக்கு தண்டனைகளும் வழங்கப்படவில்லை என்பது இதற்கு சிறந்த சாட்சியாகும். இன்று பொலிஸ் என்பது பொதுவான குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் பணிகளையே மேற்கொள்கின்றது. மாறாக நாட்டின் நல்லாட்சிக்கு தேவையான சட்டங்களை அமுலாக்கும் அதிகாரத்தினை இழந்த ஓர் அமைப்பாக அது இருப்பதனை அனைவரும் அறிவர். புலிகளுக்கு சார்பானது என்று கூறப்படும் சில வாக்கியங்களை எழுதிய குற்றத்திற்காக இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனையை வழங்கிய நீதிமன்றம், இருபது ஆண்டுகள் புலிகளின் ஊடகப்பொறுப்பாளராக இருந்த தயா மாஸ்டரை விடுவித்துள்ளது. (அவரையும் ஜோர்ஜ் மாஸ்டரையும் விடுவித்தது ஓர் குற்றமல்ல. கைது செய்யப்பட்டுள்ள பிற புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கும் முன்னர் சோமவங்ச அமரசிங்கவுக்கு செய்தது போன்று நாட்டிற்குள் சாதாரண பொதுமக்கள் போன்று புனர்வாழ்வுக்கான உரிமையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.) இந்த நிறுவனங்கள் அனைத்தும் தனிப்பட்ட ரீதியில் கட்டமைப்பு அடிப்படையில் செயற்திறனை இழந்து விடவில்லை. பொலிசை அரசியலில் இருந்து விடுவித்தால் அன்று பண்டாரநாயக்க கொலையாளிகள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டதனைப் போன்று லசந்தவின் கொலையாளிகளையும் வெளிப்படுத்துவது பொலிசாருக்கு கடினமான பணியாக இராது. எனினும் நாட்டின் அனைத்து நிறுவனங்களும் மொத்தமாக அரசியல்மயமாகியுள்ள நிலையில் பொலிஸ் மட்டுமன்றி அனைத்து நிறுவனங்களும் மிக மோசமாக செயலிழந்து போயுள்ளன. 

பிரபாகரன் கொல்லப்பட்டபோது தென்னிலங்கையில் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் இருந்தனர். தேசப்பற்றினை வெளிப்படுத்திய அந்த சந்தர்ப்பம், ஒரு புறம் இருக்க, சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், மறுபுறம், பிரபாகரனினதும் புலிகள் இயக்கத்தினதும் சர்வாதிகாரத்திற்கு எதிராகவும் தொடர்ச்சியாக தெற்கில் கட்டியெழுப்பப்பட்ட பிரபல எண்ணங்களை தவிடுபொடியாக்கியது. முன்னர் கூறிய அரசியற் கலாசாரத்தினை தென்னிலங்கை பொறுத்துக்கொண்டதற்கு காரணம் முன்னர் கூறிய விடயத்தில் காணப்பட்ட இரண்டாவது அம்சமாகும். இவ்வாறான ஓர் சந்தர்ப்பத்தினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பெரும்பான்மை மக்களுக்கு, அந்த எதிர்பார்ப்பு நிறைவேறி அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறிய அச் சந்தர்ப்பமானது மக்களை பல தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் செய்வதற்கு தூண்டியது. இதில் பட்டினியாக இருப்பது மக்களின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆகக் குறைந்த தியாகமாகும். ஆகக் கூடிய தியாகச்செயலாக தனி நபர் சுதந்திரத்தினை தற்காலிகமாகவேனும் கைவிட தயாராகவிருந்ததாகும். இதன்படி சிங்களச் சிந்தனையின் முன் அதாவது தென்னிலங்கை சமூகத்தில் லசந்த விக்கிரமதுங்க என்பவர் ‘பயங்கரவாதத்தினை அழிக்கும் தேசப்பற்றுப் போரில்’ இடையூறாகவிருந்த ‘துரோகி’ என்ற கருத்தினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். 

கொலையாளியும் கொலையும் அர்த்தம் உள்ளதாகி படுகொலைக்குள்ளான நபரும் அவரது மரணமும் அர்த்தம் அற்றதாக மாறுவது இவ்வாறான சூழ்நிலையிலாகும். அவ்வாறான நிலையில் சமூகத்திற்கு வீரனாக உயிர்த் தியாகம் செய்வோர் அன்றி மனிதப் பலியே தேவைப்படுகின்றது. படுகொலை செய்யப்பட்டது முடிவுறுத்தப்பட வேண்டிய ஓர் கருத்துநிலையாகும் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாகும். லசந்தவின் (லசந்த விக்கிரமதுங்க)  கருத்து நிலைப்பாடுகள் நாட்டினதும், இனத்தினதும் எதிர்கால நலன்களுக்கு பொருத்தமற்றது என்று நம்பப்பட்டது. அந்த கருத்து நிலைப்பாட்டின் இயல்பு எவ்வாறாயினும், அவ்வாறான கருத்தினைக் கொண்டிருப்பதற்கான உரிமை உண்டு என்ற ஜனநாயகக் கருத்தானது கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் கூடும் நுறு இருநுறு பேர்களால் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டு வரையறுக்கப்பட்டது. இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் இரண்டு மூன்றின் பின்பு லசந்த விக்கிரமதுங்க முற்று முழுதாக எம்மிடமிருந்து விடைபெற்று விடுகின்றார். அதன் பின் வீதி விபத்தில் கொல்லப்படும் ஒருவர் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு திடீர் மரணம் அடைபவரிடமிருந்து சிறியளவிலேயே அவரின் மரணம் வேறுபடுகின்றது. 

இது மரணமடைந்தவரின் அந்தஸ்து நிலைகள் சமூகத்தில் உயர்த்திக் காட்டப்படும் காலமல்ல. இது கொலையாளி கற்பித்த பாடத்தினை உணர்ந்து நிசப்தம் அடையும் காலமாகும். நவீன சமூகத்தில் இவ்வாறான நிலைமைகள் தற்காலிகமானது தான் என்பது உண்மையாகும். எனினும் இந்த தற்காலிக நிலைமை எவ்வளவு தூரத்திற்கு ‘தற்காலிகமானது’ என்பது இந்த சமூகத்தின் அரசியல் நிலமைகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றது. எனினும் இவ்விடயத்தில் நாம் எவ்வளவு தூரம் அக்கறைக்காட்டுகின்றோம் என்பது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றாகும். 

வெற்றிக்கு உரிமை கோரல்

முதலில் பெறப்பட்ட வெற்றி எது என்பது பற்றிய தெளிவினைப் பெற வேண்டும். சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே நாம் சந்தித்துவரும் தேசிய இனப்பிரச்சினை உள்ளது. குறிப்பாக அது தமிழ் இனம் பற்றிய பிரச்சினையாகும். 1980களில் ஏற்பட்ட நீண்ட யுத்தம் காரணமாக இந்தப் பிரச்சினை சர்வதேச வெளிப்புற கவனத்தினை ஈர்த்தது. இதன் பின்னர் தேசியப் பிரச்சினையை வெற்றி கொள்தலையும், யுத்தத்தினை வெற்றி கொள்தலையும் ஒன்றாக நோக்குவதற்கு பெரும்பாலானவர்கள் முனைந்தனர். காய்ச்சலை அஸ்பிரின் மாத்திரையை அருந்துவதன் ஊடாக குணப்படுத்திக் கொள்ளலாம். எனினும் காய்ச்சல் என்பது ஒரு நோயல்ல. அது ஒரு நோய்க்கான அறிகுறியாகும். இதனை புரிந்து கொண்டவுடன் அஸ்பிரின் மாத்திரையை விழுங்குவதனை விட மேலதிக சிகிச்சை தேவை என்று நோயாளியினால் உணரப்படுகின்றது. தேசியப் பிரச்சினையை வெற்றி கொள்வதும், யுத்தத்தினை வெற்றி கொள்வதும் மேற்கூறப்பட்ட உதாரணத்துடன் பொருந்துகின்றது. 

புலிகளை யுத்த ரீதியில் தோற்கடிக்க முடியாது என்று இந்த பத்தியின் எழுத்தாளர் கருதியிருந்தார். அது தவறான கண்ணோட்டம் என்பது தற்பொழுது நிரூபிக்கப்பட்டு விட்டது. எனினும் புலிகளைத் தோற்கடிப்பதானது தேசியப் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஓர் கட்டம் அல்ல என்பது அதன் ஊடாக நிராகரிக்கப்படவில்லை. அது தலைவலிக்கான அஸ்பிரின் மாத்திரையாக இருக்கலாம். இதனை மற்றுமொரு முறையில் குறிப்பிட்டால் நாம் இன்னும் தேசியப்பிரச்சினையை வெற்றி கொள்வது பற்றி சிந்திக்கத் தலைப்படவில்லை. அது எவ்வாறாயினும், யுத்தத்தினை வெற்றி கொண்ட உரிமையை சம்பந்தப்பட்ட நபர்களிடம் சுமத்துவதற்கு அது தடையாக இராது. சீசருக்கு உரியதனை சீசருக்கு வழங்குவதற்கு எவரும் தயங்கக் கூடாது.

ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்பில் இன்று ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் குறித்து கருத்துத் தெரிவித்திருந்த மேர்வின் சில்வா ‘துட்டகைமுனு இல்லாமல் இருப்பின் எல்லாளனை தோற்கடித்திருக்க முடியுமா?’ என்று அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தார். பதவியினை இராஜினாமா செய்த ஜெனரல் சரத் பொன்சேகா முதலில் களனி விகாரைக்கு மத அனுட்டானங்களை நிறைவேற்ற சென்றிருந்தார். அங்கு சூழ்ந்திருந்த மக்கள் அவருக்கு எதிராக ‘ஊ’ சத்தம் எழுப்பினர். தென்னிலங்கை மக்களின் பொது எதிரியாகக் கருதப்பட்ட பிரபாகரன் இன்று இல்லாத நிலையில் ‘தம்மவரே’ ஓர் ‘எதிரியாக’ மாறிப்போன கட்டத்திற்குள் நாடு பிரவேசித்திருக்கின்றது என்பது அந்த சம்பவத்தின் ஊடாக வெளிப்படுகின்றது. 

இலங்கை மாறுபட்ட சமூகத்திற்கு சிறந்த ஓர் உதாரணமாகும். மாறுபட்ட சமூகம் என்பது வியப்பான தத்துவமாகும். தொலைக்காட்சியில் ‘சூப்பர் ஸ்டார்ஸ்’ நிகழ்ச்சியினை கண்டுகளிக்கும் போதே வன்னியிலும் கிளிநொச்சியிலும் மக்கள் அழிக்கப்படும் காட்சியையும் காண எங்களால் முடிகின்றது. தான் எஸ்.எம்.எஸ் அனுப்பிய தெரிவு செய்யப்பட்டவர் இறுதிச்சுற்றில் தோல்வியடைந்து வெளியேறும்போதும் மரண வீட்டில் இறுதிச்சடங்கு நடைபெறும் போதும் வீறிட்டு அழுபவர்கள், ஆயிரக்கணக்கான சடலங்களைக் கண்டு எதிரியை வீழ்த்திய மகிழ்ச்சியினை பட்டாசுகள் கொளுத்தி மகிழ்ந்து கொண்டாடி பாற்சோறு உட்கொண்டு மகிழ்கின்றனர்.

சரத் பொன்சேகா ஜனாதிபதியின் எதிரியாக மாறுவதற்கு ஒரே ஒரு காரணம் உண்டு. அதாவது ஜனாதிபதியின் பதவிக்கு சவாலாக மாறக் கூடியவர் என்ற ஒரே தகுதி மட்டும் அவருக்கு இருப்பதாகும். அதாவது பதவிக்கும் அதிகாரத்திற்கும் உரிமைக் கோரும் பழைய வரலாற்றுக் கதையே இது. 

அந்த வரலாற்றுக் கதை எவ்வாறெனில்,
தந்தையினால் மகனும், மகனால் தந்தையும், கணவனால் மனைவியும், மனைவியினால் கணவனும், சகோதர சகோதரிகளினால் ஒவ்வொருவரும் படுகொலை செய்யப்பட்டதனைப் போன்று அதிகார வெறியினால் அன்னை தனது மகனுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளுதலும் போன்ற (ரோம் நகரம் எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப் போன்று) சகிக்க முடியாத, மனிதாபிமானமற்ற பல சம்பவங்களை அதிகார வெறி உருவாக்கித் தருகின்றது. எல்லாளனும், துட்டகைமுனுவும் தங்கள் இனத்திற்காகப் போரிட்டவர்கள் அல்லர். அவர்கள் அதிகாரத்திற்காகப் போட்டியிட்டனர். எனினும் இங்கு துட்டகைமுனுவுக்கு தன் சிங்கள இனத்தினையும், பௌத்த மதத்தினையும் தமிழ் தன்மைக்கு எதிரான ஓர் பலம் வாய்;ந்த ஆயுதமாகப் பாவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டது என்று கருதாமல் இருக்க முடியாது. மென்மேலும் சரத் பொன்சேகா ஜனாதிபதிக்கு எதிரான பலமான சவால் நிலையை நாட்டிற்குள் ஏற்படுத்தினாராயின் மகாநாம தேரர் மகாவம்சத்தில் எல்லாளனுக்கு வழங்கிய இடத்தினை தற்கால வரலாற்றில் சரத் பொன்சேகா பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதனை கூறிக்கொள்ள முடியும். அப்பொழுது அவருக்கு சூட்டப்படும் நாமம் முன்பு போன்று ‘பறத் தமிழன்’ அல்லது ‘ஆக்கிரமிப்பாளன்’ அல்ல. ‘மேற்கத்தேய ஏகாதிபத்தியத்தின் சதிகாரன்’ என்ற நாமமே சூட்டப்படும். 

ஒரு புறம் மேர்வின் சில்வா மேற்கூறப்பட்டவாறு வரலாற்று உதாரணங்களை கூறினாலும், இராணுவ ஆட்சியின் மோசமான விளைவுகள் குறித்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாட்டு மக்களுக்கு தற்கால உதாரணமாக எடுத்துக்காட்டும் பாகிஸ்தான் நிலைமைகள் நெருக்கடியின் உட்பரிமாணத்தினையே எடுத்தியம்புகின்றது. இவர்கள் இராணுவ ஆட்சியினால் நமது நாட்டிற்கு ஏற்படப் போகும் துர்விளைவுகளை எடுத்துக்காட்டுகின்றனர். 1960களில் இருந்து பாகிஸ்தான் எதிர்கொண்டு வரும் ஸ்திரமற்றதும், அடக்குமுறைப்படுத்தப்பட்டதுமான சமூக சூழ்நிலை, இவர்கள் எடுத்தியம்புவதைப் போன்று இராணுவ ஆட்சியின் மோசமான விளைவுகளாகும். இராணுவ ஆட்சி அவ்வளவு மோசமானதாயின் படு மோசமான இராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மர் நாட்டுடன் வலுவான உறவுகளைப் பேணுவது ஏன்? புலிகள் சம்ஹாரத்தில் பாகிஸ்தான் எங்கள் நெருங்கிய தோழனானது எப்படி? எமது ஜனாதிபதி அண்மையில் மியான்மருக்கு விஜயம் மேற்கொண்டார். அந்நாட்டு ஜனாதிபதி கடந்த வாரமளவில் இங்கு வந்தார். மேலே குறிப்பிடப்பட்ட அமைச்சர்கள் என்ன கூறினாலும் இலங்கையின் இராஜதந்திர அணுகுமுறைகள் மற்றும் செயற்பாடுகளின் ஊடாக நோக்கும்போது இராணுவ ஆட்சி என்பது இவர்கள் கூறுவது போன்று மோசமாக இருக்காது என்றே தோன்றுகின்றது. ஏனெனில், இராணுவ வழமைகளைக் கொண்ட பாகிஸ்தான், ஜனநாயக வழமைகளைக் கொண்ட இந்தியாவை விட படுமோசமானது என்பதனை தற்போதிருக்கும் அரச தலைவர்கள் தமது நடைமுறைச் செயற்பாடுகளினால் இதுவரை எமக்கு நிரூபித்துக் காட்டவில்லை.

மேர்வின் சில்வாவின் பேச்சு ஒருவகையில் உண்மையானதே. முதலில், துட்டகைமுனுவின் தந்தையான காவந்திஸ்ஸ மன்னன், எல்லாளனுடன் யுத்தம் செய்வதனை எதிர்த்தார். துட்டகைமுனுவின் சகோதரனான திஸ்ஸவும் எல்லாளனுடன் யுத்தம் செய்ய தயங்கினார். ( எல்லாளனுடன் யுத்தம் செய்ய மாட்டேன் என்று சத்தியம் வாங்கி விட்டு வழங்கிய சோற்றுப் பிடியினை திஸ்ஸ வாங்கி உட்கொண்ட போதிலும் துட்டகைமுனு அந்த சோற்றுப் பிடியினை வாங்கிக் கொள்ள மறுத்தான்). அதன்படி யுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டினை துட்டகைமுனு கொண்டிருந்தான். துட்டகைமுனுவினையும், மகிந்த ராஜபக்சவினையும் ஒன்றிணைத்து மேர்வின் சில்வா கூற முற்படும் வாதம் சர்வ நியாயமானதே. 

எனினும் இது மட்டும் தான் எல்லாளனைத் தோற்கடித்ததா?
முதலில், அன்றைய அரச தலைவர் (துட்டகைமுனு) தனியே அரசன் மட்டுமல்ல. அவர் களத்தில் இறங்கி போரிட்ட தலைவராவர். அன்றைய அரசர்களுக்கும், இன்றைய ‘அரசர்களுக்கும்’ இடையிலான பிரதான வேறுபாடு இதுவே. (அரசத் தலைவர் போர்க்களத்திற்கு செல்லும் வழக்கம் நெப்போலியனின் பின்னர் வலுவிழந்து விட்டது).

மேற்கூறப்பட்ட இரு காரணங்களின் அடிப்படையில், அதாவது, யுத்தம் செய்ய அரசியல் ரீதியாக தீர்மானம் செய்தல் மற்றும் போர்க்களத்தில் யுத்தத்தினை நடாத்துவது ஆகிய இரண்டு காரணிகளிலும் அன்று வெற்றியின் பிரதான பங்காளியாக துட்டகைமுனு இருந்தார். ஆனால் இன்றைய அரசத் தலைவருக்கு கீர்த்தியில் அரைவாசியே உரியதாகின்றது. மிகுதி அரைவாசியில் பெரும்பங்கு சரத் பொன்சேகா உள்ளிட்ட இராணுவத்தினருக்கே உரியதாகின்றது. விடயம் அவ்வாறாயினும், துட்டகைமுனுவின் இறந்தகால வெற்றி இந்த இரண்டு விடயங்களின் அடிப்படையில் மட்டும் முக்கியத்துவம் பெறவில்லை என்பதனை நாம் மறந்து விடக் கூடாது. 

இரு தரப்பிலும் பெருமளவானவர்கள் இறப்பதனைக் கண்ணுற்ற எல்லாளன், குறைந்த இழப்புகளின் மத்தியில் வெற்றி தோல்வியினை தீர்மானிக்கும் நோக்குடன், தனித்துப் போரிட துட்டகைமுனுவுக்கு அழைப்பு விடுத்தான். துட்டகைமுனு இளம் பருவத்தினன். அப்பொழுது எல்லாளன் எழுபதினைக் கடந்திருந்தான். இந்த வயோதிபருக்கும் இளைஞனுக்கும் இடையிலான யுத்தமே துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் இடையிலான வரலாற்றுப் போராகப் பதிவாகியது. 

துட்டகைமுனுவுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் ஓரளவுக்கேனும் சமத்தன்மை இருப்பின், அது சோற்றுப் பிடியினை விழுங்குவதை நிராகரித்த விடயமாகவே அமையும். அதுவன்றி, வெற்றி எவ்வாறாயினும், யுத்தமே நிகழாமற் போயிருக்கும். 

சரத் காலப்பகுதி மிக அண்மையிலாம்

எதிர்க்கட்சி கூட்டமைப்பு இப்பத்தி எழுதப்படும் வரையில் ஒரு புதிய தலைவரைத் தெரிவு செய்திருக்கவில்லை. தற்பொழுது இருக்கும் தலைவர்களில் எவருமே அதாவது ரணில், மங்கள, சோமவங்ச மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகிய எவருமே உண்மையாக தேசியத் தலைவர் தகுதி பெற வாய்ப்பற்றவர்கள் என்பது அவர்களுக்கும் தெரியும். தமது கட்சிகளுக்கு புறத்தே வெளித்தரப்பு தலைவர் ஒருவரை தெரிவு செய்யும் நிலைப்பாட்டில் அவர்கள் இருப்பதற்கும் இதுவே காரணம். அவர்கள் இப்பொழுது சரத் என்ற காலப்பகுதியினை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். எனினும் இன்று நாம் எதிர்நோக்கும் அனைத்துவித தோஷங்களும் இந்த சரத் காலத்தில் பனி போல விலகிவிடும் என்று அவர்கள் அனைவரும் உண்மையில் கருதுகின்றனர் என்பதனை என்னால் நம்ப முடியவில்லை. அந்தளவுக்கு அவர்களின் அண்மைக்கால நடத்தைகள் சரத் காலத்திற்கு முற்று முழுதான முரண்பாட்டினைக் கொண்டதாகும். அந்த சரத் காலப்பகுதி எவ்வாறு இருக்கும் என்று சிந்தனாபூர்வமாக சிந்தித்துப் பார்க்கக் கூடிய அரசியல் பக்குவ நிலை, மற்றவர்களிடம் எவ்வாறாயினும், ரணில் மற்றும் மங்கள போன்ற தாராண்மைவாத அரசியல்வாதிகளுக்கும் இல்லை என்பதனை நாம் எப்படி நம்ப முடியும்? எனினும் இந்த நபர்களின் செயற்பாடுகளில் இன்று நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் போக்கு அன்றி, பதவியில் இருக்கும் அரசாங்கத்தினை வீழ்த்துவது என்ற எளிய காரணமே இருப்பதனால், ஜனநாயகத்திற்கு தீங்கு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்ற மனோபாவத்தினையே காணக்கிடைக்கின்றது. அதிகப்பட்சம், அவ்வாறான சந்தர்ப்பத்தில் ‘எனது அரசியல் வாழ்க்கையில் நான் செய்த பெரிய முட்டாள்தனம் சரத் பொன்சேகாவை பதவியில் அமர்த்தியது’ என்று பகிரங்கமாகக் கூறி விட்டு கைகளைக் கழுவிக் கொள்ள எதிர்காலத்தில் அவர்களால் முடியும். மகிந்த ராஜபக்சவை பதவியில் அமர்த்தியதற்காக மங்கள சமரவீரவும், சந்திரிகாவும் முன்பு இவ்வாறு கூறியதனை நாம் நினைவிற்கொள்ள வேண்டும். பெரிய முட்டாள்தனத்தினை வாழ்நாளில் ஒரு முறை தான் செய்ய முடியும் என்ற வரையறை இயற்கையில் இல்லாமை உண்மையில் எமது கேடாகும். 

யுத்தத்தினால் நாம் இழந்தவை ஏராளம். அவற்றில் குடிமக்கள் அரசியலில் அதுவரை இருந்து வந்த ‘லௌகீக’ இயல்பு அசுத்தப்படுத்தப்பட்டமை முதன்மை பெறுகின்றது. எமது அரசியலில் இருந்த அந்த லௌகீக இயல்பு இந்த யுத்தத்தில் இரு பகுதியிலும் கழுவிச் செல்லப்பட்டு விட்டது. ஒரு புறம் முற்றும் துறந்தவர்கள் அரசியலுக்குள் பிரவேசித்து அரசியலையும், துறவறத்தையும் அசுத்தப்படுத்தினர். மறுபுறம் சிறிது சிறிதாகவேனும் இராணுவத் தரப்பினர் குடிமக்கள் அரசியலின் பங்காளிகளாகும் வழமை ஒன்று தோற்றம் பெற்றது. 

இராணுவ முக்கியஸ்தர்களை சேவைக்காலத்தின் பின்னர் வெளிநாட்டுத் தூதுவர்களாக நியமிக்கும் பழக்கத்தினை முதலில் ஆரம்பித்து வைத்தது யார் என்று உறுதியாகத் தெரியாவிட்டாலும், ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தில் பல சந்தர்ப்பங்களில் அவ்வாறு நடைபெற்றன என்பது நினைவுக்கு வருகின்றது. இந்த அரசாங்கம் அதற்கும் அப்பால் சென்றது. முன்னைய அரசாங்கங்கள் செய்யாத அளவுக்கு யுத்தத்தினை குடிமக்கள் சமூகம் அனைத்தினையும் இராணுவ மயப்படுத்தியமை இந்த அரசாங்கத்தினால் எமக்கு உரித்தாக்கப்பட்ட விடயமாகவுள்ளது. அதுமட்டுமன்றி வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் வேறு வெளிநாட்டுத் தூதரக சேவைகளுக்கு நியமிக்கப்பட்டதனால் மட்டும் திருப்தியடையாது, இராணுவத் தலைவர்களை நாட்டினுள் குடிமக்கள் நிர்வாகத்தின் பங்காளர்களாக்கிக் கொண்டனர். ஒரு சில பகுதிகளில் மாவட்ட அதிகாரிகளாக இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டதுடன், மற்ற பகுதிகளில் ஆளுநர்களாகவும், இன்னும் சில இடங்களில் அமைச்சுகளின் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டனர். இந்த அரச மரியாதையினால் மமதையுற்ற ஒரு சில இராணுவ அதிகாரிகள் திரைப்படங்களை எப்படி தயாரிப்பது என்று திரைப்படக் கலைஞர்களுக்கு சொல்லிக்கொடுக்கவும் முன்வந்தனர். நாடகக் கலைஞர்கள் தமது நாடகக் காட்சிகளின் அங்குரார்ப்பண நிகழ்வுக்கு இராணுவ அதிகாரிகளை அழைப்பது கலைக்கு செய்யும் மரியாதை என்று கருதினர். இவை அனைத்தும் மக்களின் மனங்களில் இராணுவ மயத்தினை விதைக்கும் செயலாக அமைந்தன. இன்றைய நிலையில் நாட்டு குடிமக்கள் துறவிகளின் உடைக்கு மதிப்பளிப்பதனை விட இராணுவச் சீருடைக்கு மதிப்பளிப்பதனையே செய்கின்றனர். பௌத்த உரைகளிலும் இராணுவச் சிந்தனைகளே மேலோங்கி நிற்கின்றன. 

நாம் இப்பொழுது எந்த திசையை நோக்கிப் பயணிக்கின்றோம்? யுத்தம் முடிவடைந்து கடந்த வாரத்துடன் ஆறு மாதங்கள் கடந்து விட்டன. யுத்த வெற்றிக்காக கூச்சலிட்ட தேசப்பற்றுநிலை யுத்தம் முடிவடைந்தவுடன் அமைதியடைந்து விடாது. தேசப்பற்றின் தேவை இனிமேலும் தேவைப்படாத நிலையிலும் தேசப்பற்றினை மென்மேலும் உத்வேகப்படுத்திக் கொண்டேயிருக்க முடியும். இன்று நாட்டை ஆளும் அரசாங்கமும், நாட்டை ஆள எத்தனிக்கும் எதிர்க்கட்சிகளும் அதனையே மேற்கொண்டிருக்கின்றன. மிகவும் பரிசுத்தமான தேசப்பற்றாளரையும், இராணுவ வீரனையும் தேடும் போட்டியினை நோக்கியே இந்த இரு தரப்புகளும் நாட்டைத் தள்ளுகின்றன. மியான்மர் நாட்டு இராணுவத் தலைவருக்கு செங்கம்பள வரவேற்பு கொடுக்கும் அரசாங்கம், நாட்டில் எழுச்சிப் பெற்றுவரும் ஜெனரல் குறித்து அச்சமுற்றிருக்கின்றது. அதனால் ஏற்படப்போகும் பாதகங்களை எடுத்துக் கூறிக்கொண்டிருக்கின்றது. இதற்கிடையில் மியான்மரின் இராணுவத் தலைவரை வரவேற்றதற்கு கண்ணீர் வடிக்கும் மங்கள சமரவீர போன்ற தாராண்மைவாத அரசியல்வாதிகள் உள்நாட்டு அரசியலில் தமது தலைவராக சரத் பொன்சேகாவை ஏற்றுக்கொள்ள தயங்கப்போவதில்லை.

வெற்றியை விட கொள்கைப் பிடிப்பு தான் அவசியம் என்பதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எமது அரசியலில் எவரிடமும் இல்லை. 1970 தொடக்கம் கூடிக் குறைந்தளவிலும் 1977ன் பின் பதவி அரசியல் முக்கிய இடத்தினைப் பெற்றிருப்பது இதற்கு காரணமாகும். ஐந்தாண்டுகளுக்கு பாராளுமன்றத்தில் இருத்தல் தமது பல வம்சத்திற்கு பல ஆண்டுகளுக்கு சிறந்த செயற்திட்டம் என கருதிக்கொள்ள அரசியல்வாதிகள் பழக்கப்பட்டிருக்கின்றனர். இது முதலாளித்துவ அரசியலிலும் இடதுசாரி அரசியலிலும் பொதுவானதாகவிருக்கின்றது. வெற்றி தோல்வியின் அடிப்படையில் தமது குடும்ப நலன்களுக்காக நாட்டினை இவர்கள் அடகு வைக்கின்றனர். இதுவரை எந்தவொரு அரசியல்வாதிக்கும் இது மனச்சாட்சிக்கு எதிரானதாகத் தோன்றவே இல்லை. இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியில் இருக்க வேண்டும் என்ற மனச்சுமையே அவர்களுக்கு பெரிதாக இருக்கும். அதிலிருந்து மீள்வதற்கு சரத் பொன்சேகாவாக ஒருவர் கிடைத்தாலும் அவர்களுக்கு பரவாயில்லை.

எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் இந்த அரசாங்கம் வெற்றி பெற ‘எந்த முறையிலாவது’ பெறப்பட்ட யுத்தவெற்றியே பிரதான காரணமாக இருக்கும். மாறாக அபிவிருத்திப் பணிகளோ, ஜனநாயகப் பண்புகளோ அல்ல. இன்றைய அரசியலின் பொதுவான பண்பும் இதுவே. யுத்தத்தில் வெற்றிகொண்ட தரப்பு அதனை தனது நலன்களுக்கு பயன்படுத்திக்கொள்கின்றது என்பது எங்களுக்கு புரிகின்றது. எனினும் யுத்தத்தினை எதிர்த்தவர்கள், யுத்த பாதையை நிராகரித்தவர்கள், இந்த யுத்த வெற்றியை விற்றுப் பிழைக்க முன்வருவது எந்த ஒழுக்கத்தின்பால் என்பதனை புரிந்துகொள்ள இயலவில்லை. 

யுத்தத்தினை வழிநடத்தியவரை பொது வேட்பாளராக ஏற்கும் அளவுக்கு தாழ்;ந்த நிலையில் அவர்கள் இருப்பதனால் தான் நான், இன்று எதிர்;க்கட்சிகள் கூட்டணி யுத்த வெற்றியினை விற்றுப் பிழைக்க முனைவதாகக் கூறுகின்றேன். கடந்த காலத்தில் பின்பற்றிய ஜனநாயகம் மற்றும் மனித உரிமை அரசியலை அவர்கள் ஒரே இரவில் காலில் போட்டு நசுக்கியதனாலேயே நான் அப்படி கூறுகின்றேன். இந்த அர்த்தத்தில் பார்த்தால் சரத் பொன்சேகாவை தமது தலைவராக ஏற்றுக்கொள்வது ஜே.வி.பிக்கு பிரச்சினையாக இராது. தமது தலைவர்களைக் கொன்று குவித்த இராணுவம் குறித்து கடந்த இருபது வருட காலத்தில் அவர்களுக்கு பிரச்சினைகள் ஏதும் இருக்கவில்லை. (அண்மையில் நடைப்பெற்ற ரோகண விஜேவீர உட்பட்ட தலைவர்களை நினைவுகூரும் விழாவின் பிரதம விருந்தினராக சரத் பொன்சேகா போன்ற இராணுவத் தலைவர்களை அழைக்காமை குறித்தே நான் வியப்படைகின்றேன்). எனினும் ரணில் மற்றும் மங்கள போன்றவர்கள் கடந்த இருபது வருட காலத்தில் இராணுவத்தினை முக்கியப்படுத்தாமல் பேச்சுவார்த்தை, இணக்கப்பாடு ஆகிய கொள்கைளில் இருந்தனர். இன்று அவர்களும் ஜெனரலின் தோளில் ஏறி பயணம் செய்ய முயற்சிப்பதானது எமது அரசியல் எவ்வளவு மோசமான நரகமாகியிருக்கின்றது என்பதை வெளிப்படுத்துகின்றது.

 

நன்றி : ராவய

தமிழாக்கம் : புகலி

 http://www.puhali.com/index/view?aid=321