மகிந்த ராசபக்சா யோர்தானுக்குச் செல்லும் முன்னர், இராணுவம் ஒரு செய்தியை வெளியிட்டது. ''இன்னும் 48 மணித்தியாலங்களுக்குள் புலிகளை தாம் செயலிழக்க செய்துவிடுவோம்'' என்பதே அச்செய்தியாக இருந்தது. இவ்வாறு இராணுவம் அறிவித்த போது, அரசின் நீதித்துறை: புலிகளின் தலைவர் பிரபாகரன், மற்றும் பொட்டு அம்மான் உட்பட நால்வருக்கான பிடியாணையை மீண்டும் ஒரு முறை அறிவித்தது!
மே-14ம் திகதி ஜக்கிய நாடுகளின் மனித உரிமைக்கான அமர்வில், அவசர (புலிகளுக்கு உதவ) அமர்வொன்றை நடாத்த முற்பட்டபோதும் அது சாத்தியமாகவில்லை.
மே 15ம் திகதி அதிகாலை முல்லைத்தீவு கடற்பரப்பில், சர்வதேச கடல் எல்லையை நோக்கி விரைந்து கொண்டிருந்த அதிவேகப் படகொன்றை கடற்படையினர் இடைமறித்தனர். இதில் சூசையின் மனைவி முதல் மகன் மகள், மைத்துனி உட்பட பலர் கைது செய்யப்பட்டதாக இராணுவம் அறிவித்தது.
இதுவே அன்று முதலில் இணையத்தளத்தில் ஏறிய புலிகள் தரப்புப்பற்றிய செய்தியாக இருந்தது. இதன் பின் பான் கீ மூன் மகிந்தாவுடன் தொலைபேசியில் பேசி இருந்தார். விஜய் நம்பியார் இலங்கைக்கு வருவதாக செய்திகள் வெளியாகின. இலங்கை அரசு போர்க்குற்றப் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் என பிரிட்டன் எச்சரித்திருந்தது. வன்னி மக்களை விடுவிக்க அமெரிக்கக் கடற்படை தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்காவும் அறிவித்தது.
மறுபுறத்தே: யுத்த சூனியப்பகுதிக்குள் சர்வதேச பிரதிநிதிகள் செல்ல அரசு அனுமதியை மறுத்தது. தாம் உதவிகோராத விடத்து, அமெரிக்கா உள் நுழைய முடியாது என அரசு அமெரிக்காவுக்குப் பதிலளித்தது. சர்வதேச பிரச்சாரத்தை முறியடிக்க, டக்ளஸ் போன்றவர்களை உள்ளடக்கிய புதிய பிரச்சாரக் குழுவை அரசு உருவாக்கியது!
இது ஒரு புறமிருக்க, சர்வதேசம் மிக அழுத்தமாக புலிகள் மக்களை வெளியேற விடவேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தியது. புலிகள் ஒபாமாவின் வேண்டுகோளுக்கு இணங்க தாம் செயற்பட, மூன்றாவது தரப்பை உள்ளே வரும்படி கோரியது.
இந்த நிலையில் ரணில் நோர்வேக்கு வெளிநாட்டு விஜயத்தை மேற் கொண்டிருந்தார்...
வெளிநாட்டுப் புலம் பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரை.. பொலநறுவையில் மாபெரும் குளிரூட்டப்பட்ட பிரேத அறை ஒன்று இருப்பதாகவும், இராணுவ பிரதேசத்துக்கு வந்த மக்களை இராணுவம் கொன்று, அங்கே கொண்டுசென்று வைப்பதாகவும், ஒரு பாதிரியாரை ஆதாரப்படுத்தி புலிகளின் இணையத்தளம் ஒரு பரபரப்பான உணர்ச்சியூட்டும் செய்தியை : பழைய இந்திய பிரேத அறையில் இருந்த படத்தைச் செருகி, ஒரு கொந்தளிப்பு நிலையை இந்தியா தொடக்கம், புலம்பெயர் நாடுகளில் உருவாக்க முயன்றது.
இது இவ்வாறிருக்க, நோர்வேயின் 'ஆவ்தன் போஸ்த்தன்' பத்திரிகை இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலுடன் இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதாக: இராஜதந்திரச் செய்திகளை ஆதாரப்படுத்தி செய்தியை வெளியிட்டிருந்தது.
வெள்ளி பின்நேரம் பெரும்பகுதியான மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டை நோக்கி வந்துகொண்டிருந்தனர்.
மே 16ம் திகதி:- யோர்தான் ஜீ 11 மாநாட்டில், மகிந்தா உரையாற்றும் போது, தனது நாட்டில் பயங்கரவாத்தை முற்றாக ஒழித்திருப்பதாகவும், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட தமது நாட்டுக்குத் தான் திரும்ப இருப்பதாகவும் செய்தி வெளியிட்டதோடு தான் அவசரமாக நாடு திரும்ப இருப்பதாகவும் அறிவித்தார்.
மே-6ம் திகதி நடத்தப்பட்ட பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில், பாதுகாப்பு வலையத்தை மீளமைக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து முள்ளிவாய்க்கால் பிரதேசத்தைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கை தீவிரம் கொண்டது. இதையடுத்து மே-7ம் திகதி பிரான்சில் இருந்து 'வணங்கா மண்' கப்பல் புறப்பட்டது. மே-8ம் திகதி அதிகாலை புலிகளின் இறுதி மண்ணரனை இராணுவத்தினர் கைப்பற்றி, புலிகளையும் மக்களையும் கிட்டத்தட்ட 3 சதுர கில்லோ மீற்றருக்குள் முடக்கினர். (இம்மண்ணரனை தகர்த்தபோதும் முன்னர் போல பெரும் தொகையான மக்கள் வெளியேறி இருக்கவில்லை.)
இந்தநேரத்தில் புலிகள் வட்டுவாய்க்கால் பாலத்தை தகர்த்து மக்களினது வெளியேற்றத்தையும், இராணுவ உள்வரவையும் தாமதப்படுத்த முயன்றனர். ஆனால் மக்களோ அலைபோல பெருந்திரளாக 'நந்திக் கடலில்' இறங்க முண்டியடித்தனர். கட்டுக்கடங்காத மக்களின் உயிர்தப்பிப்பிழைக்கும் முயற்சியும், மக்களைத் தப்பிப் போக விடக்கூடாது என்ற புலிகளின் கடுமையான கட்டளையால், புலிகள் வெறிபிடித்துக் காணப்பட்டனர். முதலில் நந்திக்கடலில் இறங்கி, புலிகளின் சொற் கேட்காமல் வெளியேறிய மக்களை நந்திக்கடலில் இறங்கவிட்டு சிரித்துக் கொண்டே புலிகள் சுட்டுத்தள்ளத் தொடங்கினர். (மக்கள், நந்திக்கடலில் மிதக்கும் பல நூற்றுக் கணக்கான சடலங்களைக் கடந்தும், அச் சடலங்களுக்குள் மறைந்தும், மூழ்கியும் எழுந்தும் இந்த 'ஜீவ நாடகத்தில்' தப்பிப் பிழைக்க வேண்டியிருந்தது!)
இராணுவம் அவசர அவசரமாக வட்டுவாக்கால் பாலத்தைச் ஓரளவு சீரமைத்தபடி, மக்களைப் பிதுக்கும் நோக்குடன் மிக மிக மோசமான எறிகணை மற்றும் செல் வீச்சுக்கள் என்று மக்களின் உயிர் இழப்புகள் பற்றி துளியளவும் கவலைப்படாது கொடிய யுத்தத்தை ஏவியது. 'இருந்தாலும் மரணம், தப்ப முயன்றாலும் மரணம் எது வரினும் வரட்டுமென்று' வன்னி மக்கள்திரள் இராணுவத்தால் சீரமைக்கப்பட்ட பாலத்தின் வழியே பெருந்திரளாகக் கடக்கத் தொடங்கியதும் இராணுவம் தாம் ஏவிய யுத்தக் காயங்களுக்கு தாமே மருந்து பூசும் வேடிக்கையான மனிதாபிமானம், அரசியலாக உருட்டித் திரட்டப்பட்ட அசிங்கத்தையும் அவர்கள் அனுபவித்தனர். (மே-8ம் திகதி முதல் மே-14 திகதி வரை இலங்கையில் இதுவரை நடந்திருக்காத அகோரமான, கண்மூடித்தனமான யுத்தமும், பெருந்தொகையான மனிதப் படுகொலைகளும், இன அழிப்புக்களும், இரு தரப்பு யுத்த அழிவுகளும் நடந்து முடிந்தன)
மனிதப் பேரவலத்தை தடுத்து நிறுத்தும் சனாதிபதியின் அழைப்புக்கு புலிகள் செவி சாய்ப்பதாகவும், அனைத்துலக சமூகமும் இப்பொழுது நேர்மையாக நடந்து கொண்டு, இலக்கு வைக்கப்பட்டிருக்கும் பொது மக்களைப் பாதுகாக்குமாறும், தாம் தமது ஆயுதத்தை மவுனிக்கச் செய்வதாகவும் கே.பி சர்வதேசத்துக்கு அறிக்கையை வெளியிட்டார். (இந்தநேரத்தில் இந்தியத் தேர்தல்களின், தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியிருந்தது...)
அவசரமாக நாடு திரும்பும் மகிந்தாவின் வருகைக்கு முன்னர் புலிகளை அழிப்பதற்கான இறுதிநேரம் நெருங்கி விட்டதாக அரச இராணுவம் அறிவித்தது. இவ்வறிவித்தலைத் தொடர்ந்து கொழும்பில் கொடிகள் ஏற்றப்பட்டன. பட்டாசுகளும் பல இடங்களில் வெடிக்கத் தொடங்கின.
மோதல் பிரதேசங்களுக்கு தொண்டு நிறுவனக் குழுக்களை அனுப்ப அரசு அனுமதிக்க வேண்டுமென பாப்பரசர் 16வது பெனடிக்றும் வலியுறுத்தினார். வன்னியில் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்களை மரணத்தின் பிடியிலிருந்து பாதுகாக்குமாறு உலகத்தைத் தாம் கேட்டுக் கொண்ட போதிலும் அனைத்துலக சமூகத்தின் மவுனம்தான் இலங்கை இராணுவம் தமது இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க ஊக்குவித்தது கசப்பான முடிவுக்கே கொண்டு சென்றுள்ளது என புலிகள் அமைப்பின் அனைத்துலகப் பொறுப்பாளர் செ.பத்மநாதன் (கே.பி) அவசர அறிக்கை ஒன்றின் ஊடாகத் (எல்லாம் முடிந்து விட்டது! என்பதை மறைமுகமாகத்) தெரிவித்திருந்தார்.
கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரம் மக்கள் வீதியில் கொல்லப்பட்டுக் கிடப்பதாகவும், 25 ஆயிரம் பேர் மருத்துவப் பராமரிப்பு இன்றித் தவிப்பதாகவும் தமது துப்பாக்கிகளை மவுனமாக வைத்திருப்பதற்கு தயாராக உள்ளோம் என்ற நிலைப்பாட்டை உலகத்துக்கு ஏற்கனவே அறிவித்திருப்பதாகவும் அவ் அறிக்கையில் குறிப்பிட்டார். ஆனால் தமது கோரிக்கை யாருடைய காதிலும் விழவில்லை என்றும், இந்தப்போர் கசப்பான ஒரு முடிவுக்கு வந்திருப்பதாகவும் அவர் (மீண்டும்) குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தமது ஆயுதங்களை மவுனிக்கச் செய்வதுடன் சமாதான நடைமுறைக்குள் பிரவேசிப்பதாக இருந்தாலும் அவற்றுக்கு தாம் ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருப்பதாகவும், இன்றைய தருணத்தில் இதுதான் தேவை, இதன் மூலமாக ஆயிரக்கணக்கான மக்களுடைய (புலிகளின் அகராதியில் 'மக்கள்' என்ற பதம் உணர்த்தும் பொருள்: 'புலிகளையே') உயிரை பாதுகாக்க முடியுமாயின் அது செய்யப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தார். (மக்கள் முழுவதாக வெளியேறிய பின் இங்கு மக்களெனக் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது) மக்களைப் பாதுகாக்குமாறு அனைத்துலக சமூகத்திடம் தொடர்ந்தும் கோருவதைத் தவிர தம்மிடம் வேறு தெரிவுகள் எதுவும் இல்லை என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
இதேவேளை...
வெள்ளமுள்ளி வாய்க்கால் பகுதியில் புலிகளிடம் இருந்த சிவிலியன்களை தாம் முற்றாக விடுவித்துள்ளதாக இராணுவம் அறிவித்தது. கடந்த 72 மணித்தியாலங்களுக்குள் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை விடுவித்துள்ளதாகவும், இதன் போது புலிகளால் முன்னர் கைது செய்யப்பட்ட 4 கடற்படையினர் 3 இராணுவத்தினரையும் தாம் விடுவித்துள்ளதாக பிரிகேடியர் உதய நாணயக்காரா தெரிவித்தார்.
இச்செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தபோது, 17ம் திகதி சூசையின் பதட்டமான பேட்டி புலம்பெயர்ந்த நாடுகளில் வெளியிடப்பட்டது. மே 16ம் திகதி பிற்பகலிலிருந்து புலம் பெயர் நாடுகளான கனடா, யேர்மன், பிரான்ஸ், நெதர்லாந், இலண்டன் என வீதி மறியல்களும் புகையிரத மறியல்கள் எனவும், பெண்களையும் குழந்தைகளையும் முன்நிறுத்தி போராட்டங்கள் பதட்டமாகச் செய்யப்பட்டன. வீதியில் இருந்து அவர்களின் அத்தியாவசிய போக்குவரத்தை சீர்குலைக்கும் தன்மையைக் கொண்டிருந்தது. இப்போராட்டத்தின் மாறுதல், புலிகளின் உள்நாட்டு இருப்புப் பிரச்சனையை மிகத் தெளிவாகவே கோடிட்டுக் காட்டியது. இந்தியத்தூதரகம், மற்றும் சீனாவின் தூதரகம் உட்பட இந்நேரத்தில் தாக்கப்பட்டது (ஏற்கனவே இலங்கைத் தூதரகமும், பவுத்த விகாரையும் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது).
கிழக்கிலே மட்டக்களப்பு நகரில், முதலமைச்சின் மாநாடு 15-16 இல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மூவாயிரம் பொலீசாரை மேலதிகமாகக் கொண்டு வந்து குவித்து, வீதிகளும் சில குறுக்குப் பாதைகளும் அவசரமாக மூடப்பட்டன. பாலங்கள் ஊடாக உள் நுழைபவர்களும், வெளியேறுபவர்களும் சல்லடை போட்டுத் சோதிக்கப்பட்டனர். பஸ் நிலையங்களும், தனியார் பஸ் நிலையங்களும் மற்றும் முச்சக்கரத் தரிப்பிடங்களும் எதுவித முன்னறிவித்தல்களும் இன்றி திடீரென 'தாண்டவன் வெளிக்கு' மாற்றப்பட்டது.
16ம் திகதி காலை வேளை....
நாலாயிரத்து 300 சிறுவர்களும், புலிகளின் சிரேஷ்ட தலைவர்களின் குடும்பத்தினர் மற்றும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் அடங்கலாக தாம் அனைவரையும் விடுவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது.
இலங்கைக்குத் திரும்பிய மகிந்தா, மண்ணுக்குத் தலைவணங்கி ''இலங்கையை பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து விடுவித்து விட்டேன்'' எனக் கூறினார். விமான நிலையத்தில் மகிந்தாவை வரவேற்க சர்வமதத் தலைவர்களும் இராணுவ அதிகாரிகளும் மக்களும் குழுமி இருந்தனர். அதிகாரிகள் பால் சாதத்தை ஒருவருக்கு ஒருவராக ஊட்டி மகிழ்ந்தனர். மக்கள் ஆரவாரித்து பட்டாசுகளைக் கொழுத்தினர். புலிகளின் நிலமை பற்றி நாளை பாராளுமன்றத்தில் சனாதிபதி உத்தியோக பூர்வமாக அறிவிப்பார் என்று எடுத்துரைக்கப்பட்டது.
மகிந்தா இலங்கையில் வந்திறங்க முன்னர்...
புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல் இராணுவ முகாம் ஒன்றில் இருப்பதாக, அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று மெல்லக் கசிந்திருந்தது. முல்லைத்தீவில் புலிகளின் 150 உடல்கள் கண்டுபிடிக்கப் பட்டதாகவும், இதில் பிரபாகரனின் உடலும் இருக்கலாம் எனவும் இராணுவம் கூறியது. பிரபாகரனின் உடலும் இருக்கிறதா? எனக் கண்டறிய, டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்படுவதாவும் செய்திகள் கசிந்தன.
இவ் உடல்களுக்குள் புலிகளின் முக்கிய தலைவர்களான முத்தப்பன் மற்றும் பிரதீப் இன் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாவும் இராணுவத் தரப்பு செய்திகள் வெளியாகின.
இதனிடையே, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்த தகவல்துறை அமைச்சர்:அனுரா பிரியதர்சன, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நிலை குறித்து இராணுவக் 'காம்'பிலிருந்து அதிகாரபூர்வ செய்தி வந்தவுடன் தான் உறுதிசெய்ய முடியுமென அவர் கூறியிருந்தார்.
இவை இவ்வாறு இருக்க, புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவரது 18 மெய்ப்பாதுகாவலரும் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டடிருப்பதாக ஊடகங்களில் செய்தி வந்திருந்தன. 15ம் திகதி பொழுது சாயும் வேளை புதுமாத்தளனில் உள்ள புலிகளின் பல கட்டிடங்கள் வெடிக்கத் தொடங்கியதும் விண்ணை முட்டும் பெரும் புகைமண்டலம் கிளம்பத் தொடங்கியது. இரவிரவாக வெடித்துக் கொண்டிருந்த இந்த நிகழ்வுபற்றி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவியது. இச்சம்பவம் தொடர்பாக புலிகள் தரப்பு மவுனம் சாதித்திருந்தது. இந்த இரவுவேளையில் தெற்கில் சில சிங்களக் குக்கிராமங்களில் வெடி கொழுத்தப்பட்டதாகவும் சில தகவல்கள்.
அத்தோடு இரண்டு கேணல்களும் 6 பிராந்தியத் தளபதிகளும் அரசபடைகளால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அல்லது சரணடைந்து இருப்பதாகவும், பாடகர் சாந்தனும் (சூசையின் மனைவியுடன் கைதானவர்) ஒரு கப்பல் உரிமையாளரும் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் அடிபட்டன. இதற்கு முதல் நாள் பிரபாகரனின் முக்கிய மெய்ப்பாதுகாவலர் ஒருவர் கைது செய்யப்பட்டகாக ஒர் உறுதிப்படுத்தப்படாத தகவலும் வெளியாகி இருந்தது.
மே-18ம் திகதி காலை 7:11 நிமிடமளவில் புலிகளின் தலைவர் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக, ஏ.பி.சி செய்திச் சேவையின் இணையத்தள செய்தி வெளிவந்திருந்தது. மே-18 திங்கள் இன்று காலை பிரபாகரனும் அவரது முக்கிய இரு சகாக்களும் அம்புலன்ஸ் வண்டி ஒன்றில் தப்பமுயன்ற போது, இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக அது கூறியது. பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் இத்தகவலைத் தந்ததாகவும், வெகுவிரைவில் உத்தியோகபூர்வமாக இச்செய்தி அறிவிக்கப்பட இருப்பதாகவும் அச் செய்தி குறிப்பிட்டது.
புலிகளின் அதி உயர் 3 தலைவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், நடேசன், புலித்தேவன், ரமேஸ் மற்றும் 24 வயதான சாள்ஸ் அன்ரனி (பிரபாவின் மூத்த மகன்) போன்றோரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டதாகவும் அச் செய்தி மேலும் கூறியது.
மேற்படி செய்தியை இலங்கை அரசு பிற்பகல் 2 மணியளவில் (14:00) உத்தியோகபூர்வமாக வெளியிட்டது. முதல் தடவையாக இலங்கை இராணுவம், பிரபாகரன் கொல்லப்பட்டிருப்பதாவும், 200 சடலங்களைத் தாம் கண்டெடுத்ததாகவும் அதில் 18 பேரை தாம் அடையாளம் கண்டிருப்பதாகவும், பட்டியலிட்டுச் செய்தியை வெளியிட்டது.
கொழும்பு:
மே-17ம் திகதியில் இருந்து 18ம் திகதி விடியும் வரை, நடேசனும், புலித்தேவனும் கொழும்பு மற்றும் அனைத்துலக முக்கிய நபர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் அதிகாலை 5:45 நிமிடமளவில் அவர்கள் படையினரிடம் சரணடைந்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. இவர்களின் சரணடைவு உறுதியாகிவந்த பின்னிரவு வேளையில் இருந்து விடியும்வரை, சில மணித்தியாலங்கள் சில மக்கள் பாரம்பரிய இசைக்கருவிகளுடன் இலங்கைக் கொடியை அசைத்து ஆடிப்பாடி மகிழ்ந்ததாகவும், இந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவத்தினர் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி முத்தமிட்டதாகவும் ஏ.பி.சி செய்தி உறுதிப்படுத்துகிறது.
18ம் திகதி பாராளுமன்றம் கூடுகிறது. மகிந்தா பாராளுமன்றத்துக்குள் வருகிறார். எல்லோரும் எழுந்து நின்று கைதட்டி அவரை வரவேற்கின்றனர். மகிந்தா நீண்ட உரை ஒன்றை நிகழ்த்துகின்றார். பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும், புலிகள் அழிக்கப்பட்டதாகவும், பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டதாகவும் உத்தியோக பூர்வமாக உறுதிப்படுத்துகிறார்.
பாராளுமன்ற அறிவிப்புக்காக பல மக்கள் வீதிகளில் நிறைந்து காணப்படுகின்றனர். அறிவிப்பு வெளியானதும், பட்டாசுகள் காதைப் பிளக்கின்றன. இலங்கைக் கொடியை ஏந்தி அசைத்தவாறு பலர் வீதியில் அணிவகுத்து வருகின்றனர். பலர் பாரம்பரிய மேளத்தை இசைக்கின்றனர். பால் சாதங்களையும் பழங்களையும் வீதி ஓரத்தில் பலர் மக்களுக்கு வழங்குகிறார்கள். (இச்சாதம் வழங்குவதற்காக பல தமிழ் மக்களிடம் பணம் தரும்படி சிலர் நெருக்கியதாகவும் தகவல்)
இன்னொரு புறத்தில் பிரபாகரன், பொட்டம்மான் மற்றும் சூசையின் உருவப் பொம்மைகளைத் தூக்கிலிட்டு அலங்கரிக்கப்பட்ட ஊர்தி ஒன்றும், பெரிய புலிப் பொம்மை ஒன்று தாகத்தால் 'விக்'கும் போது, பெரிய பால் போச்சி ஒன்றால் அவ்வப்போது பாலூட்டுவது போல இன்னோர் ஊர்தியும் ஒன்றன் பின் ஒன்றாக மக்கள்முன் வலம் வருகிறது. பிறிதொரு இடத்தில் அறிவிப்பு வெளிவந்ததும் ஆரவாரித்து தம் கைகளிலே ஆயத்தமாக வைத்திருந்த வெள்ளைப் புறாக்களையும், பலூன்களையும் முத்தமிட்டு விண்ணிலே பறக்கவிட்டனர்..
பொட்டம்மான் மற்றும் நடேசன், பானுவின் மனைவிமார்களும் கொல்லப்பட்டிருப்பதாக இராணுவம் மேலும் அறிவிக்கிறது. சாள்ஸ் அன்ரனி உட்பட நடேசன், புலித்தேவன் போன்றவர்களது உடல்கள் ஒளிபரப்புச் சேவையில் காட்டப்படுகிறது.
(தமிழ் மக்கள் கொழும்பில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடக்கக்கூடும் எனப் பயந்து வீடுகளில் இருந்தனர்)
தமிழ்நாடு (சென்னை):
பிரபாகரன் இறந்துவிட்டதாக வெளிவந்த செய்தியினைக் கேட்டு மனமுடைந்த, மறுமலர்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர் ஒருவர் தீக்குளித்தார். சிதம்பரம் குறிஞ்சிப்பாடி வெங்கடம் பேட்டையைச் சேர்ந்த பிரகாசம் (55) என்பவரே தீக்குளித்து, தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இறுதிப்போர் பிரதேசமான முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்னும் ஒரு இலட்சம் பேர் இருப்பதாகவும், ''எல்லோரையும் வெளியேற்றி விட்டோம்'' எனச் சொல்லி அவர்களை இலங்கை இராணுவம் இன அழிப்புச் செய்யப் போவதாகவும் 25 ஆயிரம் பேர் காயமடைந்து உயிருக்காகப் போராடிக் கொண்டிருப்பதாவும், பிரபாகரன் இறக்கவில்லை! அங்கே இன்னும் போர் நடந்து கொண்டிருப்பதாகவும் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
நெடுமாறன், ராமதாஸ், வை.கோ, பாண்டியன் போன்றோர் இணைந்து இக் கூட்டறிக்கையை வெளியிட்டனர். ஈழப் போராட்டத்துக்கு முடிவே கிடையாது! இலங்கைத் தமிழர்கள் இனி வேறுவிதமான போராட்டங்களில் ஈடுபடுவர்!! என இந்தியக் கம்யூனிஸ்ட் தமிழ்நாட்டு மாநிலச் செயலாளர் பாண்டியன் ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளித்தார்.
விழிப்புரம் ஆலங்குடி கிராம மக்கள் பிரபாகரன் இறந்துவிட்ட செய்திகேட்டு ஆறாத்துயரில் மூழ்கினர். தமது வீடுகளில் கறுப்புக் கொடிகளைக் கட்டி துக்கத்தில் சோர்ந்து துவண்டு கிடந்தனர்.
புலம் பெயர் நாடுகள்
பிரபாகரன் இறந்துவிட்ட செய்தியைக் கேட்டு, புலம் பெயர்ந்த புலிகளுக்கு பெருந்தொகையான பணத்தைக் கடன்பட்டுக் கொடுத்திருந்த டென்மார்க் வாசியான ஒரு தமிழர் மாரடைப்புக்கு உள்ளாகி, உடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், அவர் எங்கிருக்கிறார் என்பதை பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளியிட முடியாது எனவும் கே.பி 'சனல் 4' தொலைக் காட்சிக்குப் பேட்டியளித்தார். அதைத் தொடர்ந்து புலம் பெயர்ந்த புலிகளின் செய்திகள் 'விசேட செய்தியாக' பிரபாகரன் இறக்கவில்லை! என்பதைப் பிரச்சாரப்படுத்தினர்.
பிரிட்டன் உட்பட பல வெளிநாடுகளில் தொடர்ச்சியாக நடந்த போராட்டங்களில் சில இன்னும் தொடர்ந்தபடி... 'தமிழீழத்தை அங்கீகரிக்குமாறும், பிரபாகரனே எமது தலைவர் என்றும், யுத்தத்தை நிறுத்துமாறும், புலிகளைப் (மக்களை) பாதுகாக்குமாறும்' பைத்தியம் பிடித்தவர்கள் போல நாண்டுகொண்டு வீதியில் நின்றனர்.
புலிகள் மூன்றாம் தரப்பிடம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருந்ததாகவும், அவர்களுடன் அரசு ஒர் இணக்கத்துக்கு வரவேண்டும் என்ற தொனிபட எரிக் சூல்கைம் பி.பி.சி க்குப் பேட்டியளித்தார். இக் கேள்வி தொடர்பாக பி.பி.சி க்குப் பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா விடுதலைப் புலிகள் என்ற அமைப்பே இனிக்கிடையாது! என்று பதிலளித்தார்.
இதற்கிடையில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலை தாம் அடையாளம் கண்டிருப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா உறுதிப்படுத்தும் தகவலை வெளியிட்டார்.
மே-19 செவ்வாய்க்கிழமை
சாள் அன்ரனி போன்றோரின் உடல்கள் காட்டப்பட்டு 24 மணி நேரத்துக்குள் பிரபாகரின் உடல் காட்டப்பட்டது.
பிரபாகரனின் முகம் இளமைத் தோற்றத்தை அளித்தது!
பலரும் இது பிரபாகரனின் உடல் அல்ல என நம்பினர். சிலர் அதைப் பார்க்கவே மனமின்றி இருந்தனர். வெளிநாடுகளில் இருக்கும் வயது முதிர்ந்த தமிழர்களும், சிங்கள மக்களுக்குள்ளும் வயது முதிர்ந்தவர்களும் பிரபாகரனின் உடலைப் பார்த்தபோது கண்கள் கசிந்ததாக அவதானிகள் அறிக்கை இட்டிருந்தனர். புலிகள் இது பிரபாகரனின் உடலே அல்ல என பல காரணங்களைக் காட்டி நிராகரித்தனர். சர்வதேசத்தின் பெரும் பகுதி பிரபாகரனென இதை நம்பியது. பிரபாகரனின் தலையில் இருக்கும் பிளந்த காயம் அவரது இடது புருவம் வரை இறங்கியிருந்தது. நெற்றியின் பின் பகுதியை துணியினால் மறைத்தும், நெற்றியிலிருந்து புருவம் வரை இருந்த பிளவை லேசாக ஒட்டிமறைக்கும் போக்கிற்கு இசைவாக அவரின் முகத்தின் முழுப்பகுதியும் சோடிக்கப்பட்டது போலத் தெரிகிறது!
பிரபாகரனின் உடல் காட்டப்பட்டதன் பின்னர் பிரபாகரன் நலமுடன் இருப்பதாகவும், பல தளபதிகளை இலங்கை அரசு நயவஞ்சகமாகக் கொன்று விட்டதாகவும் சர்வதேச புலிகளின் பொறுப்பாளர் கே.பி துண்டறிக்கை ஒன்றை வெளியிட்டார்
வை.கோ பிரபாகரன் தப்பிவிட்டதாகவும், முள்ளி வாய்க்காலில் இருந்து ரகசியமாக தப்பி, 3 மணித்தியாலங்கள் பயணித்து வேறு நாடொன்றில் பத்திரமாக இருப்பதாக வேறொரு செய்தி வெளியிட்டார்.
'நக்கீரன்' பிரபாகரன் தனது இறந்த உடலை காட்சிப்படுத்தும் செய்தியைப் பார்த்துக் கொண்டிருப்பது போல அட்டைப்படச் செய்தியோடு பரபரப்பாக செய்தி வெளியிட்டது. 89 யூலை 24ம் திகதி பிரபாகரன் இறந்து விட்டதாகப் பரவிய செய்தியை அடுத்து, அச் செய்தி வெளிவந்த பத்திரிகையை பிரபாகரன் வாசித்துக் கொண்டிருப்பது போல, வேறொருவரின் உடலுக்கு பிரபாகரனின் தலையை வெட்டி ஒட்டி நக்கீரன் வெளிவந்தது. யூலை 18ம் திகதி கொழும்பில் உமா மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டு, அவரின் முகமும் சிதைக்கப்பட்டு இருந்த வேளையும் இவ்வாறான செய்தியும் வெளிவந்திருந்தது. நக்கீரன் 20 வருடங்களின் பின்னர் அதுபோல ஒரு விளையாட்டை செய்திருந்தது. ஆனால் புலம் பெயர்ந்த நாடுகளில் இந்தப் பருப்பு அவியவில்லை!
மே-20ம் திகதி, பிரபாகரனின் மனைவி (மதிவதனி), மகள் (துவாரகா) இளைய மகன் (பாலச்சந்திரன்) ஆகியோரது உடல்கள் நந்திக்கடலில் கண்டுபிடிக்கப்பட்டதாக இராணுவச் செய்தியை ஆதாரம் காட்டி -வுiஅந ழேற- செய்தி வெளியிட்டிருந்தது. இவர்களது உடல்கள் இதுவரை காட்டப்படவில்லை. பாலச்சந்திரன் கொலையுண்ட படம் இணையங்களில் வெளியாகி இருந்தன.
மே 21ம் திகதி, பிரபாகரனின் உடலை கருணா மற்றும் தயாமாஸ்ரர் பார்வையிட்டு உறுதிப்படுத்துவதான காட்சியை அரசு வெளியிட்டது. 475 உடல்களில் இருந்து இவர்களின் துணையுடன் 3 மணித்தியாலத்தில் அடையாளம் காணப்பட்ட, பிரபாகரன் உட்பட 27 முக்கிய நபர்கள் பின்வருமாறு.....
1- பிரபாகரன். 2- பானு. 3- லக்ஸ்மன். 4- ஜெயம். 5- நடேசன். 6- புலித்தேவன். 7- ரமேஸ். 8- சாள்ஸ் அன்ரனி. 9- இளங்கோ. 10- தோமாஸ். 11- சிறீராம். 12- அறவி (பெண்). 13- கபில் அம்மான். 14- அஜந்தா (பெண்). 15- வர்மா. 16- பரா 17- புதியவன். 18- ஜெனார்த்தன். 19- இளம்பரிதி. 20- புண்ணியம் மாஸ்ரர். 21- வர்தி. 22- இராம் குமார். 23- கோமலை (பெண்). 24- அண்ணாத்துரை. 25- ரங்கன். 26- வினோதன். 27- மாதவன்.
மேலதிகமாக அரசால் கூறப்பட்டவை
பொட்டம்மான், சூசை, காந்தா, இசை அருவி, மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன், இரத்தினம் மாஸ்ரர். விஜித்ரா(நடேசனின் மனைவி- சிங்களப் பெண்)
இந்த ஒரு வார காலத்தின் பின்னர், 24ம் திகதி பிரபாகரன் இறந்து விட்டதை கே.பி உத்தியோகபூர்வமாக வெளியிட்டார்.
அரசால் பொட்டம்மான் எனக் காட்டப்பட்ட உடல்: