01242022தி
Last updateஞா, 16 ஜன 2022 1pm

ஆயிரம் ஆயிரமாக தியாகம் செய்த தியாகிகளும், துரோகி பிரபாகரனும் (சரணடைந்த பின் கொல்லப்பட்டவர்கள் படங்கள் சில இணைக்கப்பட்டுள்ளது.)

இறுதி யுத்தத்தில் பிரபாகரனும் அதன் தலைவர்களும் தாம் உயிர் தப்பிப் பிழைக்க மக்களை பணயம் வைத்தனர். அதற்கு உடன்பட மறுத்தவர்களை ஈவிரக்கமின்றி கொன்றனர். இப்படிப்பட்ட கொலைகாரர்கள், இறுதியாக தாம் தப்பிப் பிழைக்க கோழைகளாக சரணடைந்தனர். மக்களுக்கு எதிராகவும், தம் அமைப்புக் கோட்பாட்டுக்கு எதிராகவும் செயல்பட்டனர்.

இப்படி எல்லாவிதத்திலும் துரோகத்தை செய்தவர்கள் தான், பிரபாகரன் தலைமையிலான புலித்தலைமை. ஆயிரம் ஆயிரம் இளைஞர்களும், யுவதிகளும் இந்த துரோகத்துக்காக, தங்கள் உயிரை தியாகம் செய்யவில்லை. ஆனால் இந்த மாபியாத் தலைமையோ தங்கள் சுயநலத்துடன், தியாகங்களையே காட்டிக் கொடுத்து. தன் சுயநலம் சார்ந்த முட்டாள் தனம் மூலம், தன்னைத்தான் தற்கொலைக்கு இட்டுச்சென்றது.

 

இப்படி சரணடைந்து மரணமான துரோகி பிரபாகரனை எப்படிக் காட்டி பிழைப்பது என்பதுவே புலத்து புலிக்குள்ளான முரண்பாடு. மாவீரராக்கி பிழைக்க முடியுமா அல்லது உயிருடன் இருப்பதாக சொல்லி நக்க முடியுமா என்பதே, புலத்து மாபியாக்களின் திரிசங்கு நிலை. இதற்குள் பினாமி சொத்தைப் பங்கு போட்டு அனுபவிக்கும் முரண்பாடுகள். இப்படி துரோகி பிரபாகரனை அப்படியும் இப்படியுமாக காட்டி முரண்படுகின்றனர். இந்த பின்னணியில் புலத்தில் நடக்கும் புலிகளின் மாவீரர் தினம் என்பது, தமிழ்மக்களை தொடர்ந்தும் ஏமாற்றித் தின்னும் மாபியாக் கூட்டத்தின் வியாபார தினமாகும்.

 

இந்த வியாபாரம் அரசியல் சார்ந்தது. முதலற்றது. மற்றவன் உழைப்பை ஏமாற்றித் தின்னும் கூட்டத்தின் அரசியலாகும். தேசியத்தின் பெயரில் குறுந்தேசியத்தை விதைத்தவர்கள், பாசிசத்தை தமிழ் மக்கள் மேலான சமூக விளைவாக்கினர். இதை தேசியமாக நம்பி ஆயிரம் ஆயிரம் இளையர்களும் யுவதிகளும் தங்கள் உயிரை இழந்தனர். அவர்கள் தங்கள் தியாகங்கள் மூலம், தமிழ் மக்களுக்காக எதைச் சாதிக்கப் போகின்றோம் என்பதை தெரிந்திருக்கவில்லை. அதை தெரிந்து கொள்ள புலித்தலைமையம் அதை சுற்றி இயங்கிய மாபியாக்களும் அனுமதிக்கவில்லை. இந்த உண்மையை தெரிந்து கொள்வதோ, துரோகம் என்றது. பிரபாகரன் தலைமையில் தமிழீழம் கிடைத்தால், தமிழ் மக்களுக்கு எல்லாம் கிடைத்துவிடும் என்று மூளைச்சலவை செய்து நம்ப வைக்கப்பட்டனர்.

 

இதை நம்பியே இவர்கள் ஆயிரம் ஆயிரமாக தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். தமக்கு தலைமை தாங்கியவர்களை நம்பி, அவர்கள் சொன்னதை ஏன் எதற்கு என்று கேட்காது மந்தைகளாக மாறி மடிந்தனர். இதையும் மீறி, ஏன் எதற்கு என்று கேட்டவர்களை துரோகி என்று கூறிக் கொன்றனர். சரி பிழை பற்றி, எந்த கேள்வியும் யாரும் கேட்க முடியாது ஜனநாயக விரோத பாசிச அமைப்பு மூலம் தங்கள் சொந்த இனத்தையே அழித்தனர். தங்கள் சொந்த அமைப்பை தற்கொலைக்குள் இட்டுச்சென்றனர். இறுதியாக தங்கள் சொந்த உயிரைக் காப்பாற்ற சரணடைந்ததன் மூலம், தங்கள் மனித விரோத வரலாற்றையே முடித்து வைத்தனர்.

 

ஆனால் புலத்தில் சுனாமியின் பெயரிலும், குறுந்தேசியத்தின் பெயரிலும், தங்கள் பாசிச வடிவங்கள் மூலம், மாபியாத்தனத்தின் மூலம் திரட்டிய கோடிக்கணக்கான பணத்தின் பின்னணியில், அவை முரண்பட்ட மாபியாக் கோஸ்டிகளின் அரசியலாகின்றது. இதன் மூலம் தமிழ் மக்களின் பணம், புலத்தில் புலி மாபியாக்களின் தனிநபர் சொத்துக்களாக மாறி வருகின்றது. இதை மூடிமறைக்கவும், சொத்தை தம்வசப்படுத்தவும், சொத்தைக் கைப்பற்ற முனையும் எதிர்த்தரப்பை முடக்கவும், தமிழ் தேசியம், நாடு கடந்த தமிழீழம், வட்டுக்கோட்டை தீர்மானம், மாவீரர் தினம் என்று தொடரான மாபியா அரசியலை முன் தள்ளுகின்றனர். தமிழ் மக்களுக்கு அல்வா கொடுத்து, மயக்கி நுகர முனைகின்றனர்.

 

குறுந்தேசியத்தின் பெயரில் தமிழ் மக்களிடம் இருந்து பெற்ற நிதியை, தமிழ்மக்களின் பொது நிதியமாக்க கோரிய எமது நியாயமான மக்கள் நலன் சார்ந்த கோரிக்கையை, மாபியாக் கும்பல்கள் நிராகரித்து நிற்கின்றது. மக்கள் நிதியினை தமதாக்க, தமக்குள் பல குழுக்களாக மாறி மோதி வருகின்றது. இதற்காக தன்னை மூடிமறைக்கும் அரசியலை முன்தள்ளுகின்றது.

 

இதற்கு மாவீரர் தினத்தையும் கையில் எடுக்கின்றது. தமிழ் மக்கள் சொத்தை தமதாக்கும் மாபியாக்களும், குறுந் தேசியத்தின் பெயரில் வியாபாரம் செய்யும் வர்த்தகக் கும்பலும் இணைந்து, மாவீரர் தினத்தை தங்கள் சுயநல நோக்கத்துடன் கோலாகலமாக முன்னிறுத்துகின்றனர்.

 

இந்த மாபியா வியாபாரிகளோ மானிட தியாகத்தை கொச்சைப்படுத்தியே கடைவிரிக்கின்றனர். இதன் பின்னணியில் தங்கள் குழந்தைகளையும், தங்கள் சகோதர சகோதரிகளையும் இழந்த பரந்துபட்ட மக்கள் கூட்டத்தின் உணர்ச்சியைக் கொச்சைப்படுத்தி தின்னும் கூட்டம் நடிக்கின்றது. அந்த மனித உணர்ச்சியை குறுந்தேசிய மாபியாத்தனத்தின் ஊடாக இனம் காட்டி, தங்கள் குறுகிய நலன்களை அறுவடை செய்ய முனைகின்றனர்.

 

இப்படி இன்று புலி மாபியாக்கள் முன்னிறுத்தும் மாவீரர் தினம், வியாபாரிகளுடன் சேர்ந்து ஒரு வியாபார களியாட்டமாக மாறி நிற்கின்றது. இதன் பின்தான் இழப்பை எதிர் கொண்ட மனித உணர்வுகளும் சங்கமிக்கின்றது.

 

இப்படி மாவீரர் பற்றிய உணர்வு சார்ந்த படிமம், அரசியல் வடிவமெடுக்கின்றது. இங்கு மனித இழப்பை அடிப்படையாக கொண்ட உண்மையான உணர்வுள்ள சமூகக் கூறை யாரும் கொச்சைப்படுத்த முடியாது. இதை வைத்து மக்களை ஏமாற்றி பிழைக்கும் மாபியாக்கள் முதல் வியாபாரிகள் வரை நடத்தும், அனைத்து அரசியல் வியாபாரத்தையும் அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டியுள்ளது. இந்தக் கும்பல் நடத்திய அனைத்து துரோகத்தையும், காட்டி கொடுப்பையும், மக்கள் மேலான அடக்குமுறைகளையும் இனம்காட்டி, உண்மையான தியாகத்தையும் போற்ற வேண்டியுள்ளது. இழப்பை உணர்வு பூர்வமாக உணர வேண்டியுள்ளது.

 

எப்படி புலி மாபியாக்களுக்கு எதிராக தமிழ்மக்களின் சொத்தை பொதுச் சொத்தாக்க கோரி போராடுகின்றோமோ, அதேபோல் உண்மையான தியாகத்தை இந்த மாபியாக் கும்பலிடமிருந்து மீட்க வேண்டும். தமிழ் மக்கள் சொத்தைக் கைப்பற்றி தமிழ் மக்களுக்கு எதிராக புலி மாபியாக்கள் எப்படி நிற்கின்றனரோ, அப்படி தியாகத்தை தங்கள் சொந்த மாபியாத்தனத்துக்கு பயன்படுத்தி, தமிழ்மக்களுக்கு எதிராக நிற்கின்றனர். இதை இனம்காட்டி போராட வேண்டியுள்ளது. 

 

இந்த வகையில் இன்று மாபியா புலிகளின் மாவீரர் தினத்தை இனம் காணவேண்டும். இந்த மாபியாக்கள் சொத்துச் சார்ந்து, தமக்குள் பல குழுக்களாக முரண்பட்டு நிற்கின்றனர். சொத்தை தம் வசப்படுத்த, இவர்கள் வழிகாட்ட சரணடைந்தவர்கள் தான் புலித்தலைவர்கள். இதனால் அவர்கள் கொல்லப்பட, அந்த சம்பவத்தை திட்டமிட்டு மூடி மறைக்கின்றனர். அத்துடன் சரணடைந்த தலைவரின் துரோகத்தை மறுத்து, அதை தியாகமாக வீரமாக இட்டுக்கட்ட முனைகின்றனர்.

 

இப்படி தங்கள் இழிவரசியல் மூலம் தான், தமிழ் மக்களிடமிருந்து தங்கள் மாபியாச் சொத்தை கைப்பற்றலாம் என்பது மாபியாக்களின் இன்றைய நிலையாகும். இதுவே சந்தர்ப்பவாத பிழைப்புவாத அரசியலாகும்.

 

தியாகம் எது? துரோகம் எது?

இதுதான் விடுதலை என்று நம்பி, மக்களுக்கு எதிராக தன் துப்பாக்கியைத் திருப்பாத, மக்களை இழிவாக நடத்தாத, அன்னிய நாட்டு கைக்கூலிகளாக இருக்காத, பேரினவாத கூலிக் கும்பலாக செயல்படாது போராடிய அனைவரும், தங்கள் உயிரை மக்களுக்காக தியாகம் செய்துள்ளனர். இவர்கள் புலிக்குள் மட்டுமல்ல புலியல்லாத மாற்று போராட்டக் களத்திலும்,  தங்கள் உயிரை மக்களுக்காக தியாகம் செய்துள்ளனர். மாற்று இயக்க அழித்தொழிப்பின் போது, கணிசமானவர்கள் தங்கள் உயிரை மக்களுக்காகத்தான் தியாகம் செய்தனர்.

 

தமிழ் மக்களின் தேசியத்தை மக்களுக்காக நடத்தாமல், படுபிற்போக்கான மக்கள் விரோத வர்க்கங்களின் நலன்களுக்காகவும், அன்னிய சக்திகளின் நலன்களுக்காகவும் போராட்டத்தை குறுந் தேசிய போராட்டமாக புலிகள் முதல் மற்றைய பெரிய இயக்கங்கள் எல்லாம் சீரழித்தன. இதன்போது அதை எதிர்த்து ஒரு போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டம் அரசியல் தெளிவுடன், மக்களே தமக்காக போராட முடியும் என்று புரட்சிகரமான தெளிவுடன் நடந்தது. அப்படி போராடிய பலர், அனைத்து இயக்கத்தாலும் கொல்லப்பட்டனர். அவர்கள் தியாகங்கள் மொத்த சமூகத்தினதும் நலனை உயர்த்தி நின்றது. இப்படி தியாகங்கள் பல.

 

இதை எல்லாம் மறுத்தது, புலிகள் மட்டுமல்ல. கூலி இயக்கங்களாக சீரழிந்தவர்கள் முதல் மாற்றுக் கருத்தின் பெயரில் அரசியலை மறுத்தவர்கள் வரை அடங்கும்;. அன்னிய நலனுக்காக, சுய நலனுக்காக, இதை எதிர்த்தவர்களை கொன்றவர்கள் ஒருபுறம் அதை அரசியல் ரீதியாக மறுத்தவர்கள் மறுபுறம். இவர்கள் அனைவரும், மக்களுக்காக போராடியவர்களை துரோகி என்றனர்.

 

இறுதி யுத்தத்தில் புலிகளின் தலைமை மக்களை மட்டும் பணயம் வைத்து கொல்லவில்லை. மாறாக அப்பாவிகளை கட்டாயப்படுத்தி, அவர்களை ஆயுதபாணியாக்கியும் புலிகள் பலியிட்டனர். இவர்களை எல்லாம் கொன்றதை போற்றும் அரச கூலிக் குழுக்களையும், அதன் "ஜனநாயக" அரசியல் பித்தலாட்டங்களையும் தான் காண்கின்றோம். இப்படி தியாகங்கள் கொச்சைப்படுத்தப்பட்டு, தங்கள் துரோகத்தையே தியாயகமாக காட்டுகின்றனர். புலிகள் முதல் அரச கூலிக் கும்பலாக மாறிய அனைவரும், மக்கள் அரசியலை துறந்த அனைவரும்,  தங்கள் துரோகத்தையே தியாகமாக காட்டுகின்றனர்.  

     

எது துரோகம்!?

 

மக்களுடன் சார்ந்து நிற்காத அனைத்தும் துரோகம். மக்களுக்கு எதிரான அனைத்தும் துரோகம். அன்னிய கைக்கூலிகளாக, இலங்கை அரசின் கைக்கூலிகளாக மாறி, மக்களுக்கு எதிராக செயல்பட்ட அனைத்தும் துரோகத்தனமானவை. "ஜனநாயகத்தின்" பெயரில் மக்களை அரசுக்கு பின்னால் வழிகாட்டிய அனைவரும் மக்கள் விரோத துரோகிகள்தான்.

 

போராட்டத்தின் பெயரில் மக்களை மந்தைகளாக மாற்றி, அவர்களை பணயம் வைத்து பலியிட்டதும் கூட துரோகம்தான். பணயத்துக்கு உட்பட மறுத்த மக்களை கொன்றதும் துரோகம் தான். துரோகம் இப்படி பலவிதம்.

 

துரோகி பிரபாகரன்

 

இன்று பிரபாகரன் முதல்தரமான துரோகி. மற்றவனை துரோகியாக்கி ஆயிரம் ஆயிரமாக கொன்ற பிரபாகரன் வைத்த காரணங்கள், இன்று புலித் தலைமையே துரோகியாக்குகின்றது. புலிகள் தங்கள் பாசிச இலட்சியத்தை அடைய, அவர்கள் தமது போராட்ட விதிமுறையில் சரணடைவை மறுத்து சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்வதையே கோரியது.

 

ஆனால் துரோகி பிரபாகரனோ இதை மறுத்தான். சரணடைந்தான். இதன் மூலம் கேவலமான ஒரு மரணத்தை சந்தித்தான். புலிகள் தலைவர் உட்பட அவரின் எடுபிடி தளபதிகள் மிகக் கேவலமாக, தங்கள் இலட்சியத்தை தங்கள் அமைப்பு கோட்பாடுகளையும் காட்டிக்கொடுத்தே சரணடைந்தனர். இது பல தளத்தில் நடைபெற்றது. பேரினவாதத்துக்கு நிகராக மக்களைக் கொன்று குவித்து, இனத்தை அழித்த துரோகிகளின் இழிசெயலை எல்லாம் புலத்து மாபியாக்கள் தங்கள் சுயநலத்துடன் மூடிமறைக்கின்றனர்.

 

தமிழினி, பாலகுமார். யோகி, திலகர், புதுவை இரத்தினதுரை என்று எண்ணற்ற புலி எடுபிடி பேர்வழிகள், வன்னி வதைமுகாமில் வைத்து சரணடைந்தனர் அல்லது கைது செய்யப்பட்டனர் அல்லது மக்கள் பிடித்துக் கொடுத்தனர். மக்களை பணயம் வைத்து புலிகள் கொல்ல, புலியிடமிருந்தும் பேரினவாத அழித்தொழிப்பில் இருந்தும் மக்கள் தப்பி வந்தனர். இதன் போது இந்தக் கொலைகாரப் போக்கிரிகளும் கூடவே தப்பி வந்தவர்கள். சண்டை செய்து, காயப்பட்டு பிடிபடவில்லை. தங்கள் அமைப்பு விதிக்கமைய சயனைட்டை உட்கொண்டு மரணிக்கவில்லை. இன்று பேரினவாத சித்திரவதைக் கூடத்தில் இருந்து, தம்மைத்தாம் காட்டிக் கொடுக்கின்றனர். இதை இவர்கள் புலியாக இருந்த காலத்திலோ துரோகமாக கூறி, பலருக்கு மரண தண்டனை வழங்கியது இவர்கள் வரலாறு.

 

மறுபக்கத்தில் ஊளையிட்ட நடேசன் முதல் கொல்வதையே தமிழ்தேசிய விடுதலையாக கொண்ட பிரபாகரன் வரை, பச்சைத் துரோகிகளாக சரணடைந்தனர். தங்கள் இலட்சியத்தை தாங்களே முன்னின்று புதைத்தவர்கள். முன்பு திருமணம் செய்யக் கூடாது என்று கூறிய இயக்கவிதியை மறுத்து, தலைவர் தானே திருமணம் செய்தது போல், சரணடைந்தவரை கொன்று வந்தவர் இறுதியில் தானே சரணடைந்தார். 

 

இப்படி அவர்கள் தங்கள் சொந்த இலட்சியத்துக்கு தாங்களே துரோகம் செய்து, தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முனைந்தனர். இதன் போது பேரினவாத யுத்த கும்பலால், பரிதாபகரமாக அநாதையாகக் கொல்லப்பட்;டனர்.

 

கடந்த காலத்தில் புலிகளிடம் சரணடைந்த எத்தனை பேரைக் கொன்றவர்கள் இந்தப் புலிகள். அதே போன்று அவர்களுக்கு நிகழ்ந்துள்ளது. மனிதர்களுக்கு எதிராக இழைத்த குற்றங்களுக்காக, தண்டிக்கப்பட வேண்டிய மனித விரோத குற்றவாளிக் கும்பல்தான் புலித்தலைமை.

 

ஆனால் இந்த பேரினவாத கொலைகார குற்றக் கும்பல் இதைச் செய்ய எந்த அருகதையும் கிடையாது. புலிகளை விட பல மடங்கு மக்களை கொன்று குவித்த, ஒரு இனவாத குற்றப் பரம்பரையினர் இவர்கள்.

 

மறுபக்கத்தில் தங்கள் இலட்சியத்துக்கு துரோகம் செய்து சரணடைந்த நிகழ்வை மறுக்கின்ற புலத்து மாபியா புலிகள், பேரினவாத குற்றக் கும்பலின் தயவில் அதை மூடிமறைக்கின்றது. சரணடைந்தவர்களை ஈவிரக்கமின்றி கொன்று காட்சிப்படுத்த முனைந்த அரசு, அது தனக்கு எதிரான யுத்தக் குற்றமாக மாறுவதைக் கண்டவுடன் அதை மூடிமறைக்கத் தொடங்கியது. அங்குமிங்குமாக வெளிவந்த படங்கள் இதை அம்பலமாக்கியது. அவை கூட இன்று காணாமல் போய்விட்டது. தமிழ்மக்கள் முன் அவை மறைக்கப்படுகின்றது. அப்படியான சில படங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

Banu.jpg

20090520_02a.jpg

bodyguard.jpg

Prabha_assist_custom.jpg

Soosai.jpg

prabhaBalachandran2.jpg

அரசியல் ரீதியாக புலிப் பாசிசம் தன்னைச் சுற்றி கட்டமைத்த மாபியாத் தனங்கள் மூலம் உருவாக்கிய விம்பங்களையும், தனது குறுந்தேசியத்தை தனது துரோகத்தால் தானே குழி தோண்டி புதைத்துள்ளது. இது தமிழ் இனத்தையே அழித்துள்ளது. மக்களின் சமூக பொருளாhதார வாழ்வையே முற்றாக நாசமாக்கியது. மக்களோ தங்கள் அடிப்படை உரிமைகளை எல்லாவற்றையும் புலிகளிடம் இழந்தனர். மந்தைகளாகவும், பலியாடுகளாகவும் வாழ்வதே, தேசியத்துக்கு பெருமை என்றனர் மாபியாக்கள். இறுதியாக தங்களைச் சுற்றி தாங்களே காட்டியிருந்த விம்பங்களை எல்லாம் தகர்த்து சரணடைந்தனர். வாழ்வதற்காக போராடுவதை மறுத்தவர்கள், மற்றவர்களுக்கு மரணத்தை நேசிக்க கற்றுக் கொடுத்து மாவீரராக்கி பலியிட்டனர். இறுதியில் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, கோழைகளாக தமது கொள்கைகளுக்கு தாமே துரோகிகளாக மாறியே மரணித்தனர்.

 

இப்படி இவர்கள் மனித இனத்திற்கு எதிரானவர்களாகவே வாழ்ந்தனர். பேரினவாதத்தின்  அதே செயலை, தமிழனின் விடுதலையின் பெயரால் செய்தவர்கள்.

 

தமிழினம் இந்த உண்மைகளைப் புரிந்து கொள்ளாமல் இருக்கும் வரை, அதற்கு எந்த விடிவும் கிடையாது.

 

பி.இரயாகரன்
27.11.2009
  

   

                      


பி.இரயாகரன் - சமர்