03222023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

எதிர்புரட்சி அரசியலோ தனக்கு தானே லாடம் அடித்து தன்னைத் தான் ஓட்ட முனைகின்றது. (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 1)

பிரபாகரனுக்கு முந்தைய காலத்தின் அனைத்து மனித விரோத சமூக விரோத தவறுகளுக்கும், புலிகளே பொறுப்பு என்கின்றனர். இப்படி கூறுகின்ற அரசியல் பொதுத்தளத்தில், எதிர்ப்புரட்சி அரசியல் ஒரு அரசியல் கூறாக மீளவும் அரங்கேறி வருகின்றது. அந்த வகையில் தான் இனியொருவும், அசோக்கும் கூட, தமக்குத்தாமே லாடமடித்து அரசியல் வித்தைகாட்ட முனைகின்றனர். இதற்கமைய பொய், புரட்டு பித்தாலாட்டம், சூழ்ச்சிகள் இன்றி, இந்த வண்டியை ஓட்ட முடியாத வண்ணம் கடந்தகால அரசியல்.

 

அசோக்கின் இந்த கட்டுரை மக்களுக்காக போராடுபவர்கள் முன், ஒரு பலமான எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. கடந்த காலத்தில் மக்களுக்காக போராடிய மனித வரலாற்றை, அதன் போர்க்குணாம்சத்தை கொச்சையாக்கி, அதை மிக இலகுவாக தமக்கு ஏற்ப சேறடிக்கின்றதும், அதைத் திரித்து புரட்டுகின்ற போக்கையும், அதன் எதிர்ப்புரட்சிகர அரசியல் குணாம்சத்தை எம்முன்னால் எடுத்துக் காட்டுகின்றது. கடந்தகால வரலாற்றையும், அதன் ஆவணங்களையும் தேடி முன்வைக்க வேண்டிய பாரிய பொறுப்பை, எமக்கு உறைக்கும் வண்ணம் முகத்திலறைந்து கூறியுள்ளது. செய்யவேண்டிய அரசியல் பணியில் (இதை நாம் முன்பே தொடங்கி இருந்தோம்) இதுவும் முதன்மையானது என்பதை, இந்தப் புரட்டான புரளிக் கட்டுரை எடுத்துக்காட்டியுள்ளது.

 

புலிகள் கடந்தகால வரலாறுகள் அனைத்தையும் சேர்த்துதான், தம்முடன் அழித்தனர். இதனால் வரலாற்றை எப்படி திரிக்கலாம் என்ற துணிச்சல் பலருக்கு. உதாரணமாக தீப்பொறி, புளாட்டின் மனித விரோத சமூக விரோதத்திற்கு எதிராக, அதன் உட்படுகொலையில் இருந்து தப்பியோடிய போது, அவர்களை கொல்ல யார் யார் அவர்களுக்கு எதிராக எப்படி எங்கே யாருடன் நின்றனர் என்பதை சொல்லும் நிலையில், இதன் அரசியல் வரலாற்றை தொடர்ச்சியுடன் கூட யாரும் இன்று இல்லை. இதைப் பயன்படுத்தி இன்று வரலாற்றை திரிக்கின்றனர். இதை நாம் இனியும் அனுமதிக்க முடியாது.

 

கடந்தகாலத்தின் மனித விரோத, சமூக விரோத அரசியல் போக்குகள் புலிகளுடன் மட்டும் இருந்ததல்ல. அப்படி கூறுவது காட்டுவது முற்றிலும் தவறானது. இதுவே திட்டமிட்ட ஒரு எதிர்ப்புரட்சி அரசியலாகும்.

 

கடந்தகாலத்தின் மனித விரோத, சமூக விரோத அரசியல் போக்குகள்

 

1.புலிகள் எல்லாவற்றையும் அழித்து அதன் ஏக பிரதிநிதிகளாக இருந்ததால், அவர்கள் மேல் மட்டும் குற்றம்சாட்டுவது புலியல்லாத அரசியல் போக்காக இருந்தது. இதை நாம் மறுத்து வந்திருக்கின்றோம்.

 

2.மற்றொரு பிரிவு அரசுடன் நிற்கின்ற கூலிக் குழுகளின் ஊடாக மனித விரோத, சமூக விரோத அரசியல் போக்குகளை இனம் காட்ட முனைகின்றனர். இதையும் நாம் மறுத்து வந்திருகின்றோம்.

 

3.இவ்விரண்டையும் கடந்து மனித விரோத, சமூக விரோத அரசியல் போக்குகள், மேலும் இரண்டு பிரதான தளத்தில் இயங்கியது.

 

1.புலிகள் மாற்று இயக்கங்களை அழிக்க (1983-1986) முன்னமே, அனைத்து பெரிய இயக்கங்களும் மனித விரோத, சமூக விரோத அரசியல் போக்குகளையே தங்கள் அரசியலாக நடைமுறையாக கொண்டிருந்தனர். (இது இந்த அமைப்புகளில் இருந்த அனைவரையும் குற்றம் சாட்டுவதல்ல. இனியொருவும், அசோக்கிசமும் தம்முடன் இருந்த ஆண் குற்றவாளிகளை பாதுகாத்து, தம்மை பாதுகாக்க நாம் பெண்களைக் குற்றம்சாட்டுவதாக கூறினர். ஆனால் நாங்கள் ஆண்களே இதற்கு பல வழிகளில் முயன்றதாகவே கூறினோம். எந்த பெண்ணையும் இங்கு குறிப்பிடவில்லை. இப்படியிருக்க இதை திரித்துக் காட்டி அரசியல் செய்வது போல், இங்கும் அனைவர் மேலும் குற்றம் சொல்வதாக சொல்ல முற்படுவார்கள். இந்த வங்குரோத்து அரசியலை நாம் பின்னால் விரிவாகப் பார்ப்போம்.)

 

2.புலிகள் அல்லா பிரதேசங்களில் (கொழும்பு முதல் புலம்பெயர் நாடுகள் வரை) உருவான மாற்று அரசியல் தளத்திலும், மனித விரோத, சமூக விரோத அரசியல் போக்குகள் இருந்தன. (இதுவும் அனைவரையும் குற்றம் சாட்டுவதல்ல)

 

இங்கு நாம் மட்டும் தான், இந்த நான்கு பிரதான அரசியல் தளத்தில் இயங்கிய எதிர்ப்புரட்சி கூறுகளை அரசியல் ரீதியாக வகைப்படுத்தி, அதற்கு எதிராக கருத்துரைத்து போராடுகின்றோம். இதுவே எமக்கும் மற்றவர்களுக்குமான, இணக்கம் காண முடியாத அரசியல் முரண்பாடு. இதைத்தான் அசோக் இரயாகரனின் "அரசியல் தற்கொலை" என்கின்றார். இதனால், இந்த அரசியல் தற்கொலை தான் எமக்கும் விளைவாக கிடைக்கும் என்றால், அன்று இதற்காக போராடி தம் உயிரை இழந்தவர்களுக்கு காணிக்கையாக்கி "அரசியல் தற்கொலை" செய்ய தயாராகவே இருக்கிறோம்.

 

கடந்த எம்மைச் சுற்றிய  வரலாறு, மனித அவலத்தை விளைவாக்கியது. இந்த அவலத்தை அரசியலாக இயக்கியவர்கள், தங்களை சுயவிமர்சனம் செய்யாது புதிய வே~ம் போட அனுமதிக்க முடியாது. அரசியலில் ஈடுபடுவர்களின் நேர்மையற்ற தனம், அதைச் சுற்றி கட்டமைக்கும் அயோக்கியத்தனம், மனித அவலத்தை கொச்சைப்படுத்தி தங்கள் புதிய எதிர்ப்புரட்சி அரசியலுக்கு ஏற்ப லாடமடிக்க முனைகின்றனர்.

 

மனித அவலத்தை உருவாக்கி மனித விரோத சமூக விரோத அரசியலுக்கு எதிரான போராட்டம் கடந்தகாலத்தில் நடத்துள்ளது. அது எதைக் கோரியது? என்ன அரசியலை முன்வைத்தது? அதை யார் இன்னும் முன்னிறுத்துகின்றனர்? அது சந்தித்த நெருக்கடிகள் பல. அது எதிர்கொண்ட அவலங்கள் எல்லையற்றது. தன் போராட்டத்தின் போது சந்தித்த மரணத்தை, எதிர்ப்புரட்சி கும்பல் அதை "தற்கொலை" என்றும், அர்த்தமற்ற மரணங்கள் என்றும் கேலிசெய்யலாம். இந்தப் போராட்ட வரலாற்றை, வரலாற்றில் இருட்டடிப்பு செய்யலாம். அதைத் திரித்து புரட்டி, இதற்கு எதிரான தங்கள் கடந்தகால எதிர்ப்புரட்சி அரசியல் வரலாற்றை இதுவாக இட்டுக்கட்டி காட்டலாம்.

 

ஆனால் எதிர்ப்புரட்சிக்கு எதிரான கடந்தகால அரசியலும், அதன் தியாகமும், புரட்சியாளர்களின் ஆயுதம். அவர்களையும், அவர்களின் அரசியலையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு புரட்சியாளனின் முதன்மையான இன்றைய அரசியல் கடமையாகிவிட்டது. இன்று எம்மை சுற்றி இயங்கும் எதிர்ப்புரட்சி வரலாற்றுப் போக்கினால், எம் பணிகள் இதனால் பலமடங்காகி வருகின்றது. இது "அரசியல் தற்கொலை" என்கின்றனர். ஆம் அதை நாம் செய்யத்தான் போகின்றோம். சவப்பெட்டியை தயார் செய்யவும்.

 

தொடரும்

 

பி.இரயாகரன்
29.11.2009