இன்னும் இரண்டு வருடங்கள், தொடர்ந்தும் மக்களை ஓடுக்கி ஆளமுடியும்;. தனக்கு எதிரான ஒரு பிரதான பொது எதிரியை உருவாக்கி வைத்துக் கொண்டு, அவசரமான தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் தான் என்ன?

இன்னும் இரண்டு வருடத்தின் பின்னான தேர்தலை, இந்த அரசு வெல்ல முடியாது. மக்களுக்கு எதிரான பாரிய அடக்குமுறையின்றி ஆள முடியாது. இந்த உண்மையால், தாங்கள் அதிகாரத்தை தக்கவைத்து தொடர்ந்தும் மக்களை அடக்கியாள தேர்தலை முன் கூட்டி நடத்துகின்றனர். இந்த அவசர தேர்தல், எதிர்காலத்தில் சமூக கொந்தளிப்பும், சமூக நெருக்கடியும் இருக்கும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

 

பாரிய சமூக ஓடுக்குமுறையை ஏவி ஆளமுடியும் என்ற எதார்த்தம், எதிர்காலம் இலங்கையில் அமைதியற்ற கொந்தளிப்பான காலமாக இருக்கும் என்பதன் அடிப்படையல் ஆளும் வாக்கம் தன்னை தயார் செய்கின்றது.

 

இலங்கை மக்கள் என்றுமில்லாத வகையில் ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் காலம், இனிவரும் ஆண்டுகள்தான். இலங்கைக்குள் ஏகாதிபத்திய முரண்பாடுகளும், பிராந்திய முரண்பாடுகளும் கூர்மையாகும் காலமும் இதுதான். யுத்த பொருளாதாரம் முடிவுக்கு வர, யுத்தக் கடன் மேலெழுந்து வரும் காலமும் இதுதான். இனவாதத்தை விதைத்து அரசியல் செய்த காலம் முடிவுக்குவர, வர்க்க முரண்பாடு மேலெழும் காலம் இதுதான். அரசுக்கு எதிராக  இனங்கள் ஜக்கியப்படும் காலமும் இதுதான்.

 

வாங்கிய கடனுக்கு தேசிய சொத்துகளை விற்கும் காலமிதுதான். வட்டி கட்ட மக்களின் நுகர்வை புடுங்கி ஏற்றுமதி செய்யும் காலமிதுதான்.

 

வர்க்க முரண்பாட்டை முதன்மை முரண்பாடாக கொண்ட கொந்தளிப்பான ஒரு கட்டத்தை நோக்கி இலங்கை மாறிச்செல்லுகின்றது. 

 

மறுபக்கத்தில் தமிழினம் பலவீனப்பட்டு அரசியல் ரீதியாக சிதைந்து விட்டது. இந்த நிலையில் உள்நாட்டில் மக்களை திசைதிருப்ப மக்களைப் பிளக்கும் எதிரிகளின்றி ஆளும் வாக்கம் தவிர்க்கும் காலமும் இதுதான்.

 

இலங்கை மக்களே இனி நேரடியான எதிரியாக, அரசு அதை ஒடுக்கும் காலமும் இது தான். ஆளும் வர்க்கம் மக்களை ஏமாற்றி ஆள, மக்களை பிளக்கும் முரண்பாடு இன்றி தவிக்கின்றது. அரச பாசிசம் மக்களை பிளக்கும் முரண்பாட்டை தன் பாசிசம் மூலம் அழித்தொழித்ததால், மக்களை பிளக்கும் முரண்பாடு இன்றி தனிமைப்பட்டு நிற்கின்றது. இதை உணரும் தமிழ் மக்கள், புலிகளின் பாசிசத்தின் விளைவால், தனிமைப்பட்டு சிதைந்து கிடக்கின்றனர். அவர்கள் சிங்கள மக்களுடன் சேர்ந்து அரசை எதிர்கொள்வதன் ஊடாகவே, தங்கள் உரிமையைப் பெறமுடியும். இதைவிட வேறு எந்த குறுக்கு வழியும் கிடையாது. 

    

இந்த நிலையில் அதிகாரத்தையும், வர்க்க பாசிசத்தையும் தன் குடும்பம் சார்ந்து தக்கவைக்கவே, மகிந்த இந்த அவசரத் தேர்தலை இன்று நடத்துகின்றார். இதில் உள்ள விசித்திரம் என்னவென்றால், பேரினவாதத்தை யுத்தம் மூலம் வென்று யார் நிறுவியவர்கள் என்பதை முன்னிறுத்தி களமிறங்கியுள்ளனர். யுத்தத்தை நடத்தியவர்கள், யுத்தத்தை முன்னின்று செய்தவர் என்ற அதிகாரப் பிளவும், இதில் யாரை வெல்ல வைப்பது என்பதே இந்த தேர்தலின் மைய சாரம். இதை முன்னிறுத்தி வாக்கு கேட்கும் எல்லைக்குள், இந்த தேர்தல் இனவாத எல்லைக்குள் நடக்கின்றது.

 

இதன் மூலம் இலங்கை மக்கள் கட்டிய கோமணத்தையும் உருவ நடக்கும் தேர்தல். இதை வாக்காளர்கள் உணர முடியாதவாறு "யுத்த வெற்றி" என்ற பேரினவாத மயக்கத்துக்குள் நடத்தப்படுகின்றது. 

                 

பாரிய இனப் படுகொலையில் ஈடுபட்ட இரண்டு அதிகாரப் பிரிவுகளுக்கு இடையிலான மோதல், எதிர் அரசியலாகின்றது. யுத்தக் குற்றத்தின் முழுப்பரிணாமத்துடன், குற்றப் பரம்பரையினர், தங்கள் அதிகாரத்தை தக்கவைக்க நடக்கும் தேர்தல் கூத்தாகின்றது.

 

தங்கள் பாசிச அதிகாரத்தை ஆளும் வர்க்கம் சார்ந்து தக்கவைக்க முனைகின்றனர்.  ஆளும் வர்க்க பிரதிநிதிகளுக்கு இடையிலான முரண்பாடுகள், தம் எதிர்தரப்பு மீதான குற்றச்சாட்டுகளாக யுத்தக் குற்றத்தின் ஒரு பகுதியை நடுச்சந்திக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

 

இதன் பின்னணியில் ஏகாதிபத்தியங்கள் முதல் பிராந்திய நலன் சார்ந்த முரண்பாடுகளும் இயங்குகின்றது. இதை அம்பலப்படுத்துவதன் மூலம், தேர்தல் முடிவை தீர்மானிக்கும் ஒரு சக்தியாக இவையும் இருக்கும்.

 

மக்கள் இனவாத எல்லைக்குள், பாசிச பிரச்சார நெடிக்குள், பொய்களையம் புரட்டுகளையும் நம்பி வாக்கு போடும் மந்தைகளாகவே இலங்கை மக்கள் வழிநடத்தப்படுகின்றனர்.

 

மக்கள் மேலான ஒடுக்குமுறையை யார் இனி செய்வது என்பதை அங்கீகரிக்க கோரி, தேர்தலை வாக்களிக்கக் கோருகின்றனர். இது தான் இந்தத் தேர்தலின் ஜனநாயகமாகும்.

 

மக்களுக்கு கிடைக்கப் போவதோ ஒடுக்குமுறைதான். இதையே தான் மீண்டும் வரலாறு நிரூபிக்கும்.  

            

பி.இரயாகரன்
28.11.2009