07042022தி
Last updateபு, 02 மார் 2022 7pm

டபுள் டிப் பொருளாதார வீழ்ச்சி - கும்மாங்குத்து பொருளாதார வீழ்ச்சியும், துபய் கடன் அபாயமும்!!!

பொருளாதார மந்தம் முடிஞ்சிருச்சி என்று இந்த மாதம் ஆரம்பத்தில் ஆராவாரமாக அறிவித்தனர். கடந்த பல மாதங்களாக இப்படி ஒவ்வொரு மாதமும் அறிவிப்பது என்பது ஒரு சடங்காகவே ஆகிவிட்டது ஒரு பக்கம் இருக்கட்டும்,

 

 

 

இந்த முறை இவ்வாறு அறிவிக்கப்பட்டதற்கு பொருத்தமாக இந்தியா போன்ற தெற்காசிய சந்தைகளில் அன்னிய நிறுவன முதலீடுகள்(FII) குவியத் துவங்கின. ஐ எம் எப்ன் நிதிப் பற்றாக்குறையை குறைக்கும் வகையில் இந்தியா, இலங்கை, மொரிசியஸ் நாடுகள் வாங்கிய தங்கமும், சீனா போன்றவை வெளிச் சந்தையில் வாங்கிக் குவித்த தங்கத்தின் மூலமும் இன்னும் அதிகமான டாலர் சந்தையில் புலங்கத் துவங்கியது.

ஆனால், இவை நடந்து கொண்டிருக்கும் போதே மேற்கு நாடுகளில் என்றும் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அமெரிக்க வங்கிகள் சட சடவென ஒவ்வொன்றாக திவாலாகிக் கொண்டுள்ளன. இன்னிலையில் வந்தது ஒரு முக்கிய அபாய சங்கு. டபுள் டிப் பொருளாதார மந்தமாக இது விரிவடைகிறது என்பது போலான செய்திகள் வெளி வரத்துவங்கின.

டபுள் டிப் பொருளாதார மந்தம் அல்லது கும்மாங்குத்து அல்லது தெளிய வைத்து அடிக்கும் பொருளாதார மந்தம் என்பது - ஒரு பொருளாதார மந்தம் ஏற்பட்டு பிறகு அதிலிருந்து மீள்வது போல பிலிம் காட்டி விட்டு மீண்டும் மந்தத்தில் மீளாத் துயில் கொள்வது ஆகும்.

இத்தகைய நிலையில் அமெரிக்க ரிசர்வ் வங்கி உள்ளிட்டவை வழங்கி வரும் ஜீரோ வட்டி கடன் தொகையை தெற்காசிய சந்தைகளில் அன்னிய நிறுவன முதலீடாக போட்டு வைத்தால் நல்ல லாபம் அடிக்கலாம் என்ற அடிப்படையில்தான் கடந்த வாரங்களில் FII இந்தியா போன்ற நாடுகளில் குவிந்தது. இப்போது அதற்கும் ஆப்பு வைப்பது போல துபாய் கடன் விசவலை விரிந்துள்ளது.

துபாயின் பெருமைமிகு அரசு முதலீட்டு நிறுவனம் துபாய் உலகம்('துபாய் வேர்ல்ட'தாம்பா அப்படி மொழிபெயர்த்திருக்கேன்). இந்த நிறுவனம் வாங்கியுள்ள 60 பில்லியன் டாலர் கடனுக்கு செலுத்த வேண்டிய தொகைகளை மே மாதத்திற்குப் பிறகு வாங்கிக் கொள்ளுங்களேன், பீலீஸ் என்று கடன் கொடுத்தவர்களிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மீண்டும் அத்தனை பேர் மண்டையிலும் சந்தேகப் பேய் உட்கார்ந்து கொண்டது. இன்னும் வீழ்ச்சி முடியவில்லை, எவனெவன் எங்கேங்கே எப்படியெப்படி மாட்டிக் கொண்டுள்ளான் என்று தெரியவில்லை, எனவே கையில் உள்ள பணத்தை எச்சரிக்கையா வெளிய விடு என்ற சந்தைச் சந்தேகம் பிடித்து ஆட்டத் தொடங்கிவிட்டது. நிதி வறட்சி மீண்டும் தலை தூக்குகிறது.

வரலாறு காணாத அளவுக்கு, வரைமுறையின்றி ஊக்கத் தொகைகளை மத்திய வங்கிகள் சந்தையில் புகுத்திய பிறகும், வட்டி விகிதங்களை சகட்டு மேனிக்கு குறைத்த பிறகும், தொடர்ந்து திவாலான நிறுவனங்களை அரசுகள் தோள் கொடுத்து தாங்கி பிடித்த பிறகும், பல்வேறு சலுகைகள் கொடுத்து வாயில் ஊட்டி விடாத குறையாக போஷாக்கு செலுத்திய பிறகும், பட்ஜெட் பற்றாக்குறைகள் விண்ணை எட்டிய பிறகும் மீண்டும் முதலாளித்துவ கிழட்டு குடிகாரனின் மீளா போதை மயக்கத்தை தட்டி எழுப்ப இயலவில்லையே என்று முதலாளித்துவ நிறுவனங்களின் பொருளாதார நிபுனர்கள் புலம்புகிறார்கள்.

துபாய் நிகழ்வு என்பது பரந்துபட்ட சிக்கலின் ஒரு துளி என்று சொல்கிறார்கள் முதலாளித்துவ நிபுனர்கள்.

உண்மையில், இது முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த பிரச்சினை, இது தீர்க்க முடியாத சுய முரன்பாட்டுச் சிக்கல் என்பதைத்தான் வேறு வார்த்தைகளின் மூலம் இப்படி ஒத்துக் கொள்கிறார்கள் முதலாளித்துவஅறிஞர்கள்.

கிழடு தட்டிப் போன பிறகும், நிதி மூலதன போதை தலைக்கேற தறிகெட்டு ஓடி முடங்கி போய்க் கிடக்கிறது முதலாளித்துவ கட்டமைப்பு. இந்த கிழட்டு குடிகாரனுக்கு நிரந்தரச் சங்கு ஊதுவதன் மூலம் பரந்துபட்ட மக்களை பேரழிவிலிருந்து காக்கும் கடமை ஒன்று மட்டும்தான் நாம் இப்போது செய்ய வேண்டிய வேலையாக உள்ளது. ஏனேனில், நீண்ட நெடிய பொருளாதார மந்தங்கள் உலகப் போர்களையே உலகுக்கு பரிசாக அளித்துள்ளன.

இது மனிதாபிமானமுள்ளவர்களாக தங்களை அறிவித்துக் கொண்டுள்ளவர்களின் மனசாட்சிக்கு விடப்பட்டுள்ள சவால் ஆகும்.

அசுரன்
http://poar-parai.blogspot.com/2009/11/blog-post_27.html


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்