Language Selection

ப.வி.ஸ்ரீரங்கன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"புலி விசுவாசிகள் புலம் பெயர் மண்ணில் தமது வருவாய்க்காகக் கருத்துக்கட்டும் உளவியல் படத்தை,மிக அழகாகச் சாந்தி இரமேஷ் வவுனியன் கட்டுரை ஒன்றில் பேசுகிறார்.சமீபத்தில் வந்த புலிகளது "அதி" விசுவாசிகளின் நியாய மனது பேசிய கட்டுரை அது.அக் கட்டுரையில் இனம் காண முனையும் உண்மை,மக்களது நலத்துக்கு அண்மையில் இருப்பது.இப்படிப் பல புலிவிசுவாசிகள் பேசியாக வேண்டிய காலம் இது. "

 

இன்று"மாவீரர்"தினம்: 27.11.2009.

எந்தவொரு சமுதாயமும் தனது மதிப்பீடுகளை இன்றைய நோக்கு நிலையிலிருந்து மீளுருவாகஞ்செய்யாதுபோனால் அதன் இருப்பானது மிக மிகப் பலவீனமான நிலையையெய்துவிடும்.இன்றைய காலமானது மிகவும் கெடுதியான பொருளியல் நலனே முக்கியம் பெற்ற அதிர்வான சமூக சீவியத்தைக் கொண்டிருக்கும் காலமாகும்.சாகடிக்கப்பட்ட புலித் தலைவனது பெயரையோ-சாவையோ பேச முடியாத தமிழர்களாகப் புலம்பெயர் தமிழர்கள் ஜீ.ரி.வியில் அழுது வடிகிறார்கள்.எந்தவொரு தனிமனிதராலும் சமூகச் சீர்கேடுகளைத் துடைத்தெறிய முடியாது.சமூக மட்டத்தில் ஆற்றவேண்டிய தேவையானது விழிப்புணர்வைத் தூண்டுதலும் அதன் தேவையை வலியுறுத்துவதுமே.பிரபாகரனது மரணத்தை மறுத்து, அவருக்குப் பிறந்த நாள் கொண்டாடும் புலிப்பினாமிக் கூட்டத்தைக் குறித்து விழித்துக்கொள்வது அவசியமா-இல்லையா?

 

பிரபாகரன் உரை அற்ற"மாவீரர்"தினம்:27.11.2009.

 

ஆமாம்-"மாவீரர்"தினம்!அதனாற்றாம் சரணடைந்து செத்துப்போன பிரபாகரனைப் பற்றிய அஞ்சலி இல்லை.இப்படிப் பலரும் பேசிக்கொள்ளலாம்.

 

இத்தகைய சமூக உளவியலைப் பற்றி நிறையப் பேசியாக வேண்டும்.பிறிதொரு சந்தர்ப்பத்தில் இது குறித்த ஆய்வை,நாளைய தலைமுறை செய்யுமெனக் கருதலாம்.இப்போதைக்கு நாம் இது குறித்து... நோவதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்?

 

இந்த வருடத்துக்கான "மாவீரர்"தினமான இன்று,பிரபாகரனது "உரையைக் கேட்க முடியவில்லை" என்று அங்கலாய்த்து, சொல்லாமல் பிரபாவின் மரணத்தைச் சொல்லிக் கண்ணீர் வடிக்கின்றனர் புலம் பெயர் தமிழர்கள். எனினும், புலிப் பினாமிகள் தமது பணத்தைக் குறித்த அரசியலில் இதுவரை தாம் போற்றிய தலைவனைக் குறித்து எதவுமே பகிர்வதற்கு முனையவில்லை!
 
இன்றைய காலம் பரந்துபட்ட தமிழ்பேசும் இலங்கை மக்களது நலனில் அக்கறையற்ற காலம்.எமது வாழ்வுமீது வந்து சூழ்ந்த வரலாற்றுக் கொடுமைகள்-இனவாத அரசின் கொடுமைகள்,போராடப் புறப்பட்ட இயக்கங்களைப் பிளந்து மக்கள் விரோதிகளாக்கி-அவர்களால் நமக்கேற்பட்ட கொடுமைகளெல்லாம் விலகியபாடில்லை, இன்னும்!

 

நமது வாழ்வாதாரப் பெறுமானங்களை வெறும் பதவி பட்டங்களுக்காக ஏலம்போடும் இயக்கங்களாக இருந்தவை மீளவும் நமது நலனில் அக்கறையுடையவர்களாக வலம் வருகிறார்கள்.கடந்த மாவீரர் தினத்தில் வழமைபோலவே உரையாற்றிய பிரபாகரன் இன்று இல்லை!தவறான போரினது திசைவழியில் சரணடைந்து பலியாகிப் போன மனிதர் பிரபாகரன். அவரைத் துதித்தவர்கள் பல பில்லியன்கள் டொலரோடு பிரபாகரனையும் மறந்து போயினர்.
துரோகத்தின் பரிசு மீளவும் நமக்கு முன் பல்லைக் காட்டுகிறது! இது கொடிய பல்!! பணத்துக்காக எதையுங் செய்யும் குருதிதோய்ந்த புலிப்பல் இது!!!

 

பணப் புலிகளது செல்வக் குவிப்பு உறவுகளால், உண்மைபேசுவர்களுக்கு நேரும் கொடூரமான அவமானங்கள் அந்தச் சமுதாயத்தில் பொய்மையும் ,புரட்டும் எவ்வளவுதூரம் ஆழமாக வேரோடி விழுதெறிந்துள்ளதென்பதை நம்மால் உணரமுடிகிறது.

 

தான் நம்பவைக்கப்பட்ட கருத்தியலுக்கு எதிராக உண்மையிருப்பதை(பிரபாவின் மரணம்) புலி விசுவாசிகளால் இன்னும் ஜீரணிக்க முடிவதில்லை.இந்தச் சிக்கலைத் தெளிவுற வைக்கும் போராட்டமானது முளையிலேயே கிள்ளியெறியப்பட்ட வரலாறு நமது வரலாறாகும். சமூகத்தளத்தில் மிக ஆழமாக விதைக்கப்பட்ட தமிழ்க் குறுந்தேசியமானது தனது இருப்பை இதனால்(பிரபா உயிரோடு இருப்பதாக) பாதுகாக்க இதுநாள்வரை முனைந்துகொண்டு வருகிறது.இந்த இருப்புப் புலியினால் தட்டிப்பறிக்கப்பட்ட மக்கள் செல்வத்தோடு அரசியலாக விரிவது.புலம்பெயர் புலிப்பினாமிகள் இதில் கவனமாகவே செயற்படுகிறார்கள்.அவர்கள் மக்களது பணத்தில் தமது குடும்பச் செழிப்பைக் கனவு காண்கின்றனர்.அங்ஙனம் வாழ்ந்து பழக்கப்பட்டும் விட்டனர்.எனவே,பிரபாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்தை மட்டுமே தெரிவிக்கக் கடமைப்பட்டனர் என்றாக...

 

சரியான திசைவழியின்றிப் போரிட்ட புலிகளது பினாமிகள், தமது நலன்களுக்காக மீண்டும் நம்மை ஏமாற்றத் தகவற்றொடர்புச் சாதனங்களுடாக நமது வீட்டிற்குள் வந்து மாவீரர் நிகழ்வு செய்கின்றனர்.கொல்லப்பட்ட மக்களையும்,சரணடைந்த பிரபாகரனையும் அவரது தளபதிகளையும் மறந்து "போராளிகள்" எனப் பொதுமையில் கவிதைகள் அரங்கேறுகின்றன.காசைக் குறித்த கயமைவாதிகளின் கனவு மீளவும் நமது மக்களை மொட்டையடிப்பதென அவர்களது செயற்பாடே காட்டுகிறது!

 

இப்போது,இத்தகைய புலிப் பினாமிகள்,அவர்களது எடுபிடிகளான அனைவரும் போராட்ட வாழ்வையும்,மக்களின் இரண்டும்கெட்டான் சமூகசீவியத்தையும் வெறும் கேலிக்குரிய விடையமாகப் பார்க்கின்ற நிலையை நமது எதிரிகளுடாய்ச் செய்கின்றனர்.இதை வன்னியில் உரசிப்பார்த்த எதிரிகள்,இப்போது பரவலாக நமது மனங்களைச் சிதைப்பதற்கு வந்துவிட்டார்கள்.

 

புலிகளது,தரப்பிலிருந்து தளபதி இராம் உரை தருகிறார்.பிரபாகரனது எந்தத் தகவலும் சொல்லப் புலம்பெயர் ஊடகங்கள் மறுக்கின்றனர்.இதுவரை பிரபாகரனுக்கு அஞ்சலி செய்ய முடியாத திசையில் புலிகளது பினாமிகள்.இவர்கள் பெரும்பாலும் மக்கள் சொத்தோடு தலை மறைவாகி வருகின்றனர்.இது,தமிழ் பேசும் இலங்கை மக்களது அனைத்துக் கொடுமைகளையும் மறந்து-மறுத்துச் சேர்க்கப்பட்ட செல்வமாக எங்கோ முடங்கிப் போகிறது.எனினும்,புலிகளது விசுவாசிகள்"வீரம்"பேசிக்கொள்ளும் கவிதைகளில்"மாவீரர்"தாலாட்டுப் பாடுவதில்...
ஜீ.ரி.வீ.யில் அழுது வடியும் கவிதைகளுடன் புலம்பெயர் சிறார்கள்.

 

எனினும்,ஒரு படம்வைத்துப் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த முடியாத கபோதிகளாக உலகத் தமிழர்!

 

மக்கள் சார்ந்த நோக்கு நிலையிலிருந்து செயற்படாத தலைவர்களுக்கு "என்ன கதி இறுதியில் உருவாகும்?" என்பதற்குப் பிரபாகரன் நமக்கு நல்ல உதாரணம்.அவரது மரணத்துக்கே செவி சாய்க்காத தமிழர்களாக இன்று, இலங்கை வாழ் மக்களும்,புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் ஒருங்கே கைகோற்கும் நிலை.

 

நமது மக்களை,இன்னும் உயிருள்ள ஜீவிகளாகக் கணிக்காத புலம்பெயர் புலிப்பினாமிகள்,தமது தலைவனது மரணத்தையும் தமது வருவாய்க்காகப் பயன்படுத்தித் தலைவருக்கு நேற்றுப் பிறந்த நாள் கொண்டாஞ் செய்கின்றனர்.2009 க்கான "மாவீரர்"தின நிகழ்வுகளில்,சமூகத்தின் அறங்காவலர்களாகக் கவிதை பாடிக்கொண்டே,தமது அடிவருடித் தனத்தைச் செவ்வனே செய்து பிழைப்பதில் காலத்தைத் தள்ளுகின்றனர் புலிப் பினாமிகள்!இவர்களைச் சுற்றிய ஊடகங்கள் இத்தகைய கருத்துக்களைத் தேசத்தின்-இனத்தின் நலனாக வாந்தியெடுத்து மக்களின் ஒரு பகுதியை இருண்ட பகுதிக்குள் கட்டிப் போடுகிறது.இதை வளர்த்தெடுக்கும் பணக் குவிப்பு நலனானது இவற்றைத் தேசிய எழிச்சியாகவேறு பிரகடனப்படுத்தி மக்களைச் சீரழிக்கிறது இன்று!

 

என்னவொரு வக்கிரம்!

 

பிரபாகரனது சாவையே நிராகரிக்கும் இந்த நரிகள், பிறந்த தினத்தைக் கொண்டாடும் அரசியல் என்ன?

 

நம்மையின்னும் இளிச்ச வாயர்களாகவெண்ணிக் காரியத்தில் இறங்கியுள்ள புலம்பெயர் புலிப் பணக்காரர்கள் செய்யும் ஒவ்வொரு நிகழ்வும்,அவர்களுக்கே நியாயமாகப்படுமோ தெரியாது!இவர்களுக்குள் பணத்தைக் குறிவைத்து இயங்கும் கொடியவர்கள் உண்மைகளை மறைத்து இவ்வருடமும்"மாவீரர்"விழாவோடு மீளவும் புலம்பெயர் மக்களை மொட்டையடிப்பதில் முனையலாம்.எனினும்,மக்கள் விழித்துக்கொள்ளும் பல முரண்பாடுகளை இவர்களே உற்பத்தி செய்கின்றனர்.இது நல்ல ஆரம்பமே!

 

27.11.2009 பிரபாகரன் இல்லாத மாவீரர் உரையோடு புலிகள் என்ற பணப் புலிகள் ஒரு புறமும்,மறு புறமோ, "புலிகளது மாவீரர்"மாமாக்களுக்குப் புலம் பெயர் சிறார்கள் அழுதுவடியும் கவிதைகளோடு...

 

தம்மைக் கட்டாயப்படுத்தும் பெற்றோருக்காக,இவர்கள் கவிதைகளைக் கொட்டியபடி.

 

இன்றைய பொழுது இங்ஙனம் உரண்டோடுகிறது.

 

நாம், தமிழ்பேசும் இலங்கை மக்களது வரலாற்றில் பிரபாகரனது இடம் குறித்து யோசிக்கிறோம்.மக்களை வருத்திய ஒரு போராட்டத் தலைவனது இடம்,வரலாற்றில் குப்பைக் கூடைக்குள் என்பதைப் புலிகளது அனைத்துச் செயற்பாட்டிலும் அவதானிக்க முடிகிறது.பிரபாகரன் இதிலிருந்து தப்ப முடியவில்லை.எரியும் வீட்டில் பிடுங்கியது மிச்சமாகப் புலிப்பினாமிகளில் பலர் காரியமாற்றும்போது பிரபாகரனை எவன் நினைவுகொள்வா(ன்)ள்?
 
"புயலடித்த தேசத்தின் புழுதிகள்
ஒருபகுதி மனித முகங்களை மறைத்திருக்க
சில தெரு நாய்கள் ஓங்கிக் குரைத்தன "வெற்றி, வெற்றியென"
முன் பின் தெரியாத குருட்டு விழிகளால் இவையறியப்படாது
வீண் கற்பனைகளாற்
சில முகங்கள் மலர்ந்தன
 
ஆனால்,
தேச எல்லையில் தவம் புரியும்
இராட்ஷதத் திமிங்கலம்
நீண்ட நாளகப் பசித்திருக்கிறது
அதன் கொடிய தாகம்
இந்த மண்ணின் மீது நிழலாக விரிந்து
குரைக்கின்ற நாய்களுக்கு அச்சமூட்டியபடி
 
சில சூப்பர் மனிதர்களின் சரித்திரம்
அவர்தம் நிழலுக்குள் முடக்கப்பட்ட நிலையில்
புயலுக்குப் பின்பும்
புனரமைக்கப் படாத தேசம்
மக்களின் மிச்சசொச்ச நம்பிக்கைகளையும் மீதமாகச் செரித்தபடி..."
 
விதியே விதியே வினை முடிப்பாயோ? இன்றைய "மாவீரர்"விழாக்களில் விண்ணஞ்சும் அதிர்வேட்டுப் போர்முழக்கம் விதித்தப் பல கட்டளைகளில் காலம் அறுந்து சிதைகிறது,சிரித்த புலம்பெயர் புலியின் உணர்வுக்குள் சில்லறைகள் கல்லறை அமைக்க-நோட்டுக்கள் தனது வாரீசுகளுக்கு மாளிகை அமைக்க...

 

வன்னியில் கடுகு தேடிய தாயோ"மாவீரர் மரணம்"அற்ற வீடுகளும் இருக்கக் கண்டாள்.சபித்த மனத்துடன் விடியலை நோக்கி அவள் அடுப்பை மூட்டும் காலம், வெகு தூரத்தில்.

 

மடியிலே சுமைகொண்ட புலம்பெயர் புலித்தாயோ பணம்செய்யப் புக்கினாள்,வட்டுக் கோட்டைத் தீர்மானத் தமிழ்த் தேசியக் கோட்டை.
 
வாழ்க"மாவீரர்"இவர் வழி நீடூ!
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,
ஜேர்மனி
27.11.2009